Saturday, October 02, 2010

வலிகளால் நிரம்பிய இரவொன்றில்...இந்த நிமிடம் நான் என்னை இழந்துவிட்டேன். என் கைகள் நடுங்குகின்றன. ஒரு ஆத்மார்த்தமான நேசிப்பை எதிர்பார்த்து உடைந்தது என் இதயம்.
அறையெங்கும் சிதறிக்கிடக்கின்றன என் இதயச்சில்லுகள். குருதியென கொப்புளிக்கிறது கண்ணீர். துர்தேவதைகளின் சாபத்தின் நிகழ்வுகளா இவை?
கற்களால் நீங்கள் என்னை அடிக்கலாம். கனவுகளின் மீதேறி மிதிக்கலாம். கடமையொன்று முடிந்ததென நீங்கள் ஆனந்த கண்ணீர் வடித்த தருணத்தில் துவங்கிற்று என் கனவுகளின் மரணம். முறிந்து விழுகின்றன என் கிளைகள். நிமிடத்தில் செந்நிற பாலையானது என்னுலகம்.

உணர்ச்சிகள் மடிந்துவிட்ட இவ்விரவில் உணர்வுகளின் தாண்டவத்தில் சிக்கியிருக்கிறேன். கனத்த மனதை வட்டமிடுகிறது மடிக்கணினி வழியே உதிரும் இசை. சோகங்களால் நிரம்பி வழிகிறது என் ப்ரியங்கள். தனிமைச்சுவரின் நடுவில் சாத்தான்களுடன் உரையாடுகிறேன். ரசனைகள் ஒவ்வொன்றாய் விலகிச்செல்வதை வலியுடன் பார்த்து துடிக்கிறது விழிகள். முகம் புதைத்து அழ மடியின்றி வீதியில் வீழ்ந்து மரிக்கின்றன என் கவிதைகள்.

ஏதேதோ எண்ணங்களால் வளர்ந்தேன். அவை இப்போது கானலாகி கரைந்தன. இரவு ஏன் இத்தனை கொடூரமானதாய் இருக்கிறது? இரவின் பற்கள் எப்போதும் என் கழுத்தில் பதிகின்றன. எழுதிய கவிதைகள் கேட்பாரற்று மூலையில் ஒடுங்கியிருக்கின்றன. மென்கவிதைகளின் கதறல் சத்தம் என் செவிகளுக்கு மட்டும் ஒலித்துக்கொண்டே  இருக்கிறது. முள்ளில் விழுந்த பறவையாய் கிழிகிறது இதயம்.

எதிர்பார்த்தல் தவறென்று புத்திக்கு தெரிந்தும் உள்ளங்கை அளவுக்குள் அடங்கும் பெரு இதயம் எதிர்பார்த்தலால்தான் துடிக்கிறது. பின் துவழ்கிறது. இனி நிறைவேறப்போவதில்லை எனத்தெரிந்தும் துடிதுடிக்கிறது. நான் இப்போது நானிலிருந்து வெளியேறுகிறேன்.

பூக்களால் நிறைந்திருக்கும் தனியுலகில் எனக்கான பாடலை சத்தமிட்டு பாடுகிறேன். என் கவிதைகள் ஒவ்வொன்றும் உருப்பெற்று ஆறடி பூக்களாய் தலையாட்டுகின்றன.கண்சிமிட்டுகின்றன. தழுவிக்கொள் என்கின்றன. பட்டாம்பூச்சிகளின் மடியில் சிறுவனாகிப்போகிறேன். முத்தங்களால் எனை தின்னத்துவங்குகிறாள் தேவதையொருத்தி. முகமேந்தி விழிக்குள் வீழ்கிறாள். மீண்டும் நானுக்குள் நுழைகிறேன்.

வலியை வார்த்தைப்படுத்தி தப்பிக்க நினைத்து தோற்கிறேன். உணர்தலின் வலியை மொழிக்குள் மறைக்க முடியாமல் துடிக்கிறேன். வெடித்து ஓய்ந்த பின்னும் அனலால் சூழ்ந்திருக்கிறது கருநிற துளியொன்று. நான் என்பது புள்ளிகளின் மொத்தமா?  குளத்தில் சொல்லெறியும் ஒருத்தியை நானறிவேன். சொற்களால் வதைக்கும் வித்தை கற்றவளின் நிழல் குளத்தில் விழுகிறது. குளத்தில் வசிக்கும் ஒற்றை மீனின் மரணம் இப்படித்தான் நிகழ்ந்தது நண்பர்களே. நீங்கள் கவிதையின் மரணத்தை கண்டிருக்கிறீர்களா?

கல்லறையொன்றை உருவாக்குங்கள். இந்த எழுத்து முதல் செங்கலாகட்டும்.

-நிலாரசிகன்.

18 comments:

Anonymous said...

அருமையான உணர்வுகளை அழகாக வார்த்தைப்படுத்தி உள்ளீர்கள். நன்றி...

~ஆனந்தம்

said...

கொஞ்சம் கொஞ்சமாய் பால் மறக்கடிக்கப்பட்ட குழந்தையாய், வலி மறந்து வாழ்க்கை நகரத் துவங்கிய நேரம்.... மீண்டும் வழியத் தொடங்குகின்றது குருதி.... உங்கள் வார்த்தைகளைப் படித்ததும்....! என்ன செய்ய?!

said...
This comment has been removed by the author.
said...

மூலையில் எங்கோ ஆணி அடித்தாற்போல இருக்கிறது உங்கள் வார்த்தைகளின் வலி ...

said...

:( no words to say...
God Bless you

said...

வார்த்தைகளினின்று வலி ரத்தமும் நிணமுமாய் வழிந்துகொண்டிருக்கின்றது!

said...

ஒவ்வொரு வார்த்தையும் வலியை உணர்த்துகிறது...

பார்த்தி

said...

இன்று எனது பிறந்த நாள். எல்லோருடைய வாழ்த்துக்களையும் சிரிப்புடனே ஏற்றுக்கொண்டாலும், மனதில் ஓடிகொண்டிருந்த வரிகளை எழுதியதை போல் இருக்கிறது, - நன்றி திரு.நிலா ரசிகன் அவர்களே..

பார்த்தி..

said...

வலி மிகும் வரிகள்

said...

வலியை உணர்த்துகிறது வார்த்தைகளின் வலி...

said...

வலியை வார்த்தைப்படுத்தி
இருக்கீங்க ...

நன்றி

said...

அழுகையில் கண்ணீர் துளிகள் சுமையில்லை
விழுகையில் சிந்தும் இரத்தத்துளிகள் சுமையில்லை
பிரிகையில் துடிக்கும் இதயத்துடிப்பும் சுமையில்லை
நிரந்தரம் என்று ஏதுமற்ற போது ,
சுதந்திரம் தேடும் உன் விழிகளில் வடிவதும் சுமையில்லை
சுகம்தான்

அன்புடன்
அனுஷாதாசன்

said...

நண்பர்களுக்கு நன்றி.

said...

yennannu sollanumnu theriyala..!!

ithai yezhuthi mudikkum pothu unga kannil irunthu oru sottu kanneer vazhinthirukkumaannuthaan yosikkath thonuthu.

vazhthukal nila...!

said...

solla maranthutten.....

padam nallayirukku.
already unga pathivukalil ithey padam paathirukken.irunthaalum ingayum azhagaayirukku...!

said...

Naan padithathum ennai ariyamal kaneer sindhinen...enakkaga ezhuthapatathu pola oru unarvu...vali aangaluku mattum sonthamalla...silla pengalum irukirargal...intha kavithaiyil koorapatta aanai pola...

said...

Naan padithathum ennai ariyamal kaneer sindhinen...enakkaga ezhuthapatathu pola oru unarvu...vali aangaluku mattum sonthamalla...silla pengalum irukirargal...intha kavithaiyil koorapatta aanai pola...

said...

ஏன் கல்லறை?
கல்வெட்டு ஒன்று உருவாக்கலாம்..
இந்த எழுத்து முதல் செங்கலாகட்டும்..