Wednesday, April 02, 2008

மனித உருவில் ஒரு மிருகம்!

ஆண் என்கிற ஒரே காரணத்திற்காக தன் மனைவியை,தன் உயிரின் மறுபாதியை தன் இஷ்டப்படி 25 ஆண்டுகளாய் கொடுமைப்படுத்திய ஒரு கொடூரனைப் பற்றிய கட்டுரை இன்று படிக்க நேர்ந்தது.

இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது!!! இறைவனின் படைப்புப்பிழை இந்த மனித மிருகங்கள்...

கட்டுரை:
(நன்றி : ஜீனியர் விகடன்)
''ரத்தம் கொட்டினாலும் அவரோட 'பசி'யை தீர்த்தாகணும்...'' ''தலைக்காயத்துக்கு சர்க்கரையும் டீத்தூளும்...''
இந்திராணியின் இல்லற வாக்குமூலம்

'பின்னால இருந்து தலையில மல்லிகைப் பூ வச்சிவிட்டு தாடை யில விரல்பதிச்சு செல்லமாய் முகத்தைத் திருப்பி புருஷன் புன்னகை பூப்பான். அப்ப வெக்கத்துல, 'நான் மொதல்ல சிவக்குறேனா... நீ முதல்ல செவக்குறியா'னு ரெண்டு கன்னத்துக்கும் போட்டியே நடக்கும்!''- சக பெண்களுக்கு கிடைக்கும் இந்த சுகம் தனக்கும் கிடைக்கும் என்று நம்பித்தான் கும்பகோணத்தில் வாக்கப்பட்டாள் இந்தி ராணி. அந்த பதினேழு வயசில் அவளுக்குள் பதினேழாயிரம் ஆசைகள்.

முதல் ராத்திரியில்...

பால் சொம்புடன் மல்லிகை மணம் கமழ இந்திராணி கணவன் காலில் விழப் போகிறாள்... அவளைப் பார்த்து கணவன்,

'என்னடீ... பெரிய இவளாட்டம் பாலைத் தூக்கிட்டு வந்துட்டே? எங்கடீ கல்யாணத்துல வசூலான மொய்ப் பணம்? உன்னோட குடும்பத்துக்காரனுகளே

தூக்கிட்டுப் போயிட்டானுங்களா? சொல்றீ... சொல்லித்தொலை...' - திட்டிக்கொண்டே இந்திராணியின் தலையைப் பிடித்து சுவரில் அவன் இழுத்துமோத... புருஷன் தன்னை இப்படித்தான் மயக்கப் போகிறான் எனத் தெரியாமல் தலையில் ரத்தம் வடிய பொத்தென விழுந்து மயங்கினாள் இந்திராணி.

இப்படித் துவங்கிய முதலிரவுக்குப் பின் இருபத்தைந்து வருடங்கள் உருண்டோடி விட்டன. இப்போது இந்திராணி மொட்டை போட்டிருக்கிறார். தலை முழுக்க, 'கஜினி' படத்தில் சூர்யாவின் தலையில் கிடக்குமே ஒரு தழும்பு, அதுபோல் பதினாறுக்கும் அதிகமான தழும்புகள். எல்லாமே கணவன் என்ற மிருகத்தின் காணிக்கை. கால் நூற்றாண்டுகால மணவாழ்க்கையில் தலையில் எத்தனை தழும்புகளைத்தான் தாங்குவது? வெடித்துவிடும் அளவுக்குத் தலை வலித்ததால் சாமியிடம் வேண்டிக்கொண்டு மொட்டை அடித்துக்கொண்டார் இந்திராணி.

இந்திராணியின் மொட்டைத் தலையைப் பார்த்து அதிர்ந்து போனார் அவருடைய தோழியும் கன்னியாஸ்திரியுமான லீமாரோஸ். 'என்னம்மா இது?' என கேட்க, அப்போதுதான் கணவனின் கொடுமைகளை இறக்கி வைத்திருக்கிறார் இந்திரா. லீமாரோஸ் மூலம் நம் கவனத்துக்கு வந்தவர் தன் துயரக் கதையை நேரடியாக நம்மிடம் சொன்னார்.

''முதல் ராத்திரிலருந்தே கொடுமைதாங்க. இவ்வளவுக்கும் இடையில மூணு பொண்ணு, மூணு பையன் மொத்தம் ஆறு பிள்ளைங்க. சின்ன வயசிலேயே கல்யாணம் ஆனதால எந்த நல்லது கெட்டதும் தெரியலை. கட்டின புருஷனை எதுத்து ஏதும் செய்யக் கூடாதுங்கிறதால கம்முன்னு இருந்திட்டேன். இதை அவரு பயன்படுத்திக்கிட்டு தன் இஷ்டப்படி எல்லாம் என்னை ஆட்டிப் படைச்சாரு. காட்டுமிராண்டி மாதிரி அடிப்பாரு. ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டினாலும் அதை சட்டையே பண்ணாம அவரோட 'பசி'யை தீர்த்துக்குவாரு. அவரு உக்காரச் சொன்னா உக்காரணும். படுக்கச் சொன்னா படுக்கணும். அவர் தூங்குற வரைக்கும் சத்தம் போட்டுக்கூட அழக் கூடாது. அவர் அடிச்சு தலையில காயம் வர்றப்ப எல்லாம் டீத்தூளையும் சர்க்கரையையும் கலந்து மருந்தா போட்டுக்குவேன்'' என இந்திராணி சொல்லச் சொல்ல அதிர்ந்து போனோம்.

''தலையில அடிச்சாதான் நல்லா உறைக்கும்னு சொல்லிச் சொல்லி தலையிலேயே அடிச்சதால தலை முழுக்க தழும்பாப் போச்சு. சமயத்துல காயம் ஆறாம சீழ் வச்சிடுச்சு. என்னோட பெரிய பையன் கூலி வேலைப் பார்த்து எனக்கு வைத்தியம் பார்ப்பான்.

என் பிள்ளைகளுக்கு அப்பான்னு இவர் வேணும். புருஷன் இல்லாம வாழ்றது ஊரு உலகத்துக்கு சரியா வராதேனு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். மூத்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு பையனை அங்க இங்க கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பிட்டேன். மத்த இரண்டு பசங்களும் கூலி வேலைக்குப் போறாங்க. பொண்ணுங்க படிக்கிறாங்க. பெரிய பையன் 'இனிமேயும் இந்த அப்பா நமக்கு வேணாம்மா! நீ மட்டும் நல்லாயிருந்தா போதும். அவருக்கு சோறு போட்டு கவனிக்காதே. எங்களோட தனியா வந்துடு'ன்னு திட்டுறான். என் மனசுதான் கேட்க மாட்டேங்குது.

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி இவரு குடிச்சு குடிச்சே குடலு வெந்து கிடந்தப்ப, அவன்தான் காசு செலவு பண்ணி தன் ரத்தத்தையும் கொடுத்துக் காப்பாத்தினான். கொஞ்சம் குணமானதும் மறுபடியும் குடிக்கிறதும் என்னையும் பிள்ளைகளையும் போட்டு அடிக்கிறதுன்னு பழைய வேலையை ஆரம்பிச்சுட்டாரு. இப்போ எனக்கு அடிக்கடி தலைவலி வருது. கொஞ்ச நேரம் வேலை பார்த்தாலே தலை சுத்துது. தலைவலி தீரணும்னுதான் கோயில்ல வேண்டிக்கிட்டு மொட்டை போட்டுக்கிட்டேன். மிச்சமிருக்கிற காலத்துக்கு தலையில பெரிசா ஏதும் பாதிப்பு வந்திருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். நான் வேறென்ன பண்ண முடியும்?'' - வெடித்துக் கிளம்பிய அழுகையோடு சொல்லி முடித்தார் இந்திராணி.

கன்னிகாஸ்திரி லீமாரோஸ் நம்மிடம், ''ஒவ்வொரு தழும்பும் 3 இன்ச்-சிலிருந்து 4 இன்ச் நீளத்துக்கு இருக்கு. எப்படித்தான் இந்திராணி இந்த சித்ரவதையை தாங்கிக்கிட்டு இவ்வளவு நாள் இருந்தாங்களோ தெரியலை. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாத்தான் தலையில என்னென்ன பாதிப்பு இருக்குன்னு தெளிவா சொல்ல முடியும். இந்திராணிக்கு மேலும் கொடுமை நடக்காதபடி நாங்க பார்த்துக்கிறோம். இவரை மாதிரிதான் அநேகம் கிராமத்துப் பொண்ணுங்க அறியாமையாலும், அடிமைத்தனத்தாலும் பல கொடுமைகளுக்கு ஆளாகுறாங்க. சமூக நலத்துறையும் பொதுநல அமைப்புகளும் கைகோத்து செயல்பட்டால்தான் இந்தக் கொடுமைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்'' என்றார்.

'உங்க கொடுமைக்கார கணவர் ஊர் - பேரைச் சொல்லவே இல்லியே... அவர் இப்போ எங்க இருக்காரு?'- இந்திராவிடம் கேட்டோம்.

'வீட்டுக்காரர் பேரை சொல்றதா...? எங்காச்சும் விழுந்து கெடப்பாரு. அவர் பேரு... வேணாமே! ' யோசித்து யோசித்து கடைசியில் சொன்னார் இந்திராணி - ''கிருஷ்ணமூர்த்திங்க...''

அதன்பிறகு கிருஷ்ணமூர்த்தி எங்கிருப்பார் என்று இந்திராணி யூகித்துச் சொன்ன சில இடங்களிலும் கிருஷ்ணமூர்த்தியைத் தேடினோம். கிடைக்கவில்லை. ஒருவேளை, கட்டுரை வெளியான பிறகு கிருஷ்ணமூர்த்தி தன் தரப்பாக எதையும் சொல்ல விரும்பி தெரிவித்தால் அதனையும் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

வெளிச்சத்துக்கு வராமல் இன்னும் எத்தனையெத்தனை இந்திராணிகள் இப்படி துன்பக் கேணியில் உழன்று கொண்டிருக்கிறார்களோ?
-சி. சுரேஷ்
படங்கள்: எ.பிரேம்குமார்

6 comments:

said...

மனித உருவில் ஒரு மிருகம் என்ற தலைப்புக்கு பதிலாக, மிருக உருவில் ஒரு சாத்தான் என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும். அந்த கணவனை கண்டவுடன் சுட்டு தள்ள உத்தரவு போட வேண்டும்

said...

ஆயிரமாயிரம் கனவுகளோடு கணவன் கைபற்றி, புகுந்தவீடு செல்லும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம். அந்தக் கொடுமைகளுக்கு கணவனே உடந்தை என்பதுடன் அவனாலேயே மேலும் பல இம்சைகளுக்கு ஆளாக்கவும் படுகிறார்கள். மனதைப் பார்க்காமல் பணத்தைப் பார்ப்பதால் வரும் விளைவுகள் இவை. பணம் தேவைதான், ஆனால் பணமே பிரதானமல்ல, வாழ்க்கையல்ல என்பதை எப்போது தான் உணர்வார்களோ??

//"ரத்தம் கொட்டினாலும் அவரோட 'பசி'யை தீர்த்தாகணும்"...//

மிருகவெறி கொண்ட மனித உருவங்கள். அருவருப்பு தான் மிஞ்சுகிறது. ;(

//அவரு உக்காரச் சொன்னா உக்காரணும். படுக்கச் சொன்னா படுக்கணும். அவர் தூங்குற வரைக்கும் சத்தம் போட்டுக்கூட அழக் கூடாது.//

பெரும்பான்மையான பெண்கள் சந்திக்கும் நிலை இதுதான். தனக்கென்று எந்த ஒரு ஆசைகளும் இல்லாமல், இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு தன் புருஷன், தன் பிள்ளை என்றே வாழ்ந்துவிடும் ஒருநிலையில் தான் இன்னமும்ம் பெண்கள் இருக்கின்றார்கள்.

//இறைவனின் படைப்புப்பிழை இந்த மனித மிருகங்கள்...//

இப்படி சொல்லிட்டு போறமே, இந்த மனித மிருகங்களால பாதிக்கப்பட்டவங்களுக்கு என்ன செஞ்சோம்னு ஒரு நிமிஷமாச்சும் நினச்சுப் பாக்கறமா??

"நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்"

என்ற பாரதியாரின் வரிகளைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது கட்டுரை. கூடவே விழியோரத்தில் நீர்துளிகளையும், மனம் நிறையக் கோபத்தையும்...

said...

அன்பின் நிலாரசிகன்,

உங்களது அதே ஆதங்கத்தோடுதான் இங்கு இப்பேட்டியை வெளியிட்டேன்.
நிருபர் ஒரு விடயத்தை எழுதியிருக்கிறார்,கவனித்தீர்களா?

//அதன்பிறகு கிருஷ்ணமூர்த்தி எங்கிருப்பார் என்று இந்திராணி யூகித்துச் சொன்ன சில இடங்களிலும் கிருஷ்ணமூர்த்தியைத் தேடினோம். கிடைக்கவில்லை. ஒருவேளை, கட்டுரை வெளியான பிறகு கிருஷ்ணமூர்த்தி தன் தரப்பாக எதையும் சொல்ல விரும்பி தெரிவித்தால் அதனையும் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.//

சம்பந்தப்பட்ட அந்தக் கணவருக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க இந்திராணியின் வாக்குமூலமும்,
இந்தப்படங்களும்,பேட்டியுமே போதும்.ஆனால் அதை விடுத்து அந்தக்கணவரின் நியாயத்தைக் கேட்டு
வெளியிடக் காத்திருக்கிறார்கள் நிருபர்கள்.

இந்தப் பேட்டி வெளியானதன் பின்னர் அவரது கணவர் அவரை விட்டுவைப்பார் என்றா நினைக்கிறீர்கள்...?

said...

pala murai neril paarthu, pala idangalil ketu pulithupona kadhai..

said...

i like your kavithaigal, pl enter as member in this web site so that i must receive kavithaigals frequently

said...

send me your kavithaigals to my rhimachal@gmail.com.