Sunday, April 24, 2011

கல்குதிரை கவிதைகள்
1. சோலஸ்

ஆழியின் மையத்தில் ஒரு அரச குடும்பத்தினர்
வசிக்கிறார்கள்.
அவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள்
இருக்கிறாள்.
அவளை கவர்ந்து சென்றான்
அலைக்குதிரையில் ஒலிவேகத்தில் வந்தவன்.
எட்டுத் திசையில் தேடியும் சோலஸ்ஸை
அரசனால் கண்டுபிடிக்க இயலவில்லை.
சோர்ந்தவனின் கண்களில் வழிகிறது
செந்நீர்.
கடலின் சுவை மாறிப்போகிறது.
யுகம் பல கடந்த பின்னும்
அலையாகி கரையெங்கும் தேடுகிறான்.
தூரத்தில் ஏதோவொரு சிறு நதியில்
ஒன்றாய் நீந்துகிறார்கள்
சோலஸ்ஸும் அவனும்.

2. சாமக்கோடாங்கி

கோடாங்கியின் குடுகுடுப்பைக்குள்
இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
இரவை இரண்டாக பிளக்கும்
கூர்வாளை அவர்கள் தயார் செய்கிறார்கள்.
சாம்பல் நிற நாய்களையும்
கூகையொன்றையும் விஷமேற்றி
வளர்க்கிறார்கள்.
நீண்ட சடை முடிக்குள்
மேலும் இருவர் அமர்ந்திருக்கிறார்கள்.
நீல நிறத்தாலான கண்களும்
சிவந்த உடலையும் கொண்டிருக்கிறார்கள்.
கோடாங்கி,
ஐந்து தலையுடைய நாகத்தின்
உருவமெடுக்கிறான்.
இரவை விஷத்தால் நிரப்பிக்கொண்டு
திரிகிறான்/நடனமிடுகிறான்/கிறங்குகிறான்
விடியலில்,
விஷமனிதர்களை கண்ணுற்று
ஓடி மறைகிறான்.

-நிலாரசிகன்
[இவ்வருட கல்குதிரை இலக்கிய இதழில் வெளியான கவிதைகள்]

Friday, April 22, 2011

குடுவை மீன்

 
வெற்றிடங்களால் நிரம்பியிருக்கும்
அறையை தன் சிறு கண்களால்
பார்க்கிறது கண்ணாடிக்குடுவை மீன்.
நிசப்த அறைக்குள் நீண்டதொரு
கடற்கரையை காண்கிறது.
அக்கரையில் ஈரம் படர
அதன் வாலசைவில் பேரலையொன்றை
உருவாக்குகிறது.
அலை வழியே கரையடைந்து
யாருமற்ற கரையில்
நீந்தியும் நடந்தும் விளையாடுகிறது
கடலை படைத்த குடுவைமீன்.
கடலிருக்கும் அறைக்கதவு
தட்டப்படும் வரை.

(இன்று மரணித்தை தழுவிய நான் வளர்த்துவந்த மீன் “வந்தியத்தேவனுக்கு”. புகைப்படத்தில் வந்தியத்தேவன்)
-நிலாரசிகன்.

Sunday, April 17, 2011

கதைசொல்லி


விசித்திரமான கதைசொல்லியொருவனை
இரவின் பின்பொழுதில்
சந்தித்தேன்.

கதையின் ஒவ்வொரு சொல்லை இவன்
உதிர்க்கும்பொழுதும்
ஒவ்வொரு வயதாக ஏறிக்கொண்டே
செல்கிறது.
இப்போது
பதினொன்றாவது,
பன்னிரண்டாவது,
பதிமூன்றாவது...

தன் ஆயிரத்து நூற்றி எண்பதாவது
வயதில் குரல் நடுநடுங்க
கதையின் கடைசி சொல்லை
அவன் உதிர்த்தபோது
ஒரு குழந்தையாய் உருமாறியிருந்தது
அவனுருவம்.
முதுமைக்கும் பால்யத்திற்குமிடையே
கதையாய் விரிந்திருக்கிறது
இந்த இரவு.
-நிலாரசிகன்

Saturday, April 09, 2011

அம்ருதா கவிதைகள்1.கிணற்றுலகு
கலங்கிய நீர் நிறைந்திருக்கும் அக்கிணற்றில்
தவளையொன்று தலையுயர்த்தி
வானில் மிதக்கும் நட்சத்திரங்களை
ஒவ்வொன்றாய் கிணற்றுக்குள் இழுத்துச் சென்று
ஒளித்து வைக்கிறது.
தொலைந்த நட்சத்திரங்களை
இரண்டு காகங்கள் தேடத்துவங்குகின்றன.

சிறு சிறு கற்களால் அவை
கிணற்றை நிரப்புகின்றன.
மெல்ல மேலெழும்பும் நீரில்
நட்சத்திரக் குழந்தைகள் ஒவ்வொருவராக
வெளியேறுகின்றனர்.
அவர்களது உள்ளங்கைகளுக்குள்
ஒடுங்கியிருக்கின்றன
முதிர்ந்த தவளைகள்.

2.போதி மரத்தின் ஒடிந்த கிளை

பூட்டிய அறை யன்னலின் சிறுதுவாரம்
வழி உள் புகுந்தனர் ஆதிகள்.
மொத்தம் நாற்பத்தி நான்கு பேர்.
ஒவ்வொருவரின் கைகளிலும் ஆயுதமிருந்தது.
முதலாவதாக என்னுடலில்
தன் ஆயுதத்தை நுழைத்தவனின் பெயர்
சிலிர்ப்பூட்டியது.
வரிசையாக..
ஒவ்வொருவராக..

கடைசியாக
குருதி வெள்ளத்தில்
என்னை சிதைத்தவனின் பெயர்
ஆச்சர்யமூட்டியது.
வெளியேறினார்கள்.
அறையெங்கும் பெயர்களை விட்டுச்சென்றார்கள்.
முதலாவது ஆயுதத்தை செலுத்தியவன்
கைகளில்
போதி மரத்தின் ஒடிந்த கிளையும்
கடைசி ஆயுதத்தால் சிதைத்தவன்
கைகளில்
கனமற்ற சிலுவையும் இருந்தன.


- நிலாரசிகன்


[ஏப்ரல் 2011 அம்ருதா இதழில் வெளியான கவிதைகள்]