Saturday, April 21, 2007

ஈழக் கவிதைகள் பாகம்1

* இக்கரைக்கு அக்கரை
சிகப்பு
ஈழம்.


* கடலின் மறுபுறம்
புயல்
இங்கே தென்றல்
ரசிக்கும் கடற்கரை
மனிதர்கள்.


* மிதந்து வந்த
சிறுமியின் ஆடை
கண்டு
பெருமூச்சு வாங்கியது
தமிழகம்.
நல்லவேளை உடல்
வரவில்லை என்று.


* அகதி முகாமின்
கூரை வழியே
அழகாய்
தெரியும் நிலா.


* தோட்டாக்களுக்கு
நெஞ்சு நிமிர்த்திய
அப்பா
கதறி அழுகிறார்
"அகதி" எனும் சொல்
கேட்டு.
-நிலாரசிகன்.

கவிதையல்லாதவைகள்....

கன்னுக்குட்டியுடன்
நீ விளையாடுவது
கண்டு
குழம்புகிறது தாய்ப்பசு
எது தன் பிள்ளை
என்று!

0
பரிணாம வளர்ச்சியில்
பெண்ணிற்கு பின்
தேவதை என்பதற்கு
நீ
ஒருத்தியே சாட்சி.

0
கண்ணீரை மறைத்துக்கொண்டே
சிரிக்கவும்
புன்னகைத்துக்கொண்டே
அழவும் தோன்றியது
நீ காதல் சொன்ன
நிமிடங்களில்....
0

தன் சிறிய சிறகுகளால்
வானம் முழுவதும்
பறந்துவிட துடிக்கும்
பட்டாம்பூச்சி போல
மாறிவிடுகிறது என்
மனசு.
உன் மடியில்
தலைசாய்கின்ற
பொழுதுகளில்.

0
அடைமழையிலும் புன்னகைக்கும்
பூக்கள் போன்றது
கோபப்படும் நேரங்களிலும்
என்
விரல்பற்றி மென்மையாய்
நீ பேசும் தருணங்கள்

0

எத்தனை முயன்றும்
இருவருக்கும் தெரியவில்லை
எதனால் ஓர்
உயிரானோம் என்று.
நம் நிழல்களுக்கும்
இதே குழப்பம்.

0

செல்லமாய் நீ
என்னை அடிப்பது
குற்றாலச் சாரல்.
கோபமாய் நீ
என்னை பார்ப்பது
மார்கழித் தென்றல்.
காதலாய் நீ
என்னுடன் இருப்பது
தாய்மடிக் குழந்தை.
0

-நிலாரசிகன்.

ஒரு முதிர்கன்னியின் பாடல்...

ஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்
ஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்
காற்றோடு கலந்துவிட துடிக்கிறேன்
கானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்

வழி மீது விழி வைத்து காத்திருக்கும் பாவை இவள்
சரி எது பிழை எது புரியாத அப்பாவி இவள்

கடிதம் வருமென காத்திருந்தாள்
மடியில்முகம் புதைத்து அழுதிருந்தாள்

கடிதமும் வரலையே கன்னி இவளுக்கு
மணயோகமும் இல்லையே!

(
ஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்
ஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்
காற்றோடு கலந்துவிட துடிக்கிறேன்
கானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்
)

முப்பது வயசாச்சு கண்ணாடி அலுத்தாச்சு
தெப்பத்து கோயில முண்ணூறு தரம் சுத்தியாச்சு

மூணுமுடிச்சு மட்டும் கிடைக்கலையே
ஊர்பேச்சு கேட்டும் உயிர்மூச்சு நிற்கலையே

பூவுக்குள் பூகம்பம் நிகழ்வது பூவுக்குமட்டுமே தெரியும்
பூவையிவளுக்கு ஒருஇதயம் உண்டென்பது யாருக்கு புரியும்?
முன் பாடல் சுருக்கம்:-

(வடமாநில கிளி அவள். வேலைக்காக தமிழகம் வருகிறாள்.வந்த இடத்தில்
அவளை கண்டவுடன் அவளுடன் வேலை பார்க்கும் நம் கதாநாயகன் காதல் கொள்கிறான். அவளிடம் காதலை சொல்ல போகும் தருணம்தான் தெரிகிறது அவள் வேறு ஒருவனை நேசிப்பது. அதனால் சொல்லாமல் வந்து விடுகிறான். சில மாதங்கள் கழித்து அவளது காதல் முறிந்த சேதி இவனுக்கு தெரிகிறது. இப்பொழுதாவது தன் காதலை சொல்லலாம் என்றெண்ணி அவளிடம் செல்கிறான். அவளோ தமிழகத்தை விட்டே போகிறாள்.....)

பெண்ணே பசும்பொன்னே எனை
பிரிவதேன் சொல் கண்ணே
நெஞ்சே என் நெஞ்சே எனை
மறந்ததேன் சொல் நெஞ்சே


மாநிலம் கடந்து வந்த தென்றலும் நீயே
என் மனக்கோலம் அழித்துச்சென்ற புயலும் நீயே

என் தாய்மொழி புரிந்துகொண்டவளும் நீயே
என் விழிமொழி புரியாமல்சென்றவளும் நீயே

என் காதல் சொல்ல உன் வாசல் வந்தேன்
உன் காதல்கதை கேட்டு எனைநானே நொந்தேன்


பெண்ணே பசும்பொன்னே எனை
பிரிவதேன் சொல் கண்ணே
நெஞ்சே என் நெஞ்சே எனை
மறந்ததேன் சொல் நெஞ்சே


சொல்லாத காதலால் தனிமையில் நானும் வெந்தேனடி
உன் காதல்தோற்க, தனிமரமாய் நீயும் நின்றாயடி...

மனசுக்குள் மறைத்த பூவொன்றை உனக்குத்தர
ஓடோடி வந்தேன்.
சொந்த ஊர் நீ திரும்பும் சேதிகேட்டு
ஊமையாகி நின்றேன்.

மெதுவாக கடக்கிறது நீ செல்லும் ரயில்
முகாரி இசைக்கிறது தூரத்தில் ஒரு குயில்

-நிலாரசிகன்.
பாடல் 1:

என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே

பூவில் செய்த சிலையோ நீ?
புல்லின்மேல் பனித்துளியோ நீ?

தேவதை உன் கண்களிலே ஒருவித
சோகம் வழிவதைக் காண்கிறேன்

கோதை உனை மடிசாய்த்து உன்
சோகம் பகிர்ந்திட துடிக்கிறேன்

உன் தேகம் என்ன கறுப்பு வைரமா?
அழகே நீ என்ன காதலின் சிகரமா?

(என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே
)
இரவுக்கு ஒளிதரும் மின்மின்கள் போலவே
இருண்ட என் இதயத்திற்கு ஒளிதரும் கருநிலவும் நீயே!

நாத்திகன் எனக்கு காதல் மதம்
பிடிக்க வைத்தாய்
ஆத்திகன் போலவே தேவசிலை
உன்னை சுற்ற வைத்தாய்

உன் காயம் ஆற்றவே மருத்துவம் போதுமடி
காதல் காயம் கண்ட என் நெஞ்சுக்கு மருந்தாவாய் நீயுமடி!

(என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே
)

-நிலாரசிகன்.

Sunday, April 01, 2007

சுயம்தேடி...

காயத்தின் வடுக்களில்
கரங்களுக்குள் புதைந்த
சில சத்தியங்கள்..

சூழ்நிலைக் கைதியானதில்
கண்களுக்குள் மரணித்த
சில கனவுகள்...

காலத்தின் தாலாட்டில்
இதயத்தினுள் உறங்கிய
சில உறவுகள்...

அவ்வப்போது
ஊசிபோல் உள்ளம்
தைக்கின்றன
முகமூடி அணிந்த
என் சுயத்தை.

பயணங்கள்...

அடர்ந்த காட்டில்
தனியே பயணிக்கிறேன்..

உயர்ந்த மரமொன்றின்
உச்சியில் பெயர்தெரியா
பறவைகள் கூச்சலிடுகின்றன...

தூரத்தில் ஒரு யானையின்
பிளிறல் சத்தம் இதயத்துடிப்பை
அதிகமாக்குகிறது...

சூரியஒளியற்ற இருண்ட
பாதையில் மின்மினி
பூச்சிகளும் பயங்கரமாய்
தோன்றுகிறது...

புதைகுழியொன்றில்
தடுமாறி விழுகையில்
பக்கத்து மரத்தின் வேர்பற்றி
எனைக் காத்துக்கொள்கிறேன்...

மீண்டு(ம்) என் பயணம்
தொடர்கிறது வெளிச்சமற்ற
பாதையிலும் ஏதோ
ஒரு நம்பிக்கையில்...

என்னைப் போலவே
பலர் பயணிக்கிறார்கள்
தனியே பயணிப்பதாய்
இவ்வாழ்வில்.

உன்னில் விழுந்த பூவொன்று...

பூவொன்று காம்பிலிருந்து
உதிரப்போகும் நொடிக்காக
வெகு நேரம் காத்திருந்தேன்...

தன் காலடியில் விழப்போகும்
பூமகளுக்காக கண்ணீர் சிந்துமோ
அந்த பன்னீர்மரம் என்று
தவித்திருந்தேன்...

வேகமாய் வீசும் காற்றிலோ
இல்லை
மெதுவாய் வீசும் தென்றலிலோ
உதிரப்போகிறது அந்த ஒற்றைப்பூ
என்றெண்ணியிருந்தேன்...

பறவையொன்று அமர்ந்த
கிளையின் அதிர்வில்
உதிருமோ என்று
அதிர்ந்திருந்தேன்..

வெகுநேரம் கழிந்தபின்
எவ்வித அழுத்தமுமின்றி
இயல்பாய் மெதுவாய்
காம்பிலிருந்து விடுபட்டு
வீழ்ந்தது அந்தப்பூ.

விழுகையில் உணர்த்தியது
எவ்வித கட்டாயமுமின்றி
இயல்பாய் உன்னில்
விழுந்துவிட்ட என் மனதை...