Saturday, October 31, 2009

சம்யுக்தை மற்றும் ஓர் மரணம்:சம்யுக்தை மற்றும் ஓர் மரணம் - சிறுகதை


துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த
அவசர தொனியில் அம்மா தொலைபேசியபோதே உணர்ந்துகொண்டேன் அவனை பற்றியே சோகச்செய்தியை பகிரப்போகிறாளென்று.
வீட்டை நெருங்க நெருங்க அதிகரிக்கிறது இதயத்துடிப்பு. முக்கியத்துவம் இழந்துவிட்ட அவனது மரணம் எவ்வித திடுக்கிடலையும் உண்டாக்கவில்லை என்றபோதும் கால்சட்டை பருவகால நண்பனின் இழப்பின் வலி மனதெங்கும் வியாபித்திருந்தது. கல்லூரிக்காலத்தில்
முறுக்கேறிய உடம்புடன் வலம் வந்த ஒருவனை மரணம் துரத்தும் கடைசி காலத்தில் இற்றுப்போன உடலாய் மங்கிய கண்களுடன் பார்க்க
எப்படி முடிந்தது அவனது அம்மாவால்? கடைசி நாட்களிலும் சம்யுக்தையின் நினைவுக்காட்டில் வழிதவறிய சிறுவனாகவே அவனை மாற்றியது எது? சாபம் தந்த தேவமகள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? அவளது வாழ்க்கையில் இவனைப்பற்றி கணநேரம் சிந்திக்க நேரமிருக்குமா? சம்யுக்தா! சாபங்களின் தேவதையின் முகம் எனக்குள் உருப்பெற ஆரம்பித்தது.

சம்யுக்தையின் வருகை:


வறண்டு விரிசல் விழுந்த விளைநிலத்தில் சருகான பயிர்களாய் நின்றிருந்த எங்களது கல்லூரிக்குள் முதல்மழையாய் நுழைந்தவள் சம்யுக்தா.
வெட்டாத முடியும் சவரம் செய்யப்படாத தலையுமாக நூலகத்தில் அடைந்துகிடக்கும் அவனை அவள் கண்டநாள் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. எப்போதும் கவிதைகளுக்குள்ளும் கதைகளுக்குள்ளும் புதைந்துகிடப்பவன் அவன். தூசி படர்ந்த பழைய புத்தகமாய் நூலகமே கதியென்று கிடந்தவனை நிமிரச்செய்த முதல் பெண் சம்யுக்தா.

மொட்டுகள் மலர்வதை போன்று இதழ்பிரித்து அவள் சிரிக்கும் லயத்தில் கல்லூரியின் ஒவ்வொரு கதாநாயகர்களும் வீழ்ந்தபோது எதற்கும் செவிகொடுக்காமல் கவிதைகிறுக்கனை நோக்கி சென்றவள்.கல்லூரிகளுக்கு பின்னாலிருக்கும் மரத்தடிகளில் அவனும் அவளும் கவிதைபேசி சிரித்தபோது வெந்து தணிவார்கள் நண்பர்கள். உலகின் மிகச்சிறந்த கவிஞனாக நாளை மிளிரப்போகும் அவனை பின்னாளில் உடைத்தெறிவாள்
என்று யாருமே எண்ணியதில்லை.

அவன்,அவள்,அவர்கள்:


தந்தை இல்லாத காரணத்தால் சிறுவயதிலேயே ஏழ்மையின் கொடிய கரங்களில் சிக்கி கடைகளில் சிறுசிறு வேலைபார்த்து அம்மாவையும் தங்கையையும் கவனித்த மிகச்சிறந்த உழைப்பாளி அவன். வீட்டுச்சுழல் மனதை நெருக்கும்போதெல்லாம் சம்யுக்தையுடனான பொழுதுகளே அவனை மீட்டெடுத்தன.

மில்லுக்கு சொந்தகார அப்பா,வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் சகோதரர்கள் வறுமை என்ற வார்த்தைகூட கேட்டிராத அவளுக்கு அவனது ஏழ்மை மீதான கரிசனமும் அவனுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமும் எப்போதும் இருந்தன.

அவர்களது உரையாடல்களை கடந்துசெல்லும் எவரேனும் கேட்கநேரிட்டால் ஐம்பது வருடங்கள் கழித்து பேசவேண்டிய விஷயங்கள் ஏன் இப்போது விவாதிக்கிறார்கள் என்றே நினைக்கத்தோன்றும். அவர்கள் பேசாத விஷயங்களில்லை காதலை மட்டும் கழித்துவிட்டால்.

அவனது மெழுகுவர்த்திரி:

காலம் எப்போதும் ஒரு முகத்துடன் நம்மிடம் பழகுவதில்லை. நேற்றொரு முகம் இன்றொரு முகம். இலக்கியம் பேசிய இடைவெளிகளில் சிறுக சிறுக நுழைந்த நேசம் பெரும்விருட்சமென வளர்ந்து நின்றபோது அவனக்கு அவனே அந்நியமாகியிருந்தான். காவியங்கள் மொழிந்த உதடுகள் இப்போது சொல்லுக்கும் மெளனத்திற்கும் இடையே அலைபாய்ந்து அடங்கின. அவளும் வார்த்தை தொலைந்த மெளனியாக கண்களுக்குள் ஏதோ தேடும் பார்வையுடன் வலம்வந்தாள்.

அவர்களிடையே கம்பீரமாய் நின்றிருந்த நட்புச்சுவர் இடிந்து துகள்களாகி காற்றில் கரைந்தபோது காதலென்னும் புது உலகிற்குள் நுழைந்தார்கள்.
என் நண்பனை நான் இழந்தது அப்போதுதான். அது எனக்கு அப்போது புரியவில்லை. மயக்கத்தில் திரிபவனிடம் எனது நட்புவார்த்தைகள் தொலைந்து போயிற்று.கரைமீண்ட அலையாய் அவனை உள்ளிழுத்துக்கொண்டாள் சம்யுக்தை.


சம்யுக்தையின் நீங்குதல்:


பட்டாம்பூச்சிகளுடனும் பூஞ்சிட்டுகளிடமும் பேசித்திரிந்தவன் அவளது பிறந்தநாளுக்கான பரிசுத்தேடலில் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்த நாளில்தான் சம்யுக்தை பற்றிய செய்தியொன்றி காற்றில் கசிந்து கல்லூரியை உலுக்கியது.

அவள் இனி கல்லூரிக்கு வரப்போவதில்லை எனும் செய்தியை கேட்ட நொடியில் கிளி அமர்ந்தெழும் உச்சிக்கிளையை போன்றதொரு சலனத்தை
அவனிடம் கண்டேன்.சம்யுக்தையின் திருமண அழைப்பிதழ்களை நண்பனொருவன் கொண்டுவந்தபோது முற்றும் துறந்த ஞானிகளின் தீட்சண்யம் அவனது பார்வையில் உணரமுடிந்தது.சொட்டுக்கண்ணீரோ அல்லது பிதற்றலோ இல்லாமல் மெளனியாக கல்லூரியைவிட்டு அவன் வெளியேறி சென்றது நண்பர்களுக்கு பெரும் துக்கத்தை பரிசளித்தது.

அவன்,நான்,மரணம்:

நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தது சப்தங்களால் நிறைந்த அவனது வீட்டு முற்றம். வீட்டிற்குள் நுழைந்து நார்க்கட்டிலில் பூமாலைகளுக்கு நடுவே முகம் மட்டும் தெரிய கிடத்தப்பட்டிருக்கிறான் அவன்.இருண்மை நிறைந்த கடைசி காலத்தில் நிறமிழந்த வாழ்க்கை ஒன்றை விருப்பத்துடன் தேர்வுசெய்து காரணம் சொல்லாமல் பிரிந்த சம்யுக்தைக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அவனது முகம் அமைதியின் வடிவாய் சலனமற்றிருந்தது.

அவனும் நானும் சந்தித்து உரையாடி மகிழ்ந்த பழைய கணங்களின் ஞாபகங்களோடு அந்த உடலை பார்க்கிறேன். சம்யுக்தையால் எனை பிரிந்த அவனை இறுக கட்டிக்கொண்டு அவனுள் நுழைகிறேன். யாருமே உணர்ந்து கொள்ளாத என் ஆத்மா அந்த உடலுக்குள் சங்கமித்து கண்ணயர்கிறது. என் இருத்தல் தொலைந்த வலியில் துடித்தழுது கொண்டிருக்கிறாள் அம்மா.

துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்..

-நிலாரசிகன்.

17 comments:

said...

அன்பு நிலாரசிகன்,

மாதவராஜ் உங்கள் பதிவுகள் எனக்கு பிடிக்குமென்றும் நான் படிக்கவேண்டுமென்றும் கூறினார். நேற்று உங்கள் கவிதைகள் படித்தேன், மிக எளிய மொழியில் அழகுணர்ச்சியும், அன்பும் வழியும் கவிதைகள், என்னை மிகவும் ஈர்த்தது. இன்று நுழைந்த போது சம்யுக்தா என்னை வரவேற்றாள்!

புது வடிவில் ஒரு சிறுகதை, அழகான கவித்துவமான முயற்சி, பழைய காதைகளை போன்ற அமைப்புடன், அத்தியாய அறிமுகத்துடன் அழகாய் வந்திருக்கிறது வடிவத்தில். கவிதையாய் ஆரம்பம், தெரிவான வார்த்தைகள், சம்யுக்தா என்ற பெயரே, உச்சரிக்கும்போது ஒரு மந்திரச் சொல் போல அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இந்த பெயர் நீங்கள் மாற்றியதாய் இருக்க வேண்டும். இது அனுபவக்கதையாய் இருக்கும் பட்சத்தில் வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலை, பழைய, நிறைய பார்த்த கதை என்பது ஒரு பலவீனம் இந்த கதையில். ஆரம்பத்தில் இருந்த ஒரு பதட்டம், வேகம், அதிர்ச்சி கதையுள் இறங்க, இறங்க நீர்த்துப் போவது போல தோன்றுகிறது. அதிர்வுகள் இல்லாமல் மிகச் சாதாரணமாய் முடிகிறது கதை. வடிவத்தின் புதுமை, வளமை கதையில் இருக்கும் குறைகளை முற்றிலுமாக மாற்றிப்போடுகிறது.

வாழ்த்துக்களுடன்,

அன்பும்
ராகவன்

said...

//செய்தியை கேட்ட நொடியில் கிளி அமர்ந்தெழும் உச்சிக்கிளையை போன்றதொரு சலனத்தை
அவனிடம் கண்டேன்//

azhagu...

//நான் இழந்து அப்போதுதான்//

izhanthathu...spelling mistake..(karuppattikkul kallu pola)

appuram kathai nallaayirukku..
manathil nirkum "NATPU"

VAZHTHTHUKKAL NILA!!

Ashvin said...

நட்புள்ள நிலாரசிகன்,

உங்கள் கவிதைகளை பல வருடங்களாக தொடர்ந்து வாசித்து வருபவன் இப்போது உங்கள்
கதையுலகத்திற்குள் நுழைந்திருக்கிறேன். நவீன சிறுகதைகளில் நீங்கள் மிக முக்கிய புதுவரவு.
பதிவுலகின் தலைசிறந்த எழுத்தாளர்களில் முதல்மூன்று இடத்திற்குள் நீங்கள் இருக்கிறீர்கள்
என்று உரக்கச்சொல்வேன்.

சம்யுக்தை கதை நண்பனின் கதை என்றே பலரும் எண்ணக்கூடும். கூர்ந்து வாசிக்கும் வாசகனே
இக்கதையின் சூட்சுமம் புரிந்து புன்னகை செய்வான். காரணம் இது நண்பனின் கதை அல்ல.
தன் கதையை நண்பனின் கதையாக சொல்கின்ற ஓர் ஆத்மாவின் துயர பெருமூச்சாகவே இதை
நான் கருதுகிறேன்.

உங்களிடம் பிடித்த மற்றோர் மிக முக்கிய அம்சம் படைப்புகளுக்கான படங்களை தேர்வு செய்தல்.
இந்த படைப்பிற்கு ஆங்கிலப்படமான சிக்ஸ்த் சென்ஸ் படத்தை இணைத்திருப்பது உங்களது
கிரியேட்டிவிட்டியை மீண்டும் நிரூபிக்கிறது.

எஸ்.செந்தில்குமார்,கே.பாலமுருகன் போன்ற இளம் படைப்பாளிகளின் வரிசையில் உங்களை
காண்கிறேன்.

நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.


வாழ்த்துக்களுடன்,
அஷ்வின்குமார்.

said...

முதல் வருகைக்கு மிக்க நன்றி ராகவன் :)

இக்கதைக்கான உங்களது நீண்ட தெளிவான பின்னூட்டம் மனதிற்கு இதமளிக்கிறது.

***அதிர்வுகள் இல்லாமல் மிகச் சாதாரணமாய் முடிகிறது கதை ***

எல்லாக் கதைகளிலும் அதிர்வுகள் இருக்கவேண்டும் என்று முன்முடிவுடன் கதை எழுத ஆரம்பிப்பதில்லை.
அதேசமயம் இந்தக்கதையின் முடிவை நீங்கள் சரியாக உள்வாங்கினீர்களா என்பது
உங்கள் பின்னூட்டம் மூலம் அறிந்துகொள்ள முடியவில்லை.

காரணம் இது நண்பனின் கதை இல்லை. தன் கதையை சொல்லும் ஆன்மாவின் கதை. சம்யுக்தையின் வரவால் தன் சுயமிழந்த ஒருவன் தன்னிலிருந்து பிரிந்து சென்ற சுயத்தை பற்றிய கதையாக இதை எழுதினேன். :)

மாதவராஜ் அய்யாவுக்கும் உங்களது வருக்கைக்கும் மீண்டும் என் நன்றிகள்.

said...

தட்டச்சு பிழையை திருத்திவிட்டேன் இரசிகை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

<< appuram kathai nallaayirukku..
manathil nirkum "NATPU"

இது நட்புக்கதை அல்ல :)

said...

அஷ்வின்,

உங்களது வாழ்த்துக்கு நான் தகுதியானவனா எனத் தெரியவில்லை. சிறுகதை உலகிற்குள்
நுழைந்து ஒரு வருடம்தான் முடிந்திருக்கிறது.கடக்கவேண்டிய தூரம் இன்னும் அதிகம் :)

***
சம்யுக்தை கதை நண்பனின் கதை என்றே பலரும் எண்ணக்கூடும். கூர்ந்து வாசிக்கும் வாசகனே
இக்கதையின் சூட்சுமம் புரிந்து புன்னகை செய்வான். காரணம் இது நண்பனின் கதை அல்ல.
தன் கதையை நண்பனின் கதையாக சொல்கின்ற ஓர் ஆத்மாவின் துயர பெருமூச்சாகவே இதை
நான் கருதுகிறேன்.
****
மிகச்சரியான புரிதல்!!

நன்றி,
நிலாரசிகன்.

said...

கதை நன்றாக இருக்கின்றது நிலாரசிகன்.

said...

அன்பு நிலாரசிகன் அவர்களுக்கு,

அதிர்வுகள் ஒரு சரியான வார்த்தை பிரயோகமா என்று தெரியவில்லை. அதற்காக மன்னிக்கவும்.
நான் இது நண்பனின் கதை என்று எங்கேயும் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன். இது உங்களின் அனுபவமே என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை. எனக்கு இதன் வடிவம் அதிகம் பிடித்திருந்ததன் காரணமாக, எனக்கு கதையின் முடிவு புரிந்திருந்தும் அதைப்பற்றி எங்கும் அடையாளங்கள் விட்டுச் செல்லாமல் இருந்து விட்டேன் என்று நினைக்கிறேன். இப்போ தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன், கொஞ்சன் இடறல்கள் பொறுக்கவும்.

அன்புடன்
ராகவன்

said...

மனதை நெருடும் வார்த்தை புனைவுகள்....

நன்றாக இருக்கிறது... தொடரட்டும் உங்கள் கதை நடவு....

said...

ஒரு தன்னிலிருந்து வெளீயே நின்று கதை வேறொருவனாய் பாவித்து சொல்லியிருக்கிற் கதை. வாழ்த்துக்கள்.

said...

nila....,

kaathalil tholviyaal thannai maaiththukonda "than nanbanaip patri koorum kathaithaane ithu"...?

said...

m...

pinoottangal yellam vaasiththa pin..purinthathu.

ithu "aanma pesum kathai" yentru..

vazhththukal nila...

Niranjana said...

ungalin kavithaigalum, kathaikalum padikka padikka muzhugi pogum alavirkku arputhamanavai

thangalin rasigai
niranjana

said...

அழகான புனைவு. முதல் முறை வாசிக்கும் போது கவனிக்க விட்டுவிட்டேன். இரண்டாவது முறை கண்டுகொண்டேன்.

said...

வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே..

said...

உருகினேன் நிலா.. மிக்க அருமை...

said...

நிலா ரசிகன்!

கதை சொன்ன உத்தி, சிறு புதிரான கரு எல்லாம் புதுசாய் இருந்தாலும், க்தைக்குள் வருகிற பல விஷயங்கள் பழையதாக இருப்பது பலவீனம்.

கல்லூரி, இலக்கியத்தில் வளர்ந்த நட்பு, அப்புறம் காதல், பிரிவு இதுபோல வார்த்தைகளுடன்/சம்பவங்களுடன் எத்தனையோ கதைகள் படித்தாயிற்று.

உங்களது வீரியமிக்க மொழிக்கு, தேவையான அடர்த்தி கதையில் இல்லை.