Wednesday, April 28, 2010

கவிஞர்களின் கவனத்திற்கு:

புன்னகை சிற்றிதழ் தனது அறுபதாவது இதழ் வெளியீட்டை முன்னிட்டு அறுபது கவிஞர்களின் கவிதைகளை வெளியிட தீர்மானித்திருந்தது. அதைப்பற்றிய அறிவிப்பை இத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். இப்போது இதழ் தயாராகிவிட்டதாக அதன் ஆசிரியரும் கவிஞருமான திரு.அமசப்ரியா தெரிவித்திருக்கிறார். வருகின்ற வெள்ளிக்கிழமை(30 ஏப்ரல்) மாலை ஐந்து மணிக்கு அவரது நூல் வெளியீடு சென்னையிலுள்ள தேவநேய பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அங்கே புன்னகையின் அறுபதாம் சிறப்பிதழும் கிடைக்கும். ஒரு நூலின் விலை ரூ.20. விரும்பும் அன்பர்கள் பெற்றுக்கொள்ளலாம். தேர்வான கவிஞர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

1.அகநாழிகை.பொன்.வாசுதேவன்
2.உமாசக்தி
3.உயிரோடை லாவண்யா
4.சகாரா தென்றல்
5.வா.மணிகண்டன்
6.கென்
7.காயத்ரி சித்தார்த்
8.ஒளியவன்
9.மகிழ்நன்
10.அருணா
11.ராமலஷ்மி
12.சா.முத்துவேல்
13.நிலவின்மகள்
14.சேரல்
15.சம்யுக்தா
16.கனியன் செல்வராஜ்
17.பிரபாவரசன்
18.அமல் ஜான்
19.ஆ.முத்துராமலிங்கம்
20.லதாமகன்
21.மணிகண்டன்
22.கவின்
23.உழவன்
24.ஜனமித்ரன்
25.கார்கோ
26.நிலாரசிகன்.

சிலரது பெயர்கள் விடுபட்டிருக்கலாம். சிலரது பெயரில் எழுத்துப்பிழைகள் இருக்கலாம். பொறுத்தருள்க :)

 

மற்றவை:

1. எதிர்பார்க்காத பல விஷயங்களை கடந்து சென்றிருக்கிறது இவ்வருட ஐ.பி.எல். சச்சின்,ராயுடு,திவாரி,போலார்ட் என அற்புதமான வீரர்களை கொண்ட மும்பைக்கு வெற்றி கிடைக்கும் என்று நினைத்தேன். 2003 உலககோப்பை இறுதி போட்டியில் வாடிய முகத்துடன் பார்த்த சச்சின் ஞாபகத்திற்கு வந்தார்.தோனிக்கு மச்சத்தில் உடம்பு. இதே வேகத்தில் உலக கோப்பையை வென்றால் மகிழ்ச்சி.

2. நண்பர் சுபைருக்கு ஞாயிறன்று திருமணம். அவரை வாழ்த்த விரும்பும் அன்பர்கள் http://ahamedzubair.blogspot.com/ செல்லவும். என்னுடைய "ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்' நூலிற்கு விமர்சனம் எழுதி இருக்கிறார். சுட்டி: http://ahamedzubair.blogspot.com/2010/04/blog-post.html அவருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

3. தோழி உமா சக்திக்கு நாளை பிறந்தநாள் (29 ஏப்ரல்). வாழ்த்து தெரிவிக்க விரும்பும் அன்பர்கள் இங்கே தெரிவிக்கலாம் --> http://www.umashakthi.blogspot.com/

-நிலாரசிகன்.

Sunday, April 25, 2010

இரவு மிருகம்


அளவற்ற அன்பின் எல்லையில்
திளைத்திருந்த கணமொன்றில்
பொருட்படுத்தா கற்களால்
நம் அன்பின் சுவற்றை
உடைத்தெரிந்தாய்.
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு முகமூடிகளுடன்
வலம் வந்த நிஜம்
சொல்லிச் சிரித்தாய்.
வலியின் ஆழத்தில் உன்
பொய்ப்புன்னகைகள்
உடையத்துவங்கின.
இப்போது,
துயரங்களால் நிரம்பி வழியும்
என் ப்ரியங்களை கெளவிச்செல்ல
இந்த
இரவு ஓர் ஒநாயைப்போல்
காத்திருக்கிறது.

Saturday, April 24, 2010

படித்ததில் பிடித்தது: சச்சின் மனிதனில்லை

இன்று கிரிக்கெட்டின் புதல்வன் சச்சினின் பிறந்த நாள்.அவரது பிறந்தநாளுக்கு எத்தனையோ பதிவுகள் எழுதப்பட்டிருந்தன.அவற்றில் சதீஷ் எழுதியிருக்கும் http://www.iyerpaiyan.com/2010/04/sachin-is-no-human.html
இந்தப்பதிவின் ஒவ்வொரு வரியிலும் தென்படும் உணர்வு எழுத்தில் அடங்காதது.சச்சின் எனும் மாபெரும் சிற்பியை வாழ்த்துவோம்.

Saturday, April 17, 2010

Monitores

உமா காந்தன் என்பவர் தான் கண்டுபிடித்த மென்பொருள் பற்றி மடலிட்டிருந்தார். கணிப்பொறி உபயோகப்படுத்தும் பலருக்கும் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலதிக தகவலுக்கு இங்கே செல்லவும்: http://code.google.com/p/monitores/

Friday, April 16, 2010

மிகச்சிறந்த ஐபிஎல் போட்டிகள் மூன்று:
 ஐ.பி.எல் போட்டிகள் எப்போதும் விறுவிறுப்புக்கு குறைவில்லாதவை.இதுவரை நடந்த அனைத்து போட்டிகளும் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தாலும் இவற்றுள் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற மூன்று போட்டிகளை பற்றிய அலசல் இங்கே:

மும்பை இந்தியன்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ் லெவன்:

ஐ.பி.எல்லின் முதலாவது சீசனில் அதாவது 2008ம் ஆண்டு நடந்த போட்டிகளில் சந்தேகமின்றி மிகச்சிறந்த போட்டியாக 45வது போட்டியை சொல்லலாம். மும்பைக்கும் பஞ்சாபுக்கும் நடந்த போட்டியில் முதலாவது பேட் செய்து இருபது ஓவர்களில் 188 ரன்களை குவித்தது பஞ்சாப்.

189 எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு நல்லதொரு துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார் ஜெயசூர்யா. அதிரடியாக 20 ரன்களை விளாசியவர் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அதற்கு பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறிக்கொண்டிருந்தபோது மறுமுனையில் நங்கூரமாய் நின்று மிகச்சிறப்பாக விளையாடினார் சச்சின். கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது மும்பை. போட்டி நடந்தது மும்பையில் என்பதால் சச்சின் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். எதிர்பாராத விதமாக பதினேழாவது ஓவரில் ரன் அவுட் ஆனார் சச்சின். 18 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்கிற நிலையில் மும்பை இருந்தபோதும் போலாக்,உத்தப்பா இருவரும் சுலபமாக வெற்றியை தேடித்தருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பதினெட்டாவது ஓவரை வீச வந்த யுவராஜ்சிங் முதல் பந்தில் போலாக்கையும் கடைசி பந்தில் உத்தப்பாவையும் வீழ்த்தி பரபரப்பை உண்டாக்கினார்.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை. விஆர்வி சிங்கை பந்துவீச அழைத்தார் அணித்தலைவர் யுவராஜ் சிங். முதல் பந்தை எதிர்கொண்டவர் சர்வதேச அரங்கில் அதிகம் பரிட்சயமில்லாத வீரர் சிட்னிஸ். ஆனால் முதல் பந்தில் சிக்ஸரும் இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விளாசி படபடப்பை அதிகரித்தார். மூன்றாவது பந்தில் பஞ்சாப் அணியின் சிறப்பான பீல்டிங்கினால் ரன் அவுட் ஆனார் சிட்னிஸ். வெளியே அமர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த மும்பை அணியின் ஷான் போலாக்கின் விரல்கள் நடுநடுங்க ஆரம்பித்தன.சச்சினின் முகத்தில் உச்சகட்ட டென்சன். அரங்கத்தில் சிறு சத்தமும் இல்லை.நான்கு பந்துகளில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் நெக்ராவும் ரன் அவுட் ஆனார். கடைசி இரண்டு பந்தில் 4 ரன்கள் தேவை. ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தனர் மும்பை அணியினர்.கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி.ஒரு ரன்கள் எடுத்தால் சமநிலை பெற்று சூப்பர் ஓவருக்குள் நுழைகின்ற வாய்ப்பு கிடைக்கும். விஆர்வி சிங் வீசிய கடைசி பந்தை மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு ஓட முயன்றார் மும்பை அணி வீரர் ஆனால் பந்தை புயலாக மாறி தடுத்து கைகளில் எடுத்துக்கொண்டு ஓடி வந்து ஒரு டைவ் அடித்து ஸ்டெம்புகளை வீழ்த்தினார் யுவராஜ் சிங். அவரது இந்த அற்புதமான ரன் அவுட் 92 உலககோப்பையில் இன்சமாம் உல் ஹக்கை அவுட் செய்த “பீல்டிங் மெஷின்” ஜான்டி ரோட்ஸை நினைவுபடுத்தியது. பஞ்சாப் வென்றது.தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வென்று வெற்றிநடைபோட்ட மும்பை தோல்வியை தழுவியது.

டெக்கான் சார்ஜர்ஸ் Vs  ராஜஸ்தான் ராயல்ஸ்:

2008 ஐபில்லின் மிக ஆச்சரியமான போட்டிகளில் இந்தப்போட்டியும் ஒன்று. முதலில் பேட் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சைமண்ட்ஸ் அதிரடியாக 117 ரன்கள் குவித்து தங்கள் அணி 214 ரன்கள் எடுக்க உதவி செய்தார். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக்கடினமான இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். யூசுப் பதான் அதிரடியாக 61 ரன்கள் குவித்து அவுட் ஆனபோதும் மறுமுனையில் ஸ்மித் அற்புதமாக விளையாடிக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் பதினெட்டாவது ஓவரை வீசவந்த அப்ரிதி முதல் பந்தில் கைப்பின் விக்கெட்டையும் மூன்றாவது பந்தில் ஸிம்த்தின் விக்கெட்டையும் பறித்தபோது ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. அப்பொழுதுதான் டெக்கான் சார்ஜர்ஸ் அணித்தலைவர் லஷ்மண் அந்த தவறான முடிவை எடுத்தார். கடைசி ஓவரை வீச சைமண்ட்ஸை அழைத்தார். அன்றைய போட்டியில் 117 ரன்கள் குவித்த சைமண்ட்ஸ் உற்சாகமாக முதல் இரண்டு பந்துகளை வீசினார். முதல் இரண்டு பந்துகளில் மூன்று ரன்களை எடுத்தது ராஜஸ்தான். மூன்றாவது பந்தை எதிர்கொள்ள நின்றவர் ராஜஸ்தானின் கேப்டன் ஷான் வார்னே. லோ புல்டாஸாக வந்த பந்தை சைமண்ட்ஸ்னின் தலைக்கு மேலாக அடித்து அழகான பவுண்டரியாக மாற்றினார் வார்னே. மூன்று பந்துகளில் 10 ரன்கள் தேவை. நான்காவது பந்தை இறங்கி டீப் மிட்விக்கெட் திசையில் ஒரு சூப்பர் சிக்ஸரை அடித்தார் வார்னே. இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் தேவை. இந்தமுறையும் இறங்கி வந்து டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அதி அற்புதமான சிக்ஸரை அடித்து சைமண்ட்ஸை விழிபிதுங்க வைத்ததோடு ஹைதராபாத் மைதானத்தில் இந்த போட்டியிலாவது வெல்வோம் என்று நினைத்திருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கனவுகளையும் தகர்த்தார் வார்னே.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ்:

2009ல் நடந்த இரண்டாவது ஐபில் சீசனில் எதிர்பாராத திருப்பம் கொண்ட போட்டியிது. தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த கொல்கத்தா அணியினர் முதலில் பேட் செய்து 160 ரன்கள் குவித்தனர். போட்டி நடந்தது தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில். ரன்குவிப்புக்கு பெயர் பெற்ற இந்த மைதானத்தில் இரண்டாவதாக களம் இறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடியாக 31 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். அவருக்கு பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உண்டானது.
எப்படியும் இந்தப்போட்டியில் வென்றுவிடலாம் என்று கனவு கண்டனர் கொல்கத்தா ரசிகர்கள்.கடைசி ஓவரை வீச வந்தார் மொர்டாசா. முதல் பந்தில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் அழகான பவுண்டரி அடித்து டெக்கானுக்கு நம்பிக்கை அளித்தார் ரோகித் ஷர்மா.அதன்பிறகு ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து வெற்றிக்கு அருகே தன் அணியை அழைத்துச் சென்றார். கடைசி பந்தில் 1 ரன் தேவை. இருக்கையின் நுனிக்கு வந்தனர் ரசிகர்கள். டென்ஷனில் நின்றார் கொல்கத்தாவின் கேப்டன் மெக்கலம். ஒரு பவுன்சரை மோர்டாசா வீச அதை சிக்சராக மாற்றி கொல்கத்தாவின் வெற்றிக்கனவை தகர்த்தார் ரோஹித் சர்மா. கடைசி ஓவரில் 21 ரன்களை தடுக்க முடியாத கொல்கத்தா 2009ம் ஆண்டின் ஐ.பி.எல்லின் மோசமான அணியாக மாறிப்போனது.

(அடுத்த பதிவு இவ்வருட ஐ.பி.எல் அரையிறுதி அணிகள் பற்றிய அலசல்)

Tuesday, April 13, 2010

அம்ருதா

அம்ருதா இலக்கிய இதழில் வெளியான கவிதை:

Saturday, April 10, 2010

இருளால் நிறைந்திருக்கும் நீலம்வெகு தூரம் பயணித்து
விழுந்து உடைகின்றன
மழைத்துளிகள்.
ஒன்றிரண்டு இறகுகளை
உதிர்த்தபடி பறக்கின்றன பறவைகள்.
மெல்ல நகர்கிறது
மஞ்சள் வெயில்.
அங்குமிங்கும் அலைகிறது
மேக நிழல்.
அனைத்தையும் உள்வாங்கி
அழுத்தமான
அமைதியுடன் விரிந்திருக்கிறது
கடல்.

-நிலாரசிகன்.

Tuesday, April 06, 2010

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்


தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.
மற்றும்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
இணைந்து நடத்தும்
POETRY WORKSHOP
கவிதைப் பட்டறை


நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com
இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, April 04, 2010

தனிமையின் இசை
அய்யனாரின் தனிமையின் இசை கவிதை தொகுப்பின் மீதான என் பார்வையை,அனுபவத்தை இங்கே பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

அய்யனாரின் கவிதைகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக இணையத்தில் படித்ததுண்டு. வம்சி வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுப்பில் அக்கவிதைகளை மொத்தமாக படிக்கும்போது ஏற்படும் நிறைவு இணையக்த்தில் படிக்கும் போது கிடைத்தாக ஞாபகமில்லை.

நெகிழ்வு,அலைவு,பிறழ்வு,மய்யம் என்ற நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இவரது கவிதைகள் பல்வேறு உணர்வுகளை வாசகனுக்குள் தெளித்துச்செல்கின்றன.

அய்யனாரின் கவிதைகளின் பலமாக கவிதைமொழியை சொல்ல முடியும்.மொழி இவருக்கு கூப்பிடும் தூரத்தில் இருப்பதாகவே ஒவ்வொரு கவிதைவரிகளும் பறைசாற்றுகின்றன. அதனால்தான் எதைப்பற்றியும் அல்லது பற்றாமலும் கவிதைகளை தந்திருக்க முடிகிறது இவரால்.

நெகிழ்வு தலைப்பின் கீழுள்ள கவிதைகள் அழகியலை முன்வைக்கும்போதும் செறிவான சொற்களும் அடர்த்தியான வரிகளும் கவிதைகளுக்கு வலு சேர்க்கின்றன. கவிதைக்குள் நுழையும் முன்னரே அதன் தலைப்புகள் வாசகனின் மனதோடு நெருக்கமாகிவிடுகின்றன. உதாரணமாக மழையின் ஈரக்கைகள்,ஆற்றின் உட்பரப்பு,உட்குளம்,மழைக்கால கிளர்வுகள் போன்ற தலைப்புகளை மேற்கோள் காட்டமுடியும்.
ஆற்றின் உட்பரப்பு கவிதையை முதலில் மெளனமாக வாசித்துப் பார்த்தேன். பின் சத்தமிட்டு வாசித்துப்பார்த்தேன். மெளனத்திற்கும் சப்தத்திற்கும் இடையே வெவ்வேறு அனுபவமாக விரிந்தது இக்கவிதை. ஒரு ஆற்றை பற்றி விவரித்துக்கொண்டே செல்கிறார் கவிஞர். ஆற்றில் குளிக்க வந்த நடுவயதுக்காரி நீரின் குளுமையில் சிலிர்த்து தவற விடும் ரவிக்கை,ஆற்றில் மிதந்து சென்ற பிணம்,தன் பிம்பத்தை உற்றுநோக்கும் செம்மறி ஆட்டுக்குட்டி இப்படியாக நீள்கின்ற வரிகள் கடைசியில் “காட்சிகளை விழுங்கியபடி சலனமற்று விழித்திருக்கும் ஆற்றின் உட்பரப்பு” என்று முடிக்கிறார் கவிஞர். இந்த கடைசி வரியை சலனமற்று விழித்திருக்கும் நம் ஆழ்மனதின் தனிமையாக உருவகப்படுத்துக்கொள்ள முடிகிறது.

அலைவு தலைப்பின் கீழுள்ள கவிதைகள் புலம்பெயர்ந்த வலியை,ஏக்கத்தை,நிறைவேறா கனவுகளை,பிரிவுத்துயரை,தனிமையை பாடுபொருளாக கொண்டவை. எதுவுமற்று இருத்தல் என்றொரு கவிதை இதிலுண்டு. அக்கவிதையின் சாயலையே பிற கவிதைகளிலும் வெவ்வேறு ரூபத்தில் காண முடிகிறது. தனிமையின் குரூரத்தையும் அதன் மூலம் பிறக்கும் ஞானத்தையும் பல கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் அய்யனார்.

பிறழ்வு தலைப்பின் கீழ் மொத்தம் இருபது கவிதைகள் இருக்கின்றன. இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை பிறழ்ந்த மனநிலையை அல்லது சூழலை வெகு கனமான சொற்களால் விவரிப்பவை. இதில் ஆகச்சிறந்த கவிதையாக குற்றவுணர்விலிருந்து விடுபடல் கவிதையை சொல்லலாம். “ஒரு பெண்ணை முத்தமிடுமுன் சற்று யோசியுங்கள் பின்னெப்போதாவது அவை மீளவே முடியாத பின்னிரவுக் குற்றவுணர்வுகளின் ஊற்றுக்கண்ணாகி விடலாம்” என்று தொடங்குகின்ற கவிதை தவறொன்றை செய்துவிட்டு பின் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதை பற்றி அற்புதமாக விவரித்துச் செல்கிறது. இக்கவிதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது
குற்றவுணர்வுகளற்ற இருப்பு மெதுவாய் நகரும் மேகங்களுக்குள்ளும் வேப்பமரக் கிளைகளிடையேயும் எவருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டுள்ளது

மய்யம் தலைப்பின் கீழுள்ள கவிதைகளில் பல மிகை எதார்த்த வகைமையை சார்த்தவை. இத்தொகுப்பில் என்னை அதிகம் ஈர்க்காத பகுதி எனில் அது இந்த மய்யம் பகுதிதான். கப்பல்காரி,உடலைப் புசித்தல் போன்ற கவிதைகள் தொகுப்பின் கனத்தை குறைக்கக்கூடிய கவிதைகள். அவற்றை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் அய்யனாரின் கவிதையுலகம் காதல்,கட்டுப்பாடற்ற காமம்,பெண்கள்,கலாச்சாரத்தை உடைத்தெறிதல்,போலிகளின் முகத்தில் எச்சில் உமிழ்தல்,மாய எதார்த்த உலகின் வசீகர கனவுகள்,எள்ளல்,சுயவிசாரணை என்று விரிந்திருக்கிறது. உரைநடை தன்மையிலான ஒன்றிரண்டு கவிதைகளை கழித்துவிட்டு பார்த்தால் “தனிமையின் இசை” நவீன கவிதை உலகில் முக்கியமான புதுவரவு. ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும்,வாழ்வனுபவமும், மொழிமீதான தீராத வேட்கையுமே அய்யனாரின் பலம். இனி வரும் தொகுப்புகளில் அய்யனார் தனக்கான தனிமொழியை அடைந்துவிடுவார் என்பதை உறுதியாக சொல்லலாம்.

சொற்கப்பல் விமர்சன தளத்தில் வாய்ப்பளித்த பொன்.வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் என் நட்பும்,நன்றியும்.

-நிலாரசிகன்.

பின்குறிப்பு: சொற்கப்பல் விமர்சன கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.நண்பர் ச.முத்துவேல் இக்கட்டுரையை வாசித்தார்.அவருக்கும் நன்றி.