Friday, February 26, 2010

அதீதத்தின் ருசி: இறைநிலையின் உச்சம்

 


உயிர்மை வெளியீடாக வெளிவந்திருக்கும் கவிதை நூல் கவிஞர்.மனுஷ்ய புத்திரனின் “அதீதத்தின் ருசி”. இதற்கு முந்தைய அவரது கவிதையுலகிலிருந்து வெகுவாக தனித்து நிற்கும் நூலாக இந்நூல் விளங்குகிறது.தொகுப்பில் உள்ள எந்தவொரு கவிதையிலும் வசீகரச் சொல்லோ அல்லது கவித்துவமிக்க வரிகளோ காணமுடியவில்லை மாறாக வெகு இயல்பான ஓர் உரையாடலை போலவும் மிகவும் யதார்த்தமான மொழிநடையாலும் கவிதைகள் நம்மை உள்ளிழுத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு கவிதையின் பாடுபொருளும் மிகவும் தனித்துவமானவை. ஒவ்வொரு கவிதையின் கடைசி வரியிலிருந்து அடுத்த கவிதைக்குள் நுழைவதற்கு சிறிதேனும் அவகாசம் தேவைப்படுகிறது. காரணம் கடைசி வரியில் அவர் உருவாக்கும் வெளியில் பயணப்பட்டு,ரணப்பட்டு,நெகிழ்ந்து,உருகி,அத்வைதம் அடைந்து,பிறழ்ந்து,பூவாகி,கொடும் தேளாக உருமாறி,பரவசநிலையின் உச்சம் தொட்டு மீண்டும் நம்மிடம் வரும்போது நம் மனதையே நாம் விசித்திரமானதொரு பறவையை பார்ப்பதுபோல் பார்க்கிறோம். 

கோடைகால இரவுகளில் எழுதப்பட்ட இக்கவிதைகளில் பகலின் வெம்மையும் இரவின் குளிர்மையும் ஒருசேர உணரமுடிகிறது.  தொகுப்பின் முதல் கவிதை ‘சிநேகிதிகளின் கணவர்கள்’ வெளியான சமயத்தில் பெரும் சிலாகிப்புக்கு உள்ளானது. குறிப்பாக,
“ஒரு சிநேகிதியை /“சிஸ்டர்” என்று அழைக்கும் / ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து / எப்படித் தப்பிச் செல்வது என்று”
என்று முடிகிற இடத்தில் நம் கலாச்சாரத்தையும்,கலாச்சாரம் என்கிற முகமூடியில் நாம் மறைத்துவைத்திருக்கும் அபத்தங்களையும் அறைந்து செல்கிறார். திருமணமாவதற்கு முன்பு வரை “டி”யாக இருந்தவள் திருமணத்திற்கு பிறகு “ங்க”வாக மாறிப்போகும் முட்டாள்த்தனத்தை இந்த இருவரிகளை விட சிறப்பாக சொல்ல முடியுமா?
"பரிசுத்தத்தின் பயன்பாடு" என்ற கவிதையின் கடைசி வரி ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான அந்நியத்தனத்தை,உறவின் இணக்கமின்மையை மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறது. பயன்படுத்தப்படாத பொருளாகிப்போன முத்தத்தால் என்ன பயன்? இதழ்களின் வழியே பகிரப்படும் மகத்துவமான நேசத்தை வேறெப்படி பகிர்ந்துகொள்வது? பல கேள்விகளை வாசகனுக்குள் வீசிப்போகிறது இந்தக் கவிதை.
“அமிர்தவல்லியின் குறிப்புகள்” என்றொரு கவிதையை வாசித்து முடித்தவுடன் எங்கள் கிராமத்தில் சிறுவயதில் நான் கண்டு வியந்த கனிப்பாட்டி என்பவர் ஞாபகத்திற்கு வந்தார்.அவரால் உணவருந்தாமல் இருந்துவிட முடியும். அவரால் உறங்காமல் பொழுதை கழித்துவிட முடியும். ஆனால் அவரால் பேசாமல் இருக்க முடியாது. பேச்சு பேச்சு எப்பொழுதும் பேச்சு. எதைப்பற்றியாவது,யாருடனாவது,எதற்காகவாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.ஊரில் நடக்கும் விஷயங்களை பற்றிய பேச்சு முடிந்தவுடன் நடக்காத அல்லது இனி நடக்கக்கூடிய சாத்தியங்களுடைய பேச்சை ஆரம்பித்துவிடுவார். இப்பொழுது அவருக்கு 75 வயதுக்கு மேலாகிறது. இன்றும் பேச்சு ஒன்றே அவரது தனிமையை அவரது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
இந்தக்கவிதையின் கடைசி பத்தி
“எல்லாவற்றையும் குறிப்புகளாக
மாற்றிவிடுவதல் மூலம்
எதையும் நினைவில் வைத்திருப்பதன்
துயரத்திலிருந்து
முற்றாக விடுதலை அடையலாம்
என அவள் எப்போதாவது கருதினாளா
என்பதும் தெரியவில்லை”
என்று முடிகிறது., குறிப்புகளுடன் வாழ்ந்த அமிர்தவல்லியும் பேச்சுடன் வாழும் கனிப்பாட்டியையும் பிரித்துப்பார்க்க முடியவில்லை. ஏதோவொரு செயலை நம் துயரத்திலிருந்து விடுதலை அடைவதற்காக நாம் மேற்கொள்கிறோம் சிலருக்கு அது குறிப்புகள்,சிலருக்கு கவிதைகள் சிலருக்கு பேச்சுகள்.
ஒரு தலைமுறை இடைவெளியை ஒரே வரியில் சொல்லிவிடமுடிகிற வித்தை இவருக்கு வாய்த்திருக்கிறது. வார்ப்பு கவிதை இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்ந்த கவிதைகளில் மிக முக்கியமானது. குழந்தைகளின் உலகில் நாம் பிரவேசிப்பதேயில்லை. பலூனைவிட பலூனை உடைப்பதில்தான் ஒரு குழந்தையின் குதூகலம் அதிகரிக்கிறதென்பதை நாம் உணர்ந்துகொள்வதேயில்லை. சோற்றை தரையில் கொட்டிவிட்டால் அடிக்கிறோம். தரையில் சிந்தாமல் ஒழுங்காக சாப்பிட்டால் அது குழந்தையே இல்லை என்பதை உணர மறுக்கிறோம். நம் கனவுகளை குழந்தைகளின் முதுகிலேற்றி நாம் நினைத்து நிறைவேறாமல் போனவற்றை குழந்தைகளின் வழியே நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறோம். எவ்வளவு அற்பத்தனம் நிரம்பிய செயல் இது. இந்தக் கவிதையில் “நம்மைப்போல் அல்லாமல்” அவர்கள் துல்லியமாக நேர்த்தியாக வலிமையாக வளர்கிறார்கள் என்று முடித்திருக்கிறார்.அற்புதம் என்ற ஒற்றை சொல் இந்தக்கவிதையின் வெற்றிக்கு பொருத்தமானதாக இருக்கும்.


‘கடைசிக்கோப்பை’,’மழைமிருகம்’,’அதீதத்தின் ருசி’,’அழும்போது அழகாக இருக்கும் பெண்’,’வரலாறு எனும் பைத்தியக்கார விடுதி’,’இளமையில் தேவதையாக இருந்தவர்களுக்கு’ என பல கவிதைகள் மனதைத் தொடுவதாக, மனதிற்கெட்டாத பாடுபொருளை கொண்டவையாக, சமகால அழிவைப் பற்றியதாக எழுதப்பட்டிருக்கின்றன. ஏழு மாதங்களில் 250 பக்கங்களுக்கு கவிதைமழையை பொழிய வைத்தக் காரணி எதுவாக இருக்கும்? வெவ்வேறு மனிதர்களை,வலிகளை,கொண்டாட்டங்களை எழுதியிருப்பதாகக் கவிஞர் முன்னுரையில் சொல்லியிருந்தாலும் இதற்கப்பால் இவைகளை எழுத ஏதோ ஓர் உந்துசக்தி அல்லது இறை இவருக்குத் துணைபுரிந்திருக்க வேண்டும்.
 
அதீதத்தின் ருசி – இறைநிலையின் உச்சம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
நூலின் பெயர்: அதீதத்தின் ருசி
ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.150
பக்கம்: 246 
- நிலாரசிகன்


Wednesday, February 24, 2010

சச்சின் – நம் காலத்து நாயகன்!
1930களில் லண்டன் செய்திதாள்களில் “He is Out” என்ற வரி தென்பட்டால் யாரோ ஒரு அதிர்ஷ்டசாலி பந்துவீச்சாளர் பிராட்மெனை அவுட் ஆக்கிவிட்டார் என்று மக்கள் புரிந்துகொள்வார்களாம். தொண்ணுறுகளிலும் இந்த நூற்றாண்டிலும் “Another ton for him” என்ற வரி எங்கு தென்பட்டாலும் மிகச்சுலபமாக புரிந்துகொள்ளமுடியும் சச்சின் மற்றொரு சதம் அடித்திருக்கிறாறென்று. இவ்வளவு சதங்களை குவிக்கிறாரே சதம் அடிப்பது மிக எளிதான செயலோ என்று கிரிக்கெட் தெரியாதவர்கள் தவறாக நினைக்கும் அளவிற்கு நூறு ரன்களை சச்சின் மிக எளிதாகவும் அழகாகவும் கடந்து நிற்பார். ஆனால் இதற்கு பின்னாலிருக்கும் உழைப்பும்,அர்ப்பணிப்பும் மிக அதிகம் என்பதை சச்சினை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்வார்கள். கிரிக்கெட்டை மட்டுமே சுவாசமாக கொண்டு வாழ்பவர் சச்சின்.

93 முறை சர்வதேச போட்டிகளில் நூறு ரன்களை கடப்பதென்பது மிகக்கடினம். பல்வேறு மைதானங்கள்,பவுலர்கள்,பிட்சுகள்,சிதோஷ்ண நிலை இவை அனைத்தையும் தாண்டி தன் சாதனை பயணத்தை தொடர்கிறார். அவரது உடலில் காயங்கள் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போவால் பாதிக்கப்பட்டபோது இனி சச்சின் அவ்வளவுதான் என்றார்கள். பீனிக்ஸாக மீண்டு வந்தார்.
கிரிக்கெட் விளையாடும் சர்வதேச வீரர்கள் அனைவரும் எப்படியாவது உலகின் மிகச்சிறந்த "இரண்டாவது" டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்கிற இடத்துக்குத்தான் போட்டியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எப்பொழுதும் முதலிடம் ஒருவருக்குத்தான். அது டான் பிராட்மென். அவரது சராசரியை முறியடிக்க இன்றுவரை எவரும் பிறந்ததாக தெரியவில்லை. மிஸ்டர் கிரிக்கெட் என்று ஆஸி. வீரர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட மைக்கேல் ஹஸ்ஸி 80க்கும் மேல் சராசரியுடன் பிராட்மெனை எட்டிப்பிடிக்க ரன்கள் குவித்துகொண்டிருந்தார். உச்சிக்கு ஏறிய வேகத்தில் கீழே இறங்கி அமைதியாகிவிட்டார்.

ஒருநாள் போட்டியில் நம்பர் 1 வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதில் எவ்வித சந்தேகமும் எந்த வீரர்களுக்கும்,ரசிகர்களுக்கும் இல்லை. இன்று மேலும் ஒரு வைரம் அவரது கிரீடத்தில். 39 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியின் பெரும் ஜாம்பவான்களான ரிச்சர்ட்ஸ்,லாரா,கில்கிறிஸ்ட்,மார்க் வா,அன்வர்,ஹெயின்ஸ்,ஜெயசூர்யா,கங்குலி என எல்லோரின் கனவாகவும் இருந்து கடைசி வரை நிறைவேறாமல் போன 200 ரன்களை சச்சின் முதல் வீரனாக தொட்டிருக்கிறார்.மிகச்சிறந்த அணியான  தென்னாப்ரிக்காவுக்கு எதிராக என்பது கூடுதல் சாதனையாக கொள்ளலாம். ஸ்டெயினும்,பார்னலும் உசுப்பேற்றியபோதும் மெளனமாக இருந்தவர் அவரது மட்டையால் பதிலடி கொடுத்தார். காலீஸின் பந்துவீச்சில் வலது புறம் சென்று இடப்பக்கமாக அவர் அடித்த நான்கு ரன்களை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பாடமாக வைக்கலாம். 194 ரன்கள் கடந்து உலகசாதனை செய்தபோதும் மட்டையை உயர்த்தாமல் அடுத்த பந்தை எதிர்கொள்ள நின்றாரே,போட்டி முடிந்தபின் “இந்த இரட்டை சதத்தை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றாரே. அதுதான் சச்சின்.
36 வயதில் சச்சின் அடிக்கும் மூன்றாவது மிகப்பெரிய சதம் இது(இதற்கு முன் 2009ல் நியுசிக்கு எதிராக 163*,ஆஸிக்கு எதிராக 175) ரன்னர் இல்லாமல் 200 ரன்கள். ஒரு நாள் போட்டிகளில் அதிக  பவுண்டரிகள்(25) என்று சச்சினின்  சாதனை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இன்றைய போட்டியில் எந்த வித தவறும் செய்யாமல் சச்சின் விளையாடியதை பார்த்தபோது கைதேர்ந்த ஓவியனொருவன் மிகவேகமாகவும் நேர்த்தியாகவும் ஓவியம் தீட்டுவதை போலிருந்தது.

சிறிய வயதிலேயே தேசிய அணிக்கு விளையாட வந்துவிட்டதால் சச்சினால் அதிக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கமுடியவில்லை. ஒருவேளை அப்படி பங்கேற்றிருந்தால் பல பந்துவீச்சாளர்களை இந்தியா இழந்திருக்கும். ஜிம்பாவே அணிக்கெதிரான போட்டி ஒன்றில் சச்சின் விக்கெட்டை எடுத்தவுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து கும்மாளமிட்டார் ஒலாங்கோ. அடுத்த போட்டியில் அவரது பந்துவீச்சை சச்சின் அடித்த அடியில் ஒலாங்கோ அணியை விட்டே போனார்.
2002ல் சேவாக் புகழின் உச்சியில் இருந்த சமயம். இந்தியாவுக்கு எப்படியும் 2003 உலககோப்பையை அவர் வாங்கித் தந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தபோது பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த உலக கோப்பை போட்டிகள் அனைத்திலும் சேவாக் சோபிக்கவில்லை. உலககோப்பைக்கு முன்புவரை அமைதியாக இருந்த சச்சின் ஒவ்வொரு போட்டியிலும் ருத்ர தாண்டவமாடினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் வாயாடி கேடிக்கின் பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்து அதிர செய்தார். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் அடித்த 98 ரன்களை சாகும் வரை பாகிஸ்தான் வீரர்கள் மறக்கமாட்டார்கள் குறிப்பாக அக்தர்.
முப்பது வயதுக்கு மேல்தான் கவாஸ்கர் பல சாதனைகளை குவித்தார்.ஓய்வு பெறும்வரை பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ரிச்சர்ட்ஸ். தங்களது கடைசி நாட்களிலும் ரன்களை குவித்தவர்கள் பார்டரும்,ஸ்டீவ் வாக்கும். கடந்த இரண்டு வருடங்களில் சச்சினின் சராசரியும் சதங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இது சச்சினின் “Golden days” என்கிறார்கள் விமர்சகர்கள். அவர் ஓய்வு பெறும் வரை பந்துவீச்சாளர்களின் பாடு திண்டாட்டம்தான். அவரும் ஒரு நாள் ஓய்வு பெற்றுவிடுவார் என்பதை நினைக்கும்போது விழியோரம் நீர்த்துளிர்க்கிறது. நம் காலத்தின் மகத்தான நாயகன் சச்சின். அவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமைதானே.
பிராட்மென் விளையாடுவதை நேரில் பார்த்ததை தங்களது வாழ்நாளின் பொக்கிஷமாக கருதியவர்கள் உண்டு. அதேபோல் நாம் சச்சின் எனும் மாபெரும் கலைஞனை சாதனையின் சிகரங்களில் அவன் ஏறியபோது உடனிருந்து பார்த்து மகிழ்ந்திருந்தோம் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இன்னும் நாற்பது ஆண்டுகள் ஆனாலும் கிரிக்கெட் என்னும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சச்சின் என்கிற பெயர் எழுதப்படாமல் இருக்காது. கார்ரேஸுக்கு ஒரு ஷுமேக்கர்,டென்னிஸுக்கு ஒரு பெடரர்,கிரிக்கெட்டிற்கு ஒரு சச்சின்.விரைவில் சர் பட்டம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சச்சினிடம் இனியும் எதிர்பார்க்க என்ன இருக்கிறது? இரண்டு விஷயங்கள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. ஒன்று, டெஸ்ட் போட்டியில் இதுவரை சச்சின் 300 ரன்கள் அடித்ததில்லை. இரண்டு, இதுவரை எத்தனையோ கோப்பைகளையும் பதக்கங்களையும் ஸ்பரிசித்த சச்சினின்  கரங்கள் உலககோப்பையை ஸ்பரிசித்ததில்லை. இந்த இரண்டும் விரைவில் நடக்கும் என்று நம்பிக்கையுடன் இந்த மிகச்சிறந்த வீரனை  நம் காலத்தின் நாயகனை வாழ்த்துவோம். 
படித்ததில் பிடித்த சச்சின் வாசகம்:

"
Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there is something we don't know, something beyond scientific measure. Something that allows him to soar, to roam a territory of sport that, forget us, even those who are gifted enough to play alongside him cannot even fathom. When he goes out to bat, people switch on their television sets and switch off their lives."
- BBC Sports, on Sachin Tendulkar
-நிலாரசிகன்.

சிற்றிதழ்கள்

சிற்றிதழ்களின் முகவரி:

01 முங்காரி மாத இதழ் (குன்றம் மு.இராமரத்நம்) புலமைப் பண்ணை சுகர்கேன் அஞ்சல் கோவை - 641 007. தொலைபேசி 0422 2472777 அலைபேசி 98949 73071.

02 புன்னகை இரு மாத இதழ் (க.அம்சப்ரியா செ.ரமேஷ்குமார்) 68 பொள்ளாச்சி சாலை ஆனைமலை - 642 104. தொலைபேசி 04253 283017.

03 திராவிட ராணி மாத இதழ் (ஏ.எஸ்.மூர்த்தி) தபால் பெட்டி எண்.2102 சைதாப்பேட்டை சென்னை - 600 015. தொலைபேசி 044 24342508 அலைபேசி 98401 81279.

04 பொதிகை மின்னல் மாத இதழ் (வசீகரன்) மின்னல் கலைக்கூடம் 117 எல்டாம்ஸ் ரோடு சென்னை - 600 018. அலைபேசி 98414 36213.

05 ஏழைதாசன் மாத இதழ் (எஸ்.விஜயகுமார்) 26 அடப்பன்வயல் 8வது தெரு புதுக்கோட்டை - 622 002. தொலைபேசி 04322 226426 அலைபேசி 94427 76868

06 பயணம் மாத இதழ் (பி.கே.சுப்பிரமணி) மேலத்துலக்கங்குளம் மல்லாங்கிணர் வழி விருதுநகர் - 626 109. தொலைபேசி 04566 320134.

07 புதிய வைரம் மாத இதழ் (இளங்கவி அருள்) 19 கவிராஜன் குடில் காமராஜர் வீதி முருங்கப் பாக்கம் புதுச்சேரி - 4. அலைபேசி 99948 88811 93447 40511.

08 நவீன அகம்புறம் காலாண்டு இதழ் (பொ.செந்திலரசு) 5-311 இராசீபுரம் முதன்மைச் சால சே.பாப்பாரப்பட்டி அஞ்சல் சேலம் - 637 501. அலைபேசி 99425 76296.

09 நடுநிசி (ஹைக்கூ குறுந்தொகை) இருமாத இதழ் (பொள்ளாச்சி குமாரராஜன்) 2-138 ராஜ் நகர் சின்னம்பாளையம் பொள்ளாச்சி - 642 001. அலைபேசி 93459 29924.

10 இனிய நந்தவனம் மாத இதழ் (த.சந்திரசேகரன்) எண்.5 புதுத்தெரு சி.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரில் உறையுர் திருச்சி - 620 003. அலைபேசி 94432 84823.

11 பதியம் மாத இதழ் (பாரதிவாசன்) 252 பல்லடம் சாலை திருப்புர் - 4. தொலைபேசி 0421 2213093. அலைபேசி 98422 10538.

12 நம் உரத்த சிந்தனை மாத இதழ் தணிகாசல முதலி வீதி பெரம்புர் சென்னை - 17. அலைபேசி 94440 11105.

13 புதுவை கவிதை வானில் மாத இதழ் (திருமதி கலாவிசு) 6 வேலாயுதம் பிள்ளை வீதி முத்தியால் பேட்டை புதுச்சேரி - 3. அலைபேசி 98432 77764.

14 கரவொலி மாத இதழ் (மனோ தங்கராஜ்) 900 முதல் மாடி க்ரீன் தெரு கே.பி.சாலை நாகர்கோயில் - 629 001. தொலைபேசி 04652 226415. அலைபேசி 94434 50150.

15 மதுமலர் காலாண்டு இதழ் (வலம்புரி லேனா) முதன்மைச் சாலை திருவாலம்பொழில் - 613 103. தஞ்சை மாவட்டம். தொலைபேசி 04362 284751. அலைபேசி 98941 38439.

16 கிழக்கு வாசல் இதழ் 525 சத்யா இல்லம் மடப்புரம் - 614 715 திருத்துறைப்பூண்டி தொலைபேசி 04369 223292. அலைபேசி 94433 43292.

17 இப்படிக்கு மாத இதழ் 2 இளங்கோ தெரு அய்யாவ் நகர் திருச்சி - 620 021. அலைபேசி 99433 14111 94430 14111.

18 தச்சன் மாத இதழ் (இரா.நாகராஜன்) தெ`ணபாஸ்கரன் (ஸ்ரீ நாச்சி ஸ்டோர்ஸ்) 70-24 செல்வம் பாரடைஸ் அகத்தியர் தெரு தாம்பரம் கிழக்கு சென்னை - 600 059. அலைபேசி 98405 16052.

19 தீக்குச்சி மாத இதழ் (ஜெ.சிவா) ஞானப்பிரகாசியார் புரம் பேசும்புர் அஞ்சல் திண்டுக்கல் - 624 002. தொலைபேசி 0451 2402055.

20 விசும்பு மாத இதழ் (ஆர்.குமரிநாடன்) குறுக்கு வெட்டுச் சாலை புதுச்சாம்பள்ளி மேட்டூர் அணை - 636 403. தொலைபேசி 04298 222876 அலைபேசி 93644 20314.

21 உறவு மாத இதழ் (மஞ்சக்கல் உபேந்திரன்) அனுபமா எழில்நகர் அரும்பார்த்தபுரம் வில்லியனூர் புதுச்சேரி - 605 110. தொலைபேசி 2001512.

22 நீலாநிலா காலாண்டு இதழ் (சென்பகராஜன்) 23 கே.ஈ.எஸ். கிட்டங்கி தெரு விருதுநகர்-1. அலைபேசி 94420 94011.

23 மும்பை தூரிகை மாத இதழ் 501 ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ் செம்பூர் மும்பை - 400 071. அலைபேசி 98204 09142 98339 30347.

24 நாளை விடியும் மாத இதழ் 47 முருகன் இல்லம் பாரதிபுரம் முதல் தெரு கைலாசபுரம் அஞ்சல் திருச்சி - 14. அலைபேசி 94433 80139.

25 ஊற்று மாத இதழ் பெங்க;ர் தமிழ்ச் சங்கம் 59 அண்ணாசாமி முதலியார் தெரு பெங்க;ர் - 560 042. தொலைபேசி 080 25510063 25551357.

26 நட்பு மாத இதழ் (கவிஞர் தடாகத்தான்) 1-217 சின்னத்தடாகம் அஞ்சல் கோவை - 641 108. அலைபேசி 98441 02972.

27 எஸ்.பி.பி.போஸ்ட் மாத இதழ் (க.செ.கட்டிமுத்து) 22-எ முண்டகன் தெரு சிவகாசி 626 123. அலைபேசி 98421 29198 98424 39198.

28 புன்முறுவல் மாத இதழ் (கவிஞர் தடாகத்தான்) 1-204 சின்னத்தடாகம் அஞ்சல் கோவை - 641 108.

29 சமுதாயப் பகுத்தறிவு இதழ் (கா.நாராயணசாமி)ஈ புதிய எண். 225 முதல் வீதி காந்திபுரம் கோவை-12. தொலைபேசி 0422 2492016.

30 சௌந்தர சுகன் இதழ் (க.சௌந்தரவதனா) சுகன் அம்மாவீடு சி-46. 2ஆம் தெரு நகராட்சி குடியிருப்பு தஞ்சாவுர் - 613 007. தொலைபேசி 04362 241607. அலைபேசி 98945 48464.பின்குறிப்பு: இவை முன்பு எப்போதோ சேகரித்தவை சில இதழ்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம்.

Monday, February 22, 2010

Straight Driveபலாபட்டறை சங்கர் தொடரச் சொன்னதால் இந்தப் பதிவு.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய   அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

1. பிடித்த கிரிக்கெட் வீரர்? (கள்?) : “The Great” SRT,விவியன் ரிச்சர்ட்ஸ்,கெவின் பீட்டர்சன்,ஸ்ரீகாந்த்,சேவாக்,அக்தர்,ஸ்டீபன் ப்ளெம்மிங்,ஜெகன்(எங்கள் ஊர்கார ஓபனிங் பேட்ஸ்மென்)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்?(கள்?): ரிக்கி பான்டிங்,ஜெயசூர்யா,அமீர் சோகைல்

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் :கர்ட்லி அம்புரோஸ்,(இந்தியாவுக்கு எதிராக விக்கெட் எடுத்தாலும், Fast & Fuirous), ஸ்ரீநாத்

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : மெக்ராத்,வாஸ்,வெங்கடேஷ் பிரசாத்,
5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் :ஷேன் வார்னும்,நானும்.

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : சக்லைன் முஷ்டாக்(1999ல் சென்னை டெஸ்ட் போட்டியில் தலைவரின் விக்கெட்டை எடுத்ததால்)

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : “The Great” SRT, சேவாக்,விவியன் ரிச்சர்ட்ஸ்,ட்ராவிட்,அசார்,லஷ்மண்,ஜடேஜா, சு.ராஜ்(என் பால்ய தோழன்)

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் :  மனோஜ் பிரபாகர்,ரிக்கி பான்டிங்,

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா, கில்கிறிஸ்ட்,யுவ்ராஜ்,

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் :  ஹெய்டன்,ஜெயசூர்யா,சந்தர்பால்

11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ்,காலிங்வுட்,கய்ப்,

12. பிடிக்காத களத்தடுப்பாளர் : லஷ்மன்,கங்குலி,பான்டிங்

13. பிடித்த ஆல்ரவுண்டர் : ராபின் சிங்,ரிச்சர்ட் ஹாட்லி,
 .
14. பிடித்த நடுவர் : டிக்கி பேர்ட், பில்லி பொவ்டன்

15. பிடிக்காத நடுவர் : மறக்காமல் தலைவர் விக்கெட்டை எடுக்கும் ஆஸியின் பன்னிரண்டாவது வீரர் ஸ்டீவ் பக்னர்.(நல்லவேளை ஓய்வு பெற்றுவிட்டார்)

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : ,டோனிகிரேக்,ரவி சாஸ்த்திரி ,சித்து

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : சிவராமகிருஷ்ணன்

18. பிடித்த அணி : இந்தியா, மே.இ.தீவுகள்,நியுசிலாந்து

19. பிடிக்காத அணி : ஆஸி,வங்கதேசம்

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- இங்கிலாந்து/ஆஸி, இந்தியா/மே.இந்.தீவுகள்

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- கிரிக்கெட்டில் பிடிக்காதது என்று எதுவுமேயில்லை. ஆப்கானிஸ்தான் அமீரகம் போட்டியானாலும் பிடிக்கும்.

22. பிடித்த அணி தலைவர் :ஸ்டீபன் ப்ளெம்மிங்,ரணதுங்கா,கங்குலி


23. பிடிக்காத அணித்தலைவர் : ரிக்கி பான்டிங்,அசார்

24. பிடித்த போட்டி வகை :டெஸ்ட் மேட்ச்,2020

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், , சேவாக்-காம்பிர்,ஸ்ரீகாந்த்-கவாஸ்கர்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : அருண் – ஆறுமுகம் (கல்லூரியில் ஆரம்ப ஜோடி. ஜோடியாய் உள்ளே போவார்கள் ஜோடியாய் வெளியே வருவார்கள். ஒரு ஓவர் முடிந்திருக்கும்)

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : சேவாக் ,சச்சின்.ட்ராவிட்,கவாஸ்கர்,லாரா.

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : பிராட்மென்,சோபர்ஸ்,
தொடர் பதிவுக்கு இருவரை அழைக்கிறேன்
விரும்பும் மற்றவர்களும் தொடரலாம் :)

Sunday, February 21, 2010

தாமரைக்காடு

அமிர்தம் சூர்யாவின் "கடவுளைக் கண்டுபிடிப்பவன்" சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள தாமரைக்காடு என்கிற சிறுகதை மிகவும் கவர்ந்தது. தற்போது வலையுலகிலும் காலடி பதித்திருக்கிறார்.தீவிர படைப்பாளிகளின் வருகை வலையுலக வாசிப்பை அர்த்தமுள்ளதாக்குகிறது.
இங்கே அவரது படைப்புகளை வாசிக்கலாம்.

Saturday, February 20, 2010

சச்சின் எனும் மாவீரன்!![2009ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் மட்டையாளராக சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்திருக்கிறது கிரிக்இன்போ.ஆஸிக்கு எதிராக 175 ரன்கள் அடித்த போட்டிக்காக. அப்போது எழுதிய இந்தப்பதிவை மீள்பிரசுரம் செய்வதில் மகிழ்கிறேன்.நம் மாவீரன் சச்சின்னுக்கு வாழ்த்துகள்]

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டுமெனில் முதலில் அவர்கள் அவுட் ஆக்க நினைப்பது
லட்சுமணனை. இந்தியாவை ஒருநாள் போட்டிகளில் தோற்கடிக்க நினைத்தால் முதலில் எடுக்க விரும்பும் விக்கெட் சந்தேகமில்லாமல்
சச்சினைத்தான். இன்று நடந்த போட்டியையும் சேர்த்தால் இதுவரை ஒன்பது சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே சச்சின் அடித்திருக்கிறார்.

முதல் பேட் செய்த ஆஸி.வீரர்கள் 350 ரன்களை குவித்தபோது கடைசி பந்தில் அவுட்டானார் கேமரூன் ஒயிட். அந்த பந்து தஞ்சமடைந்தது சச்சினின் கைகளில். பிடித்தவுடன் கோபத்தில் பந்தை தரையில் அவர் எறிந்தபோதே அவரது ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள் இன்றொரு ருத்ரதாண்டவம் இருக்கிறதென்று!! ஏனெனில் சச்சின் கோபப்படுவது மிக அபூர்வம்.

ஷார்ஜாவில் பதினோரு வருடங்களுக்கு(1998) முன்பு சச்சின் அடித்த அடியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது.காரணம், அவர் அடித்த இரண்டு சதங்களால்தான் இந்தியாவுக்கு அந்த கோப்பை கிடைத்தது என்பதை காட்டிலும் அந்த இரு சதங்களை எப்படி அவர் அடித்தார் என்பதே ஆகும். காஸ்பரோவிச் என்னும் ஆஸி பவுலரை அவர் அடித்த அடியில் சில வருடம் அவரை ஆஸி அணியிலேயே காணமுடியவில்லை. எதிர்முனையிலிருந்து லட்சுமணன் இரண்டாவது ரன் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் ஒரு ரன்னோடு நின்றுவிட்டார். புயலனெ விளையாடிக்கொண்டிருந்த சச்சின் வேகமாக சென்று லட்சுமணனிடம் இப்படி சொன்னார் "ஓட முடியாவிட்டால் ஏன் கிரிக்கெட் விளையாட வந்தாய்?" காரணம் அது இறுதிபோட்டி.

பைனலில் ஆஸி இந்தியாவிடம் தோற்ற போது ஸ்டீவ் வாக் சொன்னார் "It was one of the greatest innings I have ever seen. There is no shame being beaten by such a great player, Sachin is perhaps only next to the Don."


தனது சட்டையை கழற்றி சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஷேன் வார்ன் புலம்பி்யது இப்படி:

"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player"


2004ல் சச்சின் சற்று சறுக்கியபோது
Times of India பத்திரிகை அவரது கார்டூனை முதல் பக்கத்தில் வெளியிட்டு "END-DULKAR?" என்று ஏளனம் செய்தது. அப்போதும் சச்சின் அமைதியாகவே இருந்தார். அதன்பிறகான ஒரு போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த 140 ரன்கள் சச்சினுக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது என்பதை உணர்த்தி பத்திரிகைகளை வாயடைக்க செய்தது.

விழுகின்ற போதெல்லாம் விழுந்துவிட்டோம் என்று கலங்கி ஒதுங்கி விடும் கிரிக்கெட் உலகில் விழுவதே எழுவதற்காகத்தான் என்பதை சச்சின் நிரூபித்துக்கொண்டே இருப்பார்.

இந்த முறை ஆஸிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சற்று தடுமாறிவுடன் வழக்கம்போல் பத்திரிகைகள் சச்சின் தேவையா என்று எழுத ஆரம்பித்தன. மூன்றாவது போட்டியில் எதிர்பாராத ரன் அவுட்(பவுலர் மறைத்துக்கொண்டதால்) என்றபோது அவர் அடித்த 32 ரன்கள் அடுத்த போட்டிக்கான விதையாகவே எல்லோர் மனதிலும் விழுந்தது. நான்காவது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் எடுத்த நிலையில் "பக்னர்" ஞாபகத்தில் நின்ற நடுவரால் தவறுதலாக எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டபோது சச்சினுக்காக பரிதாப பட மட்டுமே முடிந்தது.

ஆனால் இன்று?

19 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள்,141 பந்தில் 175 ரன்கள்! ஆஸி அணி கடைசில் ஜெயித்தாலும் மனதளவில் வெற்றி இந்தியாவுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை. எங்கள் தேசத்தின் இணையற்ற விளையாட்டு வீரனின் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆஸி ரசிகர்கள்கூட கொண்டாடி இருப்பார்கள்!
36 வயதில், சேசிங் செய்யும்போது 175 ரன்கள் என்பதெல்லாம் எல்லா விளையாட்டு வீரனாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. Good க்கும் Greatக்குமான வித்தியாசத்தை இங்கே நாம் அறிந்துகொள்ளலாம்.

சென்னையில் 1999ல் பாக் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகுந்த முதுகு வலியுடன் சச்சின் இந்தியாவை வெற்றியை நோக்கி இழுத்துச்சென்றார். எதிர்பாராதவிதமாக 15க்கும் குறைவான ரன்கள் தேவைபடும்போது சக்லைன் முஷ்டாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்கே உரித்தான "வாக் ஷோ" நடந்தேறியது. பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெற்றி பெற வேண்டிய இந்திய அணி தோல்வியை தழுவியது. ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்த தோல்வியை தாங்க முடியாத சச்சின் கதறி அழுததாக உடனிருந்தவர்கள் பின்னாட்களில் வருத்தத்தோடு சொன்னார்கள்.இன்றும் அது நடந்திருக்கலாம். ஒரு மகாவீரனின் கண்ணீர்துளிகள் அவனை அறியாமலேயே பல வித்துக்களை உருவாக்குகிறது.அவரது கண்ணீரின் வலிமை இனி வரும் இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் என்பதை வெகு நிச்சயமாக நமக்கு உணர்த்துகிறது.

சச்சினின் விளையாட்டை பார்த்தே கிரிக்கெட் மீது ஆர்வமாகி விளையாட வந்த கிரிக்கெட் வீரர்கள் பலர். சேவாக்,யுவராஜ்,தோனி போன்ற அதிரடி கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் தான் காட்பாதர்.

சச்சினின் விளையாட்டை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்கள் பலகோடி மக்கள். 90களில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்துவிட்டு மறுநாள் செய்திதாளில் இந்தியா தோற்றதை அறிந்துகொள்ளலாம்.

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அவருக்கு அடுத்ததாக களமிறங்கவேண்டிய அசாரூதின் பெஞ்சில் அமர்ந்து உறங்கி கொண்டிருப்பார்.எப்படியும் சச்சின் உடனே அவுட் ஆகபோவதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.

1999ல் பாக்கிஸ்தானிடம் தோற்ற ரணத்தை அதற்கு பழிதீர்க்கும் விதமாக 2003 உலககோப்பையில் தீர்த்துக்கொண்டார் சச்சின். அவர் அடித்த அடியில் தன்னை இனி பந்துவீச அழைக்க வேண்டாம் என்று வாக்கார் யூனிஸிடம் கெஞ்சினார் சோயிப் அக்தர்!! எத்தனையோ சதங்களை சச்சின் விளாசி இருந்தாலும் அந்த போட்டியில் அடித்த 97 ரன்கள் One of the best innings for the Little Master!!

இன்றைய சச்சினின் ருத்ரதாண்டவத்தை ஆஸியின் புதிய வீரர்கள் இதற்கு முன் பாத்திருக்கவில்லை(பாண்டிங்கை தவிர) மயிரிழையில் ஜெயித்தபோதும் இனி வரும் போட்டிகளில் இந்த மாவீரனை எப்படி எதிர்கொள்வது என்பதே இப்போது அவர்களது கவலையாக இருக்கும்.

வெகு நாட்கள் கழித்து "பழைய" சச்சினை பார்த்த ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு மிஞ்சி இருக்கும் இருபோட்டிகளை இந்தியா வெல்ல சச்சின் காரணமாக இருக்கவேண்டும் என்பதுதான்.

சச்சினின் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போ,முதுகுவலி இப்படி நிறைய. ஆனாலும் தொடர்ந்து சச்சின் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரே ஒரு காரணம் அது 2011 உலககோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தர வேண்டும் என்கிற வெறி.

2003 உலககோப்பையை வெல்ல இந்திய அணியினர் 100% போராடியபோதும் சச்சின் மட்டும் 200% போராடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கறுப்பு தினத்தில் ஆஸியிடம் பைனலில் தோற்றபோது சச்சினை தொடரின் ஆட்டநாயகன் விருதை வாங்க அழைத்தார்கள். அப்போது மேடையேறிய சச்சினின் கவலைதோய்ந்த முகத்தை இன்றுவரை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த Agony மாறும் 2011ல்.

ஒரு மிகச்சிறந்த சச்சின் - வாசகத்தோடு இதை நிறைவுசெய்கிறேன்.

"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching."


-நிலாரசிகன்.

Friday, February 19, 2010

நிலாத்துளிகள்1.வாடாத மலர்கள் என்றொரு வலைப்பூவை துவங்கியிருக்கிறார்கள் எழுத்தாளர் மாதவராஜும்,வடகரை வேலனும். வாழ்த்துகளோடு விமர்சனமும் அனுப்பலாம்.

2.இனி அடிக்கடி ஈடன் காடர்ன்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டி எதிர்பார்க்கலாம். இணைப்பாக  லஷ்மணனின் சதமும்,ஹர்பஜனின் சுழலும்.

3.வலைப்பதிவர் யோசிப்பவரின் “ஒரே ஒரு காலயந்திரத்தில்” சிறுகதை நூல் வாசித்தேன். சுஜாதாவிற்கு பிறகு அறிவியல் புனை கதைகளில் யோசிப்பவரின் பெயரும் இடம் பெறும் என்று சத்தியம் செய்தேன்.

4.கூகிள் பஸ்ஸ்(buzz) புஸ்வானமா சரவெடியா என்று இப்போது யூகிக்க முடியவில்லை. டுவிட்டர் அளவு நேரம்தின்னியாக இருக்குமென்று தோன்றவில்லை.

5.கேணி இலக்கிய சந்திப்பில் ஜெயமோகனின் பேச்சு பலரை கவர்ந்தது. இதுவரை நடந்த கூட்டத்திலேயே இதுதான் சிறந்ததொரு விவாதக் களமாக இருந்ததாக தோன்றுகிறது.

6.விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களில் “தொலைதூரத்தில் வெளிச்சம் நீ” என்கிற வரியை ஏ.ஆர்.ரகுமான் தவிர வேறு யாராலும் இத்தனை உணர்வுபூர்வமாக பாடியிருக்க முடியுமா எனத் தெரியவில்லை. படம் அதிக ஆவலை தூண்டியிருக்கிறது.

7.கூகிள் அகராதி சேவையில் ஆங்கிலம் – தமிழ் அர்த்தம் அறிந்துகொள்ளலாம். சுட்டி : http://www.google.com/dictionary

8.ராஜா சந்திரசேகரின் இந்தக்  கவிதை அதிகம் கவர்ந்தது. வாசித்து முடித்தபின்னும் பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது வயலின் இசை.

9.இம்மாதம் பதிவர் சிவராமன் அவர்களின் உலக திரைப்படம் திரையிடலுக்கு சென்றிருந்தேன். அவர் வாங்கித் தந்த தேநீர் போலவே படமும் இனித்தது.

10.அடலேறு வலைப்பக்கத்தில் நளினி ஜமீலாவின் நேர்காணல் மிக அற்புதம். இத்தனை இளம் வயதில் இப்படியொரு நேர்காணல் எடுக்க தோன்றியிருக்கிறதே அதற்காகவே அடலேறுவுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

-நிலாரசிகன்.

Thursday, February 18, 2010

நதிகால்கள் இழந்த கிழவனொருவன்
ஊர்ந்து செல்லும் வழியெங்கும்
கற்களை பொறுக்கியபடி செல்கிறான்.
அவனது கூடையை நிரப்புகின்றன
கருங்கற்கள்.
நதிக்கரையை அடைந்தவுடன் ஒவ்வொரு
கற்களாக நீரில் எறிந்து மகிழ்கிறான்.
கற்கள் எழுப்பும் அலைகளில் .
மெல்ல கால் முளைத்து
பால்யத்திற்குள் நுழைகிறான்.
தாய்மையின்
சாயலுடன் மிதந்தபடி நகர்கிறது
அந்நதி.
- நிலாரசிகன்

Tuesday, February 16, 2010

Outsourced - திரைவிமர்சனம்வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கென தரப்படும் பயிற்சியில் மிக முக்கியமானது Cross Culture Program என்றழைக்கப்படும் எதிர்கலாச்சாரத்தை பற்றிய பயிற்சி. குறிப்பாக அமெரிக்கா போன்ற வளர்நத நாடுகளுக்கு செல்லும் இந்திய பணியாளன் கவனத்தில் கொள்ளவேண்டிய பலவிஷயங்கள் இந்தப் பயிற்சியில் கற்றுத்தரப்படும். இந்த பயிற்சியில் ஈடுபடாமல் அமெரிக்காவுக்கு முதல் முறையாக செல்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். நான் சியாட்டலில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இன்றும் சிரிப்பை வரவழைக்கிறது. அமெரிக்காவில் அடியெடுத்து வைத்து ஒரு மாதம் கழித்து என் டீமிற்கு புதியதாக ஒருவனை இந்தியாவிலிருந்து அனுப்பியது என் நிறுவனம். CC Program ல் கலந்துகொள்ளாமல் அவசரமாக அமெரிக்கா வந்துவிட்டான். ஒரு நாள்  அவனுடன் நண்பர்கள் சிலர் STAPLES கடைக்கு சென்றோம். பேனாக்களும் பென்சிலும் வாங்கிவிட்டு நேராக கல்லாவிலிருந்த வெள்ளைக்காரியிடம் "ரப்பர் எங்கே இருக்கிறது" என்று கேட்க அவள் இங்கே நாங்கள் ரப்பர் விற்பதில்லை என்று சொல்லியிருக்கிறாள். பென்சில்,ஸ்கேல் எல்லாம் விற்கிறீர்கள் ஏன் ரப்பர் விற்பதில்லை என்று இவன் அப்பாவித்தனமாய் கேட்க "பென்சிலுக்கும் ரப்பருக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டுச் சிரித்திருக்கிறாள். குழம்பியவன் என்னிடம் வந்தபோது நானும் நண்பர்களும் விழுந்து விழுந்து சிரித்தோம். ரப்பர் என்றால் அமெரிக்காவில் ஆணுறை என்று பொருள். இன்றும் அவனுடைய செல்லப்பெயர் ரப்பர்தான்.

இந்தத் திரைப்படமும் எதிர்கலாச்சாரத்தை மையக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டதுதான். அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் ஒரு அமெரிக்க பணியாளன் சந்திக்கும் இடர்கள்,சவால்கள்,மனிதர்கள் பற்றியது. டாட் என்கிற அமெரிக்க பணியாளனை அவனது நிறுவனம் இந்தியாவிலிருக்கும் கிளைக்கு அனுப்புகிறது.
இந்தியாவில் இருப்பது அவர்களுடைய கால்சென் டர். இந்திய பணியாளர்களுக்கு அமெரிக்க உச்சரிப்பை பற்றியும் கஸ்டமர்களிடம் பேசும் முறை பற்றியும் விவரிப்பது டாட்டின் வேலை.

Toddஐ Toad என்று உச்சரிப்பதில் ஆரம்பிக்கும் நகைச்சுவை பல இடங்களில் வாய்விட்டு நம்மை சிரிக்க வைக்கிறது. டாக்ஸி என்று நினைத்து ஒரு ஆட்டோக்காரனிடம் ஏமாறுவதும்,ஓடுகின்ற ரயிலில் டாட் ஏறுவதும் சிறுவனொருவன் ரயிலில் உட்கார இடம் தந்துவிட்டு டோடின் மடியிலேயே உட்கார்ந்துகொள்வதும் வெடிச்சிரிப்பை வர வைக்கும் காட்சிகள். காராபுரி என்கிற சிற்றூரில் இருக்கும் கால்சென்டருக்கு டோட் பயிற்சியாளராக வருகிறார். அங்கே வேலை செய்யும் ஆஷா என்ற பெண்ணுடன் இணக்கம் ஏற்பட்டு உறவில் முடிகிறது. அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை திரையில் காண்க.

படத்தின் + :

டோடாக நடித்திருக்கும் நடிகரின் முக பாவங்கள் பெரிதும் கவர்கின்ற்ன. கலாச்சார வேற்றுமையின்போது எதிர்கொள்ளும் சமாளிப்புகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்திய டாய்லெட்டில் பேப்பர் இல்லாமல் இடதுகையை பார்க்கும் போதும் டோடின் நடிப்பு அற்புதம். இந்திய கால்சென்டரின் மேலாளராக வருபவரின் நடிப்பு.ஒளிப்பதிவில் ஒரு சேரியை கண்முன் கொண்டுவந்திருக்கும் விதம் மிக அருமை.

படத்தில் தென்பட்ட குப்பைகள்:

1.கதாநாயகி தேர்வு
2.இசை (இம்சை)
3.இந்தியாவில் எந்த கால்சென்டரில் மாடு கட்டியிருக்கிறார்கள்?
4.தனி அறையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் நம் இந்திய கதாநாயகி காமலீலைகளில் விளையாடுகிறார். காமசூத்திரம் நூலை படித்துவிட்டு இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா என்கிறார். எல்லாம் முடிந்தவுடன் இதை நாங்கள் "ஹாலிடே இன் கோவா" என்போம் என்கிறார். இத்திரைப்படம் பார்க்கும் மேலைநாட்டவர்கள் இந்தியபெண்கள் அனைவரும் இப்படித்தான் என்கிற முடிவுக்கு வரும் அபாயம் இருக்கிறது.

மொத்தத்தில் ஒரு நல்ல கதைக்கருவை சொதப்பலான திரைக்கதையால் வீணடித்திருக்கிறார்கள். கதாநாயகனின் அப்பாவித்தனமான நடிப்புக்காக ஒரு முறை பார்க்கலாம்.

வெளியான ஆண்டு: 2006
மொழி: ஆங்கிலம்
நீளம்: 103 நிமிடங்கள்

-நிலாரசிகன்.

Monday, February 15, 2010

பூக்களின் சினேகிதிக்கு...

 
1.
எப்பொழுதும்
மூன்று கற்களை கொண்டுவருகிறாய்.
எதற்காக இந்தக் கற்கள் என்கிற
கேள்விக்கு பதிலில்லை உன்னிடம்.
புன்னகை உதிரும் தருணத்தில்
வெள்ளையாகவும்
கண்ணீர் உதிரும் கணத்தில்
கருமை நிறமாகவும் அவை மாறுகின்றன.
உனக்கென வெகுநேரம்
காத்திருந்தவனின்
புன்னகையை நீ கொல்லும்போது
சிகப்பாக மாறிவிடுகின்றன.
பின்,
எனக்கும் இதயம் இருக்கிறது
என்று நீ அழும் பொழுதில்
எனக்குள் துடிக்கும் சிகப்புக்கல்
உடைந்து உதிர துவங்குகிறது.

2.
காற்றில்லாத குமிழிக்குள்
அமர்ந்திருக்கிறேன்.
உலகிலிருந்து துண்டிக்கப்பட்ட
பிரக்ஞையின்றி கழிகிறதென் பொழுதுகள்.
எதிர்பார்ப்பின் அர்த்தங்களும்
காத்திருப்பின் அபத்தங்களும்
சிறு சிறு முட்களாய் உடலை கிழிக்கின்றன.
குருதி நதியென ஓடுகையில்
எனக்கான காற்றை
சுமந்து வருகிறாய்.
தொலைவில்,
வெக்கையில் கருகிய பூச்செடியில்
விழுந்து விம்முகிறது
முதல் மழைத்துளி.
-நிலாரசிகன்.

Sunday, February 14, 2010

நத்தையுடன் கழிந்த பொழுதுகள்
முதலில் அது நத்தை என்றே
எண்ணியிருந்தேன்.
பின்
சிறகுகள்
முளைக்கத்துவங்கியபோது
பட்டாம்பூச்சியோ என்று வியந்தேன்
ஆனால் அதுவொரு
சிட்டுக்குருவியை போலிருந்தது.
அறைக்குள் அங்குமிங்கும்
பறந்து
வினோத ஒலியெழுப்பியபடி
இருந்தது.
சற்று நேரத்தில் அறையெங்கும்
அதன் எச்சத்தால் நிரப்பிவிட்டு
கூரையை பிய்த்து எறிந்து பறந்து சென்றது.
இப்படித்தான் நிகழ்ந்தது உன்
வருகையும்
இருத்தலும்
பிரிதலும்.

Wednesday, February 10, 2010

மூன்று கவிதைகள்

 
1.

நீ தந்த பாடல்களில்தான்
அவன் ஒளிந்திருந்தான்.

நீ தந்த கனவுகளில்தான்
அவன் உருப்பெற்றான்.

நீ தந்த முத்தத்தில்தான்
அவன் அனலாகினான்.

நீ தந்த பிரிவில்தான்
அவன் புன்னகைத்தான்.

அந்த புன்னகையில்தான்
நிகழ்ந்தது
எங்கள் மரணமும்.

2.

சிறகில்லாத பறவையின்
வலியை பற்றிய உனது விவரிப்புகளில்
கடைசிவரை இடம்பெறவேயில்லை
வானம்.
நான்.
நாம்.
மற்றும்
முகம் மறைத்து அழும்
சில ப்ரியங்கள்.

3.
உனது தடங்களில் பயணிக்கிறது
நாளை  பொழியும்
மழைநீர்.
பிரிதலை சொல்லி அழுகின்றன
நாளைய காகங்கள்.
கடிகாரமுள் தன் பயணத்தை
பின்னோக்கி தொடர்ந்த
கணத்தில்
உனக்கான எனது
காத்திருப்பின் வலி மீது
வந்தமர்கிறது காற்றில்
அலையும் இறகொன்று. 


- நிலாரசிகன்
Monday, February 08, 2010

குறும்படம்: பார்த்ததில் பிடித்தது

http://www.youtube.com/watch?v=-jckhTr8wgk

நிதர்சனகுறிப்பு:

இதை பார்க்கும் போது எழுந்து நிற்காதவர்களில் நானுமொருவன்.

Saturday, February 06, 2010

ஜெயமோகனின் "வாழ்விலே ஒரு முறை"

ஜெயமோகனின் "வாழ்விலே ஒரு முறை" நூலில் ஒரு பகுதி, அவர் அவரது டைரியில் எழுதி வைத்திருந்த சில வரிகள்.
கவிதையாகவும் ஆகாமல், கதையிலும் உபயோகிக்க இயலாத வரிகள். அதில் சில மிக
அருமையாக இருந்தன. அவற்றில் சில....

* எதிர்காற்றில் நடந்துவரும் சுடிதார்ப் பெண்போல் என் மொழியில் என் சுயம்
வெளிப்பட வேண்டும், தெரியக்கூடாது.

* பரதநாட்டிய உடையில் சந்தைக்கு போகமுடியாதென யாராவது நம்
கவிஞர்களுக்குச் சொல்லக்கூடாதா?

* மென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல்தான் அதற்கு எத்தனை பாரம்!

* உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக்
கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.

* யானை குனிந்துகொள்ளுமென நம்பி மரக்கிளையில் மண்டை இடித்துக் கொண்ட ஒரு
யானை பாகனை நான் அறிவேன்.

* சிந்தனையாளர்களை ஒற்றை மேற்கோளாக மாற்றிவிடுகிறோம், மரத்தை
பின்னோக்கித் தள்ளி விதையாக்குவது போல.

* கண்ணில்லாதவர் முறித்து தாண்டும் சாலையில் ஓடிக் கொண்டிருப்பவை, ஒலிகள்.

* ரயில் முழக்கம் ஒரு காதசைவுக்கு மட்டுமே என நினைக்கும் சேற்றெருமையின்
உலகில்தான் எத்தனை நிம்மதி.

* அம்மாவை அசடாக எண்ணிக் கொள்வதற்கு அவள் பாசம் தான் காரணமா?

* முற்போக்கு இலக்கியத்திற்கும் அரசாங்கப் பிரசாரத்திற்கும் இடையேயான
வேறுபாடு என்னவென்றால் முன்னதற்கு அரசாங்கம் இல்லை.

* மலைத்தொடருக்கு முன்னால் நின்று முணுமுணுத்துக் கொண்டேன் நான் நான் என்று.

* ஓடும் பேருந்தின் ஓரத்து வீடுகளிலெல்லாம் ஒரு கணம் வாழ்ந்து வாழ்ந்து சென்றேன்

(இந்நூலை அறிமுகபடுத்திய நண்பன் சித்தார்த்துக்கு நன்றி. இது 2008ல் எழுதப்பட்டது.மீள் இடுகை)

Friday, February 05, 2010

சித்தரிப்புகள்
1.
சாத்தானின் மொழி பேசுகிறேன்
ஒழுங்கின்மையில் தளும்பி
கூத்தாடுகிறேன்
திருடனை ஒத்திருக்கிறது என்
முகம்.
பித்தனாக அலைகிறதென் நிழல்
கோரத்தாண்டவமாடுகிற சொற்களை
உடைவாளாக கொண்டிருக்கிறேன்
தவிர்த்தலை மட்டுமே
விரும்புகிறேன்
காயங்களை அள்ளித்தந்து மகிழ்கிறேன்
உனது சித்தரிப்புகளில்
இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.


2.
முதல் சந்திப்பு
கற்பின் அர்த்தம்
முழுமை பெறாத முத்தம்
மறைக்கப்பட்ட சில நிஜங்கள்
கொஞ்சம் போலித்தனம்
பகிரப்படாத ப்ரியம்
இவை எதை பற்றியாவது
பேசுவோம் எப்போதும்.
சீ
தூ
கவிதையாவது மண்ணாங்கட்டியாவது.


3.

நம்பிக்கையில்லா
மனதின் சித்தரிப்புகளால்
நிகழ்கிறது
ஓர் உறவை தவற விடுதலுக்கான
சாத்தியங்கள்.
பறவையொன்றின் கூட்டை பிய்த்து
எறிகின்ற கொடூரத்திற்கு
சமமானவை இச்சித்தரிப்புகள்.
தவறேதும் செய்துவிடாமல்
திருட்டுப்பட்டம் சூட்டப்படுகின்ற
குழந்தைகளாக வீதியில்
கிடக்கின்றன 
இருள் நிறைந்த ப்ரியங்கள்.


- நிலாரசிகன்.

Wednesday, February 03, 2010

கவிஞர்களின் கவனத்திற்கு:

 

டந்த பத்து ஆண்டுகளாக பொள்ளாச்சியிலிருந்து கவிதைக்கென வெளிவரும் சிற்றிதழ்
“புன்னகை” . இதன் அறுபதாவது இதழ் வெளியீட்டை முன்னிட்டு அறுபது கவிஞர்களின் கவிதைகளை வெளியிட இதழின் ஆசிரியர் க.அம்சப்ரியா முடிவெடுத்திருக்கிறார்.
கவிதைகளை அனுப்ப விரும்பும் கவிஞர்கள்/இணைய எழுத்தாளர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
 kavithai.amsapriya@gmail.com
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 15 – பிப்ரவரி – 2010. கவிதைகளை யுனிக்கோடில் மட்டுமே அனுப்பவும்.
மேலதிக தகவலுக்கு பின்னூட்டமிடலாம்.
-நிலாரசிகன்.