Saturday, January 14, 2012

புத்தக காட்சியில் வாங்கியவை

முன்குறிப்பு:

நவீன இலக்கியத்தில் புதிதாய் நுழையும் வாசகனுக்கு பயன்படும் என்பதால் நான் வாங்கிய நூல்களின் பட்டியலை இங்கே பதிவுசெய்கிறேன்.

காலச்சுவடு:

 1. சிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசை - கவிதை
 2. பட்சியன் சரிதம் - இளங்கோ கிருஷ்ணன் - கவிதை
 3. நீள் தினம் - பூமா ஈஸ்வரமூர்த்தி - கவிதை
 4. ஈ தனது பெயரை மறந்து போனது - றஷ்மி - கவிதை
 5. நிலம் பிரிந்தவனின் கவிதை - சுஜந்தன் - கவிதை
 6. இரவைப் பருகும் பறவை - லாவண்யா சுந்தரராஜன் - கவிதை
 7. கண்ணுக்குத் தெரியாததன் காதலன் - குவளைக்கண்ணன் - கவிதை
 8. புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை - கவிதை
 9. ஆகவே நானும் - தேவேந்திரபூபதி - கவிதை
 10. காடாற்று - சேரன் - கவிதை
 11. எனது மதுக்குடுவை - மாலதி மைத்ரி - கவிதை
 12. வியத்தலும் இலமே - அ.முத்துலிங்கம் - நேர்காணல்கள்
 13. இரவில் நான் உன் குதிரை - மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
 14. காலச்சுவடு கவிதைகள்(1994 -  2003)
 15. ஒளியின் உள்வரியில் - ஷாஅ - கவிதை
 16. பணிய மறுக்கும் பண்பாடு - எட்வர்ட் ஸெய்த் - கட்டுரைகள்

உயிர்மை:

 1. அருகன் - தமிழச்சி தங்கபாண்டியன் - கவிதை
 2. நீருக்குக் கதவுகள் இல்லை - சுகுமாரன் - கவிதை
 3. கூழாங்கற்கள் பாடுகின்றன - எஸ்.ராமகிருஷ்ணன் - கட்டுரை
 4. ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன் - நாவல்
 5. எட்றா வண்டிய - வா.மு.கோமு - நாவல்
 6. மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு - நாவல்
 7. கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச்சிங்கங்களும் - சு.கி.ஜெயகரன் - கட்டுரை
 8. வானில் பறக்கும் புள்ளெலாம் - தியடோர் பாஸ்கரன் - கட்டுரை

உயிர் எழுத்து:
 1. மரங்கொத்திச் சிரிப்பு - ச.முத்துவேல் - கவிதை
 2. தனிமையின் நீட்சியில் ஒரு நகரம் - ஆத்மார்த்தி - கவிதை
 3. நித்ரா..நீயல்லா வானம் எனக்குச் சிறு கரும்புள்ளி - வசுமித்ர - கவிதை
 4. பெருந்திணைக்காரன் - சிறுகதைகள் - கணேசகுமாரன்
 5. உப்பு நாய்கள் - நாவல் - லஷ்மி சரவணக்குமார்
 6. சொற்பறவை - ஸ்ரீஷங்கர் - கவிதை
 7. பூப்படைந்த மலர்களை கனியச் செய்கையில் - கவிதை - சுதீர் செந்தில்
 8. புகைப்படங்கள் நிரம்பிய அறை -கணேசகுமாரன் - கவிதை
 9. அழகம்மா - சிறுகதைகள் - சந்திரா
 10. உயிர் எழுத்து கவிதைகள் - தொகுப்பு:சுதீர்செந்தில்
 11. சமயவேல் சிறுகதை நூல்

பிற:
 1.  தஞ்சை பிரகாஷ் - சிறுகதைகள் - காவ்யா
 2. கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் - கட்டுரை - கலப்பை பதிப்பகம்
 3. ஆகாயத்தின் மக்கள் - அழகுநிலா - குமரன் பதிப்பகம் - கவிதை
 4. க.நா.சு கவிதைகள் - விருட்சம் வெளியீடு
 5. மாமத யானை - குட்டி ரேவதி - கவிதை - வம்சி
 6. உழைப்பை ஒழிப்போம் - கட்டுரைகள் - அடையாளம்
 7. பெளத்தம் மிகச்சுருக்கமான அறிமுகம் - அடையாளம்
 8. எரியும் பனிக்காடு - நாவல் - விடியல்
 9. தனிமையின் ஆயிரம் இறக்கைகள் - குட்டிரேவதி - கவிதை - அடையாளம்
 10. நீட்சே தத்துவமும் வாழ்வும் ஓர் அறிமுகம் - விடியல்
 11. மீன்காரத்தெரு - நாவல் - கீரனூர் ஜாகிர்ராஜா - ஆழி
 12. நவீன தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பு: சா.கந்தசாமி - சாகித்ய அகாதமி வெளியீடு
 13. ப்ராய்ட் யூங் லக்கான்  அறிமுகமும் நெறிமுகமும் - அடையாளம்
 14. யாழ்ப்பாணப் புகையிலை - மழையாளச்சிறுதைகள் - சாகித்ய அகாதமி
 15. ஊட்டு - கவிதைகள் - கறுத்தடையான் - மணல்வீடு வெளியீடு
இவைபோக பரிசளிக்க வாங்கியது
அஞ்சலை - நாவல் & ஒரு புளிய மரத்தின் கதை - நாவல்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.


அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Thursday, January 05, 2012

புது எழுத்து கவிதைகள்1.சாவுக்குருவி

இரவைக் கிழித்து பாடிக்கொண்டிருக்கும்
பறவை என் தோள் மீது அமர்ந்திருக்கிறது.
அதன் நீண்ட பாடலை உனக்கு எப்படி
புரியவைப்பது என்பதை பற்றி நான் அறியவில்லை.
வட்ட வடிவ சிறு உலகை ஒத்த அதன் கண்கள்
மென்மையானவை.
இரவைக் கிழிக்கும் அதன் குரலின் பேரானந்தம்
உன்னால் உணர முடியாதது.
கருநீல நிறத்தில் தலை துவட்டும் உயர்ந்த
தென்னை மரத்தில் நாங்கள் இப்போதிருக்கிறோம்.
காற்றில் அசையும் மரத்தில்
இடமும் வலமுமாக அசைந்து அசைந்து
இசையாகி வீழ்கிறோம்.
அதிகாலை எனைத் தேடி வந்த நீ
ஆந்தை அடித்து இறந்தவன் என்கிறாய்
என் இசையுடல் மீதேறி.


2. தீரா பசி
உக்கிரமானதொரு யுத்தத்தை
முதல் முறையாக நிகழ்த்தினான்.
கிழிந்த மேகங்களாய் சிதறிக்கிடக்கும் குருதியின்மேல்
நடனமிடும் துறவிகளை பழித்து திரும்பிக்கொண்டான்.
இரவுமழையின் ஊடாக செவிக்குள் இறங்கும்
முனகல் சப்தத்தில் விழித்தவன்
மாலை புதைத்த பெண்ணுடல் அருகே செல்கையில்
உக்கிரமானதொரு யுத்தத்தை
இரண்டாம் முறையாக பார்க்கிறான்.
குருதி படர்ந்த துறவிகளின் ஆடையை
எரித்துவிட்டு தன் யுத்ததை மீண்டும்
துவங்குகிறான்.
மார்பில் அடித்துக்கொண்டு
அழுதுகொண்டிருந்தாள் அவ்வனத்தின்
உமை.

3. உடலின் மொழி

யாரும் அறியா மூன்றாம் சாமத்தில்
என் பதினேழாவது வயதிற்கு
திரும்பினேன்.
நான்கு தெருக்கள் தள்ளியிருக்கும்
அவளது வீட்டிற்குள் நுழைந்தேன்.
உடல் பேசும் மொழியை அவள்
ஒருவனுக்கு கற்றுக்கொடுக்க
முயல்வதை கண்டேன்.
சிவந்த விழிகளுடன் அருகில் சென்று
எட்டி உதைத்தேன்.
வீறிட்டு விழுந்தவளை புறக்கணித்து
அவன் அருகே சென்றேன்.
அப்போது எனக்கு பதினேழாவது
வயது நடந்துகொண்டிருந்தது.

4.நட்சத்திரா என்றொரு சிறுமி இருந்தாள்

விழுந்து பெருகும் துளிகளின் வழியே
வந்து விழுந்தவள் நட்சத்திரா.
அப்போது அவள் ஒரு வெண்ணிற ஆடை
அணிந்திருந்தாள்.
அணில்கள் விளையாடும் செம்பருத்திக்காட்டில்
தன் வெண்ணிற உடையை சிறகாக்கி
விளையாடும் அவளது வயது ஒன்பதை கடந்திருந்தது.
அவள் ஆடையிலாடும் சிறு நூலின் நுனியில்
அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருந்தேன்.
நகராத நாளொன்றில் தன் விளையாட்டை
நிறுத்திவிட்டு வேறோர் ஆடை அணிந்துகொண்டாள்.
இப்போது அவளது வயது இருபத்தி ஐந்தை
தாண்டியிருந்தது.
அவள் அணிந்த ஆடையின் பெயர்
மெளனம் என்பதும் அதன்
கா
ரணம்
என்னவென்பதை பற்றியும் நாங்கள் மட்டுமே
அறிவோம்.


5.கல்வெளியில் உலவும் கனவு

அதிகாலைக்கல் என்றொரு கல்லை
பரிசளித்தான் நண்பன்.
அதிகாலையில் உள்ளங்கையில் மறைத்துக்கொண்டு
வேண்டியதைக் கேள் கிடைக்கும் என்றான்.
பத்து வயதில் மரித்துப்போன நாய்க்குட்டியை
கேட்டேன்.
மறுகணம்,
வாலாட்டிக்கொண்டு காலை சுற்றியது.
பதின்வயதில் ஒன்றாய் திரிந்த தோழியை
கேட்டேன்.
அதே குறுநகையுடன் சன்னலோரம் நிற்கிறாள்.
அதீத நம்பிக்கையில் 
கடைசியாக
இரு நாட்களுக்கு முன்பு மரித்த
என்னைக்கேட்டேன். 

- நிலாரசிகன்.
[இம்மாதம் வெளியான புதுஎழுத்து சிற்றிதழில் வெளியானவை]

Wednesday, January 04, 2012

புதுவிசை கவிதைகள்

1.வெண்நிற செம்பருத்தி
குரு(ந)தியில் பயணிக்கும் எறும்புகள்
ஒரு செம்பருத்திச் செடியை இழுத்துச்
செல்கின்றன.
மெல்லிதழ்கள் கொண்ட செம்பருத்தியின் மேல்
படர்கிறது இரவு வெயில்.
அடர்ந்த வெயிலின் நடுவே
ஒளிவீசும் தீச்சுடருடன் கண்கள் திறக்கிறான்
சடைமுனி.
அவனது கால்களை பற்றிக்கொண்டு அழுகிறாள்
வெண்ணிற உடை அணிந்த
சிறுமியொருத்தி.
உதிரம் வடியும் கால்களிடையே ஊர்கின்ற
எறும்புகள் வெண்நிற செம்பருத்தியொன்றை
மெதுவாய் இழுத்துச் செல்கின்றன.

2.நதிக்கரையில் நீந்தும் சிறுமீன்

மரத்திலிருந்து விழுகின்ற கண்ணாடிக்குடுவை
காற்றினூடாக வேகமாக பயணிக்கிறது.
குடுவைக்குள் தளும்பும் நீரில்
இரண்டு மீன்குஞ்சுகள் இருக்கின்றன.
கிளையொன்றில் மோதும் குடுவையை
அதன் பின் காணவில்லை.
இடவலமாக வானில் பறக்கும்
பறவைகள் நதியொன்றில்
விட்டுச் செல்கின்றன
இரண்டு இறகுகளை.
அவை மெல்ல நீந்தி
மீன்குஞ்சுகளாக உருக்கொள்கையில்
கனவொன்றின் நதிக்கரையில்
இக்காட்சியை கண்டபடி நடந்துசெல்கிறாள்
நட்சத்திரா.

3.ஒளிப்பறவைகள்
அவனது உடலெங்கும் மலர்ந்திருக்கும்
சிறுரோமங்களில் பறவைக்கூட்டங்கள்
வசித்து வந்தன.
ஓர் இரவில்
அரவமற்ற மரத்தடியில்
அமர்ந்து அழத்துவங்கினான்.
வன ரோமங்களிலிடையே
மெல்ல உடலேறி வந்த தேன்சிட்டொன்று
கண்ணீரை பருகி மெளனித்தது.
இருளின் நடுவே ஒளியுடன்
நடந்தவன் மின்மினிகள் சிலவற்றை
பின் தொடர்ந்தான்.
அடர் இருளில் ஒளியாய்
செல்லும் இவனது சுவடுகளெங்கும்
பறவைகள் முட்டையிட்டன.
கூடுடைந்து வெளியேறும் குஞ்சுகள்
கறுப்பு நிற ஒளியுடலை
அசைத்து அசைத்து அவனை
பின் தொடர்ந்தன.
நகரத்தின் தார்சாலைகளில்
நடந்தவனை சிதறடித்து
சென்றது மஞ்சள் ஒளி.
முதன் முதலாய்
பறக்க துவங்கின ஒளிப்பறவைகள்.

4. ஆத்மார்த்தம்

வெள்ளை நிறம் உருகி ஓடும்
நதியில் நாம் இப்போது
நீந்துகிறோம்.
நதிக்கரையின்
மணலில் நீந்துகின்ற மீன்கள்
நம்மைக் கண்டு கையசைக்கின்றன.
தேவதைகள் இருவர் நம்மை
வேறோர் உலகிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
வெண்நிற தேவதையை நீயும்
கருநிற தேவதையை நானும்
பின் தொடர்கிறோம்.
சொர்க்கம் நரகம் இரண்டிற்கும்
இடையே ஓடுகின்ற நதியில் அவர்கள்
நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.
நீல நிற வானில் தவழ்ந்து செல்லும்
பறவைகள் தலைகுனிந்து
நம்மை பார்க்கின்றன.
அனைத்தும் கடந்துவிட்ட
ஆத்மார்த்த கயிற்றில் நம்மை
இறுக கட்டிவிட்டு மிக வேகமாய்
சுழல்கிறது இவ்வுலகு.

-நிலாரசிகன்.
[இம்மாத புதுவிசை ஜனவரி '12 இதழில் வெளியானவை]