Tuesday, November 27, 2007

மெளனத்தின் சப்தங்கள்...


நிச்சயமற்ற ஒரு நேசத்தை
உனக்குப் பரிசாய் தந்து
தனிமைச் சிறைக்குள்
வாழ விரும்பும்
மழைமேகமாக...

இதயக்கல்வெட்டில் நீ
எழுதுகின்ற நேசமொழிகளை
இதயமின்றி வெட்டிவீசுகின்ற
வார்த்தைக்கோடரியாக...

உனக்குள் ஒரு உலகை
உருவாக்கி உன்னைவிட்டு
வெகுதூரம் பறந்துவிடத்துடிக்கும்
ஊனப்பறவையாக...

உன்னைப் பிரிந்துசெல்ல
தினம் தினம் என்னை
நானே செதுக்குகிறேன்
புதுப்புது உருவங்களாக...

Sunday, November 25, 2007

தினமணிக் கதிரில் என் சிறுகதைகள்


இன்றைக்கு(25/11/2007) தினமணிக் கதிரில்,என் இரண்டு இரு நிமிடக் கதைகளை(14வது கதை, இடுகாடு), வலைப்பதிவிலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள்.

இந்தச் செய்தியை காலையில் எனக்கு தொலைபேசியில் சொன்ன நண்பர் யோசிப்பவர். அவருக்கு என் நன்றிகள்.

Thursday, November 22, 2007

நெஞ்சுல மிதிச்சாலும் மகதான்..
துறுதுறுன்னு இருப்பாக
குறுகுறு பார்வ பாப்பாக...

நீ பொறந்த சேதிகேட்டு,
வெளியூரு போனவுக ஓடோடி
வந்தாக...

புள்ள உன் மொகத்த
பார்த்து என் காதுல
"எனக்கு பொறந்தது
பொண்ணு இல்ல பஞ்சுல
செஞ்ச செல"ன்னு சொல்லி
பூப்பூவா சிரிச்சாவுக...

கறைவேட்டியில தொட்டில
கட்டி நீ தூங்கற சொகத்த
விடிய விடிய பார்ப்பாவுக...

பொட்டபுள்ள உன்ன வள(ர்)க்க
படாதபாடு பட்டாவுக..

காலேசுக்கு நீ போக
கட்டவிரலு தேய தேய
சைக்கிள் மிதிச்சாவுக.....

ஒத்தப்புள்ள உன்ன
கண்ணுக்குள்ள வச்சு
வளத்தாக....

பெத்தபுள்ள கேட்டதெல்லாம்
சலிக்காம வாங்கி
தந்தாவுக...

கட்சி கட்சின்னு அலைஞ்சாக
பட்டி தொட்டியெல்லாம் போனாவுக..

காலேசுல நீ பட்டம்
வாங்கறத பார்க்க
ஆசைப்பட்டு வந்தவுகள
வார்த்தையால சாகடிச்சுபுட்டியே!

"எங்கப்பன் அமைச்சரோட எடுபிடின்னு
எப்படி சொல்லன்னு" கேட்டுபுட்டு
வெட்கப்படாம நிக்குறியே...

சிங்கம்போல வந்தவுக
செதஞ்சுபோயி நிக்காவுக

செதஞ்சுபோயி நின்னாலும்
காலேசுக்கு உன்ன கொண்டுவிட
சைக்கிள் எடுக்க போறாவுக...

வயசானா சைக்கிளுக்கு
துரு பிடிக்கும்..
வளர்ந்துபுட்டா
வளர்த்த கிளி மனசுக்குமா
துரு பிடிக்கும்?

Tuesday, November 20, 2007

காதலுக்கும் வலிக்கும் காதலர்களே!
பிரிந்தும் பிரியாமல்
சேர்ந்தே இருக்கின்றன
கல்லூரி மரங்களில்
சிற்பமாக...

மறந்துவிட்டதாய்
சொல்லிக்கொண்டு
தினமும் எழுதப்படுகின்றன
கடவுச்சொல்லாக...

கடற்கரை காலடிச்சுவடுகளில்
புதைந்துகிடக்கின்றன
மறக்கப்பட்ட சத்தியங்களாக...

தனித்த இரவுகளில்
முகமூடி இழந்து
வழிகின்றன கண்ணீராக...

வலிகள் பல சுமந்தாலும்
தினம் தினம் புதியதாய்
பிறக்கத்தான் செய்கின்றது
காதல், காதலாக..

Thursday, November 15, 2007

அவளுக்கு தேவதை என்று பெயர்...1. உணவருந்தும் முன்
ஒரு நிமிடம்
கண்மூடி இறைவனுக்கு
நன்றி சொல்கிறாய்
நீ.
ஒரு மிகச்சிறந்த
ஓவியத்தின்
இறைவழிபாடு கண்டு
என்னை மறந்துபோகிறேன்
நான்.

2.ஆற்றில் குளித்துவிட்டு
கரையேறுகிறாய்
நீ.
ஆற்றுமீன்கள் எல்லாம்
துள்ளிவிழுந்து மரிக்கின்றன..
பிறவி பயன் அடைந்துவிட்டோம்
என்று முணுமுணுத்தபடி..

3. உனக்கான கவிதைகளைக்கண்டு
என் புறங்கையில் முத்தமிடுகிறாய்..
எங்களுக்கு விரல்கள்,
உனக்கு மட்டும் இதழ்களா என்று
கவிதைகளெல்லாம் ஒன்றுகூடி
என்னைப் பழிக்கின்றன!

4. படபடவென்று பேசிக்கொண்டிருக்கும்
உன் இதழ்களை மூடிவிடுகிறேன்.
படபடக்கும் உன்
விழிகளால் பேச்சைத்தொடர்கிறாய்
நீ.
பட்டாம்பூச்சி பின் ஓடுகின்ற
சிறுவனாக மாறிவிடுகிறேன்
நான்.

5. தெருவெல்லாம் வீழ்ந்துகிடக்கின்றன
பன்னீர் பூக்கள்..
பன்னீர்பூ மரத்திற்கு
யார் சொன்னது உன் வருகையை?

Monday, November 12, 2007

நடைபோடும் நதியாக...

சலசலப்பால் புலம்பியபடி
ஓடுகின்ற இந்த ஆறு
என்னை எனக்கு அறிமுகம்
செய்கிறது.

ஆற்றுக்குள் உருளுகின்ற
கூழாங்கற்கள் எனக்குள்
வசிக்கும் சிற்பத்தை
நினைவுபடுத்துகிறது...

நிஜத்தின் கரங்கள்
என் உயிரை இறுக்க
ஆற்றைக் கடந்து
செல்கிறேன்.

எல்லா ஆறுகளும்
கடலைச் சேருவதில்லை.

Sunday, November 04, 2007

மழைநாளொன்றின் கிறுக்கல்கள்...


1.கறுப்புவெள்ளை மாலையொன்றினை
சிறகடிப்பால்
வர்ணமடித்துச் செல்கின்றன
ஒரு ஜோடி தேன்சிட்டுகள்.

2. இலை சிந்தும் துளியின்
அழகை முழுவதுமாய்
பருகுகின்றது பூமி.

3. மழையில் குளித்த
சிறுவனின் முகச்சுழிப்பில்
வற்றத்துவங்குகிறது சேறு.

4.நகருக்கு வெளியே
மலையென குவிந்திருக்கும்
குப்பையிலும் மலர்ந்திருக்கின்றன
பூக்கள்.

5. விரித்த குடையை
மடக்கும் போது கையில்
குத்திவிட்டது.
யாருக்குத்தான் மழை
பிடிக்காது?

6. ஓடிச்சென்று வாசல்
மூடுவதற்குள் உள்வந்து
தேனீர் கேட்கிறான் மழைவிருந்தாளி.