Monday, March 29, 2010

வசந்தபாலனுக்கு....தவிர்த்தலின் வலியை வெக்கையும் வியர்வையுமாக தன் முதல் படைப்பில் பதிவு செய்தவர் வசந்தபாலன். வெயில் தந்த உணர்வுகளுடன் அங்காடித்தெருவுக்கான காத்திருப்பு நீண்டது. படம் வெளியான உடனே விமர்சனம் படித்துவிட்டு போகலாம் என்று நினைத்தபோது ஏதோவொன்று தடுத்தது. விமர்சனங்கள் முன்முடிவுகளுக்கு நம்மை ஆழ்த்திவிடும் என்பதால் விமர்சனம் எதுவும் படித்திடாமல் திரையரங்கம் சென்றேன். சென்னையின் ஏசி தியேட்டருக்குள் பாப்கார்னும்,கோலாவும் அருந்தியபடி பார்க்கும் பொழுதுபோக்கு சித்திரம் இதுவல்ல என்பது சுவரொட்டிகளிலேயே உணர்ந்து கொள்ள முடிந்தது.தூத்துக்குடியில் இரவுக்காட்சிக்கு நானும் நண்பர்களும் சென்றபோது வேலை முடிந்த களைப்பிலும் படம் பார்க்க வந்திருந்த கூட்டம் ஆச்சர்யமளித்தது.

படம் ஆரம்பித்து முடியும் வரை எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளே இப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் இது படமல்ல வாழ்க்கை என்பதை நம் மனதில் அழுத்தமாக பதியவைத்திருக்கிறார் வசந்தபாலன். அதனால்தான் இட்டமொழி கிராமத்தின் தேரி வாழ்க்கையையும் சென்னையின் குரூர வாழ்க்கையையும் நேர்கோட்டில் அவரால் படைப்பாக்க முடிந்திருக்கிறது.

குத்துப்பாடலால் நிரம்பிய முதல் காட்சியை பார்த்துப் பழகிய கண்களுக்கு இரண்டு இளம் உயிர்கள் கால்களால் விளையாடும் அதிஅற்புதமான காதல்காட்சியும் தி.நகரில் அவர்கள் ஓடித்திரியும் இரவுக்காட்சியும் புதுமை கலந்த விருந்தை முன்வைக்கின்றன. இந்த இடத்தில் காமெடி இந்த இடத்தில் நான்கு சண்டைகள் என்று பார்த்து பார்த்து சலித்த தமிழ்சினிமாவை மற்றொரு தளத்திற்கு நகர்த்திச் செல்வதில் வசந்தபாலன் மிக முக்கியமானவர். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நகரத்தின் கொடூர கரங்களில் சிக்கி அழிகின்ற கிராமத்து இளைஞர்களை படமாக்கியிருக்கிறார்.

இப்படத்தின் சிறந்த காட்சிகளாக/வசந்தபாலனின் நுட்பங்களாக எனக்குத் தோன்றியவை:

 1. பிச்சை எடுப்பவன் சாதாரண கழிப்பறையை கட்டண கழிப்பறையாக மாற்றும் காட்சிகள்.
 2. குள்ளன்,அவன் மனைவி,அந்தக் கிழவன்
 3. சோப்பி
 4. தற்கொலை செய்துகொள்ளும் பெண் இறப்பதற்கு முன் வெளிப்படுத்தும் அபார நடிப்பு
 5. கொடுமைக்கார அண்ணாச்சி
 6. கதாநாயக/நாயகியின் தங்கைகள்.
 7. அண்ணாச்சியின் ரிங்டோன்
 8. கதாநாயகி அடிவாங்கிவிட்டு சேலை எடுத்துப்போடும் காட்சி
 9. சாலையோரத்தில் உறங்கும் தாயின் குழந்தை தாயை விட்டு விலகி வரும் காட்சி
 10. இரவு விழித்துக்கொள்ளும் நண்பன் நெஞ்சுவரை ஏற்றி கட்டியிருக்கும் லுங்கி.
 11. உணவுக்கான போட்டியில் அறிமுகமாகும் செளந்தரபாண்டி(பெயர்கூட தெற்கு மாவட்ட பெயர்)
 12. விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்(இந்த வசனம் வரும்போது முன்னிருக்கை முதியவர் எழுந்து நின்று கைதட்டினார்) யானை வாழ்ற இடத்துலதான் எறும்பும் வாழுது வசனங்கள்(வாழ்த்துகள் வசனகர்த்தா ஜெயமோகனுக்கு)
 13. குள்ளனுக்கு குழந்தை பிறந்தவுடன் அவனது மனைவி பேசுகின்ற வசனம்.
 14. இட்டமொழி கிராமத்து வீடு. வீட்டின் அருகே குவிந்திருக்கும் விறகுகள்.
 15. பெயிலானதால் பாண்டி அடிவாங்கும் காட்சிகள்.
 16. கவிதை/இறைவாழ்த்து நகைச்சுவை காட்சிகள்.
 17. வயதுக்கு வந்த தங்கையை நாய்க்கூண்டின் அருகே வைத்திருக்கும் காட்சியும் அதற்கு பிறகான கதாநாயகியின் நடிப்பும். 
 18. கதாநாயக தேர்வு.
 19. இன்னும் இன்னும் மனதெங்கும் விரிந்து படர்ந்து விருட்சமாக நிற்கும் காட்சிகளை எழுத முடியவில்லை.வாழ்த்த மட்டுமே தோன்றுகிறது.


இனி கடைகளுக்கு செல்லும்போது சேலைகளுக்கு முன்னால் சிரித்தபடி நிற்கும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பின் கசப்பான வாழ்க்கை ஒளிந்திருக்கிறது என்பதை ஒரு கணமேனும் நாம் உணர்வோம். அதுவே இக்காவியத்தின் அசைக்கமுடியாத வெற்றி. வசந்தபாலனுக்கு நன்றிகள் பல.அங்காடித்தெருவில் தொலைந்த மனதை தேடியபடி…

-நிலாரசிகன்.

21 comments:

said...

Machi.....Thanks for your valuable comment on "Angadi theru"...I too feel the same after seeing the(great) movie.

hats off to vasantha balan...!

said...

nalla vimarsanam...:)

said...

m....nila,
music lyrics pathilaam yethuvume pesala...?

ok..:)

vaazhthukal!

said...

அருமையான பார்வை நிலா..

said...

நல்ல விமர்சனம் நிலா.

said...

நச்சென்று விமர்சித்து இருக்கிறீர்கள். படம் இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

said...

The characterization of Karunkali"" was very nice. I got shocked by the performace of the so called commercial director "Venkatesh". I can't imagine such a performance from a director of films like Yei..., Malai Malai.....

After watching the movie we feel like directly coming out from heart surgery i felt that much pain in my heart(even i hate VasanthatBalan for gave me such a pain). But i think thats the success of the Movie.

Hats off to vasathaBalan......

said...

நல்ல பார்வை.

நன்றி நிலா.

Anonymous said...

Vasanthabalan's first film was Album.

said...

ரசனைக்காரனைய்யா நீர்..

படம் பார்த்துட்டு நேர்ல சந்திக்கும்போது பேசறேன்.
:)

said...

சிறப்பான விமர்சனம்..

விரைவில் இப்படத்தை பார்க்கவேண்டும் - ராம்

said...

நல்ல விமர்சனம்,ஆனால் வசந்தபாலனின் முதல் படம் வெயில் இல்லை ஆல்பம்

said...

நல்ல விமர்சனம்,ஆனால் வசந்தபாலனின் முதல் படம் வெயில் இல்லை ஆல்பம்

said...

நல்ல விமர்சனம் நிலா!!!

said...

Thanks for the comments friends.

said...

//Blogger a said...

Vasanthabalan's first film was Album.//

Thanks for the info a.
I will change the same.

said...

//இனி கடைகளுக்கு செல்லும்போது சேலைகளுக்கு முன்னால் சிரித்தபடி நிற்கும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பின் கசப்பான வாழ்க்கை ஒளிந்திருக்கிறது என்பதை ஒரு கணமேனும் நாம் உணர்வோம்//

patam parkum avalai thundum vimarsanam. arumai

said...

//சென்னையின் குரூர வாழ்க்கையையும் நேர்கோட்டில் அவரால் படைப்பாக்க முடிந்திருக்கிறது. //

தோழரே..உங்களிடம் இருந்து இப்படி பட்ட வரிகளை நான் எதிர்பார்க்க வில்லை... உங்களுக்கு எப்படி தென்மாவட்டங்கள் முக்கியமோ தென்மாவட்டங்கள் அழகோ அது போல என்னை போன்ற வட மாவட்ட வாசிகளுக்கு குறிப்பாக சென்னையை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வட மாவட்டமும் குறிப்பாக சென்னையும் முக்கியம் அழகு.... வட மாவட்டத்தில் இருந்து தென்மாவட்டம் செல்லும் மக்களை விட அங்கிருந்து இங்கு வரும் மக்கள் தான் அதிகம்... தென்மாவட்ட மக்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது சென்னை என்பதை உங்களால் மறுக்க முடியுமா??? சென்னையின் குரூரம் என்று சொல்லும் நீங்கள் உண்மையில் தமிழ்நாட்டில் வந்தாரை வாழவைக்கும் முதல் நகரம் சென்னை என்பதை நினைவில் கொள்ளுங்கள்... சென்னையில் பிழப்புக்காக வருவது பின்பு சென்னையை குரூரம் மனிதாபிமானம் அற்ற ஊர், திருடர்கள் அதிகம் உள்ள ஊர் அப்படி இப்படி என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசும் தென்மாவட்ட மக்களுக்கு சென்னையில் வசிக்க கூசுவதில்லை....

தங்கள் கவிதைகள் எனக்கு பிடிக்கும்.. அதர்க்காக தாங்கள் சென்னையை குரூரம் என்று சொல்லி இருப்பதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாமல் தான் இதை எழுதுகிறேன்....

முடிவாக, சென்னையை பற்றி கேவலமாக பேசி விட்டு பின் சென்னையிலே வசிக்கும் ஒவ்வொருவரும் கேவலமான பிறவிகள் நன்றி கெட்டவர்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்....

said...

அ.கார்த்திகேயன்,

//தோழரே..உங்களிடம் இருந்து இப்படி பட்ட வரிகளை நான் எதிர்பார்க்க வில்லை... உங்களுக்கு எப்படி தென்மாவட்டங்கள் முக்கியமோ தென்மாவட்டங்கள் அழகோ அது போல என்னை போன்ற வட மாவட்ட வாசிகளுக்கு குறிப்பாக சென்னையை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வட மாவட்டமும் குறிப்பாக சென்னையும் முக்கியம் அழகு....//

சென்னையின் குரூர வாழ்க்கை என்று நான் சொல்லவில்லை ஐயா, படத்தில் வசந்தபாலம் காட்டியிருக்கிறார்.இட்டமொழி எனும் கிராமத்திலிருந்து வெள்ளந்தியாக வரும் இளைஞர்களின் வாழ்க்கை பணத்தேவைக்காக எப்படியெல்லாம் கலைந்துபோகிறது என்பதையும் சென்னை எனும் மாநகரம் அவர்களது ரத்தத்தை எப்படி உறிஞ்சிக்கொள்கிறது என்பதையும் வசந்தபாலன் படத்தில் காண்பித்திருக்கிறார். அதற்காக சென்னை என்றால வாழ்க்கை குரூரமாக இருக்கும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கில்லை.காரணம் பத்து வருடங்களாக சென்னைதான் எனக்கு உண்ண உணவும் இருக்க இடமும் தரும் நகரம். ஒருவார்த்தையை பிடித்துக்கொண்டு இவ்வளவு கடினமாக பேசும் நீங்கள் எவ்வளவு மேலோட்டமாக அவ்வார்த்தையை அணுகியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

//தங்கள் கவிதைகள் எனக்கு பிடிக்கும்.. அதர்க்காக தாங்கள் சென்னையை குரூரம் என்று சொல்லி இருப்பதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாமல் தான் இதை எழுதுகிறேன்....//

நன்றி. மீண்டும் சொல்கிறேன் சென்னையின் குரூரத்தை பதிவு செய்தவர் வசந்தபாலன்.(வசந்தபாலன் கவனிப்பாராக!)

//முடிவாக, சென்னையை பற்றி கேவலமாக பேசி விட்டு பின் சென்னையிலே வசிக்கும் ஒவ்வொருவரும் கேவலமான பிறவிகள் நன்றி கெட்டவர்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்....//

ஒரு 'முடிவு'டன்தான் எழுதியிருக்கிறீர்கள். சென்னையை கேவலமாக பேசியவர்கள்/கேவலமான பிறவிகள்/நன்றி கெட்டவர்கள் யாரேனும் இதை வாசித்தால் அ.காவுக்கு பதிலளிக்க வேண்டுகிறேன்.

நன்றி.

said...

தோழர்களுக்கு... // நிலாரசிகன் & அ.கார்த்திகேயன்

அங்காடித் தெரு தென்மாவட்டத்தின் குரூரமோஅல்லது வடமாவட்டத்தின் குரூரமோ அல்ல...
இது முதளாளித்துவத்தின், பெரும்பாலான முதளாளிகளின் மறுபக்கமே அன்றி இதில் நகரம் , மாநகரம் என்ற பேதம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை..

தமிழகம் முழுவதும் அறிந்த அல்லது அறிவிக்கப்பட்ட[] காரணத்தினால் இது ஒரு களமாக
பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

மனிதம் வளர்ப்போம்...

//மனிதர்களை நம்பி கடை விரித்தேன் இன்று நலமா இருக்கின்றேன்

ஒரு பார்வையற்றவன் பார்வையில் மனிதம் வளர்த்த வசந்தபாலனுக்கு என் வணக்கங்கள்...

said...

@நிலாரசிகன்

//சென்னையின் குரூர வாழ்க்கை என்று நான் சொல்லவில்லை ஐயா, படத்தில் வசந்தபாலம் காட்டியிருக்கிறார்.//

சென்னையை குரூரம் என்று வஸந்தபாலன் காட்டி இருந்தாலும் அதை இங்கே பதிவு செய்து இருப்பது நீங்கள் தான் தோழரே...

//அதற்காக சென்னை என்றால வாழ்க்கை குரூரமாக இருக்கும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கில்லை.காரணம் பத்து வருடங்களாக சென்னைதான் எனக்கு உண்ண உணவும் இருக்க இடமும் தரும் நகரம்.//

மிக்க நன்றி...நன்றி மறவாத உங்கள் நல்ல குணதிர்க்கு.. ஆனால் எல்லோரும் உங்களை போல் இல்லை..வாழ்க்கை தந்த சென்னையை வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிய தென்மாவட்ட மக்கள் பலரை சந்தித்திருக்கிறேன் நான்...ஆகையால் தான் என்னுடைய சென்ற பதிவில் கோபத்தை கொட்டி விட்டேன்... சென்னை மீதான உங்கள் நன்றி உணர்வுக்கு தலை வணங்குகிறேன்..

//ஒருவார்த்தையை பிடித்துக்கொண்டு இவ்வளவு கடினமாக பேசும் நீங்கள் எவ்வளவு மேலோட்டமாக அவ்வார்த்தையை அணுகியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.//

தோழரே நல்ல கவிதை படைக்கும் சிறந்த படைப்பாளியான உங்களுக்கு கவிதைகளில் ஒரு வார்த்தை என்றாலும் அதன் அர்த்தம் எவ்வளவு வலிமை சேர்க்கும் என்பது தெரியும் என்று நம்புகிறேன்..பல வரிகளை ஒரு வார்த்தையில் சொல்லும் படைப்பாளியான தாங்கள் ஒரு வார்த்தை தானே என்று சொல்வது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது..நீங்களும் சென்னையை பற்றி தவறான எண்ணம் கொண்ட ஒரு சராசரி தென்மாவட்ட மனிதர் என்று நினைத்து தான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விட்டேன்.. அதற்காக என்னை மன்னிக்கவும்...

//ஒரு 'முடிவு'டன்தான் எழுதியிருக்கிறீர்கள். சென்னையை கேவலமாக பேசியவர்கள்/கேவலமான பிறவிகள்/நன்றி கெட்டவர்கள் யாரேனும் இதை வாசித்தால் அ.காவுக்கு பதிலளிக்க வேண்டுகிறேன்.//

நிச்சயமாக அப்படி பட்ட நன்றி கெட்டவர்கள் யாரேனும் இருந்தால் பதில் அளிக்கவும்.... அவர்களுக்கு வடமாவட்டம் மற்றும் வந்தாரை வாழ வைக்கும் எங்கள் சென்னையின் சிறப்பினை எடுத்துரைக்க நான் தயார்....

தோழர் நிலாரசிகன் அவர்களே...சென்ற பதிவின் கடின வார்த்தைகளுக்காக மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்....

*உங்கள் படைப்புகள் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்*

நன்றி :)
அ.கா