Thursday, November 27, 2014

14 கவிதைகள்


பட்டன்களை சபிப்பவன்

ஒரு அவசரத்தில் பட்டன்களை
இலகுவாக கழற்றி விடமுடிவதில்லை.
நிறைய பட்டன்களை கொண்டிருக்கும்
சட்டையை ஏன் அனைவரும் விரும்புகிறார்கள்
என்றும் அவனுக்கு புரியவில்லை.
சில நேரம் இருளில் சிதறி ஓடுவிடுகின்ற 
பட்டன்களை தேடி எடுக்க 
மங்கிய பார்வை ஒத்துழைப்பதில்லை.
பனியன்களை கழற்றுவது அவனுக்கு
மிகவும் பிடித்தமான செயல் எனினும்
சட்டைகளே அதிகமாய் அணியப்படுகின்றன‌
என்கிற வருத்தமும் உண்டு.
இப்போதுஅணிந்திருக்கும்
இந்தச் சிறிய சட்டையை கூட‌
அவன் வெறுக்கத்தான் செய்கிறான்.
விபத்தொன்றில்
வீசி எறியப்பட்ட சிறுவனின்
சட்டையை அவசரமாக கழற்றிவிட யத்தனித்ததில்
நிறைய பட்டன்கள் தெறித்து ஓடியது
நினைவுக்கு வர,
பட்டன்களை சபித்தபடி இருளுக்குள்
மறைந்து போகிறான்.
லைட்டா மிக மிக லைட்டா

இன்று என் இரவின் மீது
குருட்டு ஓநாயோ 
இறகு தொலைத்த பட்டாம்பூச்சியோ 
உடையற்ற பைத்தியக்காரியோ
பாழாய்போன பூனைக்குட்டியோ
மயிர் இழந்த நாய்க்குட்டியோ
மண் இல்லா குறுமலைகளோ
சிவந்த இதழ்கள் அல்லது மெய்மறக்கும் முத்தங்களோ
வாதை என்பதை அறியாத வலியோ
அல்லது
வேறெந்த க்ளிஷேவோ
அமர்ந்திருக்கவில்லை.
நல்லவேளையாக
தனிமை என்னும் சொல்லும் இரண்டாக பிளந்து
தனி வேறு
மை வேறாகி வெவ்வேறு திசையில் மறைந்துவிட்டன.
அவ்வளவு என்னும் பாவப்பட்ட சொல்
பின்னிரவு மற்றும் பரிதாபகர அதிகாலை
அனைத்தும் இல்லாமல் ஆகிவிட்டன.
யாருமற்ற இரவு என்பது கூட பழயதாகி
வீட்டின் பின்புறம் ஓடி ஒளிந்துகொண்டது.
இன்று நான் எதைத்தான் எழுதுவது?
மேலுள்ள வரியின் கடைசிச்சொல்லின்
பின்புறம் ஒண்டியிருக்கும் ? குறிகூட
என்னைக் கைவிட்டுவிட்டதால்
எதையும் எழுதிவிடாமல்
யாருக்கும் அனுப்பிவிடாமல்
மறந்தும் துக்கித்துவிடாமல்
சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி
இந்த இரவை இரவாக
மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அவ்வப்போது
காலை மட்டும் "லைட்"ட்டாக ஆட்டிக்கொள்கிறேன்.


நாயின் புராணம்

நாய் என்றவுடன் உனக்கு
பிடித்தமான எந்த நாய் ஞாபகத்திற்கு வருகிறது நண்பா
என்றான் நண்பன்.
எனக்கு நிறைய நாய்கள் ஞாபகத்திற்கு
வந்து குரைத்தன.
குரைப்புச் சத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
பெருநகரின் வீதிகளில் வேலைதேடி
அலைந்தபோது நானொரு பசித்த நாய்.
ஒரு ஆத்மார்த்த நேசிப்பை தேடித்தேடி
கண்டைந்து சுயமழித்து வலியின்
உச்சத்தில் திரிந்த காலத்தில்
நானொரு சுயமற்ற நாய்.
கவிதை நூலை வெளியிட ஒவ்வொரு
பதிப்பகமாய் ஏறி வெளியேறும் கணங்களில்
இருபதாயிரமோ முப்பதாயிரமோ இல்லாத காலத்தில்
நானொரு கழிவிரக்க நாய்.
தோள் மேலேற்றி பல்லக்கில் சுமந்து சென்றவன்
உயரச்சென்றுவிட்டதாய் எண்ணிக்கொண்டு
என்மீது எச்சில் உமிழ்ந்த நாளில்
நானொரு தெரு நாய்.
மாநகரின் பொய்களை அள்ளிப்பருக தெரியாமல்
மனச்சொல் கேட்டு நடக்க முடிவெடுத்த நாளில்
நானொரு பிழைக்கத்தெரியாத நாய்.
தேடித் தேடி வாங்கிய நூல்களும்
இரவை நீளமாக்கி எழுதிய நூல்களும்
லாயக்கற்றதாக உணர்ந்த நாளில்
நானொரு சுயமோக நாய்.
எவன் குடியும் கெடுத்திடாமல்
எவன் உள்ளங்காலையும் நக்கிவிடாமல்
எம்மொழி எம் கவிதை என்று எழுதித்தொலைக்கும்
நானொரு பித்து நாய்.
இத்தனை நாய்களில் எந்த நாயை பிடிக்கும்
என்று சொல்வது?
நான் நகர்ந்த பின் நீ சொல்லப்போகும்
'"இந்த நாய்'"தான் உன்னதத்திலும்
உன்னதமான நாய் என்பேன் நண்பா.


முத்தக் கவிதைகள் ஐந்து
1.
ஒராயிரம் வருடங்களாய்
தேக்கிய காதலை ஒற்றை முத்தத்தில்
என்னுள் பதிக்கிறாய்
இருளுக்குள் விரைகின்றன‌
பெருநகரின் மிகச்சிறிய வாகனங்கள்

2.

முத்தவிதையொன்று உயிர்ப்பிக்கிறது
எண்ணற்ற விருட்சங்களையும்
ஒரு
கையறு கணத்தையும்.

3.

எங்கிருந்தோ வந்த பறவையொன்று
நம் முத்தத்தின் மீது அமர்ந்தது.
அதன் சிறகை உனக்கும்
இறகொன்றை எனக்கும்
தந்துவிட்டு மறைந்தது.
இரண்டையும் துறந்துவிட்டு
மீண்டுமொரு முத்ததினுள்
பறக்கத்துவங்குகிறோம்.
தொலைவில் பறந்துவருகின்றன‌
சிறகுகளற்ற பறவைகள்.

4.

ஒரு பெரும் இழப்பை
ஒரு முத்தத்தில் மீட்டெடுக்கிறேன்.
இழப்புகள் பல்லாயிரம் ஒன்றுசேர்ந்து
என் உடலைச் சுற்றி சுற்றி
மிதக்கின்றன முத்தங்களாய்.

5.
விடைபெறலில் பெறப்படுகின்ற‌
முத்தங்கள் எப்போதும
கண்ணீரின் முத்தவடிவங்களாகி
பரிதவிக்கின்றன.
விடைபெற்று நகர்ந்த பின்
ஓவென்று அழுதபடி உடன் ஓடிவருகின்றன.
கொஞ்ச தூரத்தில் மூச்சிரைத்து
ஓட முடியாமல் நின்றுவிட்டு
களைத்து இதழ்களுக்கு திரும்பிவிடுகின்றன.
எந்தவொரு முத்தத்தையும் எப்போதும்
உடன் எடுத்துச்செல்ல முடிவதில்லை.
உடன் வருவது முத்தமிட்ட
பேரமைதியும் முத்தம்பெற்ற
பேரானந்தத்தின் கணங்கள் மட்டுமே.குளம் - ஐந்து கவிதைகள்
1.

என் குளம்
நான் கல்லெறிகிறேன்.
குளமாகவும் மாறுகிறேன்.

2.

குளத்து மீனொன்று
துள்ளி கரையில் விழுந்தது.
வீழ்ந்துவிடவில்லை.
சிறுநொடி கழித்து
சிற்றலைகள் வட்டவட்டமாய் கரையொதுங்கின.

3.

ஊர் பிரிந்து வந்து
வெகுகாலமாகிறது.
பெட்டிக்குள் கொண்டுவந்த‌
குளம் மட்டும் வற்றவேயில்லை.

4.

மீனுக்கு வலிக்குமென்று
துடிதுடிக்கிறது மிதவை.
பாவம் தூண்டில்புழு.

5.

குளத்துக்கு தள்ளி
வசிக்கிறது குட்டையொன்று.
குளம் நோக்கிச் செல்லும்
கொலுசுகளை வெறித்தபடி.

ஆடம்பரத்தான்
கால்மேல் கால்போட்டுக்கொண்டு
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறான்
யாரைப்பற்றிய அக்கறையும் அற்றவனின்
இடக்கையில் அலைபேசியும் அதனுள்
முகநூலும் திறந்த நிலையில் இருக்கின்றன.
தூசி படர்ந்திருக்கும் அவனது வாழ்க்கையை
விரும்பியே ஏற்றுக்கொண்டவன்
பின்னிரவில் வெகுநேரம் விழித்திருக்கிறான்.
பகலில் உறங்கும் அவனது
வதனத்தில் எச்சமிட்டு பறக்கின்றன
குருட்டுக்காகங்கள்.
காகங்களிட்ட‌ எச்சங்களை
துடைப்பதற்கு அவனது கனவில் மயிலிறகோடு வருகின்றனர்
அரம்பையர்கள்.
உடலெங்கும் இறக்கைகளை முளைக்கவைத்து
அவர்களோடு பறக்கச் செய்கின்றனர்.
பறத்தலின் சுதந்திரத்தை உயிர் நிரம்ப‌
உணர்கிறவனின் உறக்கத்தை
சப்தங்களால் திறக்கிறார்கள்.
விழித்தவன் எச்சத்தை துடைத்துவிட்டு
திரும்பி படுத்துறங்குகிறான்.
அந்தியில் எழுகின்றவனின் உடைகளெங்கும்
அரம்பையர்களின் வாசம் வீசுகிறது.
ஷவரை திறந்துவிட்டு இளஞ்சூடான நீரில்
பேரானந்தமாய் குளித்து முடித்து
வரவேற்பறையில் வந்தமர்கிறான்.
யாருமற்ற அந்த வீட்டின் வெளியே
ஆடம்பரத்தான் வாழ்ந்த வீடு இதுவென‌
பேசிச் செல்கின்றனர்
முதிர் கன்னிகள் இருவர்.


-நிலாரசிகன்.

1 comments:

said...

/குளத்துக்கு தள்ளி
வசிக்கிறது குட்டையொன்று.
குளம் நோக்கிச் செல்லும்
கொலுசுகளை வெறித்தபடி/

nice
vazhthukal nila.