Tuesday, December 28, 2010

தமிழ்மணம் விருதுகள் 2010


அன்பின் நண்பர்களுக்கு,

தமிழ்மணம் வழங்கும் 2010ன் சிறந்த இடுகைகளுக்கான முதல் கட்ட வாக்கெடுப்பு நிறைவடைந்துவிட்டது. என்னுடைய மூன்று இடுகைகளை போட்டிக்கென அனுப்பியிருந்தேன். மூன்றும் முதல் கட்ட வாக்கெடுப்பில் தேர்வு பெற்று இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிற்கு தயாராக உள்ளன. இம்முறை பதிவர்கள் மட்டுமல்லாது வாசகர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இயலும்.

கீழே உள்ள பிரிவுகளில் வாக்களிக்க இங்கே செல்லவும்:

http://www.tamilmanam.net/login/tmawards_2010_vote.php

பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)

இடுகை: சங்கமித்திரை 


பிரிவு: நூல் விமர்சனம், அறிமுகம்

இடுகை: அதீதத்தின் ருசி- இறைநிலையின் உச்சம்  

பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்

இடுகை: சச்சின் - நம் காலத்து நாயகன்!  

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Saturday, December 25, 2010

உயிர்மை வெளியீடுகள் - டிசம்பர் 25,26அனைவரும் வருக.
நண்பர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

நட்புடன்,
நிலாரசிகன்.

Tuesday, December 21, 2010

Welcome to Dongmakgol - திரைவிமர்சனம்
கொரிய போர் உக்கிரத்தின் உச்சத்திலிருந்த 1950களில் நடப்பதாக சித்தரிக்கப்பட மிகச்சிறந்த திரைப்படம் " Welcome to Dongmakgol". தென்கொரிய படைவீரர்களும் வட கொரிய வீரர்களும் கடும் போரில் ஈடுபடுகிறார்கள். ஒரு மலையடிவாரத்தில் நடக்கும் போரில் சிதறி ஓடுகின்ற வடகொரிய வீரர்கள் மூவரை மனநலம் குன்றிய ஒரு இளம்பெண் பார்க்கிறாள். அவளை தொடர்பவர்கள் மலையடிவாரத்தில் அவள் வசிக்கும் குக்கிராமத்திற்குள் நுழைகிறார்கள். அங்கே விமானம் விபத்தொன்றில் சிக்கிய அமெரிக்க விமானி ஒருவனும் தென்கொரிய படைவீரர்கள் இருவரையும் சந்திக்கிறார்கள்.

இவர்களை கண்டவுடன் தென்கொரிய வீரர்கள் துப்பாக்கியை உயர்த்துகிறார்கள். இவர்களும் தென்கொரிய வீரர்களை நோக்கி துப்பாக்கியை உயர்த்தியபடி நிற்கிறார்கள். எதற்காக இவர்கள் இப்படி நிற்கிறார்கள் என்பதை உணர முடியாத கிராம மக்கள் தங்கள் சோள தோட்டத்தை துவம்சம் செய்யும் காட்டுப்பன்றியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மழை பொழியத்துவங்குகிறது அப்போதும் அசையாமல் குறிபார்த்தபடி நிற்கிறார்கள் வீரர்கள். இவர்களது கையிலிருக்கும் எறிகுண்டை உருளைக்கிழங்காக இருக்குமோ என்று சந்தேகிக்கிறார்கள் அப்பாவி கிராம மக்கள். அப்போது வீரனொருவனின் கையிலிருந்து தவறி விழும் குண்டு அவர்களது தானியக்கிடங்கை அழிக்கிறது. செய்வதறியாது நிற்கும் அவர்களுக்காக தங்களது ஆயுதங்களை துறந்து சோளம் பயிரிடுவதிலும் தானியக்கிடங்கை நிரப்புவதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க விமானியை தேடி வருகின்ற அமெரிக்க வீரர்கள் கிராமத்தினரிடம் முறைகேடாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்கிறார்கள். அந்த அப்பாவி மனநலம் குன்றிய இளம்பெண் கொல்லப்படுகிறாள். வெகுண்டெழும் கொரிய வீரர்கள் அமெரிக்க வீரர்களை கொன்றுவிடுகிறார்கள். அதில் ஒருவன் இன்னும் சில மணித்துளிகளில் இந்த இடத்தை அமெரிக்க ராணுவம் அழித்துவிடு இருப்பதாக கூறுகிறான். வெளியுலக வாசம்கூட அறியாத கிராமத்தை அமெரிக்க போர்விமானங்களில் குண்டுமழையிலிருந்து ஐந்து வட/தென்கொரிய வீரர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை திரையில் பாருங்கள்.

ஒரு மிகச்சிறந்த படத்தை பார்த்த நிறைவை இப்படம் நமக்குத் தருகிறது. மனதை அள்ளிக்கொண்டு போகும் மலையும் மலைசார்ந்த கிராமமும் அங்கே சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகளும்,பெண்ணுருவில் மனநலம் குன்றியதை கூட அறியாத பட்டாம்பூச்சியொன்றும்,துறுதுறு விழிகளுடன் வலம் வரும் சிறுவனும்,கூன்விழுந்த மூதாட்டியும்,வெள்ளந்தி மனிதர்களின் இயல்பான வாழ்வுமுறையும் இத்திரைப்படத்தோடு நம்மை ஒன்றிவிட செய்கிறது.

மனம் கவர்ந்த காட்சிகள் சில:

1. கொட்டும் மழையில் வான் பார்த்து மழைத்துளிகளை பருகும் இளம்பெண்.
2. தனித்துவிடப்பட்ட அப்பெண்ணிற்கு தன்னிடமிருக்கும் சாக்லெட்டை தந்துவிட்டு கண்ணிரூடன் திரும்பும் ராணுவ வீரன்.
3. பரம எதிரியாக இருந்த தென்/வட கொரிய வீரர்கள் நண்பர்களாக மாறும் காட்சி.
4.தென்கொரிய வீரர்களில் ஒருவன் வடகொரிய வீரனிடம் உன்னை அண்ணன் என்று அழைக்கலாமா என்று கேட்பது.
5.பன்றிக்கறியை தென்/வட/அமெரிக்க விமானி ஒன்றாக உண்ணும் இரவு
6.வழுக்கும் மலைச்சரிவில் சிறுவர்களைப்போல் அனைவரும் சறுக்கி விளையாடும் காட்சி.
7.பட்டாம்பூச்சிகள் மொத்தமாக விண்ணோக்கி எழும்பி பறக்கும் இரவு
8.குண்டுமழை பொழியும் விமானங்களை வலிநிரம்பிய புன்னகையுடன் எதிர்கொள்ளும் வீரர்கள்
9.அமெரிக்க விமானியை பிரிய முடியாமல் அழுகின்ற அந்த குண்டு சிறுவனின் கண்ணீர்
10.தானியக்கிடங்கில் விழுந்து வெடித்த குண்டால் வானமெங்கும் சிதறிய சோளம் பாப்க்கார்னாக மலர்ந்து விழுவதும் அதனை ரசித்து இளம்பெண் குதிப்பதும்
11.தென்கொரிய வீரர்களின் தலைவன் தன் தலைமையை வடகொரிய வீரனிடம் விட்டுக்கொடுக்கும் இடம்.
12.குபீர் சிரிப்பை வரவழைக்கும் கிராம மக்களின் வெகுளித்தனம்.
13.மனம் குன்றிய பெண்ணாக நடித்திருக்கும் அந்த இளம்பெண்ணின் நடிப்பு.
14. படத்தின் இசை

சொல்லிக்கொண்டே போகலாம். யார் பெரியவன் என்கிற திமிர்த்தனத்தின் மீது  மிகக்கடுமையான விமர்சனங்களை வெகு இயல்பாய் தெளித்துச்செல்கிறது இப்படம். யாருமற்ற இரவொன்றின் தனிமையில் சன்னல் வழியே கசிகின்ற மென்குளிரில் கொஞ்சம் தேநீருடன் ரசிக்கவேண்டிய படம். அவசியம் பாருங்கள்.

வெளியான வருடம்: 2005
படத்தின் நீளம்: 133 நிமிடங்கள்
இயக்குனர்: பார்க் வாங் ஹியுன்
இணையத்தில் பார்க்க: http://www.youtube.com/watch?v=EyPCMajTnJQ&feature=related
- நிலாரசிகன்.

Thursday, December 16, 2010

மழைக்கு காத்திருக்கும் சிறுமி
1.
உனக்கும் எனக்கும் இடையில்
மூன்று நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
முதல் நதியில் ஓர் ஓடமும்
இரண்டாம் நதியில ஓர் இலையும்
மிதப்பதை மூன்றாம் நதியில்
அமர்ந்திருக்கும் நீள்தாடி கிழவன்
ரசித்துக்கொண்டிருக்கிறான்.
கற்பனைகளாலான கயிற்றில்
நாம் கட்டப்படுகிறோம்.
நம் பாவத்தின் அறிக்கைகளை
வெளியிடும் நாளில்
கட்டுக்கள் அவிழ்ந்து மீண்டும்
இணைகிறோம்.
நம்மிடையே நிற்காமல்
இப்போதும்
ஓடிக்கொண்டிருக்கிறது அதே நதி.

2.

யார் யாரோவாக அறிமுகமாகிறோம்.
யாதுமாகி உள் அமர்கிறோம்.
எதுவுமற்று சாம்பலென உதிர்கிறோம்.

3.
தாயின் ஸ்பரிசங்களோடு
தொடுகின்ற விரல்களை
பெற்றிருக்கிறாய்.
நீலக்கடலின் ஆழ்ந்த அமைதி
உன் விரல்களெங்கும் விரவிக்கிடக்கிறது.
வலிகளை கண்ணீர்த்துளிகளால்
நீக்குகிறாய்.
மார்போடு அணைத்துக்கொண்டு
நீங்குதலின் அர்த்தங்களை தெருவெங்கும்
சிதறவிட்டபடி கதறும் சருகுகளின்
மேல் நடந்து செல்கிறாய்.
மீண்டும்,
மழைக்கு காத்திருக்கிறாள் சிறுமி.

-நிலாரசிகன்.

Thursday, December 09, 2010

கவிதை நூல் வெளியீடு


முன் கவிதைச்சுருக்கம்:

ஒரு நீண்ட பயணத்தின் துவக்கம் சில வருடங்களுக்கு முன்பு துவங்கியது. சிற்றிதழொன்றில் படித்த கவிதையொன்றின் வரிகள் உயிரெங்கும் வியாபித்து என்னை ஆட்கொண்டு நர்த்தனமாடிக்கொண்டிருந்த நேரம்...அவ்வரிகளை எழுதிய கவிஞனுடன் பேச வேண்டும்  என்கிற ஆவலில் தொடர்புகொண்டபோது கவிதை குறித்து அவன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் புதியதொரு பரிணாமத்தை உணர வைத்தது. அவன் சி.வெங்கடேஷ். அதன் பிறகு அவன் மூலமாக அறிமுகமான கவிஞர்.க.அம்சப்ரியா,மு.ஷரிகிருஷ்ணன் வழியே பல கவிதை நூல்களும் கவிதை பற்றிய விவாதங்களும் என்னை வந்தடைந்தன.புதியதொரு கவிதையுலகத்தின் சாளரத்தை திறந்துவிட்ட இம்மூவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.குறிப்பாக நவீன கவிதை குறித்த பல கேள்விகளுக்கு சளைக்காமல் "புன்னகை"யுடன் பதிலிட்ட அம்சப்ரியாவிற்கு எப்போதும் என் அன்பும் நட்பும். மற்றும் நட்சத்திரங்களாய் என் வானம் நிறைத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், இந்நூலை சாத்தியப்படுத்திய அன்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

இணையத்தால் இணைந்த இதய நண்பர்களுக்கு,

இம்மாதம் 26ம் தேதி  என் கவிதை தொகுப்பு "வெயில் தின்ற மழை" வெளியாகிறது. உயிர்மை பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. தமிழின் முக்கிய/முன்னணி இலக்கிய ஆளுமைகள் கலந்துக் கொள்கிறார்கள். அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நட்புடன்,
நிலாரசிகன்.
nilaraseegan@gmail.com

Monday, December 06, 2010

எழுத்து திருட்டு: வலைப்பதிவர்கள் கவனத்திற்கு

ஒரு நீண்ட இரவை கடக்க வைத்து பின்பு வெளிக்குதிக்கலாம். ஒரு ஆழ்நிலைக்குள் நம்மை இழுத்து
வெளியேறலாம். தியானவெளியில் பித்தனாக அலைந்து திரியவைத்து பின்னொரு  மெளனப்புன்னகையுடன் அருகில் வந்தமரலாம். யாருமற்ற பாலையில் ஒரு துளியாக விழுந்து கடலென விரியலாம்.

கவிதை: வெறும் வார்த்தைகள் அல்ல. கவிதை: வார்த்தைகளின் வர்ணமடிக்கும் வெற்று வேலையில்லை. கவிதை: வலி நிவாரணி மட்டுமே அல்ல. கவிதை: மழை மட்டும் அல்ல.

கவிதை ஒரு தவம். கவிதை இன்னோர் உயிர். கவிதை வெற்றிடங்களை நிரப்பும் புனிதநீர். கவிதை அகக்கடலின் பிரவாகம். கவிதை ஆன்மாவின் வரிவடிவம்.

ஒவ்வொரு கவிதை எழுதி முடிக்கப்பட்ட பின்னும் தோன்றும் உணர்வை  எழுத்தில் எப்படி வடிப்பது? அந்த உணர்வின் உச்சத்தில் கரைந்தோடும் கண்ணீரும் பின் சிந்தும் புன்னகையும் உணர்ந்தால் மட்டுமே கவிதையின் கனம் என்னவென்பது புரியும்.


இத்தனை விஷயம் கவிதைக்கு பின் நிகழ்கிறது என்பதை அறியாத ஒரு 'புத்திசாலி'  2009ம் ஆண்டு நானெழுதிய ஒரு பதிவை அப்படியே அப்பட்டமாக தன் வலைப்பூவில் பதிந்திருக்கிறார்
தென்றல் என்கிற பதிவர்.

என் இடுகை:


http://www.nilaraseeganonline.com/2009/09/blog-post_28.html


"தென்றலின்" இடுகை:


http://pushpalatham.blogspot.com/2010/07/blog-post_3679.html


இதைப்பற்றி பண்புடன் குழுமத்தில் எழுதியிருந்தேன் நேற்றிரவு. அதற்கு நண்பர் விழியன் இட்ட மறுமொழி மேலும் அதிர்வுக்குள்ளாக்கியது.

இந்த தென்றல் என்கிறவர் பிறரது பதிவுகளை திருடுவதையே பிழைப்பாக கொண்டிருக்கிறார் போலும்!

விழியனின் மறுமொழி:

//

Umanath Selvan
இது ஒன்னு மட்டும் இருந்தா பரவாயில்ல நிலா

இங்க பாருங்க
http://pushpalatham.blogspot.com/2010/08/blog-post.html
http://kavithai.yavum.com/content/view/140/1/
...தன் தோழிக்கு எழுதிய கடிதத்தை கூட இப்படியா கொடுக்கனும்?

மேடம் பல தளங்களில் இருந்து பத்தி பத்தியா உருவி ஒரு கட்டுரை போட்டிருங்காங்க
http://pushpalatham.blogspot.com/2010/08/blog-post_17.html
ஒவ்வொரு வரியையும் கூகுளிடவும்.

http://pushpalatham.blogspot.com/2010/07/blog-post_20.html
ஆனந்த விகடனில் வந்த கட்டுரையாம் :)))

http://pushpalatham.blogspot.com/2010/07/blog-post_6687.html

நான் இந்த ஆட்டத்துக்கு வரல.

எல்லோரும் போன் போட்டு ஒரு வார்த்தை கேக்கலாம். அவங்க ப்ளாகில் போன் நம்பர் இருக்கு.//

முதலில் ignore செய்துவிடவே எண்ணியிருந்தேன். ஆனால் இவரை போன்ற புல்லுருவிகளை இனியாவது தடுக்க வேண்டும். இவரது வலைப்பூவை தமிழ்மணம்/இன்ட்லி தடைசெய்யவேண்டும்.

உலகின் மிக மோசமான திருட்டு அடுத்தவரின் சிந்தனையை திருடுவது. என்ன செய்யலாம் நண்பர்களே!

-நிலாரசிகன்.

Wednesday, December 01, 2010

உடைதலின் கணம்1.
துரோகத்தின் நுழைவு வாயிலின்
அருகே சென்று திரும்புகிறது
ஒரு குழந்தையின் நிழல்.
ஒப்பீடுகளற்ற அன்பின் கண்ணாடி
உடைதலின் கணத்தை கடந்துவிடுகிறது.
ஈரம் கடக்கும் இதழ்கள்
உப்பின் சுவை உணர்ந்து மெளனிக்கின்றன.
பிரக்ஞையின்றி தூரம் வெறித்த
பார்வையுடன்
காலடியில் வாலாட்டும் நதியில்
கல்லெறிந்துகொண்டிருக்கிறாய்
நீ.

2.
இதற்கு பெயரிடுவது பற்றி
சிந்திக்கலாம்.
இதற்கு ஒரு பூனையின் பெயரை
வைப்பது பொருத்தமாக தோன்றுகிறது.
ஏனெனில்,
இதுவொரு தவறை
பாத சத்தமின்றி நிறைவேற்றவும்
ஒரு நேசத்தின் இறுகிய முடிச்சை
பற்களால் அவிழ்க்கவும்
முயல்கிறது.
இதற்கு பெயரிட
நாய்க்குட்டியின் உருவிலிருந்து
வெளியேற வேண்டும்
நான்.

-நிலாரசிகன்.