Monday, October 06, 2014

மெட்ராஸ் என்றொரு திரைக்காவியம்:


தமிழ் சினிமா பார்ப்பதில்லை உலக சினிமா மட்டுமே விருப்பம் என்று சொல்லித்திரிந்தவர்கள் அனைவரின் முகத்திலும் கடநத இரண்டு மூன்று வருடங்களாக வெளிவரும் பல தமிழ் திரைபடங்கள் கரியை பூசி வருகின்றன. பல திரைப்படங்களை இது அந்த கொரிய திரைப்படத்தின் நகல், அது ஜப்பானிய திரைப்படத்தின் நகல் என்றெல்லாம் பல செய்திகள் வந்தாலும் மிகச்சிறப்பான Genuine தமிழ் திரைப்படங்களும் வெளிவரத்தான் செய்கின்றன. ஒரு கதாநாயகன் அவனை சுற்றும் நாயகி,ஆறு பாடல்கள், எட்டு சண்டைகள், பன்ச் டயலாக் என்கிற மசாலா எல்லாம் மலையேறிக்கொண்டிருக்கிறது. மிக நுட்பமான திரைக்கதைகள்,வித்தியாசமான கதைக்களம்,ஆழமான திரையாக்கம் என்று தமிழ் திரையுலகம் வெகு வேகமாக தன் வேர்களையும் கிளகளையும் பரவலாக பரப்பியபடி முன்னகர்கிறது. உதாரணமாக பல திரைப்படங்களை சொல்லமுடியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,வழக்கு எண்,தெகிடி,ஜிகர்தண்டா,பொறியாளன்,ஜீவா,மெட்ராஸ் என்று நீளும் பட்டியல்(பட்டியல் மிகப்பெரியது என்பதால், நினைவிலிருந்து சில மட்டும் இங்கே) சொல்லி முடியாதது. இது ஆரண்ய காண்டம் என்னும் மிக அற்புதமான திரைப்படத்தின் தொடக்கமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நேற்று மெட்ராஸ் திரைப்படத்தை பார்த்தேன். கதை என்ன என்று யாரேனும் கேட்டால் ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். சுவர். அவ்வளவுதான். ஆனால் அதைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்,அரசியல்,நட்பு,காதல்,துரோகம்,பாசமென அனைத்தையும் திரைக்கதையாக்கிய விதத்திற்காகவே இப்படம் அதிகம் என்னை கவர்ந்தது. சென்னையில் வாழ்கின்ற பலருக்குமே சென்னையின் வடபகுதியை பற்றி அதிகம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். வடசென்னையின் நுட்பமான பல விஷயங்களை மிகச் சிறப்பாக திரையாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர். அவர்களது மொழியை அனைத்து நடிகர்களும் அவ்வளவு இயல்பாக பேச வைத்திருப்பதிலிருந்தே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார்.
கார்த்திக்கு பருத்திவீரனுக்கு பிறகு நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள படம் இது. காளியாகவே மாறியிருக்கிறார். வியாசர்பாடியின் காலனி ஒன்றில் நடக்கும் கதை. படம் பார்க்கும் அனைவரையும் வியாசர்பாடியின் அந்த காலனிக்குள் ஒருவராக மாற்றி விடுகிறார் இயக்குனர்.

ஒரு சுவருக்காக மோதிக்கொள்ளும் இரண்டு கோஷ்டிகள். அதனைச் சுற்றி சுழல்கின்ற கதை. அன்பாக நடித்திருக்கும் கலையரசனுக்கு இது மிகப்பெரிய மைல்கல். அன்பு  போலொரு நண்பன் நமக்கு கிடைக்கமாட்டானா என்கிற ஏக்கம் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தொற்றிக்கொள்ளும். காதலுடன் தன் மனைவியிடம் உருகுவதாகட்டும், நெஞ்சை நிமிர்த்தி எதிரிகளிடம் பேசுவதாகட்டும் மனிதர் அசத்தியிருக்கிறார். இடைவேளை நெருங்கும் நேரம் அன்புக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பதைபதைக்க துவங்கிவிடுகிறது மனம்.  அன்பும் மேரியும் தோன்றும் சில நிமிட காட்சிகளில் அவர்கள் இடையேயான இணக்கத்தை ஒரு நிஜ தம்பதி போல உணர்த்திவிடுகிறார்கள்.மேரியாக நடித்திருக்கும் நடிகையின் கண்களில் காதல்,சோகம்,கோபம் என்று அனைத்தையும் காண முடிகிறது. எப்படி இவ்வளவு சிறப்பான கதைநாயகர்களை இயக்குனர் தேர்ந்தெடுத்தார் என்பதே மிகுந்த ஆச்சர்யத்தை தருகிறது.

வடசென்னையின் தமிழில் கார்த்தி சிறப்பாகவே நடித்திருக்கிறார். நண்பனுக்காக மோதுவதிலும்,காதலிக்காக உருகுவதிலும் கவனம் ஈர்க்கிறார். கதாநாயகி ஒரு வடசென்னை காலனி பெண்ணை கண்முன் நிறுத்துகிறார். உள்ளுக்குள் காதலித்துக்கொண்டு வெளிக்காண்பிக்காமல் காளியை கிண்டலடிப்பதும் பின் காளின் சோகம் தீர்க்க அவனுடனிருப்பதிலும் அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இவருக்கு இது முதல் படம் என்று சொன்னால்தான் தெரியும்.

படத்தில் படீரென்று சிரிக்க வைக்க ஜானி என்றொரு கதாப்பாத்திரம் வருகிறது. இவ்வளவு 'அசால்டாக' ஒரு கனமான ரோலை செய்திருக்கிறார் ஜானியாக நடித்தவர். ஆங்கிலத்தில் பேசுவதாகட்டும் சரியான சமயத்தில் கூர்மையான வசனங்களை உதிர்பதாகட்டும் சபாஷ் ஜானி.  

மேலும் குறிப்பிடத்தகுந்தவை, காளியின் அம்மா,எப்போதும் சோபாவில் உட்கார்ந்திருக்கும் அப்பா, அந்த பாட்டி,மாரி,அவ்வப்போது நடனமிட்டுச்செல்லும் நடன கோஷ்டி, வடசென்னையின் தமிழை அனைவருமே சிறப்பாக பேசியிருப்பது,கானா பாலாவின் நெஞ்சைத்தொடும் பாடல்,சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, முரளியின் ஒளிப்பதிவு, வடசென்னையின் காலனியை நேரில் கொண்டுவந்த செட்கள், எடிட்டிங் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அட்டைக்கத்தி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அடித்திருக்கும் சிக்ஸர் மெட்ராஸ். ஒடுக்கப்பட்ட குரலின் ஒலியை சுவரொன்றின் மூலமாக திரைச்சித்திரமாக்கியதற்கு அழுத்தமான கைகுலுக்கல். இரண்டாவது படத்திலும் ஜெயித்து தமிழின் மிக முக்கியமான இயக்குனராக மிளிர்கிறார், வாழ்த்துகள்.

குறைகள் என்று ஏதுமில்லையா எனில், இரண்டாம்பாதியில் திரைக்கதையில் சில இடங்களில் காணப்படும் தொய்வு. சுவர் பற்றிய படம்தான் எனினும் முப்பது நாப்பது தடவைக்கு மேல் சுவரைக்காட்டுவது சலிப்பை தரத்தான் செய்கிறது.
மற்றபடி மெட்ராஸ் தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நகர்வில் இடம்பிடித்திருக்கும் படங்களில் மிக முக்கியமானது.

-நிலாரசிகன்.