Monday, June 21, 2010

இரு சந்தோஷங்கள்

1.உரையாடல் அமைப்பு நடத்திய கவிதை போட்டியில் என்னுடைய "கோணவாயன் கதை" கவிதை பரிசுபெற்றிருக்கிறது. இக்கவிதை எழுதியபோது உடன் பதிலிட்டு/விமர்சித்து மெருகேற்றிய விபாகை அண்ணனுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

சிவராமன்,ஜ்யோவ்ராம் சுந்தர் இருவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி பெற்ற அனைத்து சக படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துகள்.

2. இவ்வார கல்கியில்(27-ஜூன்- 2010) என்னுடைய இரண்டு கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.

கவிதைகளுக்கான என் பயணத்தில் எப்போதும் உடனிருக்கும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும்,நிறம்மாறாத புன்னகையும் எப்போதும்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Monday, June 14, 2010

ஒரு விமர்சனம் மற்றும் சில கவிதைகள்


என்  "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" சிறுகதை நூலிற்கு விஜய் மகேந்திரன் எழுதிய விமர்சனம்:


http://vijaymahendran.blogspot.com/2010/06/blog-post_14.html

-------------------------------------------------------------------------------------------------------
கவிதைகள் மூன்று:1.உயிர்மிருகம்
மொழி மரணித்த இரவொன்றின்
தாழ்வாரத்தில் சிதறிக்கிடக்கின்றன
சில ஞாபகங்கள்.
இருத்தல் தொலைந்த அவமானத்தில்
உடைகிறது தேநீர்க்கோப்பை.
சிறகறுந்த பறவைகளின் குருதி
மிகுந்த வெப்பத்துடன் அறை நிரப்புகிறது.
காரணங்கள் ஏதுமின்றி வீறிடுகிறது
இந்த உயிர்மிருகம்.

2. துர்தேவதையின் நடனத்தில் தொலைந்தவன்
மழைத்துளியொன்றை ஏந்தி வந்தாள்
கருமை நிற தேவதை.
அத்துளி பேருருவம் பெற்று
ஒரு மாளிகையான தருணம்
சிறுவனாகியிருந்தேன்.
கண்கள் மின்ன என்னை
மாளிகையின் உள்ளிழுத்துக்கொண்டாள்.
புற உலகிற்கான கதவு மூடப்பட்டது.
நீண்டதொரு மயக்கத்திலிருந்து
விடுபட்ட கணம்
என்னுலகம் களவாடப்பட்டிருந்தது.
ஈக்கள் மொய்க்கும் புன்னகையுடன்
நடனமிடுகிறாள் கருமை நிற
வதை.


3. இப்படித்தான் நீங்கள்..

அனுமதியின்றி உள்நுழைந்தீர்கள்.
சத்தியங்களை பொய்யாக்கினீர்கள்.
நண்பர்களிடையே திரை அமைத்தீர்கள்.
வேடமிட்டு அற்புதமாய் நடித்தீர்கள்.
தகித்தபோது வெந்நீர் ஊற்றினீர்கள்.
இல்லாத சோகத்தை அரங்கேற்றினீர்கள்.
தூக்கி எறிந்ததாய் பொய்யுரைத்தீர்கள்.
என் நண்பர்களின் நட்பானீர்கள்.
நிலவில் எச்சில் உமிழ்வதாய்
வானம் பார்த்து உமிழ்ந்தீர்கள்.
இப்படியான நீங்கள்
இப்போது,
கடவுளின் பிள்ளை என்கிறீர்கள்.
இப்படித்தான் நீங்கள்
என் மனவெளியின்
பட்டாம்பூச்சியாயிருந்து
மெல்ல மெல்ல புழுவாக
உருப்பெற்றீர்கள் என்பதை அறிவீர்களாக!
- நிலாரசிகன்.

Monday, June 07, 2010

நிழலாள்

நிழல்களில் நடக்கும் விளையாட்டை
ஆரம்பித்து வைத்தாள் தர்ஷிணி.
ஒவ்வொரு நிழலாக தாவிக்குதித்து
கடந்து செல்வாள்.
பன்னீர்ப்பூவொன்று குதித்து செல்வதை
போலிருக்கும் அவளது செயல்.
இன்று
நிழலற்ற தெருவில்
தனியே நடக்கிறாள்.
அவள் இல்லாத தெருவில்
நிழல்களே இல்லை
இப்போது.

- நிலாரசிகன்

Thursday, June 03, 2010

இடைவெளி


காற்றுப்புகாத கண்ணாடிச்சுவரின்
மறுபக்கத்தில்
கண்கள் மூடி அமர்ந்திருக்கிறார்
அவர்.

ஓர் இலையை இழுத்துக்கொண்டு
மரமேறிக்கொண்டிருக்கிறது
கட்டெறும்பு.

இறைக்கும் இயற்கைக்கும்
நடுவே
தங்கள் நிழலுடன் யுத்தமிட்டு
சரிகிறார்கள்
இந்த வழிப்போக்கர்கள்.

- நிலாரசிகன்.

Tuesday, June 01, 2010

பறவை வேடமிட்ட புல்லுருவி


1.
கடற்கரை மணலில்
சிப்பிகள் பொறுக்கும் சிறுமியாக
தோற்றமளித்து
பின்,
மழை ரசிக்கும் தேவதையின்
சாயலைக்கொண்டிருந்து
எதிர்பாரா கணத்தில்
நெருப்பை உமிழும் டிராகனாக
உருப்பெற்றது புல்லுருவியொன்று.
முரண்பாடுகளை கவ்விக்கொண்டு
தேசமெங்கும் பறந்து தீர்த்தது.
ஆத்மார்த்தமான நட்புக்குள்
எச்சமிட்டு உன்மத்த நிலையில்
உயரப்பறக்கிறது இப்போது.

2.
எனது சந்தோஷத்தின் சாவியை
திருடித் தொலைத்துவிட்டு
ஒன்றும் நடந்துவிடாத பாவனையில்
முன் தோன்றுகிறாய்.
கற்களாலான துர்தேவதைகளின்
மடியில் துயில்வது
உனக்கு பிடித்தமானதாக இருக்கிறது.
எதிரிகளின் கூடாரமெங்கும்
உன் பெயரை ஒலிக்கச்செய்கிறாய்..
முடிவில்,
ஒன்று மறந்தாய்..
மழை தின்ற வெயிலுடன்
நடக்கிறது உன் யுத்தம்.

- நிலாரசிகன்.