Monday, May 24, 2010

புன்னகை 60நண்பர்களுக்கு,

அறுபது கவிஞர்களின் 60 கவிதைகள் அடங்கிய புன்னகை இதழின் அறுபதாவது இதழ் தற்சமயம் புதிய புத்தக நிலையத்தில் கிடைக்கிறது(தி.நகர்,சென்னை) அடுத்த வாரம் முதல் டிஸ்கவரி புக் பேலஸ்,கே.கே நகரிலும் கிடைக்கும். விலை ரூ.30.

பங்குபெற்றுள்ள கவிஞர்களின் பட்டியல்:

01. கணேசகுமாரன்
02. அன்பாதவன்
03. நா.விச்வநாதன்
04. சம்யுக்தா
05. பா.ராஜா
06. மு.முருகேஷ்
07. உழவன்
08. மௌனம் ரமேசு
09. மகிழ்நன்
10. அதங்கோடு அனிஷ்குமார்
11. பொன்.குமார்
12. மருதம்.ஷப.கெஜலட்சுமி
13. ம.ஜெயப்பிரகாஷ்வேல்
14. வே.மு.பொதியவெற்பன்
15. ஜனமித்ரன்
16. உயிரோடை லாவண்யா
17. கார்க்கோ
18. ச.மோகனராசு
19. அருள்குமார்
20. துரை.மூர்த்தி
21. கவின்
22. புலியூர் முருகேசன்
23. கணியன் செல்வராஜ்
24. ஸ்ரீநிவாஸ் பிரபு
25. ப.சுடலைமணி
26. பிரபாவரசன்
27. சூர்யநிலா
28. கோசின்ரா
29. சு.சுபமுகி
30. சுப்ரபாரதிமணியன்
31. பி.மணிகண்டன்
32. ஒளியவன்
33. வா.மு.கோமு
34. அருணா
35. லதாமகன்
36. ந.பெரியசாமி
37. சிவகுமார்
38. அமல்.ஜான்
39. ஆ.முத்துராமலிங்கம்
40. ராமலக்ஷ்மி
41. சேரல்
42. பொன்.வாசுதேவன்
43. வீரகரன் மாதேஷ்
44. ஸ்ரீமதி
45. சி.அதிரதன்
46. பொ.செந்திலரசு
47. சித்தன்
48. ச.முத்துவேல்
49. ச.கோபிநாத்
50. சகாரா தென்றல்
51. வா.மணிகண்டன்
52. கென்
53. காயத்ரி
54. லதாமகன்
55. நிலாரசிகன்
56. நிலவின் மகள்
57. உமாசக்தி

(நன்றி: சேரல்)

-நிலாரசிகன்.

Tuesday, May 18, 2010

ஞானக்கவிதைகள் மூன்றுஞானக் கவிதைகள் மூன்று1.

வெண்ணிற பூக்கள் சிதறிக்கிடக்கும்
மண்பாதையில் ஒரு பலூனுடன்
நடக்கிறாள் சிறுமி.

வண்ணத்துப்பூச்சியை விரட்டிக்கொண்டு
ஓடுகிறான் காவி உடை அணிந்த
சிறுவன்.

நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும்
மஞ்சள் நிற ஆற்றில் இரண்டு மீன்கள்
துள்ளி விழுகின்றன.

தன் குஞ்சுப்பறவையை முத்தமிட்டு
சிறகடிக்கிறது தாய்பறவையொன்று.

கருநீல வானை கிழித்துக்கொண்டு
வீழ்கிறது மழைத்துளி.

தெருவோர
ஓவியத்திலும் மிச்சமிருக்கிறது
வாழ்க்கை.


2.

நீந்துதலின் சுகம் பற்றியும்
சுதந்திரம் பற்றியும் பேசிக்கொண்டன
இரு மீன்கள்.

குளம் வற்றிய ஓர் இரவில்
பறத்தலின் சுகம் பற்றி அவை
பேச ஆரம்பித்தன.

உரையாடல் முடியும் முன்பே
நின்றுபோனது அனைத்தும்.

மெளனசுகத்துடன் சிரித்துக்கொண்டது
நிலா.

3.

எறும்பின் மரணம் குறித்த
விவாதம் துவங்கிற்று.

முதலாமவன் எறும்பின் மரணம்
நிச்சயம் என்றான்.

இரண்டாமவன் எறும்பிற்கு மரணமில்லை
என்று வாதிட்டான்.

மூன்றாமவன் எறும்பின் மரணம்
கவனத்துக்குரியதல்ல என்றான்.

ரயிலைப் பற்றிய அக்கறையின்றி
தண்டவாள விவாதத்தில் ஊர்ந்து செல்கிறது
ஓர் எறும்பு.

-நிலாரசிகன்.

Tuesday, May 11, 2010

இரவுக்காகங்களின் பகல் - நூல் மதிப்புரை


கொ
ஞ்சும் மழைச்சாரலில் நனைந்தபடி இருக்கிறது இன்று மாலை உதிர்ந்த வேப்பம்பூக்கள். மண்வாசம் மேலெழும்பி காற்றில் மிதந்து அறையெங்கும் நிறைக்கிறது. ஜன்னலோர நாற்காலியில் அமர்ந்தபடி விழுகின்ற மழைத்துளிகளை பருகிக்கொண்டிருக்கிறாள் பக்கத்துவீட்டு சிறுமி. ஜன்னல் கம்பிகளில்  இறங்கும் துளியை பேராவலுடன் தொட்டு சிலிர்க்கிறாள். மழை அழகு. இரவு மழை பேரழகு. குழந்தைகள் அழகானவர்கள். மழை ரசிக்கும் குழந்தைகள் அற்புதமானவர்கள். நூற்றாண்டுகள் கடந்து ஒளிரும் ஓர் ஓவியத்தை வரைந்துவிட துடிக்கும் ஓவியனென மழை ரசிக்கும் சிறுமியை பற்றி கவிதை வடிக்க துடிக்கிறது மனம்.

உறக்கத்தில் புன்னகைக்கும் காதலி போல, இரவுப்பயணத்தில் தோள் சாயும் மனைவி போல, வருடங்கள் பல கழிந்த பின்பொழுதொன்றில் யதேச்சையாக பார்க்க நேர்ந்துவிடுகிற அம்மாவின் புடவையை போல கவிதையும் அதிஅற்புதமானதுதான். பேரழகானதுதான். உருவமற்று எப்போதும் உடனிருக்கும் தோழமைதான்.

கவிதையை எங்கிருந்து பெறுவது? எது கவிதையாகிறது? கவிதையும் கவிஞனும் எப்புள்ளியில் இணைகிறார்கள்? இயந்திர வாழ்க்கையை நான்கு வரிக்கவிதை எப்படி அழகாக்குகிறது? இப்படி பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை  ஒவ்வொரு கவிதையும் ஏதேனும் ஒர் சொல்லில் ஒளித்துவைத்திருக்கிறது. ஒரு கவிதையின் ஒரே ஒரு சொல் போதும் நம் ஆயுட்காலம் முழுவதும் அக்கவிதை நம்முடன் பயணிக்க.

இரவுக்காகங்களின் பகல் - இந்த தலைப்பின் வசீகரத்திலும் அம்சப்ரியா என்னும் அற்புதமான கவிஞரின் மீதுள்ள மரியாதையின் நிமித்தமும் இந்நூலை வாங்கினேன். கவிதை நூல்களை பொறுத்தவரை வாங்கிய அன்றே படித்துவிடுவது என் வழக்கம். இரவுக்காகங்களின் பகல் சில காரணங்களுக்காக தள்ளிப்போனது. ஒருவாரம் கழித்து நேற்றுதான் இந்நூலை முழுமையாக வாசிக்க முடிந்தது. வாசித்து முடித்த மறுநொடி என்னுள் எழுந்த கேள்விகள் இரண்டு

1. ஏன் அம்சப்ரியா இதுவரை எழுதிய கவிதைநூல்களை வாசிக்காமல் இருந்தேன்?

2. ஏன் பிரபல இலக்கிய பதிப்பகங்கள் இன்னும் இவரது கவிதைகளை வெளியிட முன்வரவில்லை?

நவீனக் கவிதைப்பயணத்தின் தொடர்பயணி க.அம்சப்ரியா என்பதை சில வருடங்களாக அவருடன் பழகியவன் என்கிற முறையில் அறிவேன். இரவுக்காங்களில் பகல் நூலில் உள்ள கவிதைகளை மனிதநேயமிக்க ஓர் ஆன்மாவின் சந்தோஷம்,கண்ணீர்,விரக்தி,கொண்டாட்டம்,ப்ரியம்,காதல் என்று வகைப்படுத்தலாம். ஒரு கவிதைக்கும் மறுகவிதைக்கும் இடையேயான வாசிப்பின் இடைவெளியை பெருகச்செய்துவிடுகின்றன ஒவ்வொரு கவிதைகளும் அதன் வழியே உருவாகும் உலகமும்.

"உறங்கும் பிணத்தை
உயிர்த்தெழச் செய்யும் மந்திரமொன்றை
எனது வரமாக்கினாள் தேவதை
பரிசோதித்துப் பார்க்கும் ஆவலாதியில்
பிரயோகித்தேன் என் மீது...
அக்கணத்திலிருந்து
ஆயிரமாயிரம் பூக்கள் மலர்ந்தன"

இக்கவிதையின் கடைசி வரியை வாசிக்கும் வரை எவ்வித திடுக்கிடலுமின்றிதான் வாசித்தேன். கடைசிவரியின் வீரியமும்,அழகியலும்,சிந்தனைவீச்சும் அடுத்த கவிதைக்கு கண்கள் நகர விடாமல் தடுத்துவிட்டன. ஒரு பெரும் வலியின் உச்சத்தில் கண்ணீர் வழிந்தோடும்போது நீர் துடைக்க நீள்கின்ற குழந்தையின் விரல்களாய் அந்த கடைசிவரிகளை உணரமுடிகிறது.

"என்ன வகைப் பறவையென்று
தெரியவில்லை
வழி தெரியாமல் வகுப்பறைக்குள்
வந்துவிட்ட அப்பறவைக்குஞ்சு
சிறகடிக்கத் துவங்கிற்று
ஒவ்வொரு குழந்தையின்
பாடப் புத்தகத்தினுள்ளும்...!"

பறவையாதலும் குழந்தையாதலும் வாய்க்கப்பெற்றால் அதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும் இவ்வாழ்வில்? இறக்கை முழுவதும் முளைக்காத குஞ்சுப்பறவையும் மழலையும் ஒன்றுதான். ரசித்துக்கொண்டே இருக்கலாம். ரசித்துக்கொண்டே மரணித்தாலும் பரவாயில்லை. செயற்கையான புன்னகையுடன் வலம்வர நம்மை பழக்கிவிட்ட உலகம் ஒன்றுமே தெரியாததுபோல் சுற்றிக்கொண்டுதானிருக்கிறது. கவிதைகளில் மட்டுமே இயல்பான புன்னகை இன்னும் மிச்சமிருக்கிறது.  கொடிய இரவுகளும் நாளை பற்றிய கவலைகளும் இல்லாத உலகம் குழந்தைகளின் உலகம். அவ்வுலகில் அம்சப்ரியாவின் பல கவிதைகள் பயணம் செய்வதை உணரமுடிகிறது. குழந்தைகள் பற்றிய நுண்ணிய கவனிப்புகளை கவிதையாக்கியிருக்கிறார்.  சில கவிதைகள் ஒரு ஞானியின் சொற்களை போல மிகக்கூர்மையானதாகவும் ஆழ்ந்த அர்த்தங்கொண்டதாகவும் அமைந்திருக்கின்றன. சமுதாயத்தின் மீதான சாடல்களாலும் நிறைந்திருக்கின்றன சில கவிதைகள்.
உதாரணமாக,

"எல்லோரின் கேலிக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது அவரவர் செருப்பு"

"வாழ்நாளில்
மரமே வளர்க்காத ஒருவனுக்கு
பகையாகி விடுகிறது
எல்லா நிழலும்"

"காலம் இரு தீர்ப்புகளை
கவனத்தோடு எழுதுகிறது
உங்களை பல புழுக்களின் மத்தியில்
வசிக்கக் கடவுகவென்றும்
என்னையொரு பாம்போடு
வசிக்கக் கடவுகவென்றும்"


போன்ற வரிகளை சொல்லலாம். நவீன கவிதை எனில் கடினமான சொற்களாலும் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளால் நிரம்பியது என்று நினைப்பவர்களின் எண்ணத்தை இயல்பான சொற்களால் உடைத்தெறிந்திருகிறார் இந்த நவீன கவிஞர். இரவுக்காகங்களின் பகல் நவீன கவிதைதொகுப்புகளில் மிக முக்கியமான தொகுப்பென்று தயக்கமின்றி சொல்ல முடியும்.

வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்
விலை: ரூ.60
ஆசிரியர்: கவிஞர்.க.அம்சப்ரியா
கிடைக்குமிடம்: தமிழகமெங்கும்
சென்னையில்: நியூ புக்லேண்ட்ஸ், தி.நகர், டிஸ்கவரி புக் பேலஸ்,கே.கே.நகர்.

-நிலாரசிகன்.Thursday, May 06, 2010

நிசப்த இயல்புகள்


பற்றி எரிகின்ற பெரும் நெருப்பில்
புன்னகை பற்றிய கவிதைகள்
எழுதப்படுகின்றன.
ஒவ்வொரு இலையாக இசையுதிர்ந்து
கொண்டிருக்கும் பின்னிரவில்
நடனமிட்டு வெள்ளைத்தாளில் மரிக்கின்றன
சொற்கள்.
அதீத நேசத்தின் நீட்சி கவிதைகளாக
உருமாறிக்கொண்டிருக்கிறது.
கறுப்புக்கனவுகளுடன் இவ்வுலகம்
நுழைந்த பறவை சிறகடித்துப்பறக்கிறது
நீலம் வழிகின்ற கறுப்பு வானத்தில்.
இயல்பு மாறாத கவிதைகள்
விழியுயர்த்தி வழியனுப்புகின்றன.
அரவமற்ற அதிகாலையில்
கவிதைக்குள்ளிருந்து வெளியேறிய
இணைகோடுகள் வெவ்வேறு
திசையில் பயணிக்க துவங்குகின்றன.


-நிலாரசிகன்.

Wednesday, May 05, 2010

விமர்சனம்


http://tamilkirukals.blogspot.com/2010/05/blog-post.html

Saturday, May 01, 2010

துறவுக் கவிதைகள்


1.
நிரந்தரமற்ற வாழ்வை
இவ்விரவு பாடலாக பாடிக்கொண்டிருக்கிறது.
காற்றில் அசைகின்ற இலைகள்
உதிர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
வெப்பத்தின் குரல் அங்குமிங்கும்
அலைந்தபடி இருளை விழுங்க
முயல்கையில் விழுகின்ற மழை,
மழை போலவே இல்லை.
கனவுகளை தின்று செரித்த
பூமி தீராப்பசியுடன் சுற்றுகிறது.
துறவுநிலையின் உச்சத்தில் நுழைகின்ற
குழந்தையொன்றின் அழுகுரலில்
உருவாகிறது நாளைய காவியத்தின்
முதல் வரி.


2.
இப்படித்தான் நிகழுமென்ற
கணிப்புகள் எப்போதும்
தவறானதாகவே முடிந்துவிடுகிறது.
காலம் கடந்தே வாசல்வந்து
நிற்கிறது ஞானம்.
காலத்தின் சித்தரிப்புகளில்
சுயமோகியாக அல்லது உக்கிரமிக்கவனாக
காட்சியளிக்கிறேன்.
எருதொன்றை புசிக்கும் விலங்கின்
பற்களின் கூர்மையை கொண்டிருக்கிறது
வார்த்தைகள்.
உன்னதமான அன்பை பற்றிய
போதனைகளை அபத்தமென்று
உள்மனம் எடுத்துரைக்கிறது.
எப்பொழுதும் தனிமைக்குள்
புதைந்துபோதலை விரும்புவதாக
மார்தட்டுகிறது மனம்.
முரண்பாடுகளால் நிறைந்திருப்பினும்
ரசிக்கவே செய்கிறேன்
உறக்கத்தில் சிரிக்கும் குழந்தையின்
குறும்புன்னகையை.

-நிலாரசிகன்.