Saturday, November 28, 2009

கூடல்திணை இணைய இதழ் - முன்னோட்டம் 1


கூடல்திணை ஜனவரி முதல் இதழில் ஆரம்பமாகும் புதிய பகுதிகள்:
இ.பாவின் ”திரைகளுக்கு அப்பால்” புதினம்:


ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால்
சிவப்பு.ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் 
இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான
போராட்டத்தையே இ.பா இந்நாவலில் அழுத்தமாகப் பதிவு
செய்துள்ளார்.


1971ல் தினமணி கதிரில் இதே நாவல் ஒரு தொடராக வெளிவந்தபோது
ஏகப்பட்ட எதிர்ப்புகள்,கண்டனங்கள்.விளைவு? தொடர் பாதியிலேயே
நிறுத்தப்பட்டது.பின்னர் கிழக்கு,கலைஞன் பதிப்பகங்களின் வாயிலாக
புத்தகமாக வெளிவந்தது.


இன்றும் பாலியல் தொடர்பான படைப்புகளைக்குறித்து விவாதங்கள்
நடந்துகொண்டிருக்கும் வேளையில் 70களிலேயே இந்திரா
பார்த்தசாரதி பல எதிர்ப்புகளுக்கிடையே இப்படி ஒரு
நாவலை படைத்திருக்கிறார் என்பது இன்றைய தலைமுறையினருக்கு
சென்றடைதல் வேண்டும் என்கிற எண்ணத்தில் மீள்பிரசுரமாகிறது.
கவிஞர்.பழமலய் “சனங்களின் கதை” பாகம் இரண்டு:


80களில் தமிழ்க்கவிதையுலகில் புரட்சியை ஏற்படுத்தி “இப்படியும் கவிதை
எழுதலாம்” என்று இன்றைய கவிஞர்களுக்கு முன்னோடியாக அமைந்தது
சனங்களின் கதை.


கடந்த முப்பது ஆண்டுகளில் கவிஞர்.பழமலய் கண்ட சனங்களின் வாழ்வியல் 
முறை மாறிய நிலையில் இன்றைய சனங்களை கவிதைகளில் எழுதுகிறார்.


இரா.முருகன் “பெட்டி” கணினித்துறையை பின்புலமாககொண்ட புதினம்:


ஆசிரியரின் முன்னுரையிலிருந்து:


 ‘மூன்று விரல்’ நாவலை நான் எழுதி எட்டு வருடமாகி விட்டது. அந்த உலகம் இல்லை இன்றைக்கு இருப்பது. நானும் தான் மாறி விட்டேன். 


அனுபவங்களின் கனம், அழுத்தம், அவை மனதில் பூசிப்போன இனிப்பும் கசப்பும் துவர்ப்புமான நினைவுகள் என்று இந்த மாற்றம் ஒரு தளத்தில் 


நிகழும்போது இன்னொரு புறம் நடை, வடிவம், கலை இலக்கியத் தேடல் எனப் புதிய பாதைகளில் எழுத்துப் பயணமும் தொடர்ந்தபடி தான் இருக்கிறது.


கணினித் துறையில் சட்டென்று ஒரு தேக்கம். ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, புது ப்ராஜக்ட்கள் வரவு குறைந்து அறவே இல்லாமலும் போனது 
என்று நிலைமை மாற, கம்ப்யூட்டர் பெட்டிக்காரர்களின் எதிர்காலம் பற்றிய நிச்சயத்தன்மை குறையத் தொடங்கியது. இன்னும் இது தொடர்ந்து 
கொண்டுதான் இருக்கிறது. விரைவில் மாறும் என்ற நம்பிக்கை இப்போது வந்திருப்பது உண்மைதான். ஆனாலும் காத்திருப்பின் வலிகள் 
எத்தனையோ கணினி மென்பொருள் ஊழியர்களை ஆழமாக பாதித்திருக்கின்றன. 


நாகூர் ரூமி “பாட்-பூரி” பத்தி:


நாகூர் ரூமியின் எழுத்தில் வார்த்தைகளுடன் பகடியும் நையாண்டியும் கலந்து புதுசுவை விருந்தளிக்க வருகிறார்.சுவையை குறித்து


ஆசிரியரின் முன்னுரையில்,


சோற்றில் சாம்பாரோடு ரசத்தையும் சேர்த்து ஊற்றிக் கலந்து கொள்வேன். மட்டன் குழம்பில் தயிர் அல்லது மோரை ஊற்றிக் கொள்வேன். தோசை, 


இட்லி, இடியாப்பம் வகையறாக்களை டீ தொட்டு சாப்பிடுவேன்... ஒரு தத்துவார்த்த அடிப்படையிலான சாப்பிடும் முறை அது என்று சொல்லலாம்.
நான் எழுதும் முறையும் நான் சாப்பிடும் முறை போன்றதுதான். நான் எழுதிய நாவல் ஒன்று நாவல் என்ற இலக்கணத்துக்குள் வரவே இல்லை என்று 
ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னது சரியாக இருக்கலாம். அதைப்பற்றி எனக்கென்ன கவலை? அது நாவலாக இருந்தால் என்ன, 
இல்லாவிட்டால் என்ன? படிப்பதற்குச் சுவையாக இருக்கிறதா இல்லையா? அதுதான் கேள்வி. அதற்கு பதில் ஆம், இருக்கிறது என்று வாசகர் மனம் 
சொல்லிவிட்டால் அது பிறவிப்பயன் அடைந்துவிட்டது.


கோவை சதாசிவம் “சூழல் போராளிகளுக்கு...” சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைத்தொடர்:


மலைத்தொடர்களைக் காணும் ஒரு கவிமனதின் துடிப்புகளாக இக்கட்டுரைத்தொடர் அமையும்.மலைகள்,காடுகள்,பறவைகள்,விலங்குகள்,நதிகள்,
கடற்கரைகள் என இயற்கையையும் இயற்கையின் கூறுகளையும் தாயாகவும் குலசாமியாகவும் உளமாற நம்புகிற உணர்வுப்பூர்வமான
கட்டுரைத்தொகுப்பாக இது அமையும்.வள்ளுவனும் வள்ளலாரும் பாரதியும் இராகுல்ஜியும் ஏங்கல்ஸும் சூழலியல் உணர்வோடுதான் வாழ்ந்தார்கள்,படைத்தார்கள் என்பதை இக்கட்டுரைத்தொடர் உணர்த்தும்.


------------------------------------


மேலுள்ளவை மட்டுமல்லாமல் இன்னும் பல ஆச்சர்யங்கள் ஜனவரி ஒன்றுக்காக காத்திருக்கின்றன! நீங்களும்தான்!!
கூடல்திணை இணைய இதழில் உறுப்பினராக உங்களை பதிவு செய்துகொள்ளுங்கள். 
பதிவு செய்தவர்களுக்கான கடவுச்சொல் டிசம்பர் 15க்கு பிறகு மின்மடல் வழியாகத் தெரிவிக்கப்படும்.


அடுத்த முன்னறிவிப்பு மேலும் பல படைப்புகளின் விவரங்களுடன் டிசம்பர் 15 அன்று வெளியிடப்படும்.0 comments: