Monday, June 29, 2009

உறுபசி - [உயிரோடை போட்டிச்சிறுகதை]
1.

அப்பாவுக்கு வலிக்கும். ரொம்பவே வலிக்கும். ஆனாலும் வேறு வழி இல்லை. சேலம் நோக்கி விரைந்துகொண்டிருந்த ரயில் ஜன்னல் கம்பிகளில் தலை சாய்த்தபடி அமர்ந்திருந்தாள் நந்தினி.கண்களோரம் நிற்காமல் வழிந்துகொண்டே இருந்தது கண்ணீர்.
வீட்டில் மூத்தபிள்ளை என்பதால் அப்பாவுக்கு நந்தினி மேல் உயிர். அவள் கேட்டு எதையும் மறுத்ததில்லை - கண்ணன் உட்பட.
படிப்பைத்தவிர எதிலும் கவனம் செலுத்தாதவள் கண்ணனிடம் வீழ்ந்ததே ஒரு அழகான ஹைக்கூ கவிதை. நந்தினியின் முகத்தை பென்சிலால் அழகாக வரைந்து அந்த படத்தின் கீழ் புல்லாங்குழலொன்றையும் வரைந்து அவளது இடத்தில் வைத்திருந்தான். அந்த ஓவியத்தின் நேர்த்தியில் லயித்தவள் மெல்ல மெல்ல அவனது அன்பிலும் லயிக்க ஆரம்பித்தாள். கோபாலும்,சியும்,பாக்ஸ்பரோவும் படித்து கொண்டிருந்தவளுக்கு பாப்லோ நெருதாவும்,கல்யாண்ஜியும்,மீராவும் அறிமுகப்படுத்தியது கண்ணன்தான். அவளது காதலை அப்பாவிடம் சொன்னபோது கொஞ்சமும் கோபப்படாமல் மிக நிதானமாய் அவளை தன் பக்கத்தில் அமர்த்தி கண்ணன் பற்றி விசாரித்தார். படித்துமுடித்தவுடன் கண்ணன் தன் அப்பாவின் டெக்ஸ்டைல் தொழிற்சாலையை நிர்வகிக்க போகிறான் என்பதை பற்றி அவள் சொன்னதும் "இந்த காலத்து பசங்க எப்படியும் சம்பாதிச்சுடுவாங்கம்மா..பையன் நல்லவனா இருந்தா எனக்கு முழு சம்மதம்" என்ற அப்பாவை முத்திட்டு சந்தோஷத்தில் துள்ளினாள். அதன்பிறகு படிப்பு முடிந்து இரண்டு மாதத்தில் திருமணமும் ஆகி சென்னைக்கு வந்துவிட்டாள்.

கண்ணனின் அன்பிலும்,தாம்பத்யத்திலும் திளைத்தவள் இப்படி ஒரு சூழ்நிலை வருமென்றோ தன் வாழ்க்கை சூன்யமாகிப்போகும் என்றோ கொஞ்சமும் நினைத்துப்பார்க்கவில்லை. ஜன்னல் காற்று முகத்திலடித்தபோது நினைவுக்கு வந்தவள்,மடியில் உறங்கும் கெளரியின் முடியை கோதினாள். கண்ணிலிருந்து ஒருதுளி கெளரியின் நெற்றியில் விழுந்து தெறித்தது.


2.

கெளரியை எட்டாம் வகுப்பு படிக்க சென்னைக்கு அழைத்து வந்திருந்தார் அப்பா. ஹாஸ்டலில் சேர்த்துவிடலாம் என்று அவர் சொன்னபோது நந்தினிதான் தன் வீட்டில் தங்கி படிக்கட்டும் என்று உறுதியாக சொன்னாள். கண்ணனும் பெருந்தன்மையாக "கெளரி எங்களுக்கு குழந்தை மாதிரி மாமா,கவல படாம எங்ககிட்ட விட்டுட்டு போங்க" என்றபோது நெகிழ்ந்துபோய்விட்டார் அப்பா.
சமைத்துக்கொண்டிருந்த நந்தினியிடம் வந்து மாப்பிள்ளை தங்கம்மா நீ ரொம்ப குடுத்துவச்சவ,நீங்க நல்லா இருக்கணும் என்று வாழ்த்திவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டார்.

கெளரிக்கும் அக்காவீடும் சென்னையின் பிரம்மாண்டங்களும் ரொம்பவும் பிடித்துப்போனது. கண்ணன் தினமும் அலுவலகம் செல்லும்போது கெளரியை பள்ளியில் விட்டுவருவதும் மாலை வீடு திரும்பும்போது அழைத்துவருவதும் பார்க்க பார்க்க கண்ணனின் மீது அன்பும் நேசமும் பெருகிக்கொண்டே இருந்தது நந்தினிக்கு. சந்தோஷங்கள் மட்டுமே இருந்தால் அது வாழ்க்கையல்ல.சோகங்களும்,அதிர்ச்சிகளும் கலந்திருப்பதே வாழ்க்கை என்பதை நந்தினி உணர்ந்து கொண்டது ஒரு பின்னிரவில்தான்.

தண்ணீர் குடிக்க எழுந்து சமையலறைக்கு சென்றவளை கெளரியின் அறைக்குள்ளிருந்து கேட்கும் விசும்பல் சப்தம் திடுக்கிட செய்தது. வேகமாக சென்று பார்த்தபோது தரையில் உட்கார்ந்து கண்ணீரில் கரைந்திருந்த கெளரி அக்காவை பார்த்ததும் கண்களை துடைத்துக்கொண்டு "ஒண்ணுமில்லக்கா நாளைக்கு பரிட்சை சரியா படிக்கல அதான்" என்றபோது உடனே நந்தினியால் நம்பிவிடமுடியவில்லை. அந்த நிமிடம் ஆறுதலாய் பேசிவிட்டு வந்து படுத்தவளுக்கு தூக்கம் அண்டவில்லை.

அதன் பிறகு இருதினங்கள் கழித்து,கெளரி காய்ச்சலில் விழுந்தபோது கண்ணன் வேலைவிஷயமாக பெங்களூர் சென்றிருந்தான்.
அதனால் கெளரியை கவனித்துக்கொண்டே அதே அறையில் உறங்கியபோது காய்ச்சலின் மிகுதியில் உளறத்துவங்கிய கெளரியின் வரிகள் நந்தினியை கொன்று போட்டன. "மாமா வேணாம் மாமா வலிக்குது மாமா பயமா இருக்கு மாமா" என்று அரற்றத்துவங்கியது கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் நந்தினி. கண்ணனின் புன்சிரிப்பில் கலந்த முகம் மறைந்து குரூரமானதொரு அரக்கமுகம் அவள் முன் நிழலாடியது. அழுது துடித்து,வதங்கிய மல்லிச்சரமாய் இருநாட்களாய் உணவேதுமின்றி வீழுந்து கிடந்தாள்.

கெளரிக்கு காய்ச்சல் சரியான பின் அருகில் அழைத்து மெல்ல விசாரித்தபோதுதான் கண்ணனின் கொடூரப்பசிக்கு கெளரி பலியான விஷயம் புரிந்தது. அப்பாவுக்கு எப்படி இதைச்சொல்வது? இனி எப்படி கண்ணனுடன் வாழ்வது? கெளரிக்கு நடந்த கொடூரம் வேறு யாருக்கும் நடக்கவிடக்கூடாது அந்த விஷச்செடியை வேரோடு அழிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.காமவெறியுடன் திரியும் கண்ணனுக்கு தன் வாழ்க்கையை அடகு வைத்தாவது தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று முடிவெடுத்து கெளரியை அழைத்துக்கொண்டு சேலம் புறப்பட்டாள்.

3.
பெங்களூரிலிருந்து சென்னை திரும்பியவனைக் கண்டு கேலியாய் சிரித்தது நந்தினி விட்டுச்சென்ற மடல். பிரித்துப்படித்தவன்
தன்னுடைய சுயரூபம் தெரிந்துவிட்ட கோபத்தில் நாற்காலியை தூக்கி எறிந்தான். கெளரியிடம் தவறாக நடந்துகொண்டாலும் நந்தினியை நிஜமாக காதலித்தவன்.நந்தினியை தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்காதவன் தான். ஆனால் தன் பதின்ம வயதில் ஒரு மிருகத்தின் தீராக்காமத்தால் உடலும் மனமும் பாழானதால் தானும்
இப்படி ஒரு மிருகமாக மாறிவிட்டதை எண்ணி துடித்தான். ஆனாலும் கட்டுக்கடங்கா மோகம் தன்னை ஆட்கொள்வதை அவனால் தடுக்க முடியவில்லை. இனி நந்தினி வரமாட்டாள் என்று உணர்ந்ததும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அதேசமயம் தன்னைவிட்டு போய்விட்டாளே என்பதால் கோபம் தலைக்கேறியது. உடனே செல்போனை எடுத்து பூஜாவின் எண்ணைத்தேடினான்.


இர‌ண்டாக‌ வெட்டிய‌ ஸ்ட்ராபெர்ரி ப‌ழ‌ங்க‌ள் போலிருந்த‌ன‌ பூஜாவின் சிவ‌ந்த‌ லிப்ஸ்டிக் உத‌டுக‌ள். நந்தினிக்கு தான் தரப்போகும் தண்டனை இதுதான் என்று நினைத்துக்கொண்டு பூஜாவை நெருங்கினான். ஏதோவொன்று அவனை தடுத்தது.
தேம்பி தேம்பி அழ‌ ஆர‌ம்பித்த‌வ‌னை "உன்னை மாதிரி ஆள பார்த்ததே இல்ல" சொல்லிவிட்டு போய்விட்டாள். அவள் போனவுடன்
யாரோ காலிங்பெல்லை அழுத்துவது தெரிந்தது. பக்கத்துவீட்டு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். "பால் உங்க தோட்டத்துல விழுந்துருச்சு அண்ணா எடுத்துக்கலாமா" என்றவனை பார்த்து சிரித்தான் கண்ணன்.


4.

ரயில் சேலம் வந்துவிட்டிருந்தது. அப்பாவுக்கு கெளரியை பற்றி எதுவும் சொல்லாமல் கண்ணனுக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதால் வீட்டைவிட்டு வருகிறேன் என்று மட்டும் சொல்லி இருந்தாள். ரயில் நிலையத்தில் அப்பாவை பார்த்ததும்
ஓடிச்சென்று கட்டிக்கொண்டு அழுதாள். அப்பொழுதும் பதற்றம் அடையாமல் "விடும்மா எது நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும்,நீ மேலபடி,லெக்சரரா ஏதாவது ஒரு காலேஜ்ல ஜாயின் பண்ணு,மாப்பிள்ளை திருந்திடுவாருங்கற நம்பிக்கை எனக்கு இருக்கும்மா நாம காத்திருப்போம்" என்றவாறு அவளை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்."கெளரிய இனி ஹாஸ்டல்ல சேர்த்துடலாம்,என்னப்பா உனக்கு ஹாஸ்டல்ல தங்கறதுல்ல பிரச்சினை ஒண்ணும் இல்லையே" என்று கேட்கும் அப்பாவை விரக்தியுடன் பார்த்தனர் நந்தினியும் தம்பி கெளரிசங்கரும்.

[உயிரோடை சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]


-நிலாரசிகன்.

Sunday, June 28, 2009

மங்கையர் மலரில் என் சிறுகதை

நண்பர்களே,

மங்கையர் மலரில் என் சிறுகதை "வால்பாண்டி சரித்திரம்" இம்மாத இதழில் வெளியாகி இருக்கிறது.(ஜூலை மாத கிராமிய சிறப்பிதழ் - பக்கம் 125).
என் அம்மா மங்கையர் மலர் வாங்கி இருக்கிறார்கள்.எதேட்சையாக என் கதையை அதில் கண்ட உடன் எனக்கு தொலைபேசினார்கள்.

சிறுகதை பக்கத்தை கேட்டவுடன் Scan செய்து அனுப்பிய "மழைக்காதலன்" சார்லசுக்கு என் நன்றிகள்.

சிறுகதை அனுப்ப சொன்ன எழுத்தாளர் சைலஜா அவர்களுக்கும், என் சார்பில் சிறுகதையை நகலெடுத்து தபாலில் அனுப்பிய ஒரு நல்ல உள்ளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பெற்ற குழந்தையை பார்த்த பூரிப்பில்..
நிலாரசிகன்.

Friday, June 26, 2009

நான்கு தோழிகளின் கதை
1.

மழை ஓய்ந்த பிற்பகலில் ஏதோவொரு பூவின் வாசம் காற்றில் மிதந்து மிதந்து என்னிடம் வந்துசேர்ந்தபோது அந்த சுகந்தத்தின் முடிவில் தேவதையென என் முன்னால்
நீ தோன்றினாய் என்றுதான் எழுத நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லையே! முகம் முழுவதும் அப்பிய பாண்ட்ஸ் பவுடரும்,மிதமிஞ்சிய பெர்பியூம் வாசத்துடனும் எனக்கு முன் வரிசை நாற்காலியில் நீ அமர்ந்தபோது "யாருடா இது? தெருக்கூத்துல இருந்து தப்பிச்சு வந்தத்துட்டாளா? என்றுதான் என் மனம் என்னிடம் கேட்டது. முத்துக்களுக்கு பெயர்பெற்ற அந்த சிறுநகரத்தில் ஒரு கணிப்பொறி மையத்தில்தான் உலகப்புகழ் பெறாத நம் சந்திப்பு நிகழ்ந்தேறியது.

பெண்ணொருவள் தோழியாக மாறுவாள் என்கிற எண்ணம்கூட தோன்றாமல்,பெண்ணிடம் பேசினாலே அது காதல் எனும் முட்டாள்தனம் மட்டுமே மனதெங்கும் நிறைந்திருந்த பருவத்தில்தான் நமது இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது. ஒருவருடத்தில் முடியவேண்டிய கணிப்பொறி வகுப்பு ஏதோசில காரணங்களால் தள்ளிப்போனபோது
"இன்றோடு நான் விடைபெறுகிறேன் இனி வகுப்பிற்கே வரப்போவதில்லை," என்று சொல்லிவிட்டு நான் விடைபெறும் தருணத்தில்தான் நீ என்னிடம் ஓடோடி வந்தாய்.

"இனி நீங்க வரவே மாட்டீங்களா?" ஒருவருடத்தில் அதிகபட்ச வார்த்தைகளால் நீ பேசியது அன்றுதான். ஆச்சர்யத்துடன் உன்னை திரும்பி பார்த்தேன். உதடு துடிக்க,கண்களில் இனம்புரியா தேடலும் தவிப்புமாய் கைகள் பிசைந்துகொண்டு "தூறல் நின்னு போச்சு" சுலோச்சனா மாதிரி நின்றுகொண்டிருந்தாய். அதன்பிறகுதான் என்மீதான் உன் தூய்மையான நட்பும் அன்பும் எனக்கு புரிந்தது. எனக்கே தெரியாமல் என் வீட்டு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து முதல்முறையாக என்வீட்டிற்கு தொலைபேசினாய். அந்த நாள் இன்றும் மறக்கமுடியாத நாளாக மாறாமல் என்னுள் அப்படியே நிலைத்திருக்கிறது. தொலைபேசியை எடுத்த என் அம்மா ஒரு பெண் எனக்கு முதன் முதலாய் தொலைபேசுவது கண்ட திகைப்பில்,என்னிடம் கொடுத்தார். தயங்கி தயங்கி உன்னிடம் பேசினேன். அதன் பிறகு உனக்காகவே கணிப்பொறி மையம் வரத்துவங்கினேன்.மழையென என்னில் விழுந்து விருட்சமான முதல்தோழியானாய்.
"உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா உன் மனைவியை என் தோழியாக்கி எப்போதும்போல் உன்னிடம் பேசுவேன். நம் நட்புக்கு பிரிவே கிடையாது" என்றெல்லாம் நீ சொன்ன வார்தைகளை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.
பத்துவருடங்கள் ஓடிப்போய்விட்டது.சுழன்றோடும் காலநதியில் வெவ்வேறு திசைகளில் அடித்துச்செல்லப்பட்ட இருவேறு இலைகளானோம் என்று சொல்ல தோன்றுகிறது ஆனால் "எனக்கு நிச்சயம் ஆகியிருச்சு ராஜேஷ் இனிமே "ஆண்நட்பு" எல்லாம் எங்கவீட்ல திட்டுவாங்க,இனி நாம பேசவே வேண்டாம்" என்று நீ சொல்லி சென்ற நிஜத்தை மறைக்க தோன்றவில்லை. இப்போது உனக்கு இரு குழந்தைகள் உன் கணவனின் வலைப்பூவில் வாசித்தேன்.

நீ நலமா ஹர்ஷி?

2.

ஐந்து வருடத்தோழியின் பிரிவில் தவித்திருந்தபோதுதான் உன்னிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. என் நண்பனின் அத்தை மகள் என்கிற அறிமுகத்தோடு என்னிடம் நட்பை யாசித்தாய் நீ. யாரென்றே தெரியாதபோது அந்த குறுஞ்செய்திக்கு நன்றி என்று மட்டும் பதிலிட்டேன். அதன் பிறகு எட்டு மாதங்கள் அலைபேசியில் அடித்த நம் நட்பலையை இப்போது நினைக்கும்போது நீண்டதொரு மெளனத்தை மட்டுமே பதிலாக்குகிறது மனம். தேவாலயத்தில் பாடல்கள் பாடும் புனிதமானவள் நீ. பொய்யில்லா நட்புக்கு சொந்தக்காரி நீ. நம் நட்பை காதலென்று தவறாக புரிந்துகொண்டு உன்னை அடிக்க கை ஓங்கிய அப்பாவிடம்
"அவன் என் பிரண்டுப்பா...எப்படிப்பா எங்கள தப்பா நினைச்சீங்க" என்று அழுதுகொண்டே நீ உதிர்த்த வார்த்தைகள் இன்னும் அழகாக்கிக்கொண்டே இருக்கிறது உன்மீதான நட்பையும்,நட்பு மீதான உன் நம்பிக்கையையும்.

எட்டு மாதங்கள் அலைபேசியில் வாழ்ந்த நட்பை நேரில் காணப்போகும் சந்தோஷத்திலிருந்தேன் அந்த செப்டம்பர் மாத ஏழாம் தேதியில். உன் அழைப்பு வந்தது "சென்னைக்கு வந்துட்டேன் டா.. திருவான்மியூர் பரணி ஹோட்டல் பக்கத்துல இருக்கேன்..சீக்கிரமா வா". மனதெங்கும் உன் உருவத்தை வரைந்து கொண்டே விரைந்தேன். ஐந்தரை அடி உயரத்தில் சிறகில்லாமல் என் நட்புதேவதை நின்றுகொண்டிருந்ததை எழுத மொழியில் வார்த்தைகளே இல்லை பூவே. உன்னை பார்த்த சந்தோஷத்தில் நானும் என்னை சந்தித்த தித்திப்பில் நீயும் பேசமறந்து சிரித்துக்கொண்டே அழுதோமே! இப்போது நம்பிரிவெண்ணி அழுகிறது நம் நட்பு.உன் நினைவாக என்னிடம் இருப்பது நேசத்தோடு நீ எழுதிய மின்னஞ்சல்களும் அந்த முதலும் கடைசியுமான சந்திப்பில் எனக்காக விட்டுச்சென்ற ஒற்றை பார்வையும்தான்.

நீ எங்கே இருக்கிறாய் என் தாமிரபரணித்தங்கம்?


3.

தில்லிக்குளிரை ரசித்துக்கொண்டே நண்பன் ராமகிருஷ்ணனோடு நடந்துகொண்டிருந்த ஒரு அற்புத மாலையில்தான் முதன் முதலாய் என்னிடம் பேசினாய் நீ.
கவிதைகள் - மின்னஞ்சல்கள் - சண்டைகள் - சந்தோஷங்கள் - கருத்தாடல்கள் - கண்ணீர்த்துளிகள் - கோபங்கள் என நம் நட்பு நிறைந்திருந்த காலமது. சூழ்நிலைச்சகதிகளில் நான் சிக்கியிருந்த பொழுதுகளில் நீ ஒருத்தியே என்னை மீட்டுத்துக்கொடுத்தாய். என் மூன்றாவது தோழி உன் முதல்தர விமர்சனங்களுக்காகவே கவிதைகள் எழுதித்திரிந்த பசுமைக்காலங்கள் அவை.
தில்லியை விட்டு வந்த பின்னும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன உன் மடல்கள்.

எப்போதும் பெய்கின்ற மழையை விட இலைசிந்தும் ஒருதுளி நீருக்காக
நாம் காத்திருப்பதில்லையா? உன்னை என்னிலிருந்து பிரித்துப்பார்க்க முடியவில்லை.
வாழ்க்கையில் எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள்,எதுவும் நிரந்தரமில்லாத இவ்வுலகில் வெகு சிலரின் அன்புக்காக மட்டுமே நாம் ஏங்குகிறோம். கிளி அமர்ந்து சென்ற கிளைபோல் ஒரு சிறு அசைவை மட்டுமே பலர் நம்மில் விட்டுச்செல்கிறார்கள். வெகு சிலரே உயிரின் வேர் வரை அன்பால் பரவி திளைக்கவைக்கிறார்கள்.
நீ அந்த வெகு சிலரில் ஒருத்தி.

4.

கவிதை உலகிற்குள் சுற்றித்திரிந்துகொண்டிருந்த என்னை சிறுகதை உலகிற்குள் விரல்பிடித்து நடத்திச்சென்றவள் நீ.
உன்னை பற்றி எழுத நினைத்தவுடன் என் அறையெங்கும் பூக்களை வீசிச்செல்கிறது இந்தக் காற்று. எவ்வளவு உன்னதமான நட்பை நீ எனக்கு பரிசளித்திருக்கிறாய்! என் கனவுகளில் மிக முக்கியமானதொரு கனவை தேர்ந்தெடுத்து நிறைவேற்றி மொழி தொலைந்து தன்நிலை மறைக்க வைத்திருக்கிறாய்! என் பிறந்த நாளன்று நீ பரிசளித்த ஆதவனின் காகித மலர்கள் புத்தகம் எப்போதும் என் படுக்கை அருகே படபடத்துக்கொண்டு உன் பெயரை சொல்லியபடி இருக்கிறது.

மின்சார ரயிலில் அருகருகே அமர்ந்துகொண்டு இலக்கியம் பேசித்திரிந்த நாட்களாகட்டும் வயதில் என்னை விட மூத்தவளாக இருந்தாலும் "என்னை டீ போட்டு கூப்பிடுடா அப்போதான் நல்லா இருக்கும்" என்பதாகட்டும், மிதமிஞ்சிய உனதன்பில் லயித்து உன்னோடு உரையாடுகையில் "செல்லம்ல ரொம்ப நேரம் பேசமுடியாதுடா,வேலை இருக்கு நாளைக்கு பேசுறேன் சரியா" என்று அமைதியாக சொல்லிவிட்டு பிரிவதாகட்டும் உன்போன்ற தோழி கிடைக்க தவங்கள் பல செய்திருக்க வேண்டும் நான்.

கடைசிவரை கைகோர்க்க முடியாத தண்டவாளம் போன்றது நம் நட்பு. எப்போதும் அருகருகே மனதால் இணைந்திருப்போம்
என்னுயிர் "பிடாரி"யே!

5.
எழுதிவிட்டு உன்னிடம் காண்பித்தேன்.

"ஏன் டா இவ்வளவு நாளா என்கிட்ட உன் தோழிகள் பத்தி சொல்லவே இல்லை?" கேட்கும்போதே அழுதுவிட்டன உன் மீன்விழிகள்.

அதனால்,
இந்தக்கதையை கிழித்து எறிந்துவிட்டு எழுத ஆரம்பித்தேன் "நான்கு தோழர்களின் கதை"...

மைக்கேல் ஜாக்ஸன் மரணம் - RIP
பாப் உலக சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்ஸன் மரணமடைந்து விட்டதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

http://www.nj.com/entertainment/celebrities/index.ssf/2009/06/michael_jackson_dead_at_50_tmz.html

Update:

மைக்கேல் ஜாக்ஸன் மரணம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக FoX news தெரிவிக்கிறது.கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இசை ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்ற நடனப்புயல் இறைவனடி சேர்ந்தார்.

We Miss you MJ :(

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

Wednesday, June 24, 2009

மழையில்லா முன் தினம்...
வடிகின்ற கண்ணீர்த்துளியுடன்
மரமொன்றை செதுக்கிக்கொண்டிருந்தான்
அந்த தச்சன்.
கூடை நிறைய முட்கள்
சுமந்து தள்ளாடியபடி
இருளுக்குள் மறைந்தாள்
ஒரு மூதாட்டி.
வழிந்தோடும் ரத்தத்தை
கனவுகளில் தெளித்து
உறங்கினர் குழந்தைகள்.
நாளை அவன்
அறையப்படுவதற்காக
மெளனமாய் காத்திருக்கிறது
சிலுவையொன்று.

Sunday, June 21, 2009

உளமார்ந்த நன்றிநட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்த திரட்டி.காமிற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.இவ்வாரம் நிறைய எழுத எண்ணியிருந்தேன்,பணிச்சுமை அதிகமாகிப்போனதால் எழுத இயலவில்லை.ஆயினும் முடிந்த அளவு பதிவிட்டதில் மகிழ்கிறேன்.திரட்டி.காம் மேன் மேலும் வளர்ந்து தமிழ்ச்சேவை புரிந்திட என் வாழ்த்துகள்.

தமிழ்மணத்தில் பதிவை இணைக்க முடியாமல் தவித்தபோது சரியான தீர்வை அனுப்பி இணைத்திட பேருதவி செய்த திரட்டி.காம் வெங்கடேஷ் அவர்களுக்கு என் Special Thanks :)

மகிழ்வுடன்,
நிலாரசிகன்.

Saturday, June 20, 2009

செந்தழல் ரவி - விமர்சனங்கள் மற்றும் தமிழ்மணம்

உரையாடல் சமூக இலக்கிய அமைப்பு நடத்தும் வலைப்பதிர்வர்களுக்கான சிறுகதை போட்டிக்கு வந்திருக்கும் சிறுகதைகளை மிக அற்புதமாக சகபதிவர் செந்தழல் ரவி விமர்சனம் செய்திருக்கிறார்.

அனைத்து கதைகளையும் படிக்க விரும்பாத "சுறுசுறுப்பு திலகங்கள்" :)
இவரது விமர்சனத்தை படித்துவிட்டு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளலாம்.

சுட்டி:

http://imsai.blogspot.com/2009/06/blog-post_2979.html


செந்தழலுக்கும் போட்டிச்சிறுகதையாளர்களுக்கும் என் வாழ்த்துகள்.

---------------------
தமிழ்மணத்தில் என் பதிவுகள் திரட்டுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. விளக்கம் கேட்டு மடலிட்டிருந்தேன்.

இந்த பதில் வந்தது:

//வணக்கம்,

தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்தியோடையும் தற்சமயம் உபயோகத்தில் இருக்கும் செய்தியோடையும் வெவ்வேறாக இருப்பின் இச்சிக்கல் எழும். எனவே சமீபத்தில் உங்களது செய்தியோடையை மாற்றியிருப்பின் அதனைச் சரி செய்வதின் மூலம் இதனைச் சரி செய்யலாம்.
//

செய்தியோடையை நான் மாற்றவில்லை. இந்த சிக்கலை தீர்ப்பது எப்படி? பதிவுலக பிரம்மாக்கள் தீர்த்துவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தடங்கலுக்கு வருந்துகிறோம்ஒலியும் ஒளியும்
ஞாயிறு மாலை திரைப்படம்
சக்தி 90
என் இனிய இயந்திரா
ஹிமேன்
ஐ லவ் யூ ரஸ்னா
நிர்மா
சுரபி
சித்ரஹார்
கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில்
கரைந்துபோன
பவித்திர காலத்தில்
ஒரு நிமிடமேனும் மீண்டும்
வாழ்ந்திடல் வேண்டும்.

Thursday, June 18, 2009

நட்புக்காலங்கள்

Tuesday, June 16, 2009

ஷாஜகானின் உடைவாள்

1.

நானும் தவளையொன்றும்
வான் பார்த்து அமர்ந்திருந்தோம்.
கருமேகங்கள் சூழ்கையில்
மகிழ்வதும்
மேகங்கள் கலைந்து ஓடுகையில்
சோர்வடைவதுமாக
எங்களது நேரம் கடந்துகொண்டிருந்தது.
இருவருக்கும் இடையில்
கவனிப்பாரற்று
ஓடிக்கொண்டிருந்த நதியில்
விழுந்து தொலைந்தன
மழைத்துளிகள்.


2.
அந்த வனத்தின்
நிழல் பிரதேசத்தில்
எதையோ தேடிக்கொண்டிருந்தான்
அவன்.
தேடித் தேடி சலித்தவன்
தேம்பி அழ ஆரம்பித்தபோது
தோள் தொட்டு
எதைத் தேடுகிறாய் என்றேன்.
இங்கிருந்த
போதி மரத்தை காணவில்லை
என்ன செய்வேன் என்றபடி
கண்ணீர் மல்கினான்.
ஞானம் தேடிய புத்தர்கள்
மரம்தேடும்
பித்தர்களானது இப்படித்தான்.

3.
நிலவில் தவழ்வது சற்றே
கடினமாக இருக்கிறது.
நாளை
நடைபழக நட்சத்திரம்
கண்சிமிட்டியபடி காத்திருக்கிறது.

4.
உடைவாள்
கழுத்தில்
பதிய துவங்கிய கணத்தில்
நிகழ்காலம் திரும்பிவிட்டேன்.
கல்லறை
உலக அதிசயமாக
மாறிப்போனதை எப்போது
அறிவான் ஷாஜகான்?

பட்டாணி - சிறுகதை

பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் மொத்த கிராமமும் கூடியிருந்தது. அரச மரத்தில் கட்டி வைத்திருந்தார்கள் பட்டாணியை. கன்னத்துச் சதை பிய்ந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. சட்டை கிழித்து,முடி கலைந்து இடப்பக்கம் தலை தொங்கியிருக்க, வலியால் முனகிக்கொண்டிருந்தான். அந்த ஊரின் "பெரியவர்" என்று அழைக்கப்படும் கோவில் தர்மகர்த்தா பேச ஆரம்பித்தார்."எல்லோரும் கொஞ்சம் அமைதியா இருக்கப்பா. எதுக்காக இந்த பஞ்சாயத்த கூட்டியிருக்கோம்னா , பட்டாணி நேத்து ராத்திரி என் வீட்டுக்குள்ள புகுந்து களவாட பாத்திருக்கான். நல்லவேளையா எம் பொஞ்சாதி பாத்து சத்தம்போட்டா. அதனாலதான் அவன புடிச்சி கட்டி வெச்சிருக்கோம். ஊர் வழக்குன்னா நாந்தான் தீர்ப்பு சொல்லுவேன்,ஆனா இது என் வீட்டு வழக்கு. ஊர் மக்க நீங்க என்ன சொல்லுதியளோ அதுதான் தீர்ப்பு" சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்தார் தர்மகர்த்தா. கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது. பின்னர் ஒரே முடிவாக பக்கத்து டவுணிலுள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு ஆள் அனுப்பி ஏட்டை வரச்செய்து பட்டாணியை ஒப்படைத்துவிட்டார்கள்.போலீஸ் ஸ்டேசனுக்கு செல்கின்ற வழியெல்லாம் பட்டாணியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. பட்டாணியின் இயற்பெயர் முருகேசன். அப்பா அம்மா இல்லாத அனாதை. கொஞ்சம் திக்குவாய். கஷ்டப்பட்டுத்தான் பேசுவான்.ஏதாவது எடுபிடி வேலை செய்துகொண்டு ஒரு சிறுகுடிசையில் வாழ்ந்து வந்தான். ஊரில் ஏதாவது திருமணமென்றால் பந்தி வைக்க பட்டாணியைத்தான் கூப்பிடுவார்கள். பம்பரமாய் சுற்றித் திரிந்து வேலை பார்ப்பதில் இவனுக்கு நிகர் யாருமில்லை. பந்தி ஆரம்பித்தவுடன் பட்டாணிக்கூட்டு வாளியை முதல் ஆளாய் எடுப்பது இவனாகத்தானிருக்கும். அதனால் ஊர் இவனை பட்டாணி என்று கூப்பிட ஆரம்பித்தது.
பட்டாணிக்கு வயது இருபதை தாண்டியபின்னரும் சிறுவர்களுடன் விளையாடுவதே பொழுதுபோக்கு. சிறுவர்களை அழைத்துக்கொண்டு உடைமரங்களில் தட்டான் பூச்சிகளை பிடிப்பதும், கோலிக்காய் விளையாடுவதுமாய் திரிவான். தன்னைவிட வயதில் சிறுவர்கள் "பட்டாணி" என்று அழைத்துவிட்டால் "முருகேசுன்னு கூப்பிடுல,இல்ல மண்டைய பொ பொ பொளந்துருவேன்" கடும்கோபம் வந்து அடிக்க வருவான்.வெள்ளந்தியாக சுற்றிக்கொண்டிருந்தவனை "களவாணி" ஆக்கியது நேற்று இரவுதான். நண்பர்களுடன் "எறி பந்து" விளையாடிக்கொண்டிருந்தான் பட்டாணி. அப்போது இவன் எறிந்த பந்து கோவில் தர்மகர்த்தா வீட்டிற்குள் சென்று விழுந்துவிட்டது. ஓடிச் சென்று எடுத்துவிட்டு திரும்பும்போது மாட்டுக்காடியில் குவித்து வைத்திருக்கும் வைக்கோல் போரில் ஏதோ சத்தம்கேட்டது. மெதுவாக சென்று பார்த்தவன் அதிர்ந்து நின்றுவிட்டான். தர்மகர்த்தாவின் மனைவி முத்துலெட்சுமி மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசெல்லும் கருப்பனுடன் நெருக்கமாக இருந்தாள். இவனைக்கண்டதும் பதறி எழுந்து ஓடிவிட்டான் கருப்பன். செய்வதறியாது நின்ற பட்டாணியை ஓங்கி அறைந்துவிட்டு "திருடன் திருடன்" என்று கத்த ஆரம்பித்தாள் முத்துலெட்சுமி.தர்மகர்த்தாவின் முதல் மனைவி இறந்தபின்னர் தன்னைவிட இருபது வய்து குறைந்த முத்துலெட்சுமியை இரண்டாம் தாரமாக கட்டிக்கொண்டார். முத்துலெட்சுமிக்கு முன்பு அதிர்ந்துகூட பேசுவதில்லை காரணம், அவள் கோபக்காரி. முத்துலெட்சுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவந்து பட்டாணியை நையப்புடைத்தார்கள். "நான் தி தி திருடல" என்று பட்டாணி கதறிக்கொண்டே இருந்தான்.மூன்று மாதம் கழித்து போலீஸ் ஸ்டேசனிலிருந்து ஊர் திரும்பினான் பட்டாணி. "வர்றான் பாரு களவாணிப்பய மூஞ்சும் மொகரையும், இவன்கூட சேர்ந்தே கையக்கால ஒடச்சி அடுப்புல வெச்சிருவேன்" பட்டாணியுடன் சேரக்கூடாது என்று எழுதப்படாத தீர்மானம் நிறைவேறியது நண்பர்கள் வீட்டில்.பட்டாணி என்கிற பெயர் மெல்ல மறைந்து "களவாணி" என்றானது.

சிறுவர்கள்கூட "ஏய் களவாணி வாராம்ல" என்று ஓடிஒளிந்துகொள்ள ஆரம்பித்தனர். எந்நேரமும் குடிசையிலேயே கிடையாய் கிடந்தான் பட்டாணி. எப்போதும் எதையோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். தனியே உட்கார்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருப்பான். அவனது உலகில் சொற்களுக்கு இடமில்லாமல் போனது.ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின் திடீரென்று ஒருநாள் அதிகாலை பத்திரகாளி அம்மன் கோவில் மணிச்சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பொதுவாக ஏதேனும் விபரீதம் என்றால் இப்படி அடிப்பார்கள். சாய்வு நாற்காலியில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த தர்மகர்த்தா துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வேக வேகமாக கோவில்நோக்கி நடக்க ஆரம்பித்தார். குடிச கிடுச பத்திக்கிச்சோ? இல்ல எவனும் தூக்குல தொங்குறானா? ஒண்ணும் புரியலையே என்றவாறு வேகமாக கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.அங்கே, கோவில் மணிக்கயிற்றை பிடித்து மூர்க்கமாக விடாமல் மணி அடித்துக்கொண்டிருந்தான் பட்டாணி. மொத்த ஊரும் கோவில் முன் திரண்டது.

கோழிகளுக்கு குருணை போட்டுக்கொண்டிருந்த முத்துலெட்சுமி அடித்துப்பிடித்து ஓடி வந்திருந்தாள். மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டுவதற்காக தர்மகர்த்தா வீட்டிற்கு வரும் வழியில் மணிச்சத்தம் கேட்டு கோவிலுக்கு கூட்டத்தோடு கூட்டமாக ஓடிவந்தான் கருப்பன்."ஏலே உனக்கு கிறுக்கு முத்திப்போச்சா ஏன்ல மணிய இப்படி போட்டு அடிக்கிற?" அதட்டலான குரலில் கேட்டார் தர்மகர்த்தா. மணி அடிப்பதை நிறுத்திவிட்டு விறுவிறுவென்று அவர் முன் வந்து நின்றான் பட்டாணி. அவனது கண்களில் அதுவரை கண்டிராத கோபமும் மூர்க்கமும் தெரிந்தது. சட்டென்று தர்மகர்த்தாவின் அருகில் நின்ற முத்துலெட்சுமியை பிடித்து இழுத்து இறுக கட்டிக்கொண்டு வெறியுடன் முத்தமிட ஆரம்பித்தான். பதறியடித்து நான்கைந்துபேர் சென்று அவனை விலக்க முயற்சித்தனர். தர்மகர்த்தா ஓங்கி ஓங்கி அவன் முதுகில் அறைந்தார். என்ன செய்தும் அவனது பிடியிலிருந்து முத்துலெட்சுமியை பிரிக்க முடியவில்லை. சற்று நேரத்தில் அவளை கீழே தள்ளிவிட்டு மொத்த ஊர் மக்களையும் பார்த்து " இப்படி செஞ்சா அது திரு த்திரு திருட்டா? இதுக்கு பே பேர்தான் களவாணித்தனமா? அன்னிக்கு கருப்பன் இப்படித்தான் செஞ்சான்,போயி சோலிய பாருங்கலே" சத்தம்போட்டு சொல்லிவிட்டு யாருடைய பதிலையும் எதிர்பாராமல் நடையை கட்டினான் பட்டாணி. விக்கித்து நின்றார் தர்மகர்த்தா. தலைகுனிந்தபடி அழுதுகொண்டிருந்தாள் முத்துலெட்சுமி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஊருக்குள் திருட்டு நடப்பது குறைந்துபோனது.

-நிலாரசிகன்.

Monday, June 15, 2009

நட்சத்திரமான நிலா - சில பகிர்வுகள்இந்த வார(ஜூன் 15 - 21) நட்சத்திர பதிவராக திரட்டி.காம்(http://www.thiratti.com/) என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். திரட்டி.காமிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த வாரம் என்ன எழுதப்போகிறேன் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. வழக்கம்போல் கவிதைகளை பதிந்துவிட்டு
நகர்ந்துவிட விரும்பவில்லை. அதனால் இந்த வாரம் சிறுகதை/கவிதை/கட்டுரை என கலந்து பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.

நிலா(ரசிகன்)வை நட்சத்திரம் ஆக்கியதால் இன்றைய பதிவை எனக்கு பிடித்த, என்னை கவர்ந்த சில நட்சத்திரங்களுடன் துவங்குகிறேன்.

நட்சத்திர நவீனகவிதை:


நவீன கவிதை என்றவுடன் நினைவுகளில் மலர்கின்ற கவிஞர்களில் மிக முக்கியமானவர் தேவதச்சன்.
அவரது யாருமற்ற நிழல் கவிதை தொகுப்பு தந்த அனுபவம் மறக்க முடியாதது. நவீன கவிதைகள் புரிந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு "யாருமற்ற நிழல்".

அவரது இரு கவிதைகள்:

அன்பின் சிப்பி:


என் அன்பின் சிப்பியை
யாரும் திறக்க
வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஓட்டமும் நடையுமாய்.

பரிசு:


என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்


நட்சத்திர புதுக்கவிதை:


புதுக்கவிதை பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் சந்தேகமில்லாமல் மனதிற்குள் வந்து நிற்கும் பெயர்களில் ஒன்று மு.மேத்தா.
கண்ணீர் பூக்களை படிக்காதவர்களே அல்லது கடக்காதவர்களே இல்லை எனலாம்.
சொல்ல முடியாத துக்கத்தை நான்குவரியில் சொல்லிவிடும் அற்புத கவிதையொன்று:

"விழிகள் நட்சத்திரங்களை
வருடினாலும்
விரல்கள் என்னவோ
வெறும் ஜன்னல் கம்பிகளோடுதான்"

- மு.மேத்தா, கண்ணீர் பூக்கள் கவிதை நூல்.


நட்சத்திர சிறுகதை:


சிறுகதையாளரும்,கவிஞருமான உமா மகேஸ்வரியின் சிறுகதைகளில் ஒவ்வொரு வரியிலும் கவித்துவம் நிரம்பி வழிந்தபடியே இருப்பதை உணரலாம். "மரப்பாச்சி" சிறுகதை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து வெளிவர இருநாட்கள் ஆனது. சமீபத்தில் வார்த்தை இதழில் அவரது "அனல் தினம்"
சிறுகதை படித்தேன்.அதிலுள்ள வரிகள் சில

"வெளியே மரங்களின் முணுமுணுப்பு கேட்டது. இலைகளின் அசைவில் ஒரு இனிய லயம்.
நாளை புலரவிருக்கும் மலர்களை நினைவால் தீண்டினாள். காற்றில் மரக்கிளைகள் அசைந்தன.
என்னதான் முயன்றாலும் இருளால் அவற்றை முழுவதுமாகக் கருமையாக்க முடியவில்லை"

இவரது சிறந்த சிறுகதை தொகுதிகளாக நான் பரிந்துரைப்பது 1.மரப்பாச்சி 2.தொலைகடல் 3.அரளிவனம்

நட்சத்திர நாவல்:


சிறுவர் இலக்கியத்தில் மிக முக்கிய படைப்பாக கருதப்படும் நாவல்களில் ஒன்று கி.ராவின் "பிஞ்சுகள்". கடந்த வருடம்தான் அந்த நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையிலிருந்து சேலம் செல்லும்போது பயணித்துக்கொண்டே வாசித்த அனுபவம் மறக்க இயலாதது. சிறுவர்களின் விளையாட்டை விவரிக்கும் விதமும் சிறுவனாகவே வாசகனை மாற்றிவிடும் தன்மையும்
நிறைந்த மிகச்சிறப்பான நாவல். நூற்றி சொச்ச பக்கங்களே இருப்பதால் இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்துவிடமுடியும் என்பது
மற்றுமொரு வசதி :)

நட்சத்திர சிற்றிதழ்:


இருமாத இதழாக கோவையிலிருந்து வெளிவரும் "புன்னகை". கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் சிற்றிதழ்களில் மிக முக்கியமான இதழாக கருத்தப்படுவது. மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.

http://www.keetru.com/punnagai/index.php


நட்சத்திர இசை:


இசைக்கு ராஜன் இளையராஜாவின் எத்தனையோ பாடல்கள் மனதை அள்ளிக்கொண்டாலும் வார்த்தைகளற்ற
இந்த இசைக்குள் ஒரு மெளன பூகம்பமே ஒளிந்திருக்கிறது.

http://www.youtube.com/watch?v=qd2UJKA-iJc


நட்சத்திர ஆங்கில பாடல்:


http://www.youtube.com/watch?v=zcigPwiCgx8


தினமும் ஒருமுறையாவது நான் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. மனதை ஏதோ செய்துவிடுகிறது.


நட்சத்திர ஆவணப்படம்:


எவரஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய ஒருவரை பற்றிய ஆவணப்படம்.
மலையேற்றத்தின் கடுமையான பக்கங்களை விளக்கிச்சொல்கிறது.

http://www.youtube.com/watch?v=anBHeyLDD4A*****************************************************

நட்சத்திரங்கள் பற்றி சொல்லியாகிவிட்டது. இப்பதிவின் இறுதியாக என்னுடைய கவிதையொன்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


ஏதேன் தோட்டம்
வரைந்திருக்கிறேன் என்றது
குழந்தை.
ஆதாமும் ஏவாளும் எங்கே
என்றேன்.
அந்த ஆப்பிள் மரத்திற்கு
பின்னால் நிற்கிறார்கள்
இதுகூட தெரியாதா உனக்கு
என்றபடி சிரித்தது.
மரத்திற்கு பின்னாலிருந்தும்
கேட்டுக்கொண்டே இருந்தது
சிரிப்புச்சத்தம்.

-நிலாரசிகன்.

Friday, June 12, 2009

கடைசியாய் ஒரு கேள்வி"கவிதை எழுதும் நீங்கள் அசைவம் சாப்பிடலாமா?"
"குட்டிக்கதை மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன?"
"கவிதையில் மென்மையாக எழுதும் நீங்கள் கோபபடலாமா?"
"மொழிகளை துறந்து மெளனி என்றால் ஊமை என்று அர்த்தமா?"
"உன் கிளையில் பழம் தின்ன வந்த கிளி என்று என்னைத்தானே சொன்னாய்?"
"Motivational பாடல்கள்தான் பிடிக்குமா?"


32 கேள்விகளுக்கு பதில் எழுதிய பதிவினால் இதுபோன்ற அதிமேதாவித்தனமான/புத்திசாலித்தனமான(!!) கேள்விகளை மடலில் பெற்றேன்.

வைரமுத்துவின் "இதனால் சகலமானவர்களுக்கும்" புத்தகத்திலிருந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன "கவிஞன் தாய்ப்பாலை பற்றி எழுதினால்,வாசகன் அதன் அங்கம் பற்றியே நினைத்துக்கிடக்கிறான்".

நதிபோலே ஓடிக்கொண்டே இருத்தலை விரும்பும் மனதிற்கு இதுபோன்ற தேவையற்ற கேள்விகளை எதிர்கொள்வது எப்படி என்று புரியவில்லை.

எழுதுகின்ற எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்கும் அபாயசூழல் எப்போது விலகும்
என்கிற கேள்வியுடன் இப்போது நான்.

Thursday, June 11, 2009

வாழ்க்கை!
கருப்பு
வெள்ளை
பச்சை
காவி
சாம்பல்.

Tuesday, June 09, 2009

கேளுங்கள் தரப்படும் - 32 கேள்விகள் தொடர் பதிவு
என்னை தொடர் பதிவிற்கு அழைத்த சகபதிவர்,தோழி 'உயிரோடை' லாவண்யாவிற்கு நன்றி.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

இது எனக்கு நானே சூடிக்கொண்ட பெயர். இயற்பெயரை போலவே புனைப்பெயரும் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நவம்பர் 2008

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்காது. எவ்வளவு முயன்றாலும் கோழி கிண்டுவது போலிருப்பதால்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

சிக்கன்/மீன் குழம்பு.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஒரு குட்டிக்கதை சொல்லவா?
ஆலமரமொன்றை தேடி ஓராயிரம் கிளிகள் வந்தபோது அந்த ஆலமரம் நினைத்ததாம் எல்லோரும் என்னுடனே தங்கிவிடும் என் நண்பர்களென்று. வந்த கிளிகளில் சில பழம்தின்றபின் பறந்தோடின. சில ஆலத்தில் எச்சமிட்டு பறந்தன.சில ஆலத்தில் துளையிட்டு சிறிதுகாலம் தங்கிவிட்டு பின் ஒன்றுமே நடவாத முகபாவனையில் விட்டுச்சென்றன. பல காலம் கழித்தே ஞானம் பெற்றது ஆலம். தன்னைத் தேடி வருகின்ற கிளிகள் தனித்து நிற்கும் தனக்காக வரவில்லை தன் பழத்திற்காக மட்டுமே வந்தன என்று புரிந்துகொண்டது ஆலமரம்.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில். சிறிய வயதில் அடிக்கடி பயணிப்பது குற்றாலமும்,அகத்தியர் அருவியும். குளிக்க நினைத்து முடியாமல்
சாரலில் நனைந்து சிலிர்த்தது நயாகராவில்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆணாக இருந்தால் கண்கள். பெண்ணாக இருந்தால் கண்களும் , கைவிரல்களும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்சது : எல்லோரிடமும் எளிதில் பழகுவது
பிடிக்காதது: பழகும் எல்லோரையும் எளிதில் நம்பிவிடுவது.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என் சரிபாதி என் கவிதைகள். கவிதையிடம் பிடிக்காத விஷயமே இல்லை :)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அம்மா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

நீலம்.


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

"கடவுள் தந்த அழகிய வாழ்வு"

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

முட்டாள்த்தனமான கேள்வியாக படுவதால் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை.(கேள்வியில் பிழையும் இருப்பதால்...அதென்ன "பேனாக்களாக"!!!)

14.பிடித்த மணம்?

புதியதாய் வாங்கிய புத்தகத்தின் மணமும்,மண்வாசமும்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

விழியன் ‍- இணையத்தில் அறிமுகமாகி இதயத்தில் இணைந்தவன்.சிறந்த கவிஞன்/புகைப்படக்கலைஞன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

லாவண்யாவின் அனைத்து கட்டுரைகளும் யோசிக்க தூண்டும் விதமாக இருக்கும். என்னை மிகவும் கவர்ந்தது ஊர்மிளை பற்றிய கட்டுரை.

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்(கேள்வியை உயிரில் கலந்த விளையாட்டு என்று மாற்றியிருந்தால் இந்த பதில் இன்னும் அதிகமாக பொருந்தி இருக்கும்.)

18.கண்ணாடி அணிபவரா?

வாட்ச்,மோதிரம்,கண்ணாடி,செருப்பு எல்லாம் அணிபவன்..அடபோங்கப்பா நல்ல கேள்விக்கு நடுவுல இதுமாதிரி சொதப்பல் கேள்வி உயிரை எடுக்குது.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மனதை தொடுகின்ற அனைத்து திரைப்படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

A walk to remember

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம்.


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

The book of Tells - by Peter Collet

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாதம் இருமுறை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: கடந்து செல்லும் ரயிலின் சத்தம்
பிடிக்காதது: காதோரம் சத்தம்போட்டு யாராவது பேசினால்/கத்தினால்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சியாட்டல்,அமெரிக்கா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

முப்பது குரலில் பேச முடியும்.கல்லூரி நாட்களில் மிமிக்ரியில் பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கை துரோகம்.நட்பில் பொய்கள்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

தாஜ்மஹால்,ஊட்டி.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மொழிகளை துறந்து மெளனியாக.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

கேள்வி எண். 9க்கு செல்லவும். கவிதையின்றி செய்ய விரும்பும் காரியம் கடற்கரையில் நடப்பது.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இதுவும் கடந்துபோகும்.

Sunday, June 07, 2009

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - போட்டிச் சிறுக‌தை

http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/06/blog-post.html

Friday, June 05, 2009

எழுத்தில்லா இசை + சிதறல்கள்
மனதெங்கும் வியாபித்திருக்கிறது இனம்புரியாத ஓர் உணர்வு. அடர்குளிரில் போர்வைக்குள்ளிருந்தபடியே மனதிற்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். கனத்த மெளனங்களில் உறைந்துவிடும்போதெல்லாம் இசைதான் என்னை மீட்டெடுக்கிறது.பாடல்களைவிட புல்லாங்குழலின் இசையை அதிகம் விரும்புகிறது மனசு.
எழுத்தில்லா இசை என்னவோ செய்கிறது.பின்னிரவில் யாருமற்ற தனிமையில் கசிகின்ற இசையை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதுதான்.

***********************

ஏழாவது மாடியில் இருக்கிறது என் அறை. கண்ணாடி சன்னல்கள் நிறைந்த விசாலமான அறை. சன்னல்வழியே தூரத்து வான் ரசிக்கும் தருணங்கள் அற்புதமானவை. என் அறைக்கு அருகில் உயர்ந்த விருட்சம் ஒன்று நிமிர்ந்து நிற்கிறது. அந்த மரத்தில் தினமும் ஒரு ஜோடி பெயர்தெரியா பறவைகளை காண்கிறேன். விசித்திரமானதொரு ஒலியை எழுப்பியபடி கிளைவிட்டு கிளை பறந்துகொண்டிருக்கும் அதன் சிறகில் ஒரு நாளேனும் பயணிக்க விருப்பம். நேற்று பெய்த அடைமழைக்கு பின் அந்த பறவைகளை பார்க்க முடியவில்லை. சிலநேரங்களில் மழையும் வெறுப்புக்குள்ளாகிவிடுகிறது.பிடித்த பொம்மையை தூர எறியும் குழந்தைபோல.

***********************
இன்று படித்ததில் பிடித்த கவிதை:

The Eagle

He clasps the crag with crooked hands;
Close to the sun in lonely lands,
Ring’d with the azure world, he stands.

The wrinkled sea beneath him crawls;
He watches from his mountain walls,
And like a thunderbolt he falls.

Alfred, Lord Tennyson

***********************

பல வருடங்கள் கழித்து பால்ய நண்பனொருவனை இணைய அரட்டையில் சந்தித்தேன். காலத்தின் மாற்றத்தில்
வெகுவாய் மாறியிருந்தான். நொடிக்கொரு முறை ஷிட்டும்,நான்கெழுத்து ஆங்கில "எப்" கெட்டவார்த்தையும்
சரளமாய் வந்துவிழுந்தன.சிறு வயதில் ஒழுங்காய் வரட்டி தட்ட தெரியவில்லை என்று அவன் அம்மா அடித்த அடிகளை நினைவுகூர்ந்தேன். புல்ஷிட் என்றான். மாட்டுச்சாணம் நிறைந்த பால்யத்தை மறந்துவிடாத அவன்
நல்ல மனம் கண்டு சிரித்துக்கொண்டேன்.

*************************

என் வலைப்பூவை தொடரும் மனங்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி இருக்கிறது.நூறு பேருக்கும் தனித்தனியாக பதிவிட்டு நன்றி சொல்ல விருப்பம்தான் அப்படி சொன்னால் 100 பூஜ்ஜியமாக மாறிவிடும் வாய்ப்பிருப்பதால் "அனைவருக்கும் நன்றி" என்கிற இருவார்த்தைகளோடு இந்த பதிவையும் முடித்துவிடுகிறேன்.

Wednesday, June 03, 2009

வீடு

வீட்டை சுற்றிலும் புல்வெளியும்
குரோட்டன் செடிகளும் நிறைந்திருப்பதை
சுற்றிக்காட்டி வீட்டின் பெருமையை
எடுத்துரைத்தபடி
வீட்டினுள் அழைத்து சென்றார்
தரகர்.
தேக்கு மரத்தாலான கதவுகளும்
சன்னல்களும்,
பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட‌
தரைகளும் இந்தவீட்டின்
சிறப்பு அம்சங்கள் என்றார்.
வீட்டிற்கு பின்னாலிருந்த‌
கிணற்றடியையும் வாதுமை
மரத்தையும் காணவில்லையே
என்கிற‌ ஏக்க‌த்தில்
ஒரு நிமிட‌ம் என் பால்ய‌த்திற்குள்
நுழைந்து திரும்பினேன்