Thursday, January 17, 2008

அன்புள்ள அம்மாவுக்கு...

(உலகில் உள்ள அத்தனை தாய்மாருக்கும் இந்தக்கவிதைகள் சமர்ப்பணம்)


1.மனித இனத்தில்
தானும் பிறக்க எண்ணி
ஒவ்வொரு வீட்டிலும்
பிறந்தான் இறைவன்
அம்மாவாக.

2. எல்லோரும்
விழிக்கும் முன்பே விழித்து
சூடாக தேநீர் தருவாள்
அம்மா.
அந்தச் சுவையான தேநீருக்காகவே
தாமதமாக எழுவார்கள் பிள்ளைகள்.

3. எப்பொழுதும் திட்டாத அம்மா
அடிக்கவும் செய்தாள்
அப்பாவை நான் திட்டியதற்காக.

4.கால்சட்டைப் பருவத்தில்
சிறுவன்;
மீசை முளைத்த பருவத்தில்
வாலிபன்;
காலம் வெவ்வேறு பெயர்களால்
அழைக்கிறது;
எப்பொழுதும் அம்மாவுக்கு
"சின்னக்குட்டி".

5.நான் சுற்றுலா செல்ல
தான் சிறுக சிறுக
சேமித்த பணத்தையெல்லாம்
ஒன்றுசேர்த்து என் கையில்
திணித்து வழியனுப்புகிறாள்.
அவளறியாமல்,
காயத்துப்போன அவள்
கைகளில் விழுந்து தெறிக்கிறது
என்
ஒற்றைத்துளி கண்ணீர்.

6.நட்சத்திரங்கள் எல்லாம்
கண்சிமிட்டி ரசிக்கிறது
அம்மாவின் தாலாட்டுப்பாடலை.

7. நிலவைக் காண்பித்து
நீ ஊட்டிய சோற்றின் சுவையை
எந்த உணவிலும் உணரவில்லை
உள்நாக்கு.

8. தூரலில் நனைந்தால்
துவட்டிக்கொள்ள துண்டாகும்;
கால் இடறி நகம் பெயர்ந்தால்
காயத்தை சுற்றிக்கொள்ள துணியாகும்;
அழுகின்ற பொழுதில் கண்ணீர்
துடைக்கும் கைகளாகும்;
உன் சேலைக்குத்தான் எத்தனை எத்தனை
உருவங்கள்.

9. வாழ்க்கை உன் மீது
சுமத்துகின்ற வலிகளுக்கெல்லாம்
புன்னகை மட்டுமே பரிசாய்
தருகின்ற வித்தை எங்கு கற்றுக்கொண்டாய்
அம்மா?

10.தோட்டத்து செடிகள்
எல்லாம் நீ வந்தவுடன்
இலையசைக்கின்றன...
செடிகளுக்கும் நீ
அன்னையானது எப்போது?

11. நம் வீட்டுக்குள்
மட்டுமே சிறகடித்துப் பறக்கிறாய்
நீ..
உன் சிறகடிப்பு கண்டு வளர்ந்ததால்
இவ்வுலகையே வலம்
வருகிறேன் நான்.

12. சொந்தங்கள் வார்த்தை ஆணிகளால்
உன்னை மெளனச் சிலுவையில்
அறையும் பொழுதெல்லாம்
நீ சிந்துவது ரத்தக்கண்ணீர் அல்ல.
வறுமைகண்டு மனம்தளரா
தன்னம்பிக்கை விதைகள்.

13.வீடு நிறைய செல்வம்
வந்தபின்பும் நீ
மாறிவிடவில்லை.
அதே பழையச்சோறும்
எலுமிச்சை ஊறுகாயுமே
உன் சிற்றுண்டி.

14.அன்று
கிடைக்காத வேலையும்
தொலைந்த நட்புமாய்
நான் தவித்த பொழுதெல்லாம்
ஆலமரமாய் நிழல்
தந்தவள் நீ.
இன்று விழுதாக மாறி
நிற்கிறேன் நான்.

15. கருவில் என்னை
சுமந்த உன்னை
கருவிழியில் சுமந்திட
அனுமதிப்பாயா அன்னையே.?

(தொடரும்)

10 comments:

said...

நெகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை நிலா..

\\தொடரும்)\\

அம்மாவுக்கு முடிவே கிடையாது...எப்போதும் தொடரும் தான் ;)

said...

//தூரலில் நனைந்தால்
துவட்டிக்கொள்ள துண்டாகும்;
கால் இடறி நகம் பெயர்ந்தால்
காயத்தை சுற்றிக்கொள்ள துணியாகும்;
அழுகின்ற பொழுதில் கண்ணீர்
துடைக்கும் கைகளாகும்;
உன் சேலைக்குத்தான் எத்தனை எத்தனை
உருவங்கள்.///

நல்லா இருக்கு...
அம்மாவை அழகா காட்டியிருக்கீங்க........
வாழ்த்துக்கள் .......

said...

Hats of.....

said...

excellent nila rasigan. chinna chinna visayangalaiyum unarnthu ezhuthi irukkeenga.. vaazhthukal.
kaap writing more...

karthik said...

மண்ணிக்கவும் உங்கள் பழைய கவிதை ஒன்றை நான் எடுத்துக்கொண்டேன்.

said...

அனைவருக்கும் என் நன்றிகள்.

எழில் said...

நிலாரசிகனே!!

தாயை பற்றி நீ வடித்த ஒவ்வொரு வரியும், என் மனதை விட்டு நீங்காதவை!!

உனது எழுத்துகளுக்கு, தலை வணங்கும், ஒரு ரசிகை..

said...

வார்த்தைகளிற்கு பஞ்சம். அம்மா அம்மா அம்மா.

said...

ethu kavithai alla unarvugalin utru
kavitha poi kalantha unmai enbathu poi
mail kalanth uier thaimaiyum pesum unnkavithai
unn kavitha nichayam thaimaiyai nenikum pothu varum oru valrpu thayaga
unn kavithaiku enn unarvigal samarpanam
sadhiq

Abi said...

"நட்சத்திரங்கள் எல்லாம்
கண்சிமிட்டி ரசிக்கிறது
அம்மாவின் தாலாட்டுப்பாடலை.

நிலவைக் காண்பித்து
நீ ஊட்டிய சோற்றின் சுவையை
எந்த உணவிலும் உணரவில்லை
உள்நாக்கு."

Really Excellent Nila Raseegan. No words to appreciate you.
Vazhthukkal. . .
Keep it up :-)