Tuesday, March 27, 2012

இரண்டு கவிதைகள்

கடலாடும் தாழி
நீல நிறம் படர்ந்திருக்கும்
ஆழ்கடலில்
காற்றிலாடியபடி 
காற்றில்லா இடத்தில்
நாம் அமர்ந்திருக்கிறோம்.
ஒரு முத்தத்தில் மலர்ந்து
ஒரு முத்தத்தில் மரணித்த
நம் உறவின் நடுவே.
மீன்குஞ்சுகள் நம்மை மொய்க்கின்றன.
கற்பாறைகள் நிறைந்த
தனித்தீவொன்றில் ஒதுங்கிற்று
நம் தாழி.
தாழியுடைத்து
உயிரற்ற உனதுடலை இழுத்துக்கொண்டு
தீவில் நடக்கிறேன்.
உடன் வருகிறது கடல்
மாபெரும் முத்தமாகி.

உள் ஒலி
கரையொதுங்கிய பெட்டிக்குள்
டம் டம் டம்ம் டம்ம்ம்
என்று எழும்பிக்கொண்டிருக்கும்
கொட்டுச்சத்தம்
ஆற்று மணலை அதிர செய்தபடி இருக்கிறது.
தன் பத்து வயது
சினேகிதியுடன் ஆற்றங்கரையோரம்
நடந்து வருபவன் திடுக்கிட்டு
ஒலி வரும் திசையறியாமல்
தடுமாறுகிறான்.
சினேகிதியின் நெஞ்சில் அணைந்திருக்கும்
பொம்மையின் கண்கள் விழித்து
விறைத்திருக்கின்றன.
விரல்கோர்த்து கால் பெருவிரலால் ஆற்று மணலை
நிமிண்டியபடி வரும் சினேகிதியின்
தோள்களை அழுத்த துவங்குகிறான்.
பெட்டியின் கொட்டுச்சத்தம்
இடம் மாறி தடம் மாறி
லப் டப் லப் டப் லப் டப்.....

-நிலாரசிகன்.
[361 டிகிரி சிற்றிதழில் வெளியான கவிதைகள்]

361 டிகிரி - மூன்றாவது இதழ் - வெளிவந்துவிட்டது

நண்பர்களுக்கு,

361 டிகிரி மூன்றாவது இதழ் இன்று வெளியானது. சென்னையில் டிஸ்கவரி புக்பேலஸ் மற்றும் நியு.புக் லேண்ட்ஸ் கடைகளில்
கிடைக்கும். விரைவில் கோவை விஜயா பதிப்பகத்திலும் சேலம் பாலம் கடைகளிலும் கிடைக்கும். மதுரையில் கவிஞர்.ஆத்மார்த்தியிடம் கிடைக்கும்.

இதழில் பங்கு பெற்ற படைப்பாளிகள் விபரம்:


கவிதைகள்:  செல்மா ப்ரியதர்சன்,நித்தியா வீரராகு,ராணி திலக்,கதிர்பாரதி,வா.மணிகண்டன்,பத்மபாரதி
வேல்கண்ணன்,அனார்,அனிதா,றியாஸ் குரானா,
க.அம்சப்ரியா,தேன்மொழிதாஸ்,நிலாரசிகன்,பொன்.வாசுதேவன்,தேனப்பன்,சாகிப்கிரான்,ந.பெரியசாமி,விஷ்ணுபுரம் சரவணன்,சம்யுக்தா,சாம்ராஜ்,தீபச்செல்வன்,ஈஸ்வர சந்தானமூர்த்தி,நேசமித்ரன்,அய்யப்பமாதவன்,சிவன்,சுவாதி ச.முகில்.

மொழிபெயர்ப்பு கவிதைகள்: ரிஷான் ஷெரீப்,சித்தார்த் வெங்கடேசன்

சிறுகதை:  ஜே.பி.சாணக்கியா,அதிரதன்,ஆத்மார்த்தி,த.அரவிந்தன்

கட்டுரை: யவனிகா ஸ்ரீராம்,கொற்றவை

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம்,பெருஞ்சித்திரன்.

இதழில் பங்குபெற்ற படைப்பாளிகள் தங்களது முகவரியை nilaraseegan@gmail.com மின்னஞ்சலுக்கு உடனே அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இதழ் நாளை அனுப்பப்படும்.

தனியனாக ஒரு இதழை கொண்டுவருவதின் சவாலை உணர்கிறேன். படைப்புகளை ஒருங்கிணைப்பதிலிருந்து இதழாக்கம் வரை தொடர்ந்து ஊக்குவித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. மனதைரியத்தையும்,நட்பையும் அள்ளித்தந்த சாகிப்கிரானுக்கும், இதழின் அச்சாக்க பணியை தன் கண்மணிபோல் பல சிரமங்களுக்கிடையில் மிக கவனமாக உடனிருந்து பார்த்துக்கொணர்ந்த புது எழுத்து ஆசிரியர் மனோன்மணி அவர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம். நன்றியில் எப்போதும் நீராடும் விழிகள்.
 இதழ் வேண்டுவோர்,நன்கொடை தர விரும்புவோர் என்னை தொடர்புகொள்ளலாம்.
அனைவருக்கும் நன்றி.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Sunday, March 11, 2012

முத்தக்கொலையாளினி


அனைவரும் உறங்க சென்றபின்
உனதறைக்கு திரும்புகிறாய்.
அறையெங்கும் மிதந்தலையும்
செந்நிற முத்தங்களை கண்டு
ஸ்தம்பித்து நிற்கிறாய்.
ஒவ்வொரு முத்தத்திற்குள்ளும்
கண்களில் நீர் தளும்ப
ஒருவன் அமர்ந்திருக்கிறான்.
எவ்வித உணர்வுகளுமின்றி
ஒவ்வொரு முத்தமாய் உன் நீள்நகத்தில்
குத்தியெடுத்து யன்னல் வழியே வீசுகிறாய்.
யன்னலுக்கு வெளியே ஓடும்
சிற்றோடையில் செத்து மிதக்கின்றன
உயிரற்ற வெற்று முத்தங்கள்.
விடியலில்
வற்றிய சிற்றோடையின் தடமெங்கும்
மரித்துக்கிடந்தன ஆயிரமாயிரம்
சூரியன்கள்.

-நிலாரசிகன்.

[சென்ற வார கல்கியில் வெளியானது]