Monday, March 31, 2008

சொற்கள் தீர்ந்த பொழுதில்...
பின்னிரவின் நீளம்
குறைத்திட முயன்று
தோற்றுக்கொண்டிருந்தேன்..

இருள் சூழ்ந்த
மரத்தடியில் உருவமற்ற
அரவமொன்றின்
நெளிதல் சத்தம் கதவிடுக்கின்
வழியே கசிந்துகொண்டிருந்தது...

ஒரே இரவில்
வறண்டு பாலையென
காட்சியளித்தது
என் கடல்..

சொற்கள் தீர்ந்த ஏதோவொரு
உலகில் என் இறுதிச்சுவடுகள்
பதிந்திருக்கக்கூடும்.

Thursday, March 27, 2008

எழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்

என்னுடைய "மயிலிறகாய் ஒரு காதல்" கவிதை நூலிற்கு எழுத்தாளர் சைலஜா அவர்களின் விமர்சனம்.

இங்கே கேட்கலாம் : http://tamil.sify.com/audio/shylaja/fullstory.php?id=14629661

Wednesday, March 26, 2008

பள்ளி குழந்தைகளுக்கு உதவி தேவை

நண்பர்களே,

சென்னையில் உள்ள சைவேட் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். மேலதிக விபரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.

http://www.helptolive.org/projects_detail.asp?id=64

உங்களது நண்பர்களுக்கும் இதனை தெரிவிக்கலாம். நாளைய நம்பிக்கை விதைகளுக்கு நீருற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்.

நன்றி.

Tuesday, March 25, 2008

அம்மா


காய்ச்சலில் நெற்றி
தொடும்போதும்,
மழையில் நனைந்து
தலைதுவட்டும் போதும்
தோல்விகளில்
தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த
ஆளில்லாதபோதும்,
நினைவுகளில் நிழலாடுகிறது
அம்மாவின் அன்புக்கை.
(இந்தக் கவிதை ஏழு வருடங்களுக்கு முன்பு எழுதியது)

Monday, March 24, 2008

கறை

வேட்டியின் கிழிசலால்
விழுந்தது அடி.

வலியை மறைத்துக்கொண்டு
தைத்துக்கொடுத்தாள்.

கட்சிக்கூட்டம் நோக்கி
மெல்ல நகர்ந்தது
கறைபடிந்த ஆண்மை.

இழந்த சுயத்தால்
இருளில் கரையத்தொடங்கியது
பெண்மை.

Wednesday, March 19, 2008

வினை எச்சம்


படுக்கை நனைத்த‌
மகனை அடித்துவிட்டு
வாசல் வந்தேன்.
உச்சந்தலையில் எச்சமிட்டு
பறந்தது காகம்.

Monday, March 17, 2008

கவிதை : நட்புத் துளிகள்... பாகம்-1

1.பிரிந்தென்னை
சிலுவையில்
அறைந்துபோனாய்
உயிர்த்தெழுகின்றன உன்
ஞாபகங்கள்...


2. புள்ளியாக நீ
மறையும் வரையில்
நின்றழுதேன்.
புள்ளியில்லாக் கோலமாக
மாறிப்போனது
நம் நட்பு.

3.நண்பர்கள் பிரியும்
பொழுதெல்லாம் அழுகிறான்
இறைவன்,
மழையுருவில்.


4.காரணமின்றி பிரிதலும்
பின்னுணர்ந்து தோள்சேர்தலும்
நட்பில் மட்டுமே
சாத்தியம்.


5.தினம் திட்டும் அப்பாவின்
வார்த்தைகளைவிட
திட்டாமல நகரும்
நண்பனின் மெளனம்
கொடியது.

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடன் ஒரு சந்திப்பு15-03-2008 என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பொன்நாள்.

எவருடைய எழுத்து தமிழின் கடைசி மூச்சு வரை இருக்குமோ,

எவருடைய எழுத்தினால் இருண்ட உள்ளங்களில் ஒளி பிறந்தனவோ

எவருடைய எழுத்தினால் முற்போக்கு எண்ணங்கள் தலை தூக்கினவோ

அந்த எழுத்தாளைரை சந்தித்த சிறப்பான நாள்.

அவர் ஜெயகாந்தன்.

நான் எழுத்தில் மட்டுமே தரிசித்த ஒரு மாபெரும் எழுத்தாளரை நேரில் சந்தித்து

உரையாடிய அரைமணி நேரத்தின் தொகுப்பு இக்கட்டுரை.

காலை ஏழு மணியிலிருந்தே உள்ளுக்குள் பரபரப்பு. இதயத்தின் துடிப்புச் சத்தம்

என் செவிகளில் கேட்டது.

என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? தடுமாற்றத்தின் உச்சத்தில் கரையத்தொடங்கின மணித்துளிகள்.

தனது படைப்பை போலவே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு படைப்பாளரை

அவரது இல்லத்தில் சந்திக்கப்போவதை நினைத்தாலே லட்சம் பூக்கள் மொத்தமாக மனசெல்லாம் பூக்க ஆரம்பித்தன.

முத்தமிழ் இணைய குழுமத்தின் உறுப்பினர் சீதாலட்சுமி அம்மா அவர்கள் எழுதிய "ஜெயகாந்தனுடன் சில நிமிடங்கள்" தொடரை

நகலெடுத்து அவரிடம் சமர்பிக்க் வேண்டிய முக்கியமான பணி எனக்குத் தரப்பட்டிருந்ததாலும் அந்தப் பணியை சிறப்பாக செய்துமுடிக்க வேண்டியதாலும் என் பதட்டம் அதிகமாகிக்கொண்டே போனது.

மாலை 4.45க்கு நானும் கவிஞர்.லாவண்யாவும் அவரது வீட்டிற்கு சென்றோம்.

அவரது வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த அந்த முதல்நொடி எத்தனை வருடமானாலும் வாடாத மலராய் என் உயிருக்குள் மலர்ந்து நிற்கும்.

அது ஒரு அழகிய வீடு. தமிழின் புதல்வரின் பாதங்களை சுமக்கும் வீட்டுச்சுவரை விமானத்தை தொட்டுப்பார்த்து வியக்கும் ஒரு கிராமத்துச்சிறுவனாக தொட்டுப் பார்த்து நெகிழ்ந்தேன்.

அவரது வீட்டு மொட்டைமாடியில் தென்னங்கீற்றில் வேயப்பட்ட கொட்டகையில்

அவர் இருப்பதாக அறிந்து,மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தேன்.

அந்தக் கீற்றுக்கொட்டகையினுள் வீற்றிருந்தது இலக்கியச்சிம்மம்.

அவரைப் பார்த்தவுடன் சிலிர்த்துவிட்டது என் இதயம்.

மலர்ந்த புன்னகையுடன் வரவேற்று தன் அருகில் அமரச்சொன்னார் அந்த எழுத்துச் சக்கரவர்த்தி.

இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளரின் அருகில்

மெய்சிலிர்க்க அமர்ந்திருந்தேன்.

சீதாம்மா எழுதிய தொடரை அவரிடம் கொடுத்தேன். வாங்கி படிக்க ஆரம்பித்தார்.

நான் அவரை படிக்க ஆரம்பித்தேன்.

அவர் உடல் தளர்ந்திருந்தது. அது முதுமையின் அடையாளம்.

ஆனால் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் தளராமல் நிமிர்ந்து நிற்கும் அவரது எழுத்துக்கள். இது அவரது இலக்கிய ஆளுமையின் அடையாளம்.

ஒவ்வொரு பக்கமாக நிதானமாக படிக்கத்தொடங்கினார். ஒரு ஆழ்ந்த மெளனம் அங்கே நிலவியது.

பின்னர் என்னுடைய “மயிலிறகாய் ஒரு காதல்” கவிதை நூலை அவருக்கு கொடுத்தேன்.

ஆர்வமுடன் வாங்கி சில கவிதைகள் படித்தார்.

பின் மெதுவாக பேச்சைத் தொடங்கினோம்.

கேட்கின்ற கேள்விக்கெல்லாம் உடனே வந்து விழுந்தது பதில்.

ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு வெண்முத்துக்கள்.

அரைமணிநேர அற்புத நிமிடங்களுக்கு பிறகு அந்த மாமேதையிடம் விடைபெற்று வீடு திரும்பினோம்.

வீடு திரும்பும் வழியில் அவரது நாவல் ஒன்று நினைவில் பூத்தது.

“ஒரு வீடு,ஒரு மனிதன்,ஒரு உலகம்” நாவலில் கதையின் நாயகன் ஒரு லாரியில் சென்றுகொண்டிருப்பான். வழியில் சாலையோரக் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணண அவன் பார்ப்பான்.

அருகில் இருப்பவர்கள் இந்த செயல் தவறானது என்று கூறும்போது, இதற்கு முன்னால் ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்த்தேனே அதை நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கேட்பான்.

இந்தக் கேள்வியின் பாதிப்பு பலநாட்களாய் என்னை பாதித்த கேள்வி. இப்படியும் எழுத இயலுமா என்று எண்ணவைத்த கேள்வி.

அந்தக் கேள்விக்கு சொந்தக்கார எழுத்தாளரை,

எழுபத்தி நான்கு வயது குழந்தை மன கலைஞரை சந்தித்த அதிஅற்புத நிமிடங்களை கடைசிமூச்சு உள்ளவரை அசைபோடும் என் உயிர்.

நெகிழ்வுடன்,

நிலாரசிகன்.

Wednesday, March 05, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் 3
1.எதிர்பாரா தருணங்களில்
கிடைக்கின்ற முத்தம்
மின்னலடிக்கும் வெட்கம்.

2.இரவு நதியில் மிதக்கின்ற
என் பிம்பத்தில் ஒளியெறிந்து
விளையாடுகிறது நிலா

3.எவ்வளவு முயன்றும்
எழுத இயவில்லை
என்னால்.
எதுவுமே செய்யாமல்
எழுதிச் செல்கிறாய்
நீ.

4. பொய்யென்று தெரிந்தும்
ரசிக்கிறேன் அம்மாவின்
கதைகளை,நினைவுகளில்.