Monday, March 17, 2008

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடன் ஒரு சந்திப்பு15-03-2008 என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பொன்நாள்.

எவருடைய எழுத்து தமிழின் கடைசி மூச்சு வரை இருக்குமோ,

எவருடைய எழுத்தினால் இருண்ட உள்ளங்களில் ஒளி பிறந்தனவோ

எவருடைய எழுத்தினால் முற்போக்கு எண்ணங்கள் தலை தூக்கினவோ

அந்த எழுத்தாளைரை சந்தித்த சிறப்பான நாள்.

அவர் ஜெயகாந்தன்.

நான் எழுத்தில் மட்டுமே தரிசித்த ஒரு மாபெரும் எழுத்தாளரை நேரில் சந்தித்து

உரையாடிய அரைமணி நேரத்தின் தொகுப்பு இக்கட்டுரை.

காலை ஏழு மணியிலிருந்தே உள்ளுக்குள் பரபரப்பு. இதயத்தின் துடிப்புச் சத்தம்

என் செவிகளில் கேட்டது.

என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? தடுமாற்றத்தின் உச்சத்தில் கரையத்தொடங்கின மணித்துளிகள்.

தனது படைப்பை போலவே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு படைப்பாளரை

அவரது இல்லத்தில் சந்திக்கப்போவதை நினைத்தாலே லட்சம் பூக்கள் மொத்தமாக மனசெல்லாம் பூக்க ஆரம்பித்தன.

முத்தமிழ் இணைய குழுமத்தின் உறுப்பினர் சீதாலட்சுமி அம்மா அவர்கள் எழுதிய "ஜெயகாந்தனுடன் சில நிமிடங்கள்" தொடரை

நகலெடுத்து அவரிடம் சமர்பிக்க் வேண்டிய முக்கியமான பணி எனக்குத் தரப்பட்டிருந்ததாலும் அந்தப் பணியை சிறப்பாக செய்துமுடிக்க வேண்டியதாலும் என் பதட்டம் அதிகமாகிக்கொண்டே போனது.

மாலை 4.45க்கு நானும் கவிஞர்.லாவண்யாவும் அவரது வீட்டிற்கு சென்றோம்.

அவரது வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த அந்த முதல்நொடி எத்தனை வருடமானாலும் வாடாத மலராய் என் உயிருக்குள் மலர்ந்து நிற்கும்.

அது ஒரு அழகிய வீடு. தமிழின் புதல்வரின் பாதங்களை சுமக்கும் வீட்டுச்சுவரை விமானத்தை தொட்டுப்பார்த்து வியக்கும் ஒரு கிராமத்துச்சிறுவனாக தொட்டுப் பார்த்து நெகிழ்ந்தேன்.

அவரது வீட்டு மொட்டைமாடியில் தென்னங்கீற்றில் வேயப்பட்ட கொட்டகையில்

அவர் இருப்பதாக அறிந்து,மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தேன்.

அந்தக் கீற்றுக்கொட்டகையினுள் வீற்றிருந்தது இலக்கியச்சிம்மம்.

அவரைப் பார்த்தவுடன் சிலிர்த்துவிட்டது என் இதயம்.

மலர்ந்த புன்னகையுடன் வரவேற்று தன் அருகில் அமரச்சொன்னார் அந்த எழுத்துச் சக்கரவர்த்தி.

இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளரின் அருகில்

மெய்சிலிர்க்க அமர்ந்திருந்தேன்.

சீதாம்மா எழுதிய தொடரை அவரிடம் கொடுத்தேன். வாங்கி படிக்க ஆரம்பித்தார்.

நான் அவரை படிக்க ஆரம்பித்தேன்.

அவர் உடல் தளர்ந்திருந்தது. அது முதுமையின் அடையாளம்.

ஆனால் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் தளராமல் நிமிர்ந்து நிற்கும் அவரது எழுத்துக்கள். இது அவரது இலக்கிய ஆளுமையின் அடையாளம்.

ஒவ்வொரு பக்கமாக நிதானமாக படிக்கத்தொடங்கினார். ஒரு ஆழ்ந்த மெளனம் அங்கே நிலவியது.

பின்னர் என்னுடைய “மயிலிறகாய் ஒரு காதல்” கவிதை நூலை அவருக்கு கொடுத்தேன்.

ஆர்வமுடன் வாங்கி சில கவிதைகள் படித்தார்.

பின் மெதுவாக பேச்சைத் தொடங்கினோம்.

கேட்கின்ற கேள்விக்கெல்லாம் உடனே வந்து விழுந்தது பதில்.

ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு வெண்முத்துக்கள்.

அரைமணிநேர அற்புத நிமிடங்களுக்கு பிறகு அந்த மாமேதையிடம் விடைபெற்று வீடு திரும்பினோம்.

வீடு திரும்பும் வழியில் அவரது நாவல் ஒன்று நினைவில் பூத்தது.

“ஒரு வீடு,ஒரு மனிதன்,ஒரு உலகம்” நாவலில் கதையின் நாயகன் ஒரு லாரியில் சென்றுகொண்டிருப்பான். வழியில் சாலையோரக் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணண அவன் பார்ப்பான்.

அருகில் இருப்பவர்கள் இந்த செயல் தவறானது என்று கூறும்போது, இதற்கு முன்னால் ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்த்தேனே அதை நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கேட்பான்.

இந்தக் கேள்வியின் பாதிப்பு பலநாட்களாய் என்னை பாதித்த கேள்வி. இப்படியும் எழுத இயலுமா என்று எண்ணவைத்த கேள்வி.

அந்தக் கேள்விக்கு சொந்தக்கார எழுத்தாளரை,

எழுபத்தி நான்கு வயது குழந்தை மன கலைஞரை சந்தித்த அதிஅற்புத நிமிடங்களை கடைசிமூச்சு உள்ளவரை அசைபோடும் என் உயிர்.

நெகிழ்வுடன்,

நிலாரசிகன்.

4 comments:

said...

வாழ்த்துகள் நிலா ரசிகன்.

சுஜாதா சாருக்கு முன்னமேயெ எனக்கு இவரது எழுத்துகள் அனுபவப்பாடங்களாகி இருந்தன.
பாரீசுக்குப் போ தொடர் வரும்போதுதான், ரஷ்ய கதை அன்னா கரீனினா பற்றித் தெரிந்துகொண்டேன்.

அந்தக் கதாநாயகனோடு நாங்களும் வருத்தப் பட்டோம்.
அதே போலச்சேரி மக்களின் மொழி இன்னோரு கதை(உன்னைப் போல ஒருவன்) மூலம் தெரிந்தது.
யுகசந்தி என்ற ஒரு கதை பெயர் தப்பில்லை என்று நினைக்கிறேன்.
அதில வரும் புரோஹிதர்,அவர் மகள் மைத்ரேயி அவள் காதலிக்கும் ஆண்மகன் என்று பலரும் என் நினைவில் அப்படியே பதிந்து இருக்கிறார்கள்.
அவரைப் பார்த்துப் பதிவும் இட்டதற்கு மிகவும் நன்றி.

said...

நன்றி வல்லிசிம்ஷன்.

said...

அற்புதமான அனுபவம் உங்களுக்கு.
அழகாக வார்த்தைகளில் அதை வடித்தெடுத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துகள்!!