Friday, April 16, 2010

மிகச்சிறந்த ஐபிஎல் போட்டிகள் மூன்று:
 ஐ.பி.எல் போட்டிகள் எப்போதும் விறுவிறுப்புக்கு குறைவில்லாதவை.இதுவரை நடந்த அனைத்து போட்டிகளும் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தாலும் இவற்றுள் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற மூன்று போட்டிகளை பற்றிய அலசல் இங்கே:

மும்பை இந்தியன்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ் லெவன்:

ஐ.பி.எல்லின் முதலாவது சீசனில் அதாவது 2008ம் ஆண்டு நடந்த போட்டிகளில் சந்தேகமின்றி மிகச்சிறந்த போட்டியாக 45வது போட்டியை சொல்லலாம். மும்பைக்கும் பஞ்சாபுக்கும் நடந்த போட்டியில் முதலாவது பேட் செய்து இருபது ஓவர்களில் 188 ரன்களை குவித்தது பஞ்சாப்.

189 எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு நல்லதொரு துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார் ஜெயசூர்யா. அதிரடியாக 20 ரன்களை விளாசியவர் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அதற்கு பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறிக்கொண்டிருந்தபோது மறுமுனையில் நங்கூரமாய் நின்று மிகச்சிறப்பாக விளையாடினார் சச்சின். கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது மும்பை. போட்டி நடந்தது மும்பையில் என்பதால் சச்சின் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். எதிர்பாராத விதமாக பதினேழாவது ஓவரில் ரன் அவுட் ஆனார் சச்சின். 18 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்கிற நிலையில் மும்பை இருந்தபோதும் போலாக்,உத்தப்பா இருவரும் சுலபமாக வெற்றியை தேடித்தருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பதினெட்டாவது ஓவரை வீச வந்த யுவராஜ்சிங் முதல் பந்தில் போலாக்கையும் கடைசி பந்தில் உத்தப்பாவையும் வீழ்த்தி பரபரப்பை உண்டாக்கினார்.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை. விஆர்வி சிங்கை பந்துவீச அழைத்தார் அணித்தலைவர் யுவராஜ் சிங். முதல் பந்தை எதிர்கொண்டவர் சர்வதேச அரங்கில் அதிகம் பரிட்சயமில்லாத வீரர் சிட்னிஸ். ஆனால் முதல் பந்தில் சிக்ஸரும் இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விளாசி படபடப்பை அதிகரித்தார். மூன்றாவது பந்தில் பஞ்சாப் அணியின் சிறப்பான பீல்டிங்கினால் ரன் அவுட் ஆனார் சிட்னிஸ். வெளியே அமர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த மும்பை அணியின் ஷான் போலாக்கின் விரல்கள் நடுநடுங்க ஆரம்பித்தன.சச்சினின் முகத்தில் உச்சகட்ட டென்சன். அரங்கத்தில் சிறு சத்தமும் இல்லை.நான்கு பந்துகளில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் நெக்ராவும் ரன் அவுட் ஆனார். கடைசி இரண்டு பந்தில் 4 ரன்கள் தேவை. ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தனர் மும்பை அணியினர்.கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி.ஒரு ரன்கள் எடுத்தால் சமநிலை பெற்று சூப்பர் ஓவருக்குள் நுழைகின்ற வாய்ப்பு கிடைக்கும். விஆர்வி சிங் வீசிய கடைசி பந்தை மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு ஓட முயன்றார் மும்பை அணி வீரர் ஆனால் பந்தை புயலாக மாறி தடுத்து கைகளில் எடுத்துக்கொண்டு ஓடி வந்து ஒரு டைவ் அடித்து ஸ்டெம்புகளை வீழ்த்தினார் யுவராஜ் சிங். அவரது இந்த அற்புதமான ரன் அவுட் 92 உலககோப்பையில் இன்சமாம் உல் ஹக்கை அவுட் செய்த “பீல்டிங் மெஷின்” ஜான்டி ரோட்ஸை நினைவுபடுத்தியது. பஞ்சாப் வென்றது.தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வென்று வெற்றிநடைபோட்ட மும்பை தோல்வியை தழுவியது.

டெக்கான் சார்ஜர்ஸ் Vs  ராஜஸ்தான் ராயல்ஸ்:

2008 ஐபில்லின் மிக ஆச்சரியமான போட்டிகளில் இந்தப்போட்டியும் ஒன்று. முதலில் பேட் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சைமண்ட்ஸ் அதிரடியாக 117 ரன்கள் குவித்து தங்கள் அணி 214 ரன்கள் எடுக்க உதவி செய்தார். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக்கடினமான இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். யூசுப் பதான் அதிரடியாக 61 ரன்கள் குவித்து அவுட் ஆனபோதும் மறுமுனையில் ஸ்மித் அற்புதமாக விளையாடிக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் பதினெட்டாவது ஓவரை வீசவந்த அப்ரிதி முதல் பந்தில் கைப்பின் விக்கெட்டையும் மூன்றாவது பந்தில் ஸிம்த்தின் விக்கெட்டையும் பறித்தபோது ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. அப்பொழுதுதான் டெக்கான் சார்ஜர்ஸ் அணித்தலைவர் லஷ்மண் அந்த தவறான முடிவை எடுத்தார். கடைசி ஓவரை வீச சைமண்ட்ஸை அழைத்தார். அன்றைய போட்டியில் 117 ரன்கள் குவித்த சைமண்ட்ஸ் உற்சாகமாக முதல் இரண்டு பந்துகளை வீசினார். முதல் இரண்டு பந்துகளில் மூன்று ரன்களை எடுத்தது ராஜஸ்தான். மூன்றாவது பந்தை எதிர்கொள்ள நின்றவர் ராஜஸ்தானின் கேப்டன் ஷான் வார்னே. லோ புல்டாஸாக வந்த பந்தை சைமண்ட்ஸ்னின் தலைக்கு மேலாக அடித்து அழகான பவுண்டரியாக மாற்றினார் வார்னே. மூன்று பந்துகளில் 10 ரன்கள் தேவை. நான்காவது பந்தை இறங்கி டீப் மிட்விக்கெட் திசையில் ஒரு சூப்பர் சிக்ஸரை அடித்தார் வார்னே. இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் தேவை. இந்தமுறையும் இறங்கி வந்து டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அதி அற்புதமான சிக்ஸரை அடித்து சைமண்ட்ஸை விழிபிதுங்க வைத்ததோடு ஹைதராபாத் மைதானத்தில் இந்த போட்டியிலாவது வெல்வோம் என்று நினைத்திருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கனவுகளையும் தகர்த்தார் வார்னே.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ்:

2009ல் நடந்த இரண்டாவது ஐபில் சீசனில் எதிர்பாராத திருப்பம் கொண்ட போட்டியிது. தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த கொல்கத்தா அணியினர் முதலில் பேட் செய்து 160 ரன்கள் குவித்தனர். போட்டி நடந்தது தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில். ரன்குவிப்புக்கு பெயர் பெற்ற இந்த மைதானத்தில் இரண்டாவதாக களம் இறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடியாக 31 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். அவருக்கு பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உண்டானது.
எப்படியும் இந்தப்போட்டியில் வென்றுவிடலாம் என்று கனவு கண்டனர் கொல்கத்தா ரசிகர்கள்.கடைசி ஓவரை வீச வந்தார் மொர்டாசா. முதல் பந்தில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் அழகான பவுண்டரி அடித்து டெக்கானுக்கு நம்பிக்கை அளித்தார் ரோகித் ஷர்மா.அதன்பிறகு ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து வெற்றிக்கு அருகே தன் அணியை அழைத்துச் சென்றார். கடைசி பந்தில் 1 ரன் தேவை. இருக்கையின் நுனிக்கு வந்தனர் ரசிகர்கள். டென்ஷனில் நின்றார் கொல்கத்தாவின் கேப்டன் மெக்கலம். ஒரு பவுன்சரை மோர்டாசா வீச அதை சிக்சராக மாற்றி கொல்கத்தாவின் வெற்றிக்கனவை தகர்த்தார் ரோஹித் சர்மா. கடைசி ஓவரில் 21 ரன்களை தடுக்க முடியாத கொல்கத்தா 2009ம் ஆண்டின் ஐ.பி.எல்லின் மோசமான அணியாக மாறிப்போனது.

(அடுத்த பதிவு இவ்வருட ஐ.பி.எல் அரையிறுதி அணிகள் பற்றிய அலசல்)

3 comments:

said...

நல்ல அலசல் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

said...

//*விஆர்வி சிங் வீசிய கடைசி பந்தை மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு ஓட முயன்றார் மும்பை அணி வீரர் ஆனால் பந்தை புயலாக மாறி தடுத்து கைகளில் எடுத்துக்கொண்டு ஓடி வந்து ஒரு டைவ் அடித்து ஸ்டெம்புகளை வீழ்த்தினார் யுவராஜ் சிங்.*//

இப்படித்தான் உலகக் கோப்பை 20-20 இல் பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் வென்றோம்.

said...

oru match kooda paakkla...
news keppathodu sari!

unga paarvai nallaayirukku..!
m...nursim sir thalaththil vanthu sachin-ukkaaga pesiyirunthathai paarththen:)
vaazhthukal....nila!