Saturday, December 31, 2011

வம்சி சிறுகதை போட்டி


வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டியில் என் "பெருநகர சர்ப்பம்" சிறுகதை "தொகுப்புக்கு" தேர்வாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். வெற்றி பெற்ற அனைத்து சிறுகதையாளர்களுக்கும் என் வாழ்த்துகள். இப்போட்டியை நடத்திய தீராத பக்கங்கள் மாதவராக் அவர்களுக்கு நன்றியும் நேசமும். நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சிறுகதைக்கான சுட்டி: http://www.nilaraseeganonline.com/2011/10/blog-post_29.html

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Sunday, December 25, 2011

துத்திப்பூக்களும் கோணங்கியும்

துத்திப்பூக்களின் நடுவே ஓர் உரையாடல்

இருநாட்களுக்கு முன் கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன். எழுத்தாளர் கோணங்கி,உதயசங்கர் மற்றும் கவிஞர்.தேவதச்சன் ஆகியோரை சந்தித்தேன்.  முதலாவதாக கோவில்பட்டி சென்றவுடன் கோணங்கி வீட்டிற்கு சென்றேன். அவரது அப்பாவிடம்(எழுத்தாளர்.சண்முகம்) பேசிவிட்டு மாடிக்கு அழைத்துச்சென்றார். அறையெங்கும் நிறைந்திருக்கும் புத்தகங்களின் நடுவே ஜன்னலோர இருக்கையில் தன் அடுத்த நாவலுக்கான எழுத்துப்பணியில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் கோணங்கி. நாவலை பற்றி பேசத் துவங்கியவுடன் மிகுந்த உற்சாகமாகி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.சிற்றிதழ்கள் பற்றியும் கல்குதிரையின் பழைய இதழ்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.ஒரு மாபெரும் எழுத்தாளர் என்கிற எவ்வித சுவடுமின்றி மிக எளிமையாக வசிப்பவர் அவர் என்பதாலயே அவர்மீதான அன்பும்,மதிப்பும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

மதிய உணவிற்கு பிறகு தேவதச்சனை அவரது வீட்டில் சந்தித்து "விளக்கு" விருது வாங்கியதற்காக வாழ்த்திவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு குமாரபுரம் ரயில் நிலையம்(கு.அழகிரிசாமியின் "குமாரபுரம் ஸ்டேசன்" இதுதான்) சென்றோம். கோவில்பட்டியிலிருந்து சுமார் 20 கி.மி தொலைவில் இருக்கிறது குமாரபுரம்.ரயில் நிலையம் செல்லும் தார் ரோட்டின் இருபுறமும் சோளக்கதிர்கள் அடர்ந்திருந்தன. இடுப்புயர புதர்க்காட்டின் நடுவே பயணிப்பது அற்புதமானதொரு அனுபவமாக இருந்தது. "17ம் நூற்றாண்டிற்குள் பயணிப்பது போலிருக்கிறது" என்றார் தேவதச்சன். ரயில் நிலையத்தை சுற்றிலும் படர்ந்திருக்கும் பசுமை மனதை கொள்ளை கொண்டது. வழியெங்கும் துத்திப்பூக்களும்,ஆவாரம்பூக்களும் நிறைந்து கிடந்தன. புதர்க்குருவிகள் காற்றில் அலைந்துகொண்டிருந்தன.

குமாரபுரம் ரயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக இருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர். அவருடன் தேநீர் அருந்திக்கொண்டே ஓர் உரையாடல் ஆரம்பமானது. தற்கால கவிதை,கு.அழகிரிசாமி,சிற்றிதழ்கள்,தகவல் தொழில்நுட்பத்தின் சாதக/பாதகங்கள்,இன்றைய இளம் எழுத்தாளர்களின் தனித்துவ வெளிப்பாடு, இன்றைய இளம் கவிஞர்களின் தனிக்குரல்,டெம்ப்ளேட் ஆளுமைகள் என்று விரிவானதொரு உரையாடலாக அது நீண்டது.கோணங்கியின் எழுத்தை பின்பற்றி எழுதும் இன்றைய எழுத்தாளர்களை பற்றியும் பேசினோம்.
உதயசங்கரின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு பாரதி புத்தகாலயம் வெளியீடாக இந்த புத்தக கண்காட்சிக்கு வருகிறது.
தேவதச்சனின் கவிதைகள் குறித்தான உரையாடலும் கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை. அவர் பேச பேச பல்வேறு திறப்புகள் மனதில் தோன்றியபடியே இருந்தன. கவிதையியல் குறித்தான கட்டுரைகளை அவர் எழுதவேண்டும் என்பது என் பேராவல். மூன்று மணிநேர உரையாடல் முடியும் தருவாயில் வந்து நின்றது ரயில். அரவமற்ற ரயில்நிலையத்தில் ரயிலை ரசிப்பதை விட அற்புதமானது எது?
மிகச்சிறந்த உரையாடல் மிகச்சிறந்த புலத்தில் நிகழ்ந்தேற காரணமாயிருந்த கோணங்கி அண்ணனுக்கு என் நன்றி.

இன்னும் வெகு நாட்களுக்கு மனதெங்கும் வியாபித்திருக்கும் இச்சந்திப்பு.

-நிலாரசிகன்.

Monday, December 19, 2011

படித்ததில் பிடித்தது:


இன்னும் தன் அம்மாவிடம்
சொல்லவில்லை
தான் குழந்தை உண்டாயிருப்பதை
ஓரிரு நாளில் அவள்
சொல்லிவிடக்கூடும்
அம்மாவிடம்
அம்மா சொல்வதற்கு
என்ன இருக்கிறது
இருக்கத்தான் செய்கிறது
எப்போதும்
இலையின் பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்வதற்கு
ஏதோ ஒன்று
எப்போதும் இருக்கிறது.
பின்பக்கம்
முன்பக்கத்திடம் சொல்ல முடியாத ஏதோஒன்று.

-தேவதச்சன்
- "இரண்டு சூரியன்" தொகுப்பிலிருந்து.

Sunday, December 11, 2011

எக்ஸைல் - ஒரு வாசிப்பனுபவ பகிர்வு

நாவலாசிரியரின் பெயரை சொல்லி "அவர்" நாவல் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று இலக்கியம் பேசும் நண்பர்களிடம் சொன்னால் அவர் எழுதுவது நாவலே இல்லை என்பார்கள். அல்லது சுயபுலம்பலை தவிர அவருக்கு என்ன தெரியும் என்பார்கள். முதல் அத்தியாயத்தில் கதாபாத்திரங்களின் வர்ணனையும் அதன் பிறகான அத்தியாயங்களில் கதையின் மையத்தையும் நோக்கி நகரும் நாவல்களை வாசித்தே பழக்கப்பட்டுவிட்ட யாருக்கும் எக்ஸைல் ஒரு மாற்று அமிர்தம்.
எந்தவொரு 435 பக்க நாவலையும் இரண்டு நாட்களில் அதுவும் அலுவலகத்தில் கிடைக்கும் இடைவெளிகளில் நான் வாசித்ததில்லை. சந்தேகமின்றி  தன் மாஸ்டர் பீஸாக நாவலாசிரியர் கருதும் "0 டிகிரி"யை எக்ஸைல் தாண்டிவிட்டதென்று மார்தட்டலாம். அல்லது தேகத்தில் தொலைந்த "ஏதோவொன்றை"  இந்நாவலில் கண்டெடுத்ததாகவும் எண்ணலாம்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்நாவலில்?  எது நாவல் எனும் கேள்வியை புறந் தள்ளிவிட்டு  எக்ஸைலுக்குள் நுழைந்தால் வாசிப்பு முடிந்து வெளியேறும் கணம் சர்வ நிச்சயமாக உணரலாம் எக்ஸைலின் தனித்தன்மையை(Uniqueness). வாசிக்க ஆரம்பித்து சில மணிநேரங்கள் கழிந்துதான் கவனித்தேன் நானிருப்பது 160வது பக்கத்திலென்று. வாசகனை தன் எழுத்தின் வழியே 'சலிப்பின்றி' பயணிக்க செய்வதிலாகட்டும் உலக இலக்கிய ஆளுமைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதிலாகட்டும் சாரு ஜெயித்திருக்கிறார். காமத்திலிருந்து காயகல்பம் வரை பல விஷயங்களை கடந்து செல்லும் நாவலில் உதயா,அஞ்சலி,கொக்கரக்கோ(Excellent characterization) மற்றும் சிவா முக்கிய கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்.அஞ்சலியின் கொடூர பால்யம் பற்றிய விவரிப்பு வாசகனுக்குள்  வலியை ஏற்படுத்தும் தருணங்களில் ,"சித்தன்" சிவாவும் அவ்வப்போது வந்து "சொய்ங்"கென்று அசத்தும் கொக்கரக்கோவும் வாசகனை ரசிக்க வைக்கிறார்கள். நாகூரின் தெருக்கள்,தாஜ்ஜியர் கஃபே,பிரான்ஸின் சாலைகள்,சித்தர்பாடல்கள்,சமையல் குறிப்புகள்,காதல்,துரோகம்,காமம்,பெண்களில் விதவிதமான ஆடைகள்,Current affairs,"அந்த" chat பிரச்சினை,நித்தி,கொக்கரக்கோவின் 'பாடை', சுதாகருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாய்(நாய்கள் மீது அதிக பிரியம் உரிய நாவலாசிரியர் எதற்காக நாயை சுதாகர் எனும் கதாப்பாத்திரம் மூலமாக கேவலப்படுத்த வேண்டும்?),விதவிதமான வித்தியாசமான க்ளைமேக்ஸ்,ஜி.ஸ்பாட், பக்கிரிசாமியின் ஆவி,சபரிமலை பயணம்,ராயர் காஃபி,பகவதி பாலு,நாவலெங்கும் விரவிக்கிடக்கும் பிரஞ்சு வார்த்தைகள்,சொக்குப்பொடி என்று இந்நாவல் பரந்து விரிந்து பல திசைகளில்,பல கிளைகளில் பயணிக்கிறது. அதிக வாசகனுபவம் இல்லாத முதல் வாசகர்கள் இந்நாவலை படித்துவிட்டால் நாவலாசிரியரின் மற்ற நூல்களின் விற்பனை அதிகரிக்கும்.

இவ்வளவு இருக்கும் நாவலில் குறையே இல்லையா? குறையில்லாத படைப்பேது? கீழ் வரும் விடயங்கள் என் பார்வையில் குறையாக அல்லது நாவலின் அசுர வேகத்தை தொய்வாக்குபவையாக தோன்றுகின்றன.


 • பிச்சாவர கார்னிவலுக்கான மிகப்பெரிய பட்டியல்
 • ஒரு நாயகி, அவளுக்கு பல பிரச்சினைகள்,கண்ணீர்,அடிஉதை மற்றும் சுதாகர் நாய் எனும் வில்லன் - 0 டிகிரியின் சில பக்கங்களை நினைவூட்டுகிறது
 • பதினெட்டு படிகளை பற்றிய மிக நீ....ள விவரணைகள்
 • அதீதமான பிரஞ்சு வார்த்தைகள்
 • ஸாரோ,பப்பு(இன்னும் எத்தனை முறை எழுதுவார்?)
 • நாகூரின் தெருப்பட்டியல்
அதிகம் ரசிக்க வைத்தவை:

 • கொக்கரக்கோவின் பால்யமும் குறும்பும்
 • உதயா,அஞ்சலியின் உரையாடல்கள்/கடிதங்கள்
 • பக்கிரிசாமியின் பக்கங்கள்
 • அஞ்சலியின் பிரசவத்தின்போது நடுச்சாமத்தில் குளிரை தாங்க முடியாமல் போர்வையை எடுக்க துடிக்கும் வரிகள்
 • நளினியின் பிரசவத்தின்போது உதயாவின் தியாகங்கள்(வேறெந்த வார்த்தையும் பொருந்தாது)

சாருவை "செக்ஸ் எழுத்தாளர்" என்று மட்டுமே எண்ணி நாவலுக்குள் நுழைபவர்களுக்கு எக்ஸைல் வேறுவிதமான நாவல் என்பது புரியவரும்.
மொத்தத்தில் எக்ஸைல் ஒரு மிகச்சிறந்த வாசிப்பனுபவம். An unique reading experience.

-நிலாரசிகன்.

Tuesday, December 06, 2011

இசைதல்

1.
சிறு சிறு முத்தங்கள் வளர்ந்து
நீண்டதொரு முத்தமாக உருப்பெற்றபோது
நாம் முத்தமாகியிருந்தோம்.
அறைக்குள் சிதறிய மிச்ச முத்தங்கள்
களியாட்டத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருந்தன.
ஊர்ந்த எறும்புகள் களியாட்டம் கண்டு
பித்தமேறி ஆடி மகிழ்ந்தன.
முத்தவாசனையில் வெட்கி தலைகுனிந்திருந்தது
தொட்டிச்செடி.
ஓர் அழகிய நிகழ்வின் துவக்க கணத்தில்
இதழ் பிரித்து ஓடி மறைந்தாய்.
இசையறுந்த
பியானோ ஒன்றும் வயலின் ஒன்றும்
அவரவர் அறையில் தனியே
இசைத்தடங்குகிறது.

2.
ஊமை படிகளின் முதுகில்
மெல்ல இறங்குகிறது மழை.
முழுவதும் நனைந்துவிட்ட படிகள்
சில்லிட்டு சிலிர்க்கையில்
வலுக்கிறது.
மழையும் வெயிலும் இணையும்
புள்ளியிலிருந்து கசிகிறது மேனியிசை.
விருட்சமொன்றின் வேர் பற்றி
மேலெழுகின்ற மல்லிகைக்கொடி
இதழ் பிரிந்த கணத்தில்
வெயில்மழையை சூழ்ந்து மறைக்கிறது.
யாருமற்ற கடற்கரையில் நிலாபார்த்து
மலர்கிறாள் முதிர்ந்த கடற்கன்னியொருத்தி.

-நிலாரசிகன்.

Thursday, December 01, 2011

அம்ருதா இதழில் வெளியான கவிதைகள்

1.உனக்கும் எனக்குமான யுத்தத்தின் பெயர் இதழ் முத்தம்

மெளனம் உருகி படர்ந்திருக்கும்
மலை உச்சியில் நாம் அமர்ந்திருக்கிறோம்.
என் அணைப்பின் தகதகப்பில்
அடர்பச்சை மரக்காடுகளை
பார்வையின் வழி சென்றடைகிறாய்.
மெல்ல உன் வதனம் திருப்பி
இதழ்களில் முத்தமிடுகிறேன்.
வனம் சில்லிட்டு சிதற சிதற
நம்மிடையே வளர்கின்றன
ஓராயிரம் வேர்களற்ற விருட்சங்கள்.
இதழ்களிலிருந்து வெளியேறும்
முத்தப்பறவைகளிலொன்று உன்னை
அள்ளிச் செல்கிறது.
இதழ்களிலிருந்து வெளியேறிய
கருப்பு சர்ப்பம் என்னை தின்று பசியாறுகிறது.
நம் தடயங்களற்ற மலையின் உச்சி
இப்பொழுதும் மெளனித்து கிடக்கிறது.

2.வனத்தின் நடுவில் நடனமிடும் முத்தங்கள்
சிறகுகள் விரித்திருக்கும்
வண்ணத்துப்பூச்சியை வருடுகிறது
சுவை உணரும் உறுப்பொன்று.
தீண்டலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க
சிறகுகளை அடித்துக்கொள்கிறது.
கற்குகையின் இருண்ட பள்ளத்தில்
இரண்டு வெப்பமீன்கள் எதிரெதிரே
நீந்துகின்றன.
கார்காலத்தின் முதல் துளி
கடலென விரிந்து விழுகிறது.
விழுகின்ற துளியினூடாக
இரண்டு மீன்களை கெளவிக்கொண்டு
பறக்கிறது மீன்கொத்தி.
குகையின் இருளடர்ந்த பள்ளத்தில்
மீனுருவில் ஆழ்ந்து உறங்குகிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி.

-நிலாரசிகன்.