Monday, December 31, 2007

அப்பாவிகளுக்காய் ஒரு குரல்..

ஈழ மண்ணில்
பிறந்த ஒரே காரணத்திற்காக
வாழ்வெல்லாம் ரத்தம் கண்டு
அகதிகளாய் அவதிப்படும்
மக்கள்...

யார் மீது தவறென்றே
அறியாமல் வெடிகுண்டுகளுக்கு
என்று பலியாவோம் என
துடிக்கும் ஈராக் மக்கள்...

ரோஜாக்களுக்கு நடுவில்
வசித்தும் தீவிரவாத
முட்களால் தினம்தினம்
அவதிப்படும் காஷ்மீர் மக்கள்...

ஒட்டகத்தின் சிறுநீரை
தண்ணீராகவும் தோல்பைகளை
உணவாகவும் உட்கொண்டு
மரணத்தோடு போராடும்
சோமாலிய மக்கள்...

இவர்களைப்போல் உலகெங்கும்
வாடுகின்ற அப்பாவிகளுக்கு
என்று விடியல் பிறக்கிறதோ
அன்று நானும் கட்டாயம்
சொல்வேன்
"புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று.

Thursday, December 13, 2007

கருவறை யுத்தமடா என் காதல்!
1.தன்
கூடு சுமந்து
நகரும் நத்தைபோல்
உன்
காதல் சுமந்து
நகரும் தத்தை
நான்.

2. உன் காதல்
பருகி உயிர்வாழும்
சக்கரவாகம்
நான்.

3.நீ முத்தமிட்டு
பரிசளித்த கொலுசுகள்,
இசைக்க மறந்து
சிணுக்கிவிடுமே
என்றுதான் சொல்லாமல்
வைத்திருக்கிறேன்
உன் பிரிவை.

4.நான் குள்ளம்
என்று கவலைப்படும்
அம்மாவிடம் என்ன
சொல்லி புரியவைப்பது
உன் நெஞ்சில்
இதழ் பதியும் உயரம்தான்
நான் விரும்புவதென்று!

5.வயிற்றில் சுமந்தபோது
அதிகம் மிதித்தேன்
என்று அம்மா அடிக்கடி
சொல்வாள்.
உன்னைச் சந்திக்க
கருவறையிலேயே துவங்கிவிட்டதோ
என் யுத்தம்?

6.விரைவில்
உன்னைச் சேர
ஆறு மாதங்களாய்
பிரகாரம் சுற்றுகிறேன்.
காதலுக்குத்தான் இரக்கமில்லை
கடவுளுக்குமா?

7. சுயம்வரமின்றி கவர்ந்து
சென்றுவிடு என்கிறேன்.
புரவி வாங்க பொருள்
சேர்க்கிறேன் என்று
மறைந்துவிட்டாய் நீ.

8. இளவரசியாய் வீட்டுச்சிறையில்
வசிப்பதை விட
இதழரசியாய் உன்னுடன்
இணைவதையே அதிகம்
விரும்புகிறது மனசு.

9. காதலை தந்துவிட்டு
உறக்கத்தை கொள்ளையிட்டுப்
போய்விட்டாய்.
கனவுகளுக்குகூட வழியில்லாமல்
கண்ணீராகிறது என்
இரவு.

10. பூவொன்றை கொய்வதுகூட
சாத்தியமற்றுப்போகலாம்
பூச்சூட நீ வருகின்ற
வரையில்.

Wednesday, December 12, 2007

இதயத்தால் இணைந்திடுவோம் தோழர்களே!

வினோத் Saivite பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன்.
வண்ண வண்ண கனவுகள் சுமந்து திரிகின்ற பட்டாம்பூச்சி.

வினோத்தின் அப்பா உயிருடன் இல்லை. அம்மா ஒரு தினக்கூலி.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் வினோத்.

வினோத்திற்கு இருதயத்தில் துளை இருப்பதாக மருத்துவர்கள்
கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கான செலவு ரூ. 1.5 லட்சத்தை அப்பல்லோ மருத்துவமனை
ஏற்றுக்கொண்டது.
இதர மருந்து செலவுக்காக ரூ 25 ஆயிரம் தேவைப்படுகிறது.
மனம் இருக்கும் நண்பர்கள் உதவ முன்வரலாம்.
உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட இணையதள முகவரிக்கு
சென்று தங்களது உதவியினை அளிக்கலாம்.
http://www.helptolive.org/projects_detail.asp?id=62

இதேபோல் பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தை
சந்துருவிற்கும் இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.
உதவ விரும்பும் அன்பர்கள் உதவலாம்.
மேலதிக தகவலுக்கு: http://www.helptolive.org/projects_detail.asp?id=63