Sunday, April 08, 2012

கவிதைகள் ஐந்து

1. இசைதல்

சிறு சிறு முத்தங்கள் வளர்ந்து
நீண்டதொரு முத்தமாக உருப்பெற்றபோது
நாம் முத்தமாகியிருந்தோம்.
அறைக்குள் சிதறிய மிச்ச முத்தங்கள்
களியாட்டத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருந்தன.
ஊர்ந்த எறும்புகள் களியாட்டம் கண்டு
பித்தமேறி ஆடி மகிழ்ந்தன.
முத்தவாசனையில் வெட்கி தலைகுனிந்திருந்தது
தொட்டிச்செடி.
ஓர் அழகிய நிகழ்வின் துவக்க கணத்தில்
இதழ் பிரித்து ஓடி மறைந்தாய்.
இசையறுந்த
பியானோ ஒன்றும் வயலின் ஒன்றும்
அவரவர் அறையில் தனியே
இசைத்தடங்குகிறது.

2. மேனியிசை

ஊமை படிகளின் முதுகில்
மெல்ல இறங்குகிறது மழை.
முழுவதும் நனைந்துவிட்ட படிகள்
சில்லிட்டு சிலிர்க்கையில்
வலுக்கிறது.
மழையும் வெயிலும் இணையும்
புள்ளியிலிருந்து கசிகிறது மேனியிசை.
விருட்சமொன்றின் வேர் பற்றி
மேலெழுகின்ற மல்லிகைக்கொடி
இதழ் பிரிந்த கணத்தில்
வெயில்மழையை சூழ்ந்து மறைக்கிறது.
யாருமற்ற கடற்கரையில் நிலாபார்த்து
மலர்கிறாள் முதிர்ந்த கடற்கன்னியொருத்தி.

3.ஒளிவடிவ துயரம்

தீராமெளனத்தின் ஒளிவடிவ
துயரம் இருள்வானில் மிதக்கிறது.
எண்ணற்ற கேள்விகளுடன் அதனுடன்
உரையாடுகிறேன்.
ஓர் இறகை ஊதி ஊதி காற்றுச்சிறகில்
ஏற்றிவிடுகிறேன்.
இரவுப்பறவைகள் குளிரின் கதகதப்பில்
இணை சேர்கின்றன.
சப்தமின்றி தனிமைக்குள் நுழைந்த
வேடனொருவன் துயரத்தின் மீது
அம்பெய்துகிறான்.
நீண்டு விரிந்த வானமெங்கும் சிதறுகிறது
மஞ்சள் நிற துயரம்.
சாம்பல் நிற பூனைகள் அலையும்
தெருவில் வந்துவிழுகிறது துயரத்தின்
சில்லுகளிலொன்று.
பசியில் கதறும் குட்டிக்கு நிலவைக்
கெளவிக்கொண்டு
வாலுயர்த்தி ஓடுகிறேன்
பூனையாக.

4.வனப்பழிந்தவளின் இரவு

கற்பாறைகளால் நீண்டு கிடக்கும்
வெளியில் மரக்கன்றுகளுடன்
நடக்கிறாளவள்.
தோள்மீது தொங்கிய தலையுடன்
அசைகிறது பச்சைக்கிளி.
வெம்மை சுமந்து வந்தவனின் கண்களில்
முகம் பார்த்து மலர்கிறாள்.
விரல் கோர்த்து .
பாறையொன்றின் உச்சியில் நட்சத்திரம்
எண்ணத்துவங்குகிறார்கள்.
இரவைத் தின்ற பச்சைக்கிளியுடன்
தொலைவில் செல்கிறான்.
தளும்பியவளின் உடலெங்கும்
முளைக்கின்றன சிறுசிறு மரக்கன்றுகள்.

5.அந்நியள்

கதகதப்பான தேநீருடன் துவங்கிய
மழைநாளில் ஓர் அந்நியளைக் கண்டேன்.
கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு
தூறலில் மென்நடை நடந்தவளை
பின் தொடர்ந்தது மான்குட்டியொன்று.
வேப்பம்பூக்கள் மிதக்கும் மழைநீரை
துள்ளித்தாண்டியது மான்குட்டி.
மானும் மழையும்
மழையும் சிறுமயிலும் சப்தங்கள் ஒடுங்கிய
அந்த தெருவை வர்ணங்களால் நிரப்பினர்.
சட்டென்று என் வீட்டின் முன் நின்றவள்
என்னை உற்று நோக்கினாள்.
இப்போது,
அவளை பின் தொடர்கின்றன ஒரு
மான்குட்டியும் ஒரு குட்டிமானும்.

- நிலாரசிகன்.
[இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளியான கவிதைகள்]

1 comments:

said...

நல்ல கவிதைகளும் பொருத்தமான தலைப்புகளும்!