Saturday, December 10, 2016

கவிதைகள் ஐந்து1.கருங்கிளி
கவிதைக்குள் வந்து அமர்ந்திருக்கிறது
கருமை நிறக் கிளி.
அதன் கூரிய அலகால் ஒவ்வொரு சொல்லாய்
கொத்தித் தின்னத் துவங்குகிறது.
கொத்தலுக்கு தப்பித்து சிதறி ஓடுகின்றன‌
சில சொற்கள்.
கவிதைச்சுவர் ஏறி வெளிக்குதித்து தப்பிக்கின்றன‌
சில.
கவிதையின் கடைசி வரியின் மூலையில்
மூச்சிரைக்க மரணத்தை எதிர்நோக்கியபடி
அசைவற்று அமர்ந்திருக்கின்றன
உடல்கிழிந்த கடைசிச் சொற்கள்.
நிசப்தத்துடன் இக்கவிதையை தட்டச்சு செய்பவனை
நீங்கள் கருங்கிளி என்றும்
அழைக்கலாம்.
அந்த கடைசிச் சொற்கள் எனவும்
அணைத்துக்கொள்ளலாம்.

2.மெளனமாய் புகைக்கும் ஓர் அதிர்வு
யாருக்கும் தெரியாமல் ஒரு
பூனை உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது
அதன் அசைவற்ற கண்களால்.
எதற்கென்று புரியாத இரவுகளில்
உன் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது
தவளையொன்றின் விசித்திர சப்தம்.
பெரும்கூட்டத்தின் நடுவே எப்பொழுதும்
உன்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது
நாய் எனப்படும் மிருகத்தின் குள்ள வால்.
ஒரு பார்வையால்
ஒரு சப்தத்தால்
ஒரு குள்ளவால் தொடரலால்
உன்னை கலைத்துப்போட அனுமதிக்கிறாய்.
உனது சிறகிலிருந்து ஒவ்வொரு இறகாக‌
உதிரத்துவங்குகிறது
பூனையாக
தவளையாக
நாயாக
கடைசியில்
புகை கசியும் ஓர் அதிர் பிழைக்கனாவாக.

3.நிழல் துரத்தல்
கடலின் மேல் பறக்கும்
பறவையின் பிம்பம்
நிழல்மீனாகி பறவையை துரத்துகிறது.
பறவைக்கும் மீனுக்குமிடையில்
துள்ளியது மற்றொன்று.
அது கடலில் நீந்தும் மீனின்
பிம்பம்.
நிழல்பறவையாகி மீனை துரத்துகிறது.
நிழல்களின் துரத்தலில்
இரு நிஜங்களும்
ஒரு கடலும் நிசப்தமாகி
உறைகின்றன.
தூரத்தில் எங்கோ ஒரு முதலை
வாய்பிள‌ந்தபடி உறைகடலுக்கும் நிலத்திற்கும்
உடல்நீட்டி படுத்திருக்கிறது.
அதன் வாலிலிருந்து தலைநோக்கி
மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது
சிறு எறும்பு.
வாயில் கெளவ்விய உறைகடலுடனும்
அதன் மிகச்சிறிய நிழலின் துரத்தலுடனும்.

4.இரவென்னும் இலகுப்பூ
எனது பகலுக்குள் நுழைந்துவிடுகின்ற இரவை தடுத்துவிட யத்தனிக்கிறார்கள்
மிகப்பெரிய வனத்திடையே ஊர்ந்து செல்லும் விலங்கின் முதுகில் பட்டுத்தெறிக்கும் வெய்யிலை பின் தொடர்ந்து சென்றால் எதிர்ப்படும் முக்கோண வகை குகைகள்.
நெருக்கத்தில் வரிசையாக அமைந்திருக்கும் அக்குகைகளை கறுப்புநிற சிங்கமொன்று வெகு நாட்களாய் காவல் காத்து வருகிறது. 
அதன் பிடறிக்குள் கூடு கட்டியிருக்கும் பறவை தன் அலகில் பழுப்புநிற மீனை கெளவிக்கொண்டு கூடடைகிறது.
இறந்த மீனின் விரைத்த கண்களின் வழியே பயணித்தால் மிகச்சிறிய குளமும் அதன் நடுவே மிதக்கும் அமலைகளும் தென்படுகின்றன.
பசித்த கணம் குருவி முட்டைகளும் பச்சைக் கிழங்குகளும் உணவாய் மாறி பசியாற்றி முடித்து மிகப்பெரிய வெண்நிற பூவின் மீது விழச்செய்கின்றன.
பேரானந்த உறக்கம் அப்பூவின் மேல் நிகழ்கிறது.
இரவு இவ்வளவையும் தருகிறது ஆனாலும்
சோற்றுப் பருக்கைகளால்
நிறைந்திருக்கும் பகலுக்குள்தான் வாழ்வென்னும் செடி நடப்பட்டிருக்கிறது என்பவர்களின் கூர்நகங்களால் கிழிபட்டபடியே இருக்கிறது இரவென்னும் இலகுப்பூ.

5.மழைக்கடல் எனும் சொல்

ஒரு சொல் போதுமானதாய் 
இருக்கிறது.
மிக கவனமாக தேர்ந்தெடுத்து
மித நிதானத்துடன் கூர்தீட்டப்பட்டு
தொடுக்கப்பட்டது அச்சொல்.
ஆழ்துளைக்குள் விழுந்துவிட்ட
குழந்தையென அழவும் தெரியாமல்
நகரவும் இயலாமல் விக்கித்து
இருளில் அமர்ந்திருக்கின்றன‌ ப்ரியங்கள்.
மழைத்துளிக்குள் அடைபட்ட
பெருங்கடலில் உயிரற்ற மீன்கள்
மிக வேகமாய் நீந்த யத்தனித்து
சொல்லின் கனம் தாளாமல் உயிர்பெற்று
காணாமலாகின்றன.
கடலடியில் அசைகின்ற ஆளுயுர தாவரங்களின்
இலைகளின் அடியில் ஒண்டியிருக்கின்ற
மீன்குஞ்சுகளை தேடிச்சென்று பிய்த்து தின்கிறது
சொல்லின் வெப்பம்.
ஒரு சொல் போதுமானதாய்
இருக்கிறது.
கடலாகி அடைத்து நிற்கும் மழையின் பிறப்புத்துவாரத்தை
மெல்லியதொரு தொடுதலில் திறந்து மூடவும்.
மழைக்குள் கடலை அடைத்துத் துவளவும்.

-நிலாரசிகன்

0 comments: