Thursday, February 28, 2008

பொம்மையாதல்...
உன் ஆதிக்கத்தை
முழுமையாக
தாங்கிக்கொண்டு
நிழலாக தொடர்கிறது
என் நிஜங்கள்...

மிகச்சிறந்த ஓவியத்தை
தனதாக்கிவிட்ட பெருமையில்
வலம் வரும் உன் காலடியில்
சிதைந்த ஓவியமாய்
நசுங்குகிறது
என் விருப்பங்கள்..

என் பதில் எதிர்பாராத
கேள்விகளுடன் துளைத்தெடுக்கும்
உன் முன்னால் ஒரு
பொம்மையாக தினம்தினம்
உணர்வற்றுப்போகிறது
என் பெண்மை.

-நிலாரசிகன்.

Monday, February 25, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் 2


1.பறந்து கொண்டே புணர்கின்ற
வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டு
வெட்கி சிவக்கிறது கிழக்கு.

2.கண்ணீரைத் துடைக்கின்ற விரல்கள்
அறிவதில்லை காயத்தின்
ஆழங்களை.

3.அறியாத காரணத்துடன்
சத்தமிட்டு அழுகிறது குழந்தை
இழவு வீட்டில்.

4.குளத்தில் தவறி விழுந்தது
தூண்டில்.
சிரித்துக்கொண்டன மீன்கள்.

5.அடைமழையிலும் அழியவில்லை
குறவன் கல்லறை மேல்
காக்கை எச்சம்.

6.கையசைக்கும் கற்பூரம்
ஆராதனை தட்டில்
வேசியின் சில்லரை

7.சட்டையெல்லாம் சேறு
அழுக்கு அப்பா என்று
சிரிக்கிறது குழந்தை.

8.கவிதையற்ற இரவெல்லாம்
சத்தமிட்டு அழுகிறது
மெளன நிலா.

படம் உதவி : இலக்குவண்

Friday, February 22, 2008

குட்டிக் கவிதைகள்


1.நகம் பெயர்த்த கல்லில்
விட்டுவந்தேன் என்
ரத்தத்தின் சுவடுகளை.

2.கால்நடைகளின் தடங்களில்
தேங்கி இருந்தது மழைநீர்
வறண்ட ஆற்றின் நடுவில்.

3.செம்மறி ஆடுகளின்
பின்னால் செல்கிறான்
பள்ளிகண்டிராத சிறுவன்.

4. வேர்நனைக்கும் நதிக்கு
பூமுத்தங்களை பரிசளிக்கிறது
நதியோர வேப்பமரம்.

5.அறிமுகமாகாத மனிதர்களுக்கும்
கையசைத்து மகிழ்கின்றனர்
ரயில்நிலைய பைத்தியங்கள்.

6.புழுதிபடர்ந்த பூக்களிலும்
தேனெடுக்க வந்தமர்கின்றன
பட்டாம்பூச்சிகள்.

7.கடற்கரையில் பறக்கின்ற
பட்டங்களுடன் போட்டிபோடுகின்றன
சுண்டல் விற்ற தாள்கள்.

8.அடித்து துவைக்கிறாள்
கைநீட்டிய கணவனின்
சட்டையை.

Thursday, February 14, 2008

கவிதைக்கு சொந்தக்காரி - சில குறிப்புகள்...
மார்கழி மாதமொன்றின் அதிகாலையில தொலைபேசி வழியே என் இதயம் நுழைந்தவள்.

தேவதைகளின் நிறம் கறுப்பென்று வெள்ளை நிற தேவதைகளை ஓரம் கட்டியவள்.

அனிச்சமலர் மனசுக்குள் ஆயிரமாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறக்க வைத்தவள்.

மின்னஞ்சல் பெட்டியை முத்தங்களால் நிரப்பி சத்தமின்றி யுத்தமொன்றை நடத்தியவள்.

கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றுதின்ற பிஞ்சுமன வஞ்சியவள்.

பூங்குயில் குரலால் இறைபாடல் பாடுகின்ற குழந்தைமன பெண்ணவள்.

என் இதயசிம்மாசனத்தில் நிரந்தர அரசியாய் வீற்றிருக்கும் சாக்லெட்டில் செய்த ரோஜாமலரவள்.

இதயத்தில் துவங்கிய காதல் கண்களின் சந்திப்பைக்காண ஏழுமாதம் தவமிருந்தவள்.

முதல் சந்திப்பில் மொழி மறந்து பேச தவித்த பொழுதில் கண்சிமிட்டாமல் சிலையானவள்.

கனவுகளுடன் திரிந்தபோது என் கனவுகளை தன் கண்ணில் சுமந்து துணையிருந்தவள்.

சொல்லித் தெரிவதில்லை காதலென்று மான்விழி பார்வைகளால் உணர்த்தியவள்.

அவளை அறிமுகப்படுத்திய நண்பனே எட்டப்பனாக மாறியதில் துடிதுடித்தவள்.

கவர்ந்து சென்று வாழ பொருள்தேடி தலைநகரம்
நான் பயணித்த காலத்தில் கையசைக்காமல் கண்ணசைத்து வழியனுப்பியவள்.

என் கையெழுத்தும் கவிதை என்று கடிதமெழுதிய அவள் பேனாவின் மைத்துளிக்குள் தன் காதலைச் சுமந்தவள்.

வேலைகிடைத்த செய்தியை சொல்வதற்கு தொலைபேசியில் அழைத்தபோது அழுதுகொண்டே வாழ்த்தியவள்.

அழுகையின் காரணமறியாமல் ஆனந்த கண்ணீரென்று நான் நினைத்து மலர்ந்த இரவொன்றில் தொலைபேசியில் அழைத்தவள்.

நீண்ட மெளனம் உடைத்து திருமணம் நிச்சயக்கப்பட்ட செய்தியை செவிக்குள் சொல்லியழுதவள்.

தவித்து,துடித்து,துவண்டு,அழுது,அடங்கி,வதங்கிய பூவாக மணமேடை ஏறியவள்.

சிறகுகளை இழந்துவிட்டு சிலுவைகளை சுமந்துகொண்டு மறுவீடு சென்ற ஊமைக்குயிலவள்.

வானத்தை இழந்துவிட்ட நிலவு இன்று எங்கோ ஒரு கானத்தில் காதல் தந்த நினைவுகளுடன் மட்டும் வாழ்கிறது.

பொருளாதாரச் சூறாவளியில் சிக்கி தொலைந்த காதல் இன்று சட்டைப்பையிலிருந்து வழிகின்ற வெள்ளிக்காசுகளை கவனிக்காமல்
அவள் நினைவுகளின் கனத்தை தள்ளாடியபடி சுமந்து பயணிக்கிறது.

Wednesday, February 13, 2008

அம்மாவுக்கும்,அப்பாவுக்கும்....1.வேலை முடிந்து வந்தபின்
என் கேள்விகளுக்கு
பதில்பேசாத அம்மாவையும்
அப்பாவையும் போலவே
அமைதியாய் இருக்கின்றன
இந்தக் கம்பிகள்.

2.அம்மா,அப்பாவின்
கைகளை நினைத்துக்கொண்டு
இறுகப்பற்றுகிறேன்
ஜன்னல் கம்பிகளை.

3. வண்ண வண்ண
உடைகளை வாங்கித் தர
உழைக்கிறோம் என்றனர்
அம்மாவும் அப்பாவும்.
என் கனவுகள் மட்டும்
கறுப்புவெள்ளையாகி போனதை
உணராமல்.

4.மிருக காட்சி சாலைக்கு
மட்டும் என்னை அழைத்து
சென்றுவிடாதீர்கள் அப்பா
இரும்புக் கம்பிகளுக்கு பின்
அழுகின்ற மிருகங்களுக்கு
என் கண்ணீரின் மொழி
புரிந்துவிடும்!

5.பெற்றோரை வணங்க
வேண்டும் என்றார் ஆசிரியர்.
இப்பொழுது புரிகிறது
கடவுள் போல் கண்ணுக்குத் தெரியாததால்
வணங்க சொல்கிறார் என்று.

6. அப்பா அடித்துவிட்டதற்காக
அழுகிறாள் எதிர்வீட்டு ஒவ்யா.
அடிப்பதற்குகூட அப்பா
அருகில் வருவதில்லையே
என்று அழுகிறேன் நான்.


படம் உதவி: இலக்குவண்.

Tuesday, February 12, 2008

தருணங்கள்...உன் விரலின் ஸ்பரிசம்
உணர்த்திய பூமாலையின்
பூவாக வாசம்வீசுகிறது
பரிபூரணமாய் என்னை
உன்னிடம் தந்துவிட்ட மனசு..

என்னை உனக்கு
துணையாக்கும்
மஞ்சள்கயிற்றில் சட்டென்று
ஊஞ்சலாடி மறைகிறது
என் தாவணிப் பருவத்தின்
நினைவுகள்..

வர்ணிக்க முடியாத
ஆனந்தத்தில் திளைத்து,
வெட்கத்தில் அழகாக
நகர்கிறது
உனதாகப்போகின்ற என்
மெளனத்தருணங்கள்...


படம் உதவி: இலக்குவண்

Friday, February 08, 2008

என் கறுப்புத்தங்கம்
என் பாதையெல்லாம் முட்களாய் இருந்தபோது என்னோடு பயணித்தவளே...

இன்று என் பாதையெல்லாம் பூக்கள் மலர்ந்திருக்கையில்
கோதை நீ மட்டும் வெகுதூரத்தில்.....

நீ இல்லாமல் போனதால் காவியங்கள் எழுத வேண்டிய
என் பேனா கவிதைகள் கிறுக்கிக்கொண்டிருக்கிறது..

நம்மிடையே மெளனமாய் பூத்திருந்த காதல் இன்று
தூசி படிந்த ஓவியமென எங்கோ வீழ்ந்து கிடக்கிறது...

முட்டை உடைத்து வெளிவரும் கோழிக்குஞ்சு போல ஒரு நீண்ட மெளனத்தை உடைத்து வெளிவந்து தடுமாறுகிறது என் ஊனவார்த்தைகள்..

புல்லாங்குழலாய் காதலின் நினைவுகள் இருக்கையில்
ஊதாங்குழலின் சூடு தாங்காமல் விரல் ஊதும் ஒரு ஏழைத்தாயின்
வலியுடன் நடமாடுகிறேன்.

கண்ணாடி ஜன்னலில் மோதி கண்ணீராய் வழிந்தோடுகின்றன
மழைத்துளிகள்..

கண்ணாடி மனதில் மோதி சில்லுகளாய் சிதறுகின்றன உன்
நினைவுத்துளிகள்..

காதலை காலம் கரைத்துவிட்டாலும் அதன் நினைவுகளை
காலத்தால் கரைக்கமுடிவதில்லை.

சிந்திய கண்ணீர்த்துளிகள் உலர்ந்துவிட்டாலும் ஞாபகங்கள்
உலர்ந்துவிடுவதில்லை.

புல்லுக்கட்டைச் சுமந்து செல்லும் முதியவரின் கரங்களில்
மினுமினுக்கும் வேர்வையென கனத்த காதலை
சுமந்து திரிகையில் மினுமினுக்கிறது உன் முதல்பார்வை.

சுடுகின்ற ஆற்றுமண்ணில் புதைந்த பசுவின் சுவடுகளை
நினைவூட்டுகிறது தகிக்கும் மனதின் ஆழத்தில் புதைந்த உன் பிஞ்சுமுகம்.

தோள்சாயும் தோழமைகள் சில நேரங்களில் துரோகங்களாக
மாறும் தருணத்தில் தவிக்கும் மனதை குழந்தையென அள்ளிக்கொள்ள அருகில் நீ இல்லாமல் தவித்திருக்கிறேன்..

ஏதேனும் ஒரு கணத்தில்,நிகழ்கால நிகழ்வுகள் மறந்து என்னுடன் ஒரு நொடியேனும் வாழ்ந்துவிட்டு மறையும் உயிர்ப்புள்ள உன் நினைவுகள்.

பின்னிரவில் ஏதோவொரு சத்தம்கேட்டு விழித்து,பின் உறக்கம் வரும் வரையில் காத்திருக்கும் வேளையில் பழகிய நாட்களின் பசுமைகளை போர்த்திக்கொண்டு உறங்க எத்தனிக்கும் மனம்..

பந்தங்களும் சொந்தங்களும் எரிமலையாக வெடிக்கும் பொழுதும்
பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் எளிமையுடன் உன் நிரந்தர பிரிவிலும் சோகத்துடன் சிரிக்க பழகிவிட்டேன்.

எனக்குள் குழந்தைமை மாறாத அதே புன்னகையுடன் நீ என்றென்றும் இருப்பாய்.

காலம் ஒரே ஒரு பிறப்பை தருகிறது.
காதல் ஒரே பிறப்பில் பல வாழ்க்கையை தருகிறது.

ஒரு காதலின் வலி மிகுந்த இரவு இது என்பது அறியாமல விடியப்போகிறது கிழக்கு.