Wednesday, January 13, 2010

காட்டின் பெருங்கனவு
நடந்து முடிந்த புத்தக கண்காட்சியில் முதலாவதாக வாங்கிய புத்தகம் சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" சிறுகதை தொகுதி. இவரது முதல் தொகுப்பு "பூனைகள் இல்லாத வீடு" தந்த வாசிப்பனுவமும் அதன் உணர்வுநிலை நீட்சியும் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. அதனாலேயே இப்புத்தகத்தை உடனே வாங்கிவிட தீர்மானித்திருந்தேன். காட்டின் பெருங்கனவு தலைப்பை கேள்வியுற்ற மறுகணமே வனமொன்றின் நடுவில் சுதந்திரமாக சுற்றித்திரியும் சிறுமுயலென மாறிப்போனது மனம். வாசகனை தன்னுள் இழுக்கும் மிகப்பெரும் பொறுப்பாக நானுணர்வது படைப்பின் தலைப்பு. வண்ணதாசனின் "தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள்" தலைப்பிற்காகவே அந்த சிறுகதையை தேடிப் படித்திருக்கிறேன். மேலும் இத்தொகுப்பின் அட்டைப்படம்(இலைகளுக்கு நடுவே ஒளிரும் யுவதி (அ) வனதேவதையின் புகைப்படம்) தந்த வசீகரத்தை ரசித்தபடியே தொகுப்பினுள் நுழைந்தேன்.

மொத்தம் ஒன்பதே கதைகள். ஆனால் ஒவ்வொரு கதைக்குள்ளும் பயணிக்கையில் பல்வேறு கிளைக்கதைகளை நோக்கி வாசகனை நகர்த்திவிடுகிற வித்தையில் வெற்றி பெற்றிருக்கிறார் கதாசிரியர் சந்திரா. இங்கும் கதைகளின் தலைப்பில் சொக்கித்தான்போகிறது மனம். "நதியில் மிதக்கும் கானல்","தரை தேடிப் பறத்தல்" "பன்னீர்மரத் தெரு" "காட்டின் பெருங்கனவு" கவித்துவம் நிறைத்த இத்தலைப்புகளில் சற்று  நேரம் பார்வையை பதியவிட்டு கதைக்குள் நுழையும்போது இத்தொகுப்பின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி இருந்தது.

இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதையாக,கதை முடிந்த பின் வேறெதுவும் செய்ய இயலாத பாதிப்பை உருவாக்கிய கதையென்று 'பன்னீர்மரத் தெரு" கதையை சொல்லலாம். பன்னீர் மரத்தெருவிலிருக்கும் அகிலாவின் வீட்டு முற்றத்தில் அத்தெரு சிறார்கள் கூடுகிறார்கள். அவர்களுக்கு அகிலா தன் கற்பனை சிறகுகளை விரித்து கதைகளை சொல்லி மகிழ்கிறாள்.கதைகள் மட்டுமே திருமணமாத தனிமையின் வலியை ஆற்றுகின்றன.அவள் வசிக்கும் தெருவில் புதிதாய் குடிவரும் லாவண்யாவின் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வாங்குகிறார்கள்.அகிலாவிடம் கதைகள் கேட்ட சிறுமிகளும் சிறுவர்களும் தொலைக்காட்சி பெட்டியினால் ஈர்க்கப்பட்டு இவளிடமிருந்து நீங்குகிறார்கள். அதனால் ஏற்படும் தனிமை மீண்டும் இவளை வாட்டத்துவங்குகிறது. இவளது அண்ணன் தன் ஐம்பதாவது வயதில் இவள் வயதொத்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்போது தான் தனித்துவிடப்பட்டவளாகவும் உறவு அறுபட்டதாகவும் உணர்ந்து தன் அறைக்குள் இருப்பை சுருக்கி கொள்கிறாள். அவள் அண்ணன் தன் இளம் மனைவிக்காக வாங்கி வருகின்ற தொலைக்காட்சிபெட்டியின் சத்தம் அகிலாவின் உயிரை அறுக்கிறது.

இந்தக் கதையின் முடிவும் அது தரும் பாதிப்பும் மனதெங்கும் வியாபித்துக்கொள்கிறது. அகிலாவின் வலி வார்த்தைகளின் வழியே நம்மையும் சூழ்ந்துகொள்வது கதையின் மிகப்பெரிய பலம். சில இடங்களில் காட்சிப்படுத்துதல் மனதை அள்ளிப்போகிறது

"டிசம்பர் பூக்களைக் கட்டியபடி அகிலா கதை சொல்லிக் கொண்டிருப்பாள். சிறுமிகளுக்கும் அவளைப் போலப் பூக்கட்டத் தோன்றும். ஆனால் அவர்களுக்கு அகிலாவைப் போலக் கைவிரல்களில் நூலைக் கோத்துப் பூக்கட்டத் தெரியாது.அவர்கள் பன்னீர்ப்பூக்களைப் பொறுக்கிக் கால் பெருவிரலில் நூல் கோத்துச் சரமாகத் தொடுத்தபடி கதை கேட்டுக்கொண்டிருப்பார்கள்"

காட்டின் பெருங்கனவு சிறுகதை ஒரு மலைகிராமத்தில் வசிக்கும் இரு சகோதரிகளை பற்றியது. இந்தக் கதையின் மூலம் ஒரு மலைகிராமத்தையும் அதன் வாழ்வியலையும் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் சந்திரா.

கழிவறைக் காதல் பிரதி என்றொரு சிறுகதை கட்டண கழிப்பிடத்தில் வேலை பார்க்கும் பெண்ணொருத்தியின் காதலை மையமாக கொண்டது.அற்புதமான எழுத்தாற்றலால் வித்தியாசமான கருவை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

தரைதேடி பறத்தல் சிறுகதை கவித்துவமான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. பறவையை குறியீடாக கொண்டு பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட கவிதைக்கதை எனலாம்.

மொத்தத்தில்  "காட்டின் பெருங்கனவு"  சிறந்த மொழிநடையில்,வித்தியாசமான கருக்களை மையப்படுத்தி,வசீகரிக்கும் விவரிப்புகளால் வாசனை தனக்குள் இழுத்துக்கொண்ட ஆக சிற படைப்பு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. (உமா மகேஸ்வரியின் "மரப்பாச்சி" தொகுப்பிற்கு பின் என்னை அதிகம் கவர்ந்த தொகுப்பாக இதைச் சொல்வேன்).

சிறுகதையாசிரியர் சந்திரா இப்பொழுது இயக்குனாரக அவதாரமெடுத்திருக்கிறார்.உயிர்ப்புள்ள சிறுகதைகளை போலவே ஜீவனுள்ள பல திரைப்படங்களை அவர் தர வேண்டும். வாழ்த்துகள் பல.

வெளியீடு: உயிர் எழுத்து
விலை: ரூ. 50
பக்கங்கள்: 94
ஆசிரியர்: சந்திரா. 


- நிலாரசிகன்

7 comments:

said...

நல்ல பகிர்வு இதைப்படித்தவுடன் இப்புத்தகத்தை படிக்க வேண்டும் என நினைக்கிறேன்

said...

நன்றி நண்பரே. அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை நூலிது.

said...

thank u for sharing

said...

இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)

said...

நல்ல அறிமுகம் நிலா. கதையின் தலைப்புகள் ஈர்க்கின்றன. படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.

உங்கள் நடையின் சரளத்தன்மை கூடிக்கொண்டே வருகிறது. அதற்கும் ஒரு வாழ்த்து (இதுக்கெல்லாம் நேர்ல பாக்கும் போது ட்ரீட் வெக்கனும் சொல்லிட்டேன். :) )

said...

"பன்னீர்மரத் தெரு" எங்கோ படித்திருக்கிறேன்...மற்ற கதைகள் ப்அடிக்க ஆவல்.

said...

நல்ல பகிர்வு நிலா
பொங்கல் வாழ்த்துக்கள்.
- கிரகம்