Tuesday, July 31, 2007

நீ...
சலசலக்கும் ஓடை
ஜில்லென்ற காற்று
இலைமேல் ப‌னித்துளி
நீ.
மெளனப் பூக்கள்
மாலை வெயில்
மெல்லிசை இர‌வு
நீ.

தூரல் வானம்
அந்தி மழை
ரயிலின் ஜன்னலோரம்
நீ.

விழுதில் ஊஞ்சல்
குளக்கரை படிக்கட்டு
ஒத்தையடிப் பாடல்
நீ.

கடற்கரை மண்வீடு
மார்கழிக் கோலம்
தென்னங்கீற்று சங்கீதம்
நீ.


கன்னம்தொடும் குழந்தை
மெழுகுவர்த்திரி இரவு
தூரத்துவான் நிலா
நீ

ஒருநிமிட மின்னல்
கோப சூரியன்
உயிர்வழங்கும் தேவதை
நீ

என் பக்கத்தில்
நீ இல்லாததினால்
என் டைரியின்
எல்லா ப‌க்க‌த்திலும்
இன்று நீ.

Wednesday, July 25, 2007

சின்ன சின்ன பூக்கள்

*உனக்கென்று வாங்கும்போது ம‌ட்டும்
சிறு சிறு நிலாக்களாகிவிடுகின்றன‌
ரோஜாப் பூக்கள்.

*இந்த ஊரில் யாருக்கும்
இரக்கம் இல்லை.
உன் பாதச்சுவடுகளை
மிதிப்பவர்களைத்தான்
சொல்கிறேன்.


* புல்லாங்குழலின் இசை
உணர்கிறேன் இமைமூடி
உன்னை நினைக்கும்போதெல்லாம்.


* வாழ்க்கைப்பாதையில்
உன்னுடனான என் பயணம்
என்றும் தொடர்ந்துகொண்டே
இருக்கிறது
அருகில் நீ இல்லாமலே!

* என்னில் ஒரு சிறுகதை
எழுதிப்போனாய்
நீ.
உன் நினைவுகள்
என்றுமே தொடர்கதையாகி
போனது!

Sunday, July 22, 2007

ஊமச்சி

எம் பேரு ஊமச்சி

பேச்சு ஒண்ணும்
கெடயாது
காதுரெண்டும்
கேட்காது

குயில பாத்திருக்கேன்
குயில்பாட்டு
கேட்ட‌தில்ல‌

சின்ன‌புள்ளைக‌ சிரிப்ப‌
பாத்திருக்கேன்
எச்சிவாயி ம‌ழ‌லை
பேச்சி கேட்ட‌தில்ல‌

பள்ளிக்கூட‌ம் போன‌தில்ல‌

என் சைக‌ மொழி
புரியாம‌ வேலைவெட்டி
கிடைச்ச‌பாடில்ல‌

க‌ஞ்சித்த‌ண்ணி குடிக்க‌
வ‌ழியுமில்ல‌

வ‌யுத்துக்கு வ‌ய‌சாக‌ல‌
ஒட‌ம்புக்கு ஆகிப்போச்சு
ஆடியோட‌ முப்ப‌து

க‌ஞ்சுக்கே வ‌ழியில்ல‌
க‌ல்யாண‌த்துக்கு
ஆள்தேடி ஊர் ஊரா
அலையுது
ஆத்தாகெள‌வி
ஊம‌ச்சிய க‌ட்டிக்க‌
உள்ளூருல ஆளில்ல‌

செவிட்டுபுள்ள‌ன்னு
சொல்லிட்டுப்போனான்
செக்க‌ம்ப‌ட்டி சின்ன‌ராசு

ஊமச்சிய‌ க‌ட்டிக்கிட்டா
பொற‌க்குற‌ புள்ள‌குட்டிக்கும்
பேச்சுவ‌ராதுன்னு ஜோசிய‌ம்
சொல்லிச் சிரிச்சுட்டுப்போனான்
துரையூரு முத்துச்சாமி

க‌ட்டிக்கிட்டா என்ன‌
வெச்சுக்கிட்டா என்ன‌
ஊம‌ச்சிக்கு ஏது ம‌ன‌சுன்னு
நென‌ச்சு ந‌டுவூட்டுல‌
நாற்காலி போட்டு
உட்கார்ந்தான்
உள்ளூரு மைன‌ரு

ஆத்தாவுக்கு ஒண்ணும்
புரியல‌
எங்கப்பன் போட்டோவுக்கு
முன்னால நின்னு
அழுவுது

மெதுவா தலைய
உசத்தி என்ன‌
பார்த்து ஏதோ
கேட்டா என்ன‌
பெத்த ஆத்தா.

பெட்டி படுக்கைய‌
எடுத்துகிட்டு
மைனருகூட
புல்லட்டு வண்டியில‌
ஏறிபுட்டேன்.

இந்த ஊமச்சிக்கு
மனசு இருக்கறது
ஊரு ஒலகத்துக்கு
தெரியாது

ஆனா
இந்த ஊமச்சிக்கு
வயிறு பசிக்கும்னு
எங்க ஆத்தாவுக்கு
ம‌ட்டுந்தான்
தெரியும்.

ஒத்த‌ வேள‌
க‌ஞ்சிக்கு
ப‌த்துவேள‌
பாய‌விரிக்க‌ற‌து
த‌ப்பா ரைட்டான்னு
தெரிய‌ல‌...

இடி விழுந்தா
கூட‌ கேட்காத‌
காதுக்கு
பொல‌பொல‌ன்னு
எங்க‌ ஆத்தா
சிந்த‌ற‌ க‌ண்ணீருசத்தம்
ம‌ட்டும் கேட்டுக்கிட்டே
இருக்கு!

-நிலார‌சிக‌ன்

Wednesday, July 04, 2007

அய்ய‌னார் சிலையும் நீயும்!
அய்யனார் சிலை
கண்டு நீ பயந்து
உன் அம்மாவின்
பின் ஒளிந்துகொள்கிறாய்...

பயத்தில் வெளிப்படும்
உன் அபூர்வ அழகு
கண்டு அய்யனார் சிலை
ஒரு நொடி சிலிர்த்ததை நான்
மட்டுமே அறிவேன்!

Sunday, July 01, 2007

மனம் பேசும் வார்த்தைகள்....

எங்கேனும் எப்போதேனும் இவை உங்களுக்கும் நிகழ்திருக்கலாம்...சட்டென்று தோன்றி மறைந்திருக்கலாம்...

இவைகளை கவிதைகள் என்று சொல்வதைவிட
மனதின் வார்த்தைகள் என்றே சொல்ல விரும்புகிறேன்..
இந்த "மனம் பேசும் வார்த்தைகள்" பிடித்திருந்தால் சொல்லுங்கள்
தொடருகிறேன்.

----------------------------------------------------------------------
அழகிய பூனைக்குட்டி
ரசிக்கமுடியவில்லை
சாலையோரம் உயிரற்று
ஈக்கள் மொய்க்கும்போது.
-----------------------------------------------------------------------
ஓடிச்சென்று ந‌னைந்துவிட‌
நினைப்ப‌த‌ற்குள் நின்றுவிட்ட‌து
மழை..
மண்வாசத்தில் நனைகிறது
உயிர்.
-----------------------------------------------------
மனக்கருவினுள்
பலவருடமாய் சுமந்து
திரியும் இறந்தகுழந்தை
சொல்லாத‌ காதல்!
-----------------------------------------------------
ம‌ழையில் நனைய‌
விரும்பும் போதெல்லாம்
நினைத்துக்கொள்வேன்
என்னிடம் நீ
பேசிய வார்த்தைகளை..
------------------------------------------------
உன் பதில் கேட்கவே
காத்திருக்கிறேன்
கல்லறையில் பூவாக.
-------------------------------------------
உற‌வுக‌ளுக்காக‌ விட்டுக்
கொடுத்த‌ல் நிக‌ழும்
ம‌ன‌ங்க‌ளை எத‌னோடு
ஒப்பிட‌லாம்?
கோவிலைத் த‌விர‌!
---------------------------------------------
பிற‌ர்க்காக‌ க‌ன்ன‌ம்ந‌னைக்கும்
க‌ண்ணீர்த்துளிக்குள்
ஒளிந்திருக்கின்றன‌
சில‌ ச‌முத்திர‌ங்க‌ள்.
----------------------------------------------