Tuesday, December 21, 2010

Welcome to Dongmakgol - திரைவிமர்சனம்
கொரிய போர் உக்கிரத்தின் உச்சத்திலிருந்த 1950களில் நடப்பதாக சித்தரிக்கப்பட மிகச்சிறந்த திரைப்படம் " Welcome to Dongmakgol". தென்கொரிய படைவீரர்களும் வட கொரிய வீரர்களும் கடும் போரில் ஈடுபடுகிறார்கள். ஒரு மலையடிவாரத்தில் நடக்கும் போரில் சிதறி ஓடுகின்ற வடகொரிய வீரர்கள் மூவரை மனநலம் குன்றிய ஒரு இளம்பெண் பார்க்கிறாள். அவளை தொடர்பவர்கள் மலையடிவாரத்தில் அவள் வசிக்கும் குக்கிராமத்திற்குள் நுழைகிறார்கள். அங்கே விமானம் விபத்தொன்றில் சிக்கிய அமெரிக்க விமானி ஒருவனும் தென்கொரிய படைவீரர்கள் இருவரையும் சந்திக்கிறார்கள்.

இவர்களை கண்டவுடன் தென்கொரிய வீரர்கள் துப்பாக்கியை உயர்த்துகிறார்கள். இவர்களும் தென்கொரிய வீரர்களை நோக்கி துப்பாக்கியை உயர்த்தியபடி நிற்கிறார்கள். எதற்காக இவர்கள் இப்படி நிற்கிறார்கள் என்பதை உணர முடியாத கிராம மக்கள் தங்கள் சோள தோட்டத்தை துவம்சம் செய்யும் காட்டுப்பன்றியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மழை பொழியத்துவங்குகிறது அப்போதும் அசையாமல் குறிபார்த்தபடி நிற்கிறார்கள் வீரர்கள். இவர்களது கையிலிருக்கும் எறிகுண்டை உருளைக்கிழங்காக இருக்குமோ என்று சந்தேகிக்கிறார்கள் அப்பாவி கிராம மக்கள். அப்போது வீரனொருவனின் கையிலிருந்து தவறி விழும் குண்டு அவர்களது தானியக்கிடங்கை அழிக்கிறது. செய்வதறியாது நிற்கும் அவர்களுக்காக தங்களது ஆயுதங்களை துறந்து சோளம் பயிரிடுவதிலும் தானியக்கிடங்கை நிரப்புவதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க விமானியை தேடி வருகின்ற அமெரிக்க வீரர்கள் கிராமத்தினரிடம் முறைகேடாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்கிறார்கள். அந்த அப்பாவி மனநலம் குன்றிய இளம்பெண் கொல்லப்படுகிறாள். வெகுண்டெழும் கொரிய வீரர்கள் அமெரிக்க வீரர்களை கொன்றுவிடுகிறார்கள். அதில் ஒருவன் இன்னும் சில மணித்துளிகளில் இந்த இடத்தை அமெரிக்க ராணுவம் அழித்துவிடு இருப்பதாக கூறுகிறான். வெளியுலக வாசம்கூட அறியாத கிராமத்தை அமெரிக்க போர்விமானங்களில் குண்டுமழையிலிருந்து ஐந்து வட/தென்கொரிய வீரர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை திரையில் பாருங்கள்.

ஒரு மிகச்சிறந்த படத்தை பார்த்த நிறைவை இப்படம் நமக்குத் தருகிறது. மனதை அள்ளிக்கொண்டு போகும் மலையும் மலைசார்ந்த கிராமமும் அங்கே சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகளும்,பெண்ணுருவில் மனநலம் குன்றியதை கூட அறியாத பட்டாம்பூச்சியொன்றும்,துறுதுறு விழிகளுடன் வலம் வரும் சிறுவனும்,கூன்விழுந்த மூதாட்டியும்,வெள்ளந்தி மனிதர்களின் இயல்பான வாழ்வுமுறையும் இத்திரைப்படத்தோடு நம்மை ஒன்றிவிட செய்கிறது.

மனம் கவர்ந்த காட்சிகள் சில:

1. கொட்டும் மழையில் வான் பார்த்து மழைத்துளிகளை பருகும் இளம்பெண்.
2. தனித்துவிடப்பட்ட அப்பெண்ணிற்கு தன்னிடமிருக்கும் சாக்லெட்டை தந்துவிட்டு கண்ணிரூடன் திரும்பும் ராணுவ வீரன்.
3. பரம எதிரியாக இருந்த தென்/வட கொரிய வீரர்கள் நண்பர்களாக மாறும் காட்சி.
4.தென்கொரிய வீரர்களில் ஒருவன் வடகொரிய வீரனிடம் உன்னை அண்ணன் என்று அழைக்கலாமா என்று கேட்பது.
5.பன்றிக்கறியை தென்/வட/அமெரிக்க விமானி ஒன்றாக உண்ணும் இரவு
6.வழுக்கும் மலைச்சரிவில் சிறுவர்களைப்போல் அனைவரும் சறுக்கி விளையாடும் காட்சி.
7.பட்டாம்பூச்சிகள் மொத்தமாக விண்ணோக்கி எழும்பி பறக்கும் இரவு
8.குண்டுமழை பொழியும் விமானங்களை வலிநிரம்பிய புன்னகையுடன் எதிர்கொள்ளும் வீரர்கள்
9.அமெரிக்க விமானியை பிரிய முடியாமல் அழுகின்ற அந்த குண்டு சிறுவனின் கண்ணீர்
10.தானியக்கிடங்கில் விழுந்து வெடித்த குண்டால் வானமெங்கும் சிதறிய சோளம் பாப்க்கார்னாக மலர்ந்து விழுவதும் அதனை ரசித்து இளம்பெண் குதிப்பதும்
11.தென்கொரிய வீரர்களின் தலைவன் தன் தலைமையை வடகொரிய வீரனிடம் விட்டுக்கொடுக்கும் இடம்.
12.குபீர் சிரிப்பை வரவழைக்கும் கிராம மக்களின் வெகுளித்தனம்.
13.மனம் குன்றிய பெண்ணாக நடித்திருக்கும் அந்த இளம்பெண்ணின் நடிப்பு.
14. படத்தின் இசை

சொல்லிக்கொண்டே போகலாம். யார் பெரியவன் என்கிற திமிர்த்தனத்தின் மீது  மிகக்கடுமையான விமர்சனங்களை வெகு இயல்பாய் தெளித்துச்செல்கிறது இப்படம். யாருமற்ற இரவொன்றின் தனிமையில் சன்னல் வழியே கசிகின்ற மென்குளிரில் கொஞ்சம் தேநீருடன் ரசிக்கவேண்டிய படம். அவசியம் பாருங்கள்.

வெளியான வருடம்: 2005
படத்தின் நீளம்: 133 நிமிடங்கள்
இயக்குனர்: பார்க் வாங் ஹியுன்
இணையத்தில் பார்க்க: http://www.youtube.com/watch?v=EyPCMajTnJQ&feature=related
- நிலாரசிகன்.

4 comments:

said...

பகிர்விற்கு நன்றி!

said...

நல்ல விமர்சனம்.. பகிர்வுக்கு நன்றி..

said...

நன்றி யோவ்,வெறும்பய..

அவசியம் பாருங்கள் :)

said...

nanri :)