Sunday, November 30, 2008

மழை ரசித்தவர்கள்

மழை பிடிக்கும் என்றீர்கள்
மழையுடன் தேநீர் அருந்துவது
சொர்க்கம் என்றுரைத்தீர்கள்
மழைக்கென கவிதைகள்
ஆயிரம்எழுதிக் கிழித்தீர்கள்.
வெள்ள நீரில் மிதக்கும்
குடிசைகளை உங்களது
இறுக மூடிய பங்களாக்களிலிருந்து
பார்த்தபடி
மற்றோர் கவிதை எழுத துவங்குகிறீர்கள்.
உங்கள் கவிதைபோலவே
ஆயிற்று மனிதமும்.

Tuesday, November 25, 2008

தினமணி கட்டுரை

கடந்த ஞாயிறன்று (23/11/2008) வெளியான தினமணி நாளிதழின் கட்டுரையொன்றில் என் கவிதையை பற்றிய குறிப்புவந்திருக்கிறது.
இங்கு சென்று பார்க்கலாம் :
நன்றி: தினமணி.காம்.

Sunday, November 23, 2008

சிதறல்கள்

1.தனிமைதான் என்னை எழுதச்சொல்கிறது. தனிமைதான் என்னை எழுதவிடாமல் கொல்லவும் செய்கிறது. தனிமைக்குள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சுழல்கிறது என்னுலகம். அவ்வப்போது கதவுதட்டும் கனத்த காற்றில் உடைபட்டு மீண்டும் ஒன்றுகூடுகிறது என் தனிமை.

2. எறும்புகளை கொல்வது எளிது.தரையோடு தேய்த்து நசுக்கலாம்.மருந்து துகளில் அழிக்கலாம்.புத்தகத்தால் அடித்தும் கொல்லலாம். அழிப்பதற்கு பல வழி இருப்பினும் அழிக்கமுடியவில்லை மனதுள் ஊறுகின்ற விஷ எறும்புகளை.

3. தினம் தினம் எங்காவது மரித்துக்கொண்டிருக்கின்றன நட்புகள். அநாதை பிணமாய் நடமாடுகின்றன கைவிடப்பட்ட நட்புகள். தோளில் சுமக்கின்ற சிலுவைகளைவிட நெஞ்சில் சுமக்கும் சிலுவைகளில் கனம் அதிகமானதாகவே இருக்கிறது.

4.பாதங்களுக்காய் தவமிருந்தேன் பாதங்கள் கிடைத்தன.பாதைகளுக்காய் தவமிருந்தேன் பாதை கிடைத்தது. எனக்கான திசைகளை தேர்ந்தெடுக்க முற்படும் பொழுதில் உணர்கின்றேன் கடவுளின் பொம்மை நானென்று.

Saturday, November 22, 2008

இலங்கை இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டி ஒப்பாரி இலக்கிய நிகழ்வு

இலங்கையில் தொடர்ந்து நடைப்பெறுகிற இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கவிஞர்கள் சார்பில் வருகிற டிசம்பர் 07( 07.12.2008) அன்று சென்னையில் மாபெரும் கண்டன கவிதைகள் கவியரங்கம் நிகழவிருக்கிறது. பதிவு செய்ய விரும்புவோர்,

தொடர்புக்கு
கவிஞர் . லீனா மணிமேகலை 98410 43438
கவிஞர் . இன்பா சுப்ரமணியன் 98841 20284.

ஒப்பாரி இலக்கிய நிகழ்வு என பெயரிடப்பட்டிருக்கும் இதில் ஒப்பாரிக்கலைஞர்களும் பங்கெடுத்துக்கொள்ள இருக்கிறார்கள். தமிழ் இன உணர்வாளர்கள், படைப்பாளிகள் தங்களை பதிவு செய்து இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான உணர்வுகளை பதிவு செய்யுங்கள்.
மற்றைய தமிழ் உணர்வாளர்களுக்கும், மனித நேய சிந்தனையாளர்களுக்கும் இந்த நிகழ்வை பற்றி தெரிவித்து பெரும் வெற்றியடைய செய்யுங்கள்.

Friday, November 21, 2008

ஆனந்த விகடன் இதழில் என் கவிதைக‌ள்


நண்பர்களுக்கு வணக்கம்,

என்னுடைய இரண்டு கவிதைகள் இவ்வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கின்றன.படித்துவிட்டு உங்களது பின்னூட்டங்களை இடுங்கள்.

1.பறவைகளின் மொழி அறிந்தவன்

பூனைகளின் மொழி அறிந்தவனை
சந்தித்தேன்.
நாய்களின் பாஷையும்
கொஞ்சம்தெரியுமென்றான்.
விநோத ஒலியை அவன்
உருவாக்கியதில் நான்கைந்து
பூனைகள் அவன் காலை சுற்றின.
பூனைகளை
தடவிக்கொண்டே கை நீட்டினான்.
பறவைகளின் மொழியில்
புலவன் நானென்றேன்.
விரக்தியான புன்னகையொன்றை தந்தபடி
நகர்ந்து சென்றான்.

2.இனம்

இந்தக் கவிதை
இப்பொழுதுதான் பிறந்திருக்கிறது.
தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்
பீறிட்டு எழும் அழுகை
ஏதுமின்றி வெகு இயல்பாய்
மலர்ந்திருக்கிறது.
கால்களை உதைத்துக்கொண்டு
கண்களை உருட்டியபடி
விழிக்கிறது.
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்

-நிலாரசிகன்.

Monday, November 10, 2008

திறக்காத கதவுகள்

யாருமற்ற வீட்டின்
கதவுகளை தட்டுகிறானவன்.
பதில் குரல் ஒலிக்காதபோதும்
தட்டுவதை நிறுத்தவில்லை.
அவனுக்குத்தேவை பதில்
அல்ல.

Tuesday, November 04, 2008

குழந்தைக்கவிதைகள் இரண்டு


1.அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.

2.
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.

(1வது கவிதை "மல்லிகை மகள்" மாத இதழில் இம்மாதம்(நவம்பர் 2008)வெளியாகி இருக்கிறது)