Wednesday, February 23, 2011

போதி மரத்தின் ஒடிந்த கிளை


பூட்டிய அறை யன்னலின் சிறுதுவாரம்
வழி உள் புகுந்தனர் ஆதிகள்.
மொத்தம் நாற்பத்தி நான்கு பேர்.
ஒவ்வொருவரின் கைகளிலும் ஆயுதமிருந்தது.
முதலாவதாக என்னுடலில்
தன் ஆயுதத்தை நுழைத்தவனின் பெயர்
சிலிர்ப்பூட்டியது.
வரிசையாக..
ஒவ்வொருவராக..

கடைசியாக
குருதி வெள்ளத்தில்
என்னை சிதைத்தவனின் பெயர்
ஆச்சர்யமூட்டியது.
வெளியேறினார்கள்.
அறையெங்கும் பெயர்களை விட்டுச்சென்றார்கள்.
முதலாவது ஆயுதத்தை செலுத்தியவன்
கைகளில்
போதி மரத்தின் ஒடிந்த கிளையும்,
கடைசி ஆயுதத்தால் சிதைத்தவன்
கைகளில்
கனமற்ற சிலுவையும் இருந்தன.
-நிலாரசிகன்

Monday, February 14, 2011

364 நாட்களுடன் வசிப்பவன்முடிவற்று நீளும் இரவுகளிலும்
நின்று கொண்டே உறங்கும் புரவிகளின்
நிழல்களில் ஊர்ந்து செல்லும் எறும்புத்தடத்திலும்
தியானப்பெருவெளியின் வறண்ட நதியோரத்தில்
தலை குனிந்து மரணத்தின் முதல் படியில்
நிற்கும் ஒற்றை பூச்செடியிலும்
இன்னும்
அறியப்படாத வண்ணத்துப்பூச்சிகளின்
சிறகு வர்ணத்திலும்
உரையாடும் இலைகள் கொண்ட
வனமொன்றின் நடுவிலும்
இருண்ட கனவுகளில் கரையும்
சிவப்பு நிற மெழுகின் பாதங்களிலும்
தேடி
தேடி
களைத்து 
இக்கவிதையில் வீழ்ந்தேன்.
ஒரு ரயில் நிலைய சந்திப்பில்
ஆயிரம் யுகங்களுக்கும் மீள இயலாமல்
என்னைக் களவாடி ஓடி மறைந்த
இரண்டாம் மாதத்தின்
பதினான்காம் நாளை.

-நிலாரசிகன்.

Thursday, February 10, 2011

களம் புதிது - கவிதை வாசிப்பு


Sunday, February 06, 2011

மிஷ்கின் என்றொரு கலைஞன்[யுத்தம் செய் - விமர்சனம்]
The color of paradise  படத்தை நினைத்தவுடன் ஞாபகத்திற்கு வருவது கண்பார்வையற்ற அந்தச் சிறுவனா அல்லது படம் நெடுக ஒலிக்கும் அந்த மரங்கொத்தியின் சன்னமான சப்தமா? மரங்கொத்தி எனில் யுத்தம் செய் திரைப்படம் உங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமரும். ஏனெனில் மேலோட்டமாக சில திரைப்படங்களை நாம் அணுக முடியாது. மேலும்,திரைப்படம் என்பதே பொழுதுபோக்குவதற்குத்தான் என்கிற நம் பொதுப்புத்தியை கழற்றி எறிந்துவிட்டு வேறோர் அனுபவத்தை வேறோர் உலகை நமக்குணர்த்தும் திரைப்படங்களை தேட வேண்டும்.
அவ்வகையில் நாம் கண்டிராத களங்களை கொண்ட படங்கள் ஏராளம். பொதுவாக அதனை உலகத்திரைப்படம் என்கிறோம்.

மிஷ்கின். சந்தேகமின்றி தமிழுக்கு கிடைத்த  அற்புதமான கலைஞன். சித்திரம் பேசுதடியில் ஒரு சிறிய சித்திரத்தை தீட்டதுவங்கி நந்தலாலா வரை நீண்டதொரு சித்திரப்பயணத்தில் வெற்றிகரமாக தமிழ்சினிமாவிற்கு புது வர்ணம் பூசியவர். ஒரு காட்சியெங்கும் விரவிக்கிடங்கும் உரையாடல்களை
கச்சிதமான காட்சிப்படுத்துதல் வழியே படம் பார்ப்பவர்களை இணைத்துவிடும் ஆற்றல் கொண்டவர். விதவிதமான கேமிரா கோணங்களில் வெகு சாதாரண காட்சிகளை உலகத்தரமிக்க காட்சிகளாக்கும் வல்லமை படைத்தவர். இதைத்தான் நாங்கள் அந்த உலகசினிமாவில் பார்த்தோமே இந்தக்காட்சியைத்தான் நாற்பது வருடங்களுக்கு முன்பே ஜப்பானியத்திரைப்படமொன்றில் எடுத்திருக்கிறார்களே என்று ஒவ்வொரு காட்சியையும் ஏளனம் செய்யும் அதிமேதாவி உலகசினிமா ரசிகர்களை பற்றி இவர் கவலைப்படவில்லை என்பதை நந்தலாலா சொல்லிற்று. தமிழனுக்கு இது புதுசு. நான் கற்றதை,என்னைக் கவர்ந்ததை தமிழில் தமிழ் ரசிகனுக்கு தருகிறேன் என்றவர்.

யுத்தம் செய். முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்பதை பார்க்கும் எவராலும் யூகிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி. வெட்டப்பட்ட கைகள் அட்டைப்பெட்டியில் பொது இடங்களில் காணப்படுகின்றன. சென்னை நகரை உலுக்கும் இந்த கேஸ், தங்கையை தொலைத்த சிபிசிஐடி அதிகாரி சேரனிடம் ஒப்படைக்கப்படுகிறது. எந்தவொரு தடயமுமின்றி எதற்கிந்த கைகள் வெட்டப்பட்டு பொதுவெளியில் வைக்கப்படுகின்றன என்ற புதிரை மெல்ல மெல்ல சேரன் அவிழ்க்க முயல்கிறார். இவ்வளவுதான் கதை. ஆனால் இதனை சொன்ன விதத்தில்தான் தனித்து நிற்கிறார் இயக்குனர். படத்தில் அதிகம் கவர்ந்த காட்சிகளை முதலில் பகிர்ந்துகொள்கிறேன்.

கவர்ந்த காட்சிகள்/நுணுக்கங்கள்:
 1. ஒரு பிணவறையில் வெகு இயல்பாய் கோர்ட்டால் தலையை போர்த்திக்கொண்டு உறங்கும் டாக்டர்
 2. முதல் காட்சி. சேரனின் தங்கை ஆட்டோவிற்கு ஏதோ விபரீதம் என்று புரிந்துகொண்டு அலைபேசியில் தகவல் தெரிவிக்க நகர்கையில் பின்னால் செல்லும் ஆட்டோ ட்ரைவர் மீண்டும் ஆட்டோவுக்குள் திரும்பாதது. Frameல் ஆட்டோவை மட்டும் சில நொடிகள் காண்பிப்பது.
 3. சுரங்கப்பாதை. தூரத்தில் ஒரு பெண் பெருக்கிக்கொண்டிருக்கிறாள். ஏதோவொன்று அவள் பார்வையில் பட மெல்ல நகர்ந்து முன்னால் வருகிறாள். இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் நோக்கி நகர்கிறது கேமிரா. அங்கே கனமான மெளனத்துடன் கிடக்கிறது அட்டைப்பெட்டி. அதிலிருந்து ஆரம்பிக்கும் பின்னணி இசை.
 4. ஒல்லிப்பிச்சானின் முகமூடி.
 5. அசோக் நகர் போலீஸ் ஸ்டேசன் அதிகாரியின் சில்லறைத்தனம்.
 6. சிகரெட்/தேநீர் கேட்கும் அதிகாரியின் கோபமும் இயலாமையும்
 7. இடைவேளையில் வரும் மிக அற்புதமான சண்டைக்காட்சி. (தியேட்டரில் விசில் பறந்தது)
 8. பிணவறை டாக்டரின் மிகச்சிறந்த நடிப்பு
 9. கறுப்புக்கண்ணாடி தாத்தா
 10. வயிற்றில் குத்திய கத்தியை பிடுங்கி எறிந்துவிட்டு தீர்க்கமான பார்வையுடனும் வெறியுடனும் கொலைகாரனை நோக்கி நகரும் பெண்
 11. தன் மகனின் கைகளை பார்த்து கதறி அழுகின்ற குண்டுப்பெண்.
 12. தூக்கு போட்டு இறந்த பெண்ணை தலைசாய்த்து பார்க்கும் தாயின் பார்வையை காட்சியாக்கியிருப்பது
 13. பிணத்தை பார்த்துவிட்டு விரைத்து அமர்ந்திருக்கும் சிறுவன்.
 14. சேரன்,ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை,அசோக்நகர் காவல் அதிகாரி,பிணவறை டாக்டர்,மாணிக்கவிநாயகம் - நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.
 15. ஒளிப்பதிவு,இசை,திரைக்கதை - அற்புதம்
 16. உணர மட்டுமே முடிந்த இன்னும் நூறு காட்சிகள் :)
படத்தின் குறைகள்:
 1. துணை கமிஷ்னர் சுடப்பட்டு வீழ்கிறார். அவரது பெண்ணிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வருகிறது "Daddy calling".!!!
 2. சேரனிடம் கொடுக்கப்படும் உதவி அதிகாரிகளின் Profileஐ குப்பையில் வீசுவது. எந்த அதிகாரி இப்படி வீசுவார்?
 3. அஞ்சாதே படத்தை ஞாபகப்படுத்தும் காட்சிகள். குறிப்பாக அந்த முழுக்கை கறுப்பு பனியன் அணிந்த ஒல்லிப்பிச்சான்.
 4. ஒய்.ஜி.மகேந்திரன் ஏ.சி வழியே தப்பிக்க அவரே தச்சு வேலை செய்கிறார். மருத்துவருக்கு எப்படி தெரிந்தது இத்தொழில்?
 5. குடும்பம் புள்ளைகுட்டி சகிதமாக இத்திரைப்படத்தை பார்க்க முடியுமா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு ரத்தம்,வன்புணர்ச்சி,பிணம்,டார்ச்சர் வகையறாக்கள்.
 6. படத்திற்கு ஒட்டாத குத்துப்பாடல்.பாடலுக்குள் ஒட்டாத சாரு :)
படத்தின் "தைரியங்கள்":
 1. BDSM  வகை செக்ஸ் டார்ச்சரை காண்பித்திருக்கும்  முதல்  தமிழ்ப்படம் இதுவாகத்தானிருக்கும்.
 2. பிணவறை காட்சிகள்
 3. நகவெட்டியிலிருக்கும் கத்தி. அதன் மூலம் ரவுடியின் நெஞ்சில் எவ்வித முகபாவங்களுமின்றி சேரன் குத்திக்கொண்டே நடக்கும் காட்சி. சபாஷ்!
 4. சடாரென்று உள்ளிருந்து வெளிவரும் குவாலிஸ் சேரனின் காருடன் மோதும் காட்சி. அதுவரை அமைதியாக சுற்றிக்கொண்டிருக்கவைத்து,காக்கவைத்து சரட்டென்று வெளிக்கொண்டுவந்திருக்கும் இயக்கம்.

ஒரு நாவலாசிரியன் தன் பாத்திரப்படைப்பை உருவாக்கும் அக்கறையுடனும்,நேர்த்தியுடனும்,நுணுக்கமுடனும் மிஷ்கின் யுத்தம் செய் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

யுத்தம் செய்:
குழந்தைகளை தவிர்த்துவிட்டு அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம். வாழ்த்துகள் மிஷ்கின்.

-நிலாரசிகன்.

Tuesday, February 01, 2011

புத்தக யாத்ரீகன் 
கனமான நூலொன்றின் நானூற்றி இருபதாவது
பக்கத்தில்தான் முதலில் அவனை சந்தித்தேன்
சொற்கூட்டங்களில் பின்னிருந்து வெளிக்குதிக்க
கடும் முயற்சிகளிலிருந்தான்.
ஒவ்வொரு சொல்லாக அகற்றி விடுவித்தேன்.
தூர தேசமொன்றிலிருந்து புத்தகங்கள் வழியே
அவன் இந்நூலிற்குள் கடத்தப்பட்ட செய்தியை
வருத்தங்களுடன் பகிர்ந்தவனுக்கு தேநீர் கொடுத்தேன்.
மீண்டும் தன் தேசம் திரும்பும் வழியை
ஏழு முறை கேட்டுச் சலித்தான்.
ஒரே ஒரு வழி இதுவென்று
என் கவிதையொன்றில்
அடைத்துவைத்தேன்.
இக்கணம்.
-நிலாரசிகன்.