Thursday, August 15, 2013

கவிதைகளின் ஆறு
பென்ஸ் கார் பன்றியின் ஓர் நாள்

அதிகாலையிலிருந்து இந்த
விபரீதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
வழக்கம் போல்தான் எழுந்தேன்.
கண்ணாடியை கடக்கும்பொழுதுதான் அதிர்ந்து
நின்றுவிட்டேன்.
நானொரு பன்றியாக உருமாறியிருந்தேன்.
முகத்தை தடவிபார்த்துக்கொள்ள கையை
உயர்த்தினால் முன்னங்கால் மேலெழுகிறது.
காலில் வளர்ந்து நிற்கும் நகங்களும் 
படர்ந்திருக்கும் ரோமங்களும் பயமுறுத்துகின்றன.
நிறம் பற்றிய கவலை மட்டுமில்லை.
எப்போதும் போல அடர்கறுப்புதான்.
வீட்டிலிருந்து தெருவில் இறங்கி 
கொஞ்ச தூரம் நடந்தேன். 
இரண்டு தெருநாய்கள் குரைத்துக்கொண்டு
அருகில் வந்தபோது சொல்லிவிட்டேன் 
பன்றி வடிவ மனிதன் நானென்று.
வாலாட்டிக்கொண்டு போய்விட்டன.
இன்று நானொரு மெர்சிடெஸ் பென்ஸ் 
கார் வாங்குவதற்கான நாள் என்பது ஞாபகம் வந்து
கடைக்குச் சென்றேன்.
துரத்த வந்தவனிடம் கடன் அட்டையை காண்பித்தேன்.
கோட் அணிந்த அவனது தலை தாழ்ந்து,
பணிவாக என்னை அழைத்துச் சென்றான்
சிங்கத்துக்கான சகல மரியாதையுடன்.
குடிப்பதற்கு தேநீர் தருவிக்கப்பட்டது.
பென்ஸில் திரும்பும் வழியில் பீட்சா சுவைத்துக்கொண்டே
பயணித்தேன். 
என்னுடைய உயர்ரக அலைபேசியின் திரையில் அவள்
தோன்றினாள்.
இன்று ஏன் உன் முகம் நேற்றைவிட அழகாய் இருக்கிறது என்றவளின்
தொடர்பை துண்டித்துவிட்டு முகநூலில் 
"பன்றியாக மாறியிருக்கிறேன். மாற விரும்பும் அன்பர்கள்
தொடர்புகொள்ளுங்கள்" என்று நிலைத்தகவலிட்டேன்.
இரண்டாயிரம் லைக்குகள் இருநிமிடத்தில் விழுந்தன.
விசிலடித்துக்கொண்டே காரோட்டியை கடற்கரைக்கு
போகப் பணித்தேன்.
கால்மேல் கால் போட்டுக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருக்கும்
என் உலகைப்போல் உங்களுக்கும் ஓர் உலகு
இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.
யார் அழுதார்கள்?

இரவில் ஒளிரும் பறவை

கையில் தொட்டியொன்றை சுமந்து
திரிகிறான் சிறுவன்.
தொட்டியின் மூடி இடுக்கிலிருந்து 
அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றன இருகண்கள்.
மூடியிலிருந்து செல்லும் கயிற்றின்
மறுநுனியை இறுக பற்றியிருப்பவன் அதை
அசைத்து அசைத்து நடக்கிறான்.
கருவிழிகள் அங்குமிங்கும் பதற்றத்துடன்
அசைகின்றன.
செம்மண் காட்டிற்குள்
நுழைந்தவுடன் அவனது முதுகிலிருந்து இறக்கைகள்
முளை விடத் துவங்குகின்றன.
குவிந்திருக்கும் மண் மேடுகள் ஒவ்வொன்றிலும்
பறந்து சென்று சிறிது நேரம் அமர்ந்துகொள்கிறான்.
தொட்டியை விட்டு வெளிக்குதித்து
அவனுடன் பறக்கின்றன
கண்கள்.
அதற்கு மட்டுமே புரிகின்ற மொழியில்
சன்னமாய் பேசுகிறான். 
யாருமற்ற பரந்த வெளியில் அவர்கள்
பறந்து திரிகிறார்கள்.
கண்பார்வையற்ற சிறுவன் அழுதுகொண்டே
புரண்டு படுக்கிறான்.

ஜூலிப்பூச்சி ஒட்டகம் மற்றும் 
வாழ்வென்னும் பெயர்கொண்ட சுவர்ப்பல்லி.

முடிச்சுகளால் நீண்டு கிடக்கும் கயிற்றை
இழுத்தபடி நகர்கிறது ஒட்டகம்.
பாலைவனத்தின் சுடுமணலை கிழித்துக்கொண்டு
பயணிக்கும் கயிற்றில்
தொற்றிக்கொள்கிறது ஜூலிப்பூச்சி.
யாருமற்ற பெருவெளியை கடக்கும் தருணம்
கயிற்றின் வழியே ஒட்டகத்தை வந்தடைகிறது.
ஒட்டகம்+ஜூலிப்பூச்சி ஒன்றுசேர்ந்து
கிழவியுருவம் பெறுகிறார்கள்.
கால்கள் நீட்டி சுவற்றில் சாய்ந்திருக்குமவள்
தன் கண்கள் இடுக்கி கையிலிருக்கும்
கயிற்றின் முடிச்சை மெல்ல அவிழ்த்துக்கொண்டிருக்கிறாள்.
தலைகீழாய் நின்றபடி கிழவியையும்
முடிச்சையும் பார்த்துக்கொண்டிருக்கிறது
சுவர்ப்பல்லி,
நாவை மெதுவாக சுழற்றியபடி.

இலைகளென உதிரும் புன்னகைகள்
இன்று காலை ஆறு முப்பதிலிருந்து
இரவு ஒன்பது இருபது வரை 
யாரும் எனக்கொரு புன்னகையை
பரிசாக தரவில்லை.
தனியே புன்னகைத்தாகவேண்டிய கட்டாயத்தில்
சாலையோர மரமொன்றின் நிழலில் தனித்திருந்தேன்.
இறுகிய இதழ்களிலிருந்து மெதுவாய்
புன்னகையொன்று உதிர்ந்தது.
அதன் பின் வரிசையாய் இலைகளென
புன்னகைகள் உதிரத்துவங்கின.
நடுநிசிவரை உதிர்ந்த புன்னகை இலைகளால்
சாலை நிரம்பித் தளும்பியது.
வீடு திரும்பும் அவசரத்தில் புன்னகைகளை
ஒதுக்கித்தள்ளிவிட்டு ஓடுகிறார்கள்
மனிதர்கள்.
மிதிபடுகின்றன சில.
கிழிந்து அலறுகின்றன சில.
மெளனித்து மரணிக்கின்றன சில.
அப்போதும் புன்னகைத்தன சில.
நினைவுகளில் யாரோடும் புன்னகைக்கலாம்
என்று தோன்றியபோது
ஆசுவாசமாகத்தானிருக்கிறது.

ததும்பும் நதியில் ஓர் இலை
எப்போதும் கூர்சொற்களால்
சித்திரம் தீட்டும் விஷக்கன்னியை
மிக அருகில் சந்தித்தேன்.
அதுவரை அவளது நிர்வாணக்கண்களை மட்டுமே
கண்டு வந்திருந்தேன்.
முதன்முதலாய் இன்று அவள் என் மீது
புத்தப்பார்வை எய்தாள்.
ததும்பும் நதியில் ஓர் இலை
சப்தமின்றி விழும்
பெரும்சப்தம் கேட்டு சிலிர்த்தது உயிர்.
அருகில் இழுத்தணைத்து நெற்றி முத்தமிட்டாள்.
கடைசித்துளி மெழுகில் எரிந்து சாம்பலானது
அக்கணம்.
நீலவர்ண உடை நெகிழ மூதாட்டி ஒருத்தி
நதியோரம் நடந்துசெல்கிறாள்
தன் தளர்ந்த நடை- பாதையை ரசித்தபடி.

விசித்திரி என்றொரு கோக் பாட்டில்
மெல்லிய குளிரால் நிரம்பியிருக்கும் அறை
அவளின் மார்புச்சூட்டை ஒத்திருந்தது.
நினைவுகளுடன் பேசிச் சலித்தவன்
தன் எதிரே காலியாய் அமர்ந்திருக்கும்
கோக் பாட்டிலுடன் பேசத் துவங்கினான்.
அது அனைத்திற்கும் மெளனத்தையே
பதிலாக்கிக்கொண்டிருந்தது.
அதற்கு விசித்திரி என்று பெயரிட்டான்.
விசித்திரியை கையில் ஏந்திக்கொண்டு
பிடித்த பாடலொன்றை சத்தமிட்டு
பாடி ஆடி மகிழ்ந்தவன்
களைத்து அமர்ந்தபோது பின்னிரவு
முடிந்திருந்தது.
கண்கள் கவிழ்ந்த நிலையில்
விசித்திரியை கட்டிக்கொண்டு
கனவுக்குள் நுழைந்தான்.
கனவுலகில் விசித்திரி கருஞ்சிவப்பு
நிற புடவையொன்றில் கைகோர்த்து
நடந்துகொண்டிருந்தாள்.
கடற்கரை மணலில் பாதம் புதைய
நடந்தவர்களின் கால்களைத் தொட்டு
நகர்ந்தன சிறுநண்டுகள்.
சடசடவென்று பெய்யத் துவங்கிய
மழையில் அவனது தோளில் சாய்ந்துகொண்டே
விசித்திரா என் விசித்திரா என்று
முணுமுணுத்து
கோக் பாட்டிலாய் உருமாறியவளை
ஓர் அலை இழுத்துச்சென்றது.
விசித்திரன் விழித்தபோது உடைந்து
கிடந்த கோக் பாட்டிலின் நடுவே
துண்டுதுண்டாய் கிடந்தன
முள்வடிவ குறுங்கனவுகள்.

-நிலாரசிகன்.