Monday, September 29, 2008

இரு கவிதைகள்

1.கவிதையின்றி அலைதலின் அவஸ்தைகள்

கவிதைகளை துறந்துவிட்டு

சில காலமாய் திரிந்துகொண்டிருந்தேன்.

கற்பனைகள் தூர்ந்து,

கனவுகள் தகர்ந்து,

பாதாளத்தின் வாய்பிளந்து

என்னை உள்ளிழுத்துக்கொண்டது.

இருள் கவிந்திருந்த அவ்விடத்தில்

தொலைந்த பேனாக்களை

தேடிக்கொண்டிருந்தனர்

எந்திரத்தனம் நிறைந்த

என்னையொத்த மனிதர்கள் சிலர்.

2. சுயத்தை எரித்தல்

மிகுந்த வெம்மையாயிருந்தது

ஒரு சொல்.

வெம்மையின் கதிர்கள் முதலில்

நுழைந்தது செவியில்.

செவிக்குள் நுழைந்த அச்சொல்லின்

வெட்பம் இதயத்திற்கு இடம்பெயர்ந்திருந்தது

வலியின் நீட்சியில்.

இதயம் கருகி கண்ணீராய்

வெளியேறுகையில்

மறுசொல்லுக்காய் காத்திருக்க

ஆரம்பித்தது சுயம்.

-நிலாரசிகன்

நன்றி: நவீன விருட்சம்

Thursday, September 25, 2008

இருவார்த்தைகளும் இடுகாடும்
இடுகாட்டிலிருந்து காற்றில் மிதந்து வருகிறது எனக்கான அழைப்பு. இவ்வுலகை விட்டுப்பிரிதலை சாத்தியப்படுத்துகின்றன துரோகத்தால் எரிகின்ற ஆழ்மனது. இப்பிரபஞ்சத்தில் ஒரு பட்டாம்பூச்சியென சுற்றித்திரிந்த என் கனவுகள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிக்கின்றன மரம் உதிர்க்கும் இலையென. தனிமையின் கோரப்பற்களில் சிக்கியிருக்கிறது என் இரவு. பிரக்ஞையின்றி தடுமாறுகின்றன என் கால்கள் பாதைகளை தொலைத்துவிட்டு. தோல்வியின் ஏளனச்சிரிப்பில் சிதைகிறது என் உயிர். கூகையொன்றின் கடும்குரல் தூரத்தில் எங்கோ கேட்கிறது. பறவைகள் இனம்கண்டுவிட்டன மரணத்தின் விளிம்புக்கு நான் செல்லவிருப்பதை.

விண்ணை பொத்துக்கொண்டு வீழ்கிறது மழை. நிசப்தம் நிலவிய இருளுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு நடக்கிறேன். நெருஞ்சிகள் நிறைந்த பாதையின் ஓரங்களில் பூத்திருக்கிறது வாடாமல்லி. உயிரற்றவன் நடப்பது போலிருக்கிறது என் நடை. இதயத்தை அரித்துக்கொண்டே இருக்கிறது இருவார்த்தைகள். பிணமொன்றின் நாற்றம் உங்கள் நாசிக்கு எட்டும் நாளுக்காய் காத்திருங்களென்று பாதையோர பூக்களிடம் சொல்கிறதென் மனது.

அவமானங்களும்,அவஸ்தைகளும்,நிறமற்ற வாழ்கையை நிறைத்திருந்த பொழுதின் முடிவில் தோன்றிற்று ஒரு பெண்ணின் மீதான ஆர்வம். தோழமைக்கும் அப்பால் நின்றிருந்த அவளை நெருங்கியபோது அவளே உலகமென்ற நிச்சயமற்ற முடிவொன்று உருப்பெற்றது. உறைந்த பனிக்கட்டியை ஒத்திருந்தது அவள் மீதான உருக்கமான நேசம் மிகத்தூய்மையாய். காலச்சுழற்சியில் கொஞ்சம் கொஞ்சமாய் விலக ஆரம்பித்த அவள் அபலை அல்லள். உக்கிரதாண்டவம் ஆடுகின்றன அவளது கடுஞ்சொற்கள். அகால மரணமடைந்த இதயத்தின் பிணம் என் நெஞ்சுக்கூட்டுக்குள் அநாதையாய் கிடக்கிறது.

இதயம் மரித்துவிடினும் மரித்தபாடில்லை அவள் மீதான நேசங்களும்,என்னை பரிகசிக்கும் ப்ரியங்களும். நண்பனென்று வெகுஇயல்பாய் உரைத்து, இதயத்தை கொன்றவளுக்கு பாடித்திரியும் இந்நேசங்களை கொல்லத்தெரியவில்லை பாவம். உடலெங்கும் பரவுகின்ற வெம்மை நடுநிசியின் குளிருக்கு ஏதுவாகத்தானிருக்கிறது.இன்னும் சற்றுதூரத்தில் எனக்கான இடம் மிக அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. மண்ணுக்குள் சென்று மறைவதே மனதுக்குள் மலர்கின்ற நேசத்தின் முடிவுகளா? இந்நேரம் அவளென்ன செய்துகொண்டிருப்பாள்? மகளாய்,தோழியாய்,சகோதரியாய் பல்வேறு வேஷங்களில் அற்புதமாய் நடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது நண்பனென்றுரைத்த இதழ்களுக்கு சாயமிட்டுக்கொண்டிருக்கலாம் இல்லையேல் நாளைய திருமணத்திற்கான அலங்காரத்தில் ஈடுபட்டிருக்கலாம்.

என் பிணத்தை நானே சுமந்து நடப்பது கடினமென்று உணர்ந்து மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்தேன் கல்லறை நோக்கி.பழகிய நாட்களின் நிகழ்வுகளில் ஒவ்வொன்றாய் கண்முன் விரிந்துவிட்டு மறைந்துகொண்டிருந்தன. முதல் முறை பார்த்தபோது கருமைநிற சேலையொன்றில் மிளிர்ந்தாள். அது என்னை மூடப்போகும் சவத்துணி என்று அன்றே உணர்ந்திருக்கவேண்டும். பின்னொரு நாளில் என்னை பார்க்கத்தோன்றவில்லை என்றாள் வெகு நிதானத்துடன் தீர்க்கமான குரலில். பாதி இறந்த இதயம் முழுவதுமாய் மரித்தது அன்றுதான். எல்லாவற்றிக்கும் முடிவுண்டு என்பதை சற்றே தாமதமாய் உணர்ந்திருக்கிறது மனது.

இடுகாட்டுக்குள் நடுச்சாமத்தில் நுழைவது சற்று வருத்தமாய் இருக்கிறது. ஊரறிய மரித்திருந்தால் பாடைகட்டி ஊர்வலமாய் அந்தியில் நுழைந்திருக்கும் என் உடல். உயிருக்கு சொந்தமானவளே இல்லை என்றானபின் ஊரைப்பற்றி என்ன கவலை? இடுகாட்டின் நடுவில் சென்று சம்மணமிட்டு அமர்கிறேன். ஓவென்று ஒப்பாரி வைக்க யாருமில்லை. அடிவயிற்றிலிருந்து மேலெழும்புகிறது பெரும் ஓலம். நெஞ்சிலடித்துக்கொண்டு அழுகிறேன். என் ஓலம் கேட்டு உறக்கம் தொலைத்த நாய் ஓடிவந்து எதிரே நிற்கிறது. கைகளால் முடிந்தவரை ஆழமான குழியொன்றை தோண்டுகிறேன். நகம் கிழிந்து ரத்தம் சொட்டுகிறது. இரக்கமற்ற இப்பூமியில் பிறந்துவிட்டதை எண்ணி ஓங்கி ஓங்கி மண்மீது அறைகிறேன். விழுகிறேன். புரள்கிறேன். கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கிறது இருண்ட வானம். கனத்த இருளின் கைகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிறது என் உருவம்.

Monday, September 22, 2008

குழந்தைக் கவிதைகள்


1.குழந்தையின் பசுமாடு

இந்தப்பசுவிற்கு நான் தான்
அம்மா என்றது.
இந்தப்பசு எப்போதும்
பால்தருமென்றது.
பசுவின் கன்றுக்கு
தன் மொழி புரியுமென்றது.
பசுவைக் கட்டிக்கொண்டே
உறங்குவேன் என்றது
கோணலாய் இருப்பினும்
குழந்தையின் உலகிலிருக்கும்
ஓவியப்பசு அழகாய்த்தானிருக்கிறது.


2. கடவுளுக்கும் அப்பால்

இரண்டு முறை பிரகாரம்
சுத்திவந்துவிட்டு கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி அமர்ந்துகொண்டது
குழந்தை
கோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.
என்னசெய்வதென்று புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா.
குழந்தையிடம் கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.

3.தனிமொழி

வீடு கட்ட குவித்திருக்கும்
ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
சிறுமியும் அவளது பொம்மையும்.
பொம்மையுடன் பேசுவதற்கென்றே
தனிமொழியை உருவாக்கியிருந்தாள்
சிறுமி.
வெகுநேர விளையாட்டிற்குபின்
குடிசைக்குள் சென்ற சிறுமியின்
வலக்கையில் தலையும்
இடக்கையில் உடம்புமாய்
துண்டுகளாகியிருந்தது பொம்மை.
அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
அவள்.

நன்றி: உயிரோசை இணைய இதழ்

Friday, September 19, 2008

மென் தமிழ் - புரட்டாசி 2008 இதழ்

நண்பர்களே,

மென் தமிழ் புரட்டாசி மாத இதழ் இங்கே படிக்கலாம்.

http://mentamil.wordpress.com/2008/09/19/mentamil-september-09/

உங்களது மேலான விமர்சனங்களுக்காக காத்திருக்கிறோம்.

நன்றி.

Wednesday, September 17, 2008

கீற்றுக்கு உதவிடுவோம்

நண்பர்களே,

கீற்று இணையதளம்(www.keetru.com) இணைய உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம். சில வருடங்களுக்கு முன்னர் நான்கைந்து இளைஞர்களின் முயற்சியாலும்,தமிழார்வத்தாலும் இணையத்தில் தொடங்கப்பெற்ற கீற்று இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. கீற்றுவின் சிறப்பம்சமாக நான் கருதுவது சிற்றிதழ்களை இணைய உலகிற்கு தொடர்ந்து அறிமுகப்படுத்துவது. அதுமட்டுமின்றி வளரும் இளைய கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும் கீற்று தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்திருக்கிறது. ஏராளமான இலக்கியத்தகவல்களை தொடர்ந்து தந்தவண்ணம் இருக்கிறது.

தற்சமயம் நிதி பற்றாக்குறையால் கீற்று தள்ளாடுகிறது. இதைப்பற்றி அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள் http://www.keetru.com/common/donate.php

கீற்று தமிழிசை பாட உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

நன்றி.

Monday, September 15, 2008

கிழவனும் கடலும் - நூல் விமர்சனம்
வெகு நாட்களாய் படிக்க நினைத்திருந்த "கிழவனும் கடலும்" நூல் படிப்பதற்கு நேற்றுதான் நேரம் கிட்டியது. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின்(The old man and the sea by Ernest Hemingway) படைப்பை தமிழில் எம்.எஸ் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு கிழவனுக்கும் அவனது தூண்டிலில் அகப்படும் ராட்சத மீனுக்கும்(marlin வகை) இடையேயான போராட்டம்தான் கதை. முழுக்க முழுக்க கடலில் நடப்பதால் வாசிப்பவர்களும் கடலில் பிரயாணம் செய்தது போன்ற அனுபவத்தை தருகிறது. 1952ல் இந்தப் படைப்பு வெளியானபோது இருநாட்களில் 5.3 பில்லியன் பிரதி விற்றுத்தீர்ந்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசும்,புலிட்சர் விருதும் பெற்றது.


பலநாட்களாய் கடலுக்கு சென்று வெற்றுக்கையுடன் திரும்புகின்ற கிழவனுக்கு ஆறுதலாய் இருப்பது ஒரு சிறுவன்.
இன்றாவது நான் உன்னுடன் கடலுக்கு வருகிறேன் என்று சொல்லும்போது தடுத்துவிட்டு கிழவன் மட்டும் தனித்து பயணிப்பதில் ஆரம்பிக்கிறது கதை. நடுக்கடலில் தூண்டிலிட்டு மீனுக்காக காத்திருக்கையில் ஏதோவொரு பெரிய மீன் சிக்கிவிடுகிறது. அதன்பிறகு இருநாட்களாய் தனி ஆளாய் அந்த மீனுடன்(கிழவனின் படகைவிட பெரிய மீன்) போராடி
அதைக்கொன்று, படகுடன் சேர்த்து கட்டிக்கொண்டு கரை திரும்பும் வழியில் அந்த மீனை சுவைக்க வரும் சுறாக்களுடன் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது. குத்தீட்டியால் சில சுறாக்களை கொல்வதும்,பின் ஒரு சுறா குத்தீட்டியுடன் தண்ணீரில் முழ்கியதும் தன்னிடமுள்ள கத்தியால் தாக்க வரும் சுறாக்களுடன் போராடுவதும் கிழவனின் வீரத்தை பறைசாற்றுகிறது.

அவ்வப்போது "அந்தச் சிறுவன் இருந்தால் நன்றாய் இருந்திருக்குமே" என்று தனியே அரற்றுவதும்...தூண்டிலை இறுகப்பற்றியதால் இடது கை மரத்துப்போகையில் இடக்கையுடன் தனியே பேசுவதும் கிழவன் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இருநாட்களாய் கடலில் உணவின்றி சிறுமீன்களை பிடித்து பச்சையாக தின்னும்போது "நான் ஒரு முட்டாள்,அடுத்த முறை கண்டிப்பாக எலுமிச்சையும்,உப்பும் கொண்டுவரவேண்டும்" என்று புலம்புவதும்
சோர்கின்ற போதெல்லாம் "என்னால் முடியும் எத்தனை முறை வென்றிருக்கிறேன்" என்று தனக்குத்தானே தைரியமூட்டிக்கொள்வதும் கிழவனின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்குகிறது.

நடுக்கடலில் மீனுடன் நடக்கும் பலமணி நேர போராட்டத்திற்கு நடுவிலும் தன் நகரத்தில் நடக்கின்ற பேஸ்பால் போட்டியில் யார் வென்றிருப்பார்கள் என்று எண்ணுவதும், தன்னுடைய மனம் கவர்ந்த பேஸ்பால் வீரன் டிமாகியோ கால் ஆணியால் அவதிப்படுவதை பற்றி சிந்திப்பதும் கிழவனுக்கு பேஸ்பால் மீதிருந்த தணியாத ஆர்வத்தை மிக அற்புதமாய் எடுத்துரைக்கிறது.

அயல்நாட்டு இலக்கியத்தின் நடையையும்,அந்த கடலோர மீனவர்களின் வலியையும் கதை முடியும் தருவாயில் உணர முடிகிறது. இது நாவலா சிறுகதையா என்கிற குழப்பத்தை கிழவனும்,சிறுவனும்,மீனும் மறக்கடித்துவிடுகிறார்கள். மொழிபெயர்ப்பு நூல் என்கிற எண்ணம் வெகு சில இடங்களில் மட்டுமே தோன்றுகிறது. போராட்டங்கள் மிகுந்த வாழ்க்கை என்னும் கடலில் எதிர்நீச்சலிட்டு வெற்றி பெற விரும்பும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த கிழவன் ஒரு முன்மாதிரி.வெகு நாட்களுக்கு பின் ஒரு நல்ல புத்தகம் படித்த திருப்தியை இப்புத்தகம் தருகிறது.


கிழவனும் கடலும்

ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே

தமிழில்: எம்.எஸ்

பக்கம் 104, விலை ரூ.50

காலச்சுவடு பதிப்பகம்

இணையத்தில் வாங்க:
http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=15&products_id=12008

Thursday, September 11, 2008

வலி தீர வழி சொல் கண்மணி!

உன்னை என் மடியிலமர்த்தி கன்னத்துடன் கன்னம் உரசிக்கொண்டு கவிதைகள் வாசித்த பொழுதின் ஞாபகமிச்சங்கள் என்னுடைய எல்லா இரவுகளுக்கும் துணையாகின்றன..

இரு கைகளில் உன்னை அள்ளியெடுக்க முயன்று உன் எடைதாளாமல், உன் பூமுகத்தை என் கைகளில்
ஏந்தி நெற்றியில் ஒரு சிறுமுத்தமிட்ட கணத்தை சிற்பமென செதுக்கி வைத்திருக்கிறது யன்னல் வழியே நம்மை ரசித்த வெண்நிலா.

திமிர்கொண்டு நீ உதிர்க்கும் சொற்களெல்லாம் எனைச் சேரும் முன்பே, திமிர்தொலைத்து நேசம்பொங்க ஓடிவந்து என்னைக் கட்டிக்கொள்வாய். கண்சிமிட்டும் நட்சத்திரங்களெல்லாம் வெட்கத்தில் இருளுக்குள் ஓடி மறையும்.

நொடிக்கொரு முறை என் விரல்பற்றிக்கொண்டு குழந்தையாகி என் கண்களை உற்று நோக்குவாய். கண்களில் வழிகின்ற ப்ரியங்களில் உன் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருக்கும்.

தடதடக்கும் ரயில்கள் நம்மைக் கடந்து சென்ற ஓர் அந்தியில் ரயில்நிலைத்தில் அமர்ந்திருந்தோம். சொல்லிவிட விரும்பாத காரணத்தால் அழுதாய் நீ. ரணமின்றி காதலில்லை என்றேன் நான். கனத்த நெஞ்சுடன் மேற்கில் சென்று விழுந்தது சூரியன்.

உனக்கென மலர்ந்த என் வீட்டு ரோஜா இனி யாருக்கு பூக்கும்? நீ வசித்த என் இதயவீட்டில் இனி யாருக்கு இடமிருக்கும்? பிறந்த மண்ணைப் பிரிகின்ற அகதிக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அவன் தேசமில்லா அகதி. நான் நேசமில்லா அகதி.

வலிகொண்ட என் காதல்நதி உன் ஞாபகக்கடலை சுமந்துகொண்டு திசை அறியாமல் தடுமாறிச் செல்கிறது.
நீயும் நானும் மறந்துவிட்ட என்னை நாம் நடந்த சாலையோர சிறுபூக்கள் இன்னும் நினைவு வைத்திருக்கிறது.

உன் சிறகில் கேட்கிறது பிரிவின் சத்தம். என் சிறகில் வழிகிறது காதல்ரத்தம். வீழ்த்தப்பட்ட ஒற்றைப்பறவை என்னிடம் இனி எதுவுமில்லை மிச்சம்.


யாருக்கோ மலர்கின்ற என் புன்னகையினுள்ளே வலிமிகுந்த காதலொன்று துடிதுடித்துக்கொண்டிருக்கிறது. யாருக்கோ மலர்கின்ற உன் புன்னகையினுள்ளே கல்லறையாய் எழுந்து நிற்கிறது நம் உயிர்ப்புள்ளகாதல்.

Wednesday, September 10, 2008

இம்மாதம்(செப்டம்பர் 2008) பத்திரிகையில் வெளியானவை

1.நேயா மாத(ர்) இதழில் சிறுகதை
2.யுகமாயினி இலக்கிய இதழில் கவிதை
3.கல்வெட்டு பேசுகிறது இதழில் இரு கவிதைகள்

Monday, September 01, 2008

ஊனப் பறவை

ஊனப்பறவையொன்று
நிழல்தேடி என்னிடம்
வந்தது.
எனை கொஞ்சம் கொஞ்சமாய்
கொத்தித் தின்று சிறகுமுளைத்து
பறந்து சென்றது.
ஊனமாகியிருந்தது என்
வேர்கள்.